கவிதாவின் இரு நூல்கள் நோர்வேயில் வெளியீடு – ரூபன் சிவராஜா

கவிதாவின் இரு நூல்கள் நோர்வேயில் வெளியீடு; – சில அறிமுகக் குறிப்புகள்

(‘கருவறைக்கு வெளியே’, ‘கறுத்த பெண்’)

‘கருவறைக்கு வெளியே’ என்ற தலைப்பிலமைந்த சிறுகதைத் தொகுதி, ‘கறுத்த பெண்’ என்ற தலைப்பிலமைந்த கவிதைத் தொகுதி ஆகிய இரு நூல்களின் வெளியீடும் அறிமுகமும் மே மாதம் 10ஆம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது.
இவை நோர்வேயில்வாழ்ந்துவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த கவிதாவின் நூல்கள். ஆளுமை மிக்க ஒரு நடன ஆசிரியராகவும் கவிஞராகவும் அறியப்பட்டவர் கவிதா. பாடல்களையும் எழுதக்கூடியவர். ஏற்கனவே 2008 இல் ‘பனிபடலத்தாமரை’, 2009/2010 இல் முறையே ‘என் ஏதேன் தோட்டம்’ மற்றும் ‘தொட்டிப்பூ’ ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். ‘கறுத்த பெண்’ கவிதாவின் நான்காவது கவிதைத் தொகுதி. “கருவறைக்கு வெளியே” அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
ஏலவே கடந்த ஆண்டு தமிழகத்தில் இவ்விரு நூல்களும் வெளிவந்திருந்த போதும், தான் வாழ்ந்துவரும் நோர்வே நாட்டில் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இவற்றின் அறிமுக விழா அமைந்தது. பல்வேறு இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற நூல் அறிமுக விழாவிற்கு தமிழாசிரியரும் கவிஞருமான தியாகேஸ்வரி தலைமை வகித்தார். “கருவறைக்கு வெளியே” சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சன உரையினை ஊடகவியலாளர் ஜெயசிறி விஷ்ணுசிங்கம் நிகழ்த்தினார். “கறுத்த பெண்” கவிதைநூல் பற்றிய அறிமுக மற்றும் விமர்சன உரைகளை கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம் மற்றும் ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா ஆகியோர் நிகழ்த்தினர்.
இவ்விரு நூல்களும் முதன்மைத் தலைப்புகளுடன் துணைத் தலைப்புகளையும் கொண்டுள்ளது. கருவறைக்கு வெளியே சிறுகதைத் தொகுப்பின் துணைத்தலைப்பு ‘நான் பயந்து போயிருக்கிறேன்’ கறுத்த பெண் கவிதை நூலின் துணைத்தலைப்பு ‘நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்’ என்பதாகும். தலைப்புகளின் தொனிப்பொருள் உணர்த்துவது போல் கவிதை நூல் பெண்ணியம் சார்ந்தும், சிறுகதை நூல் சிறார்கள் மீதான பாலியல் உட்பட்ட பல்வேறு வகையான வன்முறைகள், துஸ்பிரயோகங்கள் பற்றியும் பேசுகின்றன.
கறுத்த பெண் தொகுப்பில் 55 கவிதைகள் பதிவாகியுள்ளன. தமிழ்ச் சூழலின், குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச்சூழலில் பெண்களின் நிலை பற்றிய கேள்விகளை இந்நூல் எழுப்புகின்றது. பெண்களின் சமூக இருப்பு பற்றிய கூர்மையான கருத்துகள், விமர்சனங்கள், தேடல்கள் கவிதைகளில் விரவிக்கிடக்கின்றன.
சிறுகதைத் தொகுதியில் 11 குறுங்கதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் பெரும்பாலானவை மிகவும் உணர்ச்சிபூர்வமானவை. அத்தோடு தமிழ்ச் சூழலில் வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்ற, வேறுவகையில் சொல்வதானால் பேசாப் பொருளைத் துணிந்து பேசுகின்றன இக்கதைகள்.
குழந்தைகளின் உலகம் அழகானது, அதிசயமானது, குதூகலமானது, தனித்துவமானது. குழந்தைகளுக்கென்று தனித்துவமான உளவியல் உள்ளது. அத்தகு தனித்துவ உலகத்தினை மேலும் செழிப்பானதாகவும் சிறப்பானதாகவும் ஆக்க வேண்டிய கடப்பாடு பெற்றோர், உறவினர்கள், குடும்பம், சமூகம், தேசமெனப் எனப் பல தரப்பினருக்கும் உண்டு. ஆனால் குழந்தைகளின் உலகத்தை, அவர்களின் உளவியலை எந்தவித சலனமுமின்றிச் சிதைக்கின்ற ஒவ்வாச் செயல்கள் மேற்சொன்ன அனைத்து மட்டங்களிலும் பெருகி வருகின்றமையைப் பலரும் அறிவர். குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள், துஸ்பிரயோகங்கள், அவர்களுக்கு நேரும் புறக்கணிப்புகள், பாரபட்சங்கள் பற்றி சிறுகதைகளில் பேச முற்பட்டுள்ளார் கவிதா.
இந்நூலினை அறிமுகம் செய்து உரையாற்றிய ஜெயசிறி தனதுரையில் குறிப்பிடும் போது, சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதையும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும்; பேசுகின்றன கவிதாவின் சிறுகதைகள். பொதுவாக இவ்வகைப் பேசாப்பொருளைப் பெண்களே துணிச்சலுடன் எழுதிவருகின்றனர். இந்திய-தமிழகச் சூழலில் இடதுசாரிச் சிந்தனையுடைய பெண் எழுத்தாளர்கள் இவ்வகைப் பேசுபொருள் சார்ந்து துணிந்து எழுதுவதைக் காணமுடியும் என்று குறிப்பிட்டார்.
சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குடும்பத்தை, உறவுமுறையை, நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்களாலேயே அதிகமதிகம் மேற்கொள்ளப்படுகின்றது. வெளியிலிருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என சிறார்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக ஐ.நா சிறார் உரிமைகளுக்கான உயர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதையும் ஜெயசிறி மேற்கோள் காட்டினார். இவை வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை
யில் கவிதாவின் முயற்சி முக்கியமானதும் பாராட்டுக்குரியதுமாகும். இருகலாச்சாரச் சூழலில் பெண் பிள்ளைகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள், வளர்ப்பு முறையில் பெண்பிள்ளைகள் மீது காட்டப்படும் பெற்றோரின் பாரபட்ச அணுகுமுறை என்பன எவ்வாறு அவர்களின் உளவியலைப் பாதிக்கின்றது போன்ற பிரச்சினைகளும் சிறுகதைகளில் பேசப்பட்டுள்ளன எனவும் ஜெயசிறி தொடர்ந்து கூறினார்.
கவிதாவினுடைய கவிதைகள் சொந்த உணர்வுகள், வாழ்வனுபவங்களின் பிரதிபலிப்பு என்பதற்கு அப்பால், சக மனிதர்களின், சமூகத்தின் வாழ்வனுபவங்களையும் உள்வாங்கி, சமூக நிலைப்பட்ட பொதுத்தன்மைக்குரிய பரிமாணத்தினைக் கொண்டுள்ளதாக ரூபன் சிவராஜா குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், கவிதாவினுடைய கவிதைகள் பெண்கள் மீது கலாச்சாரம், பண்பாடு, சடங்குகள், விழுமியங்கள் போன்ற போர்வையில் திருமணம், குடும்பம், சமூகம் ஆகிய நிறுவனமயப்பட்ட தளங்களில்; மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் பற்றிய கேள்விகளை முன்வைக்கின்றன. அத்தோடு தம்மீதான சமூக அழுத்தங்களைக் களைந்து, சுதந்திரமாக சிந்திக்க, பேச, விவாதிக்க முனைகின்ற பெண்களின் வேணவாக்குரலாகவும் பல கவிதைகளை நோக்க முடிகின்றது என்றார்.
ஆண்-பெண் பால்நிலை சார்ந்து கவிதா எழுப்புகின்ற கேள்விகள் முக்கியமானவை. நான் படித்த கவிதைநூல்களில் மிகத் துணிச்சலாக எழுதப்பட்ட கவிதை நூல்களில் இதுவும் ஒன்று. அந்த வகையில் கவிதா பாராட்டுக்குரியவர் எனக் குறிப்பிட்டார் கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியோடு பெண்விடுதலை பற்றிய சிந்தனை பரவியது. பெண்களின் சமூகப் பாத்திரம் மாற்றம் கண்டது. ஆனால் அந்த மாற்றங்கள் சமூக ரீதியான மன மாற்றது;திற்கு இட்டுச் சென்றதா? அந்த மாற்றங்கள் நிலைத்திருக்குமா? எமது சமூகம் அந்த மாற்றத்தைப் பேணும் அக்கறை கொண்டுள்ளதா போன்ற கேள்விகள், கவிதாவின் கவிதைகளைப் படிக்கும் போது தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் தனது கருத்தினை முன்வைத்தார்.
எமது சமூகத்தில் ஆண்-பெண் சார்ந்து ஏற்பட்டுள்ள பாத்திர மாற்றத்தை (நேர்மறையான) உள்வாங்கிய கவிதைகளையும் இத்தொகுப்பில் காண முடிகின்றது. கவிதைகள் கருக்கொள்வது வாழ்வனுபவம் மற்றும் நேரடி அவதானிப்புகளிலிருந்து என்ற போதிலும் சமூகம் எப்படி இயங்குகின்றது, வாழ்கின்றது என்ற கேள்விகளிலிருந்தும் உருவாகுகின்றது எனலாம். அந்த அடிப்படையில் அவ்வாறான கேள்விகள் பலவற்றிலிருந்து கவிதாவின் கவிதைகள் உருவாகியிருப்பதை உணர முடிகின்றது எனவும் சர்வேந்திரா குறிப்பிட்டார்.
இருநூல்களின் அறிமுக மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து, தொல்லியல் ஆய்வு மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பொ.இரகுபதி அவர்களின் சிறப்புக் கருத்துரை இடம்பெற்றது. கவிதாவின் நூல்களில் பேசப்பட்ட கருப்பொருள் சார்ந்த சூழல்களை வரலாற்றுப் பார்வையுடன் ஆய்ந்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். கவிதாவின் கவிதை நூலில் இடம்பெற்றுள்ள பெண்ணியம் பற்றிய கவிதைகள் பற்றிப் பேசும் போது, தாய்வழிச் சமூக மரபிலிருந்து, அதாவது பெண்கள் குடும்பத்தலைமையாக விளங்கிய சமூக மரபிலிருந்து எவ்வாறு தந்தைவழிச் சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றம் கண்டது என்பது பற்றியும், அந்த மாற்றத்திற்கு கொலனித்துவ ஆட்சியாளர்கள் எவ்வாறு வழிகோலினர் என்ற வரலாற்றினையும் அவர் மீள்நினைவு படுத்தினார்.இச்சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை பரந்த அளவில், அதாவது உலகம் தழுவிய நிலைப்பட்ட பரிமாணத்தில் பார்ப்பது அவசியமெனவும் பேராசிரியர்.பொ.இரகுபதி வலியுறுத்தியிருந்தார்.
தனது எழுத்து அனுபவங்கள், மற்றும் கருத்துகளைத் துணிச்சலாக முன்வைக்கும் போது எதிர்கொள்ள நேர்கின்ற சவால்கள் பற்றிய சில கருத்துகளைத் தனது நன்றியுரையின் போது கவிதா பகிர்ந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
-ரூபன் சிவராஜா 23-05-2014
 

பின்னூட்டமொன்றை இடுக