மகாகவி பாரதி எழுதிய – ‘அழகு’ தெய்வம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய «அழகு தெய்வம்» அவரது தத்துவக் கவிதைகளில் தனித்துவமான இடத்தைப் பெறும் படைப்பாகும்.

மங்கிய நிலவொளியில் பாரதி ஒரு கனவு காண்கிறார். அந்தக் கனவில், பதினாறு வயது இளமங்கை ஒருவர் அவரது முன்னால் தோன்றுகிறாள். அவளுடைய முகம் பௌர்ணமி நிலவைப் போல ஒளிர்கிறது அவளுடைய புன்னகை புதுநிலவின் புத்துணர்ச்சியை நினைவூட்டுகிறது. அந்த மங்கையைப் பாரதி “அழகு தெய்வம்” என்று உருவகப்படுத்துகிறார்.

இளமை, இயற்கை, ஒளி, பிரகாசம், புதுமை என்று, மனித மனம் இயல்பாக விரும்பும் அழகிய பண்புகளின் வடிவமாக அழகு தெய்வம் தோன்றுகிறது. «தூங்காதே, விழித்து என்னைப் பார்» என்று பாரதியை அழைக்கிறது. இந்த அழைப்பு வெறும் வெளிப்புற அழகைப் பார்ப்பதற்கான அழைப்பு அல்ல. அழகின் உண்மைப் பொருளை தரிசிக்க தேடல் வேண்டி அழைக்கப்பட்ட அழைப்பாகும்.

.

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புதுநிலவு போற்ற வரும் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்!

அழகானவை அனைத்தும் மனித மனத்தை ஈர்க்கின்றன. ஆனால், அந்த அழகை நாம் மோகத்தோடு அணுகுகிறோமா, அல்லது அதனோடு ஒன்றிநின்று, பற்றற்ற நிலையில் அழகை தரிசிக்கிறோமா என்பதுதான் இங்கு பாரதியின் தத்துவார்த்தக் கேள்விகளுக்கு அடிப்படையாகின்றது.

அழகு எப்படித் தெய்வமாகிறது? இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கண்டறியவே பாரதி, அழகுத் தெய்வத்திடம் தொடர்ச்சியாகப் பல வினாக்களை எழுப்புகிறார். அவை வெற்றுக் கவிநயத்திற்கான வினாக்கள் அல்ல. மனித மனத்தின் இயல்புகளான, மோகம், பற்று, அருள், ஞானம் ஆகியவற்றை நோக்கி வாசகரை நகர்த்திச் செல்லும் தத்துவ விசாரணைகளாகும். மனத்தின் மோகநிலையை ஆராய்ந்து, அப்புள்ளியிலிருந்து பற்றற்ற நிலையினூடாக அருள் நிலையைப் புரிய வைப்பதே பாரதியின் நோக்கமுமாகும்.

பாரதியின் பார்வையில், அழகு என்பது வெறும் புறத் தோற்றமல்ல. அது மோகநிலை கடந்து ஞானத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஆற்றல்.

பாரதியார் “மோகம்” என்ற சொல்லை வெறும் காதல் அல்லது காம உணர்வாக மட்டுமல்லாமல், பற்று, ஆசை, அடிமைத்தனம், அகந்தை ஆகியவற்றின் குறியீடாகப் பயன்படுத்துகிறார்.

மோகம் என்பது உரிமை கோரல், சொந்தமாக்கும் எண்ணம், அங்கீகாரத் தேவை போன்றவற்றிலிருந்து உருவாகும் மனநிலையாகும். பொருள், மனிதர், புகழ், உறவு, அதிகாரம் என எதன் மீதும் மோகம் தோன்றலாம். மோகம் மனதிற்கு அமைதியை அளிப்பதில்லை. மாறாக, எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் ஏமாற்றம், கோபம், வெறுமை ஆகியவை தோன்றுகின்றன. எனவே, மோகம் மனிதனின் சுதந்திரத்தைக் குறைத்து, அவனைப் பற்றின் அடிமையாக்குகிறது.

இக்கருப்பபொருளை, பாரதி தனது மற்றொரு கவிதையில்,

மோகத்தைக் கொன்றுவிடு
யோகத் திருத்திவிடு
பந்தத்தை நீக்கிவிடு

என்று மகாசக்தியிடம் வேண்டுகிறார். மோகம், பந்தம், அலைபாயும் மனம் ஆகியவற்றைக் கடந்தால்தான் யோகநிலை சாத்தியமாகும் என்பது அவரது கருத்து.

இதைத் திருமூலரும் திருமந்திரத்தில் கூறுவது.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே

இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கூட பற்றோ உரிமையுணர்வோ இருக்கக் கூடாது. அதையும் கடந்த நிலையே ஆனந்த நிலை எனத் திருமூலர் கூறுகிறார்.

பாரதியின் «மனப்பெண்» கவிதையொன்றும் மனதின் ஊசலாடும் தன்மை குறித்துப் பேசுகிறது.

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்

அழகில் மோகம் கொள்வதும், அழகோடு ஒன்றிநிற்பதும் வெளிப்படையாக ஒரே அனுபவம்போல் தோன்றலாம். ஆனால், அவற்றின் உள்ளார்ந்த இயல்புகள் முற்றிலும் வேறுபட்டவை.

அழகை மோகிப்பது என்பது அதனைத் தனதாக்கிக் கொள்ள விரும்பும் மனநிலை. அது பொருளையோ மனிதரையோ பற்றிப் பிடித்துக் கொள்வது.

அழகோடு ஒன்றிநிற்பது என்பது அதனுள் தன்னையே மறந்து கரைந்துவிடும் அனுபவநிலை. அன்பு, அர்ப்பணிப்பு, முழு ஈடுபாடு ஆகியவற்றிலிருந்து உருவாகிறது. அதில் பலனோ, எதிர்பார்ப்போ, உரிமை உணர்வோ இருப்பதில்லை. அந்த அனுபவத்தில் “நான்” என்ற அகந்தை சில கணங்களாவது அழிந்து, அக்கணம் மட்டுமே தரிசனமாகிறது. அவ் அனுபவத்தில் தன்னையே மறந்து கரைந்து போகும் நிலை.

இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு என்பது, பற்று மற்றும் பரிபூரண ஈடுபாடு ஆகியவற்றிற்கிடையிலான வேறுபாடாகும்.

உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் அழகை அளித்ததும், அந்த அழகை உணரக்கூடிய மனதை மனிதனுக்குக் கொடுத்ததும், அதன் அழகில் தன்னையே மறந்து லயிக்கும் ஆற்றலை அவனுள் வைத்ததும் பிரபஞ்ச ஒழுங்கின் ஓர் அங்கமாகும். அந்த லயிப்பின் தருணங்களைத் தெய்வ அனுபவமாகக் கண்ட பாரதி, அதை உலகிற்கு எடுத்துரைக்கும் வண்ணம் விசாரணைகள் செய்ய விளைந்ததே இக்கவிதை.

.

யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ? என்றேன்.
யோகமே தவம்; தவமே யோகம் என உரைத்தாள்.

மனதை ஒருநிலைப்படுத்தி, தன்னைக் கடந்து செல்லும் தெய்வநிலை யோகத்தினாலா, தவத்தினாலா எய்தப்படுகிறது என்ற கேள்வியைப் பாரதி எழுப்புகிறார்.

யோகமும் தவமும் இரு வேறுபட்ட வழிமுறைகள் அல்ல. அவை மனதை ஒருமுகப்படுத்தி, மனதைச் சிதறவிடாநிலை கடந்து தெய்வநிலையை அடையச் செய்யும் அனுபவத்தின் இரு பரிமாணங்களே. மனம் முழுமையாக ஒருநிலைப்படும் தருணத்திலேயே யோகமும் தவமாகவும் கைகொள்ளப்படுகிறது.

இதே கருத்தை பாரதி தனது «மோகத்தைக் கொன்றுவிடு» என்ற கவிதையிலும் வெளிப்படுத்துகிறார். அங்கு, உலகனைத்திலும் வியாபித்திருக்கும் மகாசக்தியை நோக்கி அவர்,

யோகத் திருத்திவிடு; அல்லால் என்றன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே!

மோகத்தையும் பற்றையும் நீக்கி, மனதை ஒருநிலைப்படுத்தி தெய்வநிலையை அடைய அருள் புரிய வேண்டுமென்ற விண்ணப்பமே இங்கு «யோகத் திருத்திவிடு» என்பது. அதனால்தான் “அழகு தெய்வம்” கவிதையில் பாரதி, மனதை பற்றற்று வைத்திருக்கும் தத்துவங்களில் எது சிறந்தது என்றும் வினவுகிறார்.

யோகம், தவம், ஏகம், இருமை, யாவும் என்று சமயங்களாவன வெவ்வேறு பாதைகளைச் சுட்டிக்காட்டினாலும், அவற்றின் இறுதி நோக்கம் ஒன்றே. அது மோகத்தை அழித்து, மனதை ஒருநிலைப்படுத்தி, பற்றற்ற அனுபவத்தை எய்தச் செய்வதாகும்.

இதையே திருக்குறளும்,
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

ஆசையை முற்றிலும் நீக்கினால், தவத்தின் பயன் தானாகவே கிடைக்கும் என்கிறது.

.

ஏகமோ பொருளன்றி இரண்டாமோ? என்றேன்
இரண்டுமாம், ஒன்றுமாம்,யாவுமாம் என்றாள்

அழகு தெய்வம் அளிக்கும் இந்தப் பதில், பல சமயத் தத்துவங்களின் மையக் கருத்தை ஒரே வரியில் சுருக்கிக் கூறுகிறது. “ஏகம்”, “இரண்டு”, “யாவும்” என வெவ்வேறு சமய தத்துவங்கள் உலகின் இயல்பை வெவ்வேறு கோணங்களில் விளக்கினாலும், அவற்றின் இறுதி இலக்கு ஒன்றுதான். அது மனிதனை மோகத்திலிருந்தும் பற்றிலிருந்தும் விடுவித்து, பற்றற்ற நிலையினூடாக தெய்வ அனுபூதியை அடையச் செய்வதாகும்.

ஆகவே, “ஏகம்”, “இரண்டு”, “யாவும்” என்ற வேறுபாடுகள் தத்துவ விளக்கங்களில் மட்டுமே உள்ளன. ஆன்ம அனுபவத்தின் உச்சியில் அவை ஒன்றிணைகின்றன. அந்த நிலையை எந்தச் சமயப் பாதையில் அடைகிறோம் என்பது முக்கியமல்ல. பற்றற்ற மனநிலையை அடைவதே எல்லாச் சமயங்களின் பொதுவான இலக்காகும். இவை அவரவர் அநுபூதியில் கண்டுகொள்ளப்படவேண்டும் என்பதே «இரண்டுமாம், ஒன்றுமாம்,யாவுமாம்» என்றது.

.

தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ ? என்றேன்.
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ? என்றாள்.

பூமியின் தாகத்தை அறிந்து, உலகிலுள்ள உயிர்களின் துயரத்தை உணர்ந்து, அதன் மீது கருணை கொண்டு, வான்மழை பொழிகிறதா? என்பது பாரதியின் அடுத்த கேள்வி.

அதற்கு அழகுத் தெய்வம் நேரடியான விடையை அளிக்காது, மழையின் இயல்பையே பதிலாக முன்வைக்கிறது. மழை தனது அன்பை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ஆனால், தாகத்தால் வாடும் உலகின் மீது அது எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் பொழிகிறது. அத்தகைய மழையை அன்பு, அருள் என்று கருதாமல் வேறு எவ்வாறு புரிந்துகொள்ள முடியும். அதன் இயல்பான செயற்பாடே பேரன்பின் வெளிப்பாடுதான் என்பதே அழகுத் தெய்வத்தின் பதில்.

கொட்டித் தீர்க்கும் மழையைப் போலவே, பிரபஞ்சத்தின் அழகுகளும் எங்கும் நிறைந்து கிடக்கிறது. அது ஒருவரின் தேவையை அறிந்தோ, கருணையைக் காட்டுவதற்காகவோ வெளிப்படுவதில்லை. பொழிவது மழையின் இயல்பு போலவே. அழகு என்பது இயற்கையின் இயல்பு. எந்தப் பற்றுமின்றி, எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் நிகழும் இந்த இயற்கைச் செயற்பாடே பேரன்பின் வடிவமாகிறது.

எனவே, மழை என்பது வெறும் இயற்கை நிகழ்வு மட்டுமல்ல, பற்றற்ற அன்பின் உருவகமாகும். அது மோகத்தைத் தாண்டி, எவரிடமும் பற்று கொள்ளாமல், அனைவரையும் சமமாகத் தொடும் அருளின் வெளிப்பாடு.

“காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?” என்பது பாரதியின் அடுத்த கேள்வி.

.

காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்

காலத்தின் நியதி மனிதனின் மதியைக் (புத்தியை) கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதா? மனம் ஒரு பொருளின் மீது மோகம் கொள்ள வேண்டும் என்று மனதிற்கு விதிக்கப்பட்டிருந்தால், அந்த விதியை புத்தியால் வென்று கடக்க முடியுமா என்பதே இந்தக் கேள்வியின் சாரமாகும்.

அதற்கு அழகுத் தெய்வம், “காலமே மதியினுக்கோர் கருவியாம்” என்று பதிலளிக்கிறது. காலம் என்பது மனிதனின் அனுபவத்திற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஒரு கருவியே அன்றி, மனிதனை ஆளும் சக்தியல்ல. மனம் இல்லையெனில் காலம் என்ற உணர்வும் இருப்பதில்லை.

காலம் மனிதனை ஆளுவதில்லை. மாறாக, செறிந்த மனித மனதிற்கு அது ஒரு கருவியாகவே அமைகிறது. இந்தப் பதிலின் மூலம், விதி என்பது மாற்ற முடியாத விடயமல்ல மாறாக, மனிதனின் அறிவு வளர்ச்சிக்காக பயன்படும் ஒரு கருவி என்பதை பாரதி உணர்த்துகிறார்.

«மனதிற்குக் கட்டளை» என்ற மற்றோர் கவிதையில் தன் மனதை நோக்கிக் கட்டளையிடுதல்.

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்

…

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்

“ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?” என்று பாரதி கேட்கிறார். மனம் விரும்புவதெல்லாம் இந்த உலகில் நிறைவேறுமா என்பதே கேள்வி. இயல்பாகவே எப்போதும் ஏதோ ஒன்றின் மீது மோகம்கொண்டு, அதை அடைய விரும்பிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது மனம். அந்த விருப்பங்கள் அனைத்தும் ஆழ்ந்த இலட்சியங்களிலிருந்து பிறப்பவை அல்ல. பெரும்பாலானவை மோகத்தாலும் பற்றாலும் உருவாவன.

மோகத்தின் அடிப்படையில் எழும் எண்ணங்கள் நிலையற்றவை. அவை சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையவை. எனவே சில விருப்புகள் நிறைவேறுவதற்குச் சாத்தியமுண்டு என பதிலளிக்கிறது அழகு தெய்வம்.

.

ஏலத்திலே விடுவதுண்டோ எண்ணத்தை? என்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண், என்றாள்

ஏலம் என்பது ஒரு பொருளின் மதிப்பை பலரின் விருப்பங்களும் போட்டிகளும் தீர்மானிக்கும் இடம். அங்கு பொருளின் மதிப்பு நிலையானதல்ல. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்ப அது மாறுபடும். அழகுத் தெய்வத்தைக் கனவிற் கண்டதும் பாரதிக்கு அதன்மீது தோன்றிய மோகநிலையையே «எண்ணம்» என வினவுகிறார். அழகு தெய்வத்தைக் கண்டவுடன், தன் உள்ளத்தில் எழுந்த மோக எண்ணத்தை வெளிப்படையாக, பகிரங்கமாக சொல்லலாமா என்பதே பாரதியின் கேள்வி.

அதற்கு அழகுத் தெய்வம், “எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்” என்று பதிலளிக்கிறது. இந்த இடத்தில், எண்ணுதல் என்பது வெறும் ஆசைப்படுதல் அல்ல. மனதைச் சிதறவிடாமல், முழு ஒருமுகத்துடன் ஒரு இலக்கில் நிலைநிறுத்துவதாகும். அத்தகைய உறுதியான எண்ணத்திற்காக ஒருவர் தவம்போல் இடைவிடாத முயற்சியை மேற்கொண்டால், அந்த எண்ணத்தை அடையலாம் என்பதே அழகு தெய்வத்தின் பதில்.

முன்பு கூறிய «நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்» என்பது, சிதறிய மனத்தில் மோகத்தால் எழும் சாதாரண விருப்பங்களுக்கு உரிய உலக நியதி. «எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்» என்பது, அதற்கு அப்பாற்பட்ட நிலையைப் பற்றியது. அவ் எண்ணம் மோகத்தைக் கடந்து, மனதை ஒருமுகப்படுத்தி, கொண்ட இலக்கோடு ஒன்றிணைந்து தவத்தின் வலிமையைப் பெற்று பலனை அடைகிறது.

நிறைவாக,

.

மூலத்தைச் சொல்லவோ. வேண்டாமோ? என்றேன்,
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

“மூலத்தைச் சொல்லவோ, வேண்டாமோ?” என்று பாரதி கேட்கிறார். இங்கு “மூலம்” என்பது மனித மனத்தில் அழகைக் கண்டவுடன் இயல்பாக எழும் மோகம். அழகைக் காணும் மனம் அதை வெறுமனே ரசிப்பதில்லை. அதனை அடையவும், தனதாக்கிக் கொள்ளவும் விரும்புகிறது. மனித மனதின் அடிப்படை இயல்பையே மூலம் என்றழைக்கிறார்.

இந்தக் கேள்விக்கு அழகுத் தெய்வம் சொற்களால் பதிலளிக்கவில்லை. மாறாக, முகத்தில் அருள் காட்டி மறைகிறது. பாரதி தன் மோகம் தீர்ந்தது என்கிறார்.

மோகத்தை வெல்லும் ஆற்றல் அறிவினாலோ, தர்க்கத்தினாலோ, முயற்சியினாலோ மட்டும் கிடைப்பதில்லை. அவற்றைக் கடந்த அருள் நிலையே அதனை சாத்தியமாக்குகிறது. இங்கு அருளே விடையாகிறது.

கவிதையின் முன்னைய பகுதிகளில் யோகம், தவம், காலம், நியதி போன்ற அனைத்திற்கும் நிறைவளிப்பது அருளே என்பதை பாரதி உணர்த்துகிறார். அருள் இல்லையெனில், கருவிகள் வழியைக் காட்டலாம்; ஆனால், இறுதி அனுபவத்தை அளிக்க முடியாது.

அழகை மோகிப்பது ஒரு நிலை. அழகோடு ஒன்றி, பற்றற்று அதனைத் தரிசிப்பது வேறொரு நிலை. முதலில் உள்ள நிலையில் ஆசையும் உரிமை உணர்வும் மேலோங்குகின்றன. இரண்டாவது நிலையில் அகந்தை கரைந்து, அழகே தெய்வமாக அனுபவிக்கப்படுகிறது.

அழகுத் தெய்வம் ஒரு புன்னகையாலும் அருள் பார்வையாலும் பாரதியின் மோகத்தை நீக்குகிறது. அருள் வெளிப்பட்ட கணத்தில் மோகம் மறைந்து அழகு தெய்வமாக வெளிப்படுகிறது. அந்த பற்றற்ற தரிசனம் யாவருக்கும் கைகூடுவதில்லை. கைகூடுவதற்கு அருள் வேண்டும் என்று நிறைவடைகிறது கவிதை.

இவ்வாறாக, “அழகு தெய்வம்” என்பது வெறும் அழகைப் போற்றும் கவிதையல்ல. அழகின் வழியாக மனித மனம் மோகத்திலிருந்து ஞானத்திற்கு உயர்வதை எடுத்துரைக்கும் தத்துவக் கவிதையாகும். இயற்கையையும் அதன் அழகையும் அதனோடு ஒன்றி அனுபவித்த பாரதி, அழகு என்பது வெறும் புறத் தோற்றமல்ல் அது பிரபஞ்சத்தின் பேரறிவும், அருளின் வெளிப்பாடும் என்பதை இந்தக் கவிதையின் மூலம் உணர்த்துகிறார். பாரதியின் பல கவிதைகள் மோகத்தை வெல்லும் சிந்தனையின் வெளிப்பாடாகக் காணப்படுகிறது. «அழகு தெய்வம்» கவிதை, பாரதியின் பிற தத்துவக் கவிதைகளுடனும் ஆழமான தொடர்புடையதாகவும் இருக்கிறது.

  • கவிதா லட்சுமி

மறுமொழியொன்றை இடுங்கள்