
(இந்தப் பதிவு, நூலைப் படித்து முடித்ததும் எனக்குள் எழுந்த எண்ணங்களின் பதிவே அன்றி, கண்ணாவின் ஓவியங்கள் குறித்த திறனாய்வு அல்ல.)
நேற்று விமானம் தரையிறங்குவதற்குள் கண்ணா என்கிற சிவகுமாரனின் “கோடுகளும் கோலங்களும்” என்ற நூலைப் படித்து முடித்துவிட்டேன். ஒரே மூச்சில் ஒரு நூலைப் படித்து முடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தமது உணர்வுகளை மிக எளிமையான நடையில், எந்தத் தடையுமின்றி இயல்பாக எழுதுபவர்கள் இன்று அரிதாகிவிட்டார்கள் அல்லவா?
நூலாசிரியர் கண்ணாவை நாங்கள் “வெற்றிமணி” என்றே அழைத்துப் பழகிவிட்டோம். ஆனால், கண்ணா என்ற புனைபெயரில் வெளிவந்த அவரது ஓவியங்களும் சிற்பங்களும் என்னை வியப்படையச் செய்கின்றன.
“கோடுகளும் கோலங்களும்” என்ற இந்நூலுக்குத் தலைப்பிட என்னிடம் கேட்டிருந்தால், “தமிழ்க் கலைஞனாய் இருப்பது ஒரு சாபம்” என்றே வைத்திருப்பேன். ஆடல், பாடல் என்பதைத் தவிர்த்து, பிற கலைகளையும் கலைஞர்களையும் நமது சமூகம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பது பெரும் சாபம்தானே?
நான் வேலை செய்யும் இடத்தில், கலைப் படைப்புகளைத் தனது வாழ்நாள் முழுவதும் நூல்களாகப் பதிப்பித்துக்கொண்டு வந்த ஒருவரைச் சந்தித்திருக்கிறேன். நான் அவரைச் சந்தித்தபோது அவர் தனது நினைவுகளை இழந்திருந்தார். அவரது துணைவியார், அவர் பதிப்பித்த சில நூல்களை எங்களுக்குத் தந்தார். அவற்றைப் பார்க்கும்போது, ஒரு நாட்டில் கலைப் படைப்புகள் எப்படியெல்லாம் தொகுத்து, பாதுகாக்கப்பட்டு, கொண்டாடப்படுகின்றன என்று வியப்பாக இருக்கும். இப்படியான நூல்கள் நமது தமிழ்ப் படைப்புகளுக்கும் வரவேண்டும் என்று தோன்றும்.
ஆனால், அதற்குத் தேவையான அரசியல் சூழலும், சமூகப் பார்வையும், கலைக்கான தளமும் எம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. கண்ணாவின் ஓவியங்களையும் குறைந்தபட்சம் ஜெர்மனிய மக்கள்தாம் ஓரளவுக்குக் கண்டுகொண்டிருக்கிறார்கள்.

நூலை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்பே, மேலோட்டமாக அதிலிருந்த ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதே, சிவகுமாரனின் ஓவியங்களில் ஒன்றையாவது நான் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.
அவற்றில் இரண்டு ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இரண்டில் ஒன்றையாவது பெற்றுவிட வேண்டும் என்று நினைத்தேன். நூலை வாசிக்கத் தொடங்கியபோதுதான், எனக்குப் பிடித்த அந்த ஓவியங்களில் ஒன்று ஏற்கனவே திருட்டுப் போய்விட்டது என்று தெரிந்தது! அது இப்போது எங்கே இருக்கும் என்று அறிய வேண்டும் போலிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் திருட்டுப் போகும் கலைப் படைப்புகளுக்குத்தானே மதிப்பும் அதிகம்!
திருடப்பட்ட அந்த ஓவியம் “சகுந்தலை”. மானும், மீராவின் இசைக்கருவியும், சகுந்தலையோடு பின்னிப் பிணைந்து செல்லும் கோடுகளும் கொண்ட ஓவியம் அது. எனக்குப் பிடித்த மற்ற ஓவியம் இப்போது எங்கே இருக்கிறது என்பதையும் நான் கண்டுபிடிக்க வேண்டும்.
தனது ஓவியங்களுக்குப் பின்னால் இருக்கும் கதைகளையும், அவை உருவானபோது தன்னுள் ஓடிய எண்ணங்களையும் சிவகுமாரன் பதிவு செய்திருக்கிறார். அவற்றில் என்னைச் சார்ந்த ஒரு பதிவும் இருக்கிறது. அந்தப் பதிவை அவர் ஏற்கனவே எனக்கு அனுப்பியிருந்ததால், முன்பே வாசித்திருக்கிறேன்.
அதன் பெயர் “காற்று வடிக்கும் சிற்பம்.”
என் நினைவுக்கு எட்டியவரை, அவர் வியந்து குறிப்பிட்ட என்னுடைய ஒரு நடனத் தோற்றம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அது நூலில் இடம்பெற்றிருக்கும் படம் அல்ல. எனக்கும் மிகவும் பிடித்தமான அந்த நடனத் தோற்றத்தை மிக நேர்த்தியாகப் படம் பிடித்தவர் எனது நண்பரும் புகைப்படக் கலைஞருமான குகதாஸ்.
“காற்று வடிக்கும் சிற்பம்” என்ற கட்டுரையில் மார்லின் மன்றோவின் சில தோற்றங்களை வியந்து குறிப்பிடுகிறார். அதேபோன்ற தோற்றங்களைக் கொண்ட திரைப்படங்களையும் நடிகைகளையும் பற்றிப் பேசிக்கொண்டே, என்னுடைய நடனத் தோற்றங்களையும் குறிப்பிடுகிறார்.
அதை வாசிக்கும்போது, மார்லின் மன்றோவுடனோ அல்லது ஒரு திரை நடிகையுடனோ அவர் என்னை ஒப்பிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. மாறாக, என்னுடைய அந்த நடனத் தோற்றத்தைப் பற்றிப் பேசுவதற்காக அவர்களைத் துணைக்கழைத்திருக்கிறார் என்றே நான் உணர்கிறேன். அது எனக்குப் பெருமிதமாக இருக்கிறது.
அவர் வியந்த அந்தச் சரியான நடனத் தோற்றத்தையும் இங்கே பதிவிடுகிறேன்.

“பரதமும் சித்திரமும்” என்ற கட்டுரையும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ஒரு கலைஞன் இந்த உலகத்தையும் உயிர்களையும் எவ்வாறெல்லாம் ரசிக்கிறான் என்பதைச் சில இடங்களில் மிக அழகாகச் சொல்லிச் செல்கிறார் கண்ணா.
ஒன்று, நடனமாடும் பெண்களைத் தான் ரசித்ததன் பின்னணியைப் பற்றிய பதிவு. மற்றொன்று, கீழே விழுந்து கிடக்கும் பனம்பழத்தின் தோற்றம். விழுந்து கிடக்கும் ஒரு பனம்பழமோ, ஆடும் நர்த்தகிகளோ, ஒரு படைப்பாளியின் பார்வையில் இரண்டும் இரசிக்கப்படும் புள்ளி ஒன்றுதான்.
மற்றவர்கள் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒன்றின் முன் ஒரு கலைஞன் நின்றுவிடுகிறான். மற்றவர்கள் பார்க்காத ஒன்றை அவன் பார்க்கிறான். அந்தப் பார்வையில்தான் படைப்பு பிறக்கிறது. கண்ணா என்கிற சிவகுமாரனின் கலை சார்ந்த பார்வையும், அந்தப் பார்வைக்குள் இருக்கும் உண்மைத்தன்மையும் நெகிழ்வூட்டுகின்றன.
இந்நூல் என் கைகளுக்கு வருவதற்கு முன்பே கண்ணாவின் ஓவியங்களில் ஒன்றிரண்டை முகநூலில் பார்த்திருக்கிறேன். அவற்றில் ஒரு ஓவியம் எனக்குப் பிடித்துப்போக, என்னுடைய நூல் ஒன்றிற்கு ஓவியம் வரைந்து தரும்படி அவரிடம் கேட்டிருக்கிறேன். தான் இப்போது ஓவியம் வரைவதில்லை என்று அவர் சொன்னதால், அதற்கு மேல் வற்புறுத்த எனக்குத் தோன்றவில்லை.
ஆனால், கண்ணா என்கிற ஒரு படைப்பாளியைத் தொடர விரும்பாத மனநிலை அது என்றே இப்போது தோன்றுகிறது. ஒரு சமூகமாக நாங்கள் இப்படியான இடங்களில் தோற்றுக்கொண்டே இருக்கிறோம்.
அதேபோல, சில மாதங்களுக்கு முன்னர் சிவகுமாரன் தனது நூலுக்காக ஒரு சிறிய குறிப்பை மிகக் குறுகிய அவகாசத்தில் என்னிடம் கேட்டிருந்தார். அப்போது என்னாலும் அதைக் கொடுக்க முடியாமல் போயிற்று.
ஆனால், அந்தக் குறிப்பை அன்று நான் கொடுக்காமல் போனது நல்லதற்கே என்று இப்போது தோன்றுகிறது. அவரது படைப்புகளையும் கலைத்துவத்தையும் அறியாமல் எழுதியிருந்தால், அது மிகவும் மேலோட்டமான ஒரு வாழ்த்துக் குறிப்பாகவே இருந்திருக்கும்.
இப்போது இந்தப் பதிவை எழுதுவது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
ஓரிடத்தில் பிக்காசோவின் ஓவியங்களை வியந்து கண்ணா இப்படிக் கேட்கிறார்:
“அதனை ஆன்மீகம் என்பதா? இல்லை, ஒரு கலைஞனின் ஆழ்மனம் என்பதா?”
இந்த வரியை வாசித்தபோது எனக்குள் இன்னொரு கேள்வி எழுந்தது.
ஆன்மீகம் என்பதே ஆழ்மனத்தின் தேடல்தானே?
நூலாசிரியர் எழுதுகிறார்:
“ஆசிரியனாக இருப்பதைவிட மாணவனாக இருப்பதில் அலாதி சுகமுண்டு. குழந்தைகளிடம் கற்ற கலைகள் இன்றும் என் கலைகளை இளமையாக வைத்திருக்கின்றன. வெற்றியை அடையாது அதற்கு முதல் படியிலேயே நான் மறைந்தாலும், ஒரு வெற்றிக்கு இருக்கும் சக்தியைவிட நான் கண்ட படிகளுக்கு அதிக சக்தி உண்டு என்னும் பெருமிதத்துடன் உயிர் துறப்பேன்.”
இது நூலின் கடைசிக் கட்டுரை. சுவாரசியமாகப் படித்துக்கொண்டு வந்த நான், சற்று உடைந்துபோனது இந்த இடத்தில்தான். இந்த நூலை வாசித்து முடித்த பிறகு, உங்களை ஒரு ஓவியராகவோ, சிற்பியாகவோ, படைப்பாளியாகவோ மட்டும் பார்க்க முடியவில்லை. ஆன்மீகவாதியாகவும் பார்க்கத் தோன்றுகிறது. கலையோ, கடவுளோ, ஆழ்மனத்தின் ஆழ்ந்த தேடல்தானே ஆன்மீகம்.
இந்த மனநிலை ஒரு உண்மையான கலைஞனுக்கே உரியது என்று தோன்றுகிறது. வெற்றியை விடப் பயணத்தையும், புகழை விடத் தேடலையும், ஆசிரியனாக இருப்பதைவிட மாணவனாகத் தொடர்ந்து இருப்பதையும் பெரிதாக நினைக்கும் மனம் அது.
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்ற பாரதியின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
ஆனால், அந்த ஒளி வாக்கினில் மட்டும் வருவதில்லை என்று நான் நம்புகிறேன். உள்ளத்தில் உண்மையொளி இருந்தால் அது நமது பார்வையில் வரும். நமது நடத்தையில் வரும். நமது கலைப் படைப்புகளில் வரும். நாம் வாழும் விதத்திலும் வரும்.

……
The cover photo, featuring the book and Sivakumaran, was created with the help of AI









