தொட்டிப் பூ பற்றி – மு.மேத்தா – 2009

தொட்டிப் பூ பற்றி – மு.மேத்தா – 2009

”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்!

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார், யார் எந்தையும் இலமே!”

என்பது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனின் பெண் மக்கள் பாடிய பாட்டு.
—–
சங்க இலக்கியத்தில் என்னை மிகவும் பாதித்த பாட்டு இது! படரத்துடித்த ஒரு பூங்கொடிக்கு தன் தேரையே பரிசாகக் கொடுத்த பார்வேந்தனின் மகள்-இன்று- கால் பதிக்க நிலமின்றிக் கண்ணீரில் வாடுகிறாள்.

யுத்தத்தையும் ரத்தத்தையும் தவிர ஒரு தாயின் உதடுகள் தடவி;க்கொடுத்த முத்தத்தை அறிய முடியா அவலம் அவளுடையது. பாரியின் மகள் பதைத்த பதைப்பும் துடிப்பும் அவள் வடித்த கண்ணீரின் சிலிர்ப்பும்- குருதி தெறித்த சொற்களின் கொதிப்பும் இதோ- ”கவிதா” என்ற கவிதைப் பெண்ணின் பாட்டுக் குரலில் மீண்டும் பதிவாகியுள்ளது.

அன்றைய பரம்பின் நிலையைப் பாரிமகளிர் பாடினர்!
இன்றைய ஒழத்தின் நிலையைக் கவிதா பாடியுள்ளார்.
இரண்டிலும் சூழ்ச்சிகளும் வஞ்சகமும் சுட்டிக்காட்டப் படுகின்றன.
சூறையாடிய சொந்தங்களின் துரோகங்கள் சொல்லப்படுகின்றன.
——
ஒரு நாட்டின் அதிபர் அந்த நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தால் அடுத்த நாட்டில் அவர்கள் அதிதிகள்! (விருந்தினர்)
ஒரு நாட்டின் குடிமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தால் அடுத்த நாட்டில் அவர்கள் அகதிகள்!
பாரி மகளிருக்கும் இந்த நிலை நேர்ந்திருக்கிறது!
பாவலர் கவிதாவிற்கும் இந்நிலை நேர்ந்திருக்கிறது!
இரண்டும் பாடல் வரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கவிதாவின் கவிதைகளில் – சந்தங்களின் ஓசை நயம் கேட்பதில்லை. சொந்தங்களி;ன் உயிர் ஓலம் கேட்கிறது.
கற்பனைகளின் அலங்காரம் காணப்படவில்லை. கவலைகளின் அஸ்திவாரம் காட்டப்படுகிறது. எழுதப்பட்ட கவிதைகள் அல்ல இவை இதயத்திலிருந்து எழுந்து வந்த கவிதைகள்.
காயங்கள் இங்கே காட்டப்படுகின்றன. கண்ணீரின் கடிதங்கள் நீட்டப்படுகின்றன.

கவிதாவின் சில கருத்துக்களோடு நாம் உடன்பட முடியாது. வித்தியாசமான சில விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ள இயலாது. ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக் குரலையும் உயிர்வேட்டை நடத்துவோரின் ஓங்காரக் குரலையும் ஒரே தராசில் நிறுத்த முடியமோ?

ஆனாலும் கவிதாவின் கவிதைகள் ஒவ்வொரு மனதிலும் உட்புகுந்து கலகம் விளவிக்கும் கவிதைகளாகும். ஆற்றாமையும் இயலாமையும் தோற்றுவித்த அனுபவங்களின் வார்ப்படம் இது.
சில சமயங்களில் கண்ணன் கைப் புல்லாங்குழலாகவும். பல சமயங்களில் களத்தில் நிற்கும் வீரனின் கைத் துப்பாக்கியாகவும் கவிதாவின் எழுதுகோல் அவதாரம் எடுத்திருக்கிறது.

அரிதாரம் பூசாத அவதாரம் இது!

புலம் பெயர்ந்த ஒரு பெண்ணின் கவிதைகள் நிலம் பெயர்ந்து நம் நெஞ்சில் நுழைகின்றன. உள்ளத்தின் நாற்காலியில் உரிமையோடு அமர்கின்றன.

”தொட்டிப் பூ” ஒரு துடிப்பான பூ!

வாழ்த்துக்களுடன்
மு.மேத்தா.
13.06.2009
சென்னை 09

பின்னூட்டமொன்றை இடுக