
பனிப்படலத்தாமரை முகவுரை – பானுபாரதி 2006
———————————————————
புகலிடத் தமிழ்படைப்புலகில் பெண்களின் பிரவேசம் முன்னெப்போதையும் விடவும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், நாடகம், பத்திரிகை, குறும்படம் என கலை இலக்கியத் துறைகளில் பெண்கள் தம் ஆளுமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களது பிரச்சனைகள் பெண்களாலேயே வெளிக் கொணரப் படுகின்றன
இது பெண்ணியக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாகும். இருந்த போதிலும் இன்னமும் மறுபுறத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் தொடர் வரலாறாய் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. பெண்கள் சுதந்திரம்(?) அடைந்து விட்டதாகக் கருதப்படும் ஐரோப்பிய சூழலில் வாழும் எமது பெண்களின் நிலமைகளில் எந்தவித மாறுதலும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. மகள், மனைவி, சகோதரி என்ற நிலைகளிலிருந்து அவள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகளும் தொடர்கதையாகவே நீண்டு செல்கின்றன.
தனது அடையாளத்தையும், ஆளுமைகளையும் தொலைத்துவிட்டு, தன்னைச் சூழவுள்ளவர்களுக்காகவும், மற்றவர்களின் நலன்களுக்காகவும், சமூகத்துக்காகவும் தன்னை விட்டுக் கொடுப்பவளாகவும், அனுசரித்துப் போபவளாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப் படுகிறாள். பொருளாதார ரீதியாக ஆண்களில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை இல்லாத இந்த நாடுகளில்கூட ஆணில் பெண் தங்கியிருக்கத்தான் வேண்டுமென்ற மறைமுக, நேரடி நிர்ப்பந்தங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
இங்கே பெண் உழைப்பவளாக இருந்த போதும் அவளது உழைப்பு கணக்கிலெடுபடாச் சூழ்நிலையும், உழைப்பென்று அங்கீகரிக்கப் படாத நிலையுமே காணப் படுகின்றது. இந்த நாடுகளில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னும் மீண்டும் வீட்டு, குடும்பப் பணிகளை தனது தலையில் சுமந்து நிறைவேற்ற வேண்டியவளாகவே இருக்கிறாள். இது அவளுக்கு மட்டுமே உரிய பணியென்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டது என்ற கருத்தும் இன்னமும் எமது ஆண்கள் பலரிடத்தில் நிலவத்தான் செய்கின்றது. இங்கே பெண்களுக்கான பணியும், பளுவும் இரட்டிப்பான நிலையே நிலவுகின்றது.
இங்கே மிகவும் அபத்தமான நிலை என்னவென்றால், சமூகப்பார்வை, பெண்ணியம், விடுதலை போன்றவற்றில் ஈடுபாடுள்ளவர்களாய்த் தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரிடம்கூட இன்னமும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள் அறவே அற்றுப்போனதாகத் தெரியவில்லை. பல இடங்களில் சாதாரண ஆண்களைவிடவும் இப்படியானவர்களிடம் ஆதிக்க மனோநிலை மேலோங்கியே காணப் படுகின்றது. தனது மனைவியின் உழைப்பை (அது வீட்டுப் பணிகள் உட்பட) உழைப்பென்று ஏற்றுக்கொள் முடியாத மனோபாவம் உள்ளவர்களையும் நாம் அன்றாடம் கண்கூடாக தரிசித்துக்கொண்டே இருக்கின்றோம்.
எமது இலக்கை நாமே அடைவோம், எமது சுதந்திரத்தை நாமே வென்றெடுப்போம் என சில பெண்ணியவாதிகள் சொல்லிக்கொண்டாலும்கூட, பெண்களின் படைப்புகளைப் பொறுத்தவரை எந்த விமர்சனமோ, மதிப்பீடோ இல்லாமால் பெண்ணின் படைப்பு என்பதால் மட்டும் அதை அப்படியே அங்கீகரிக்க வேண்டும் என்று கோருவதுகூட என்னைப் பொறுத்தவரை ஒரு சலுகைதான். பேரூந்திலும், இன்ன பிற இடங்களிலும் மகளிருக்கு மட்டும் என இந்த ஆணாதிக்க சமூகத்தால் தனியிட சலுகை வழங்கப்படுவதுபோன்றதொரு சலுகைதான் இதுவும். இது சலுகை மட்டுமல்ல, சரியான திசையை நாம் சென்றடையாதபடி நாமே தேடிக்கொள்ளும் தடைகள்தான். எந்தவொரு படைப்பாயிருந்தாலும், அது ஆண் படைப்பாளிகளினதாயிருந்தாலென்ன, பெண் படைப்பாளிகளினதாயிருந்தாலென்ன சரியான கருத்துத் தளத்திலிருந்து விமர்சனத்துக்கு உட்படுத்தாதவரை அந்தப் படைப்புக்கள் சமூக மாற்றத்திற்கான இலக்கை அடையவல்ல எந்தப் பலாபலனையும் தரப்போவதில்லை.
அதேவேளை பெண்களிவர்கள் எதை எழுதிக் கிழிக்கப் போகிறார்கள் என்ற மிக மட்டமான கருத்தும் முற்போக்குத் தளத்திலுள்ள சில ஆண்களிடம் இருக்கத்தான் செய்கின்றது. இது மிகவும் கண்டிக்க வேண்டிய விடையமாகும். பெண்விடுதலை, பெண்ணியம் என்ற கோசங்கள் உயர்த்தப்பட்டும், கலையிலக்கியங்கள், வெளியீடுகள் மூலமாக பெண்களின் பிரச்சனைகள் வெளிக் கொணரப்படுகின்ற போதிலும் பெண்களை ஒருங்கிணைத்து, ஸ்தாபனமயப் படுத்துவதில் பின்தங்கியே இருக்கின்றோம். பெண்ணொடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டம் சரியான கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப் படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். எமது போராட்டம் ஆணாதிக்க சமுதாயத்துக்கு எதிரானதேயொழிய, ஆண்களுக்கு எதிரான போராட்டமில்லை என்று சொல்லிக் கொண்ட போதிலும் ஆணெதிர்ப்புக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகவே எமது அநேக நடைமுறைகள் உள்ளன. இதுவே பெண்ணொடுக்குமுறை உட்பட அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஆண், பெண் இணைந்து முன்னெடுக்க வேண்டிய போராட்டத்துக்கு பெருந் தடையாய் உள்ளதாகும்.
பெண்களின் படைப்புக்களை வரவிடுங்கள், விமர்சனம் என்ற பயங் காட்டாதீர்கள் என்று கேட்டுக் கொள்வதற்கு முன் வைக்கப்படும் காரணம், எழுத வரும் பெண்களோ மிக மிகக் குறைவு, அவர்களையும் எடுத்த எடுப்பிலேயே விமர்சனம் என்ற அச்சத்தை ஊட்டினால் நொந்து ஒதுங்கிக் கொள்வார்கள். முதலில் அவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்ற வாதமாகும். இந்தப் போக்கை நாம் தொடர்ந்து இன்னமும் அனுமதிக்க முடியாது. பெண்கள் எதை எழுதினாலும் அங்கீகரிக்கப்படும் என்ற கருத்தாக்கத்தோடு, சமூக மாற்றத்திற்கு எதிரான படைப்புகளையும் உள்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும், ஏற்பட்டிருக்கிறது. நொந்து ஒதுங்குபவர்கள் ஒதுங்கட்டுமே, அதில் எந்த இழப்புமேயில்லை. தேடல், வாசிப்பு, தெளிவு இருக்குமிடத்து தரமான படைப்புக்கள் வர வாய்ப்பிருக்கின்றது. கருத்துத் தெளிவற்ற ஆயிரம் படைப்புக்கள் வெளிவருவதைவிட, தேடலும், கருத்துத் தெளிவோடும் வெளிக் கொணரப்படும் ஒன்றிரண்டு படைப்புக்களே போதும். அவை தமது காத்திரமான பணியை செவ்வனே செய்யும்.
முதலில் கவிதாவின் படைப்புலகப் பிரவேசம் பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுயள்ளது. அவரது குழந்தைப்பருவம்முதல் நோர்வேயில்தான் நகர்தப் பட்டிருக்கிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எமது மண்ணிலிருந்து அனுபவித்தவரல்ல. ஆனாலும் அவரது கவிதைகளில் தென்படும் பெண்ணொடுக்குமுறை பற்றிய கவிதைகளை நோக்குமிடத்து, இந்தத் தேசத்தில் வளரும் எமது பெண் குழந்தைகள்கூட எமது சமூகக் கட்டுமானங்கள், கலாச்சாரம் என்பதன் பெயரால் திணிக்கப்படும் கருத்துச் சூழலுக்குள்ளும், அதன் தாக்கத்தினுள்ளும்தான் வளர்க்கப் படுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.
அப்படியானதொரு விமர்சனத் தளத்திற்கு கவிதாவின் இந்தக் கவிதைகளும் இட்டுச் செல்லப்பட்டு நன்மை பயக்கும் வகையில் புடம்போடப் படும் என்ற நம்பிக்கையோடு அவரது சில கவிதைகள் எனக்குள் தந்த தாக்கத்தை முன்வைத்து வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
உருண்டோடும் உலகத்தை
தவழ்ந்து, நடந்து
துள்ளியோடி
எட்டிப்பிடிக்க உன்னிய
என் கைகளில்
கலாச்சார வளையல்களை மாட்டி
வழங்காமல் செய்தனர்.
என்று புதிதாய்ப் பூக்கவேண்டும் கவிதையில் குறிப்பிடுகின்றார். இந்தக் கவிதையில் புலப்படும் ஒவ்வொரு வரிகளும் பெண்ணொடுக்குமுறையின் கூரிய முனையை எடுத்தியம்புகின்றன. இதேபோல் பட்ட மரம் என்னும் கவிதையில் ஒடுக்குமுறையின் கொடுமைகளை உணர்ந்துகொண்ட ஒரு பெண் தானும் தனது கவிதைகளுமாய் மூலையில் முடங்கிப்போகும்படி நிர்ப்பந்திக்கப்படுவதையும், அதற்கு எதிராக பெண்ணின் உணர்வு எழுச்சி பெறுவதையும்வெளிப்படுத்துகின்றார்.
தெரிந்ததையெல்லாம்
தெளிவாக எழுதிய
என் கைகள்
புரிந்ததையெல்லாம்
புரியாததுபோல்
நடப்பதுவே
நல்ல பெயர் தருமென்று….
மூலையில் முடங்கி
முடமாய் போனது
என் கைகள் மட்டுமல்ல
கவிதைகளும்தான்.
…………………..
………………….
அடக்கி வைத்த என்
உயிர் அணுக்களை உசுப்பி
மெது மெதுவாய்
பசுமை என்னில்
துளிர் விடுவதையும்
எல்லைக் கோடுகளைத் துளைத்து
கிளைகள் தாண்டிப் படர்வதையும்
மகரந்தம் காற்றில்
மிதந்து செல்வதையும்
மொட்டுக்கள் விரிவதையும்
நான் ரசித்துக் கொண்டேன்.
பெண்தான் கருவைச் சுமக்க வேண்டும் என்பது இயற்கை. அதை ஆணை சும என்று கேட்க முடியாது. அதேவேளை கருத்தடை அறுவைச் சிகிச்சையை ஆண்கள் செய்யக் கூடிய சூழலும், வசதியும் இருந்தும்கூட அதனையும் பெண்களே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்து கொண்டிருப்து என்பது எந்த வகையிலும் பெண்ணின் உடலியல் சார்ந்த துன்பங்பகளில்கூட ஆண் பங்கெடுக்க தயாரில்லை என்பதையே வெளிப் படுத்துகின்றது. இதனை மிக எளிதாக கருக்கலைப்பு என்னும் கவிதையில்புலப்படுத்துகிறார்.
நான்காம் முறையாய்
கருவுற்ற போதும்
கலைத்துவிட்டு
சோர்ந்த
உடலுடன்
கணவனுக்காய்க்
காத்திருந்தேன்
……………………..
……………………….
கருக் கலைப்புக்கள்
போதும் கண்ணே
நீயே போய்
கருத் தடையையும் செய்துவிடு.
……………
பெண்ணியக் கருத்துக்களோடு மட்டும் நின்றுவிடாது சமூகத்திலுள்ள பன்முகப்பட்ட பிரச்சனைகள் பற்றியும் தனது கவிதைகளினூடாக பேச வருகிறார் கவிதா. தனக்கு மிகவும் அந்நியமாகிப்போன ஒரு சூழலில் தனது கனவுகளைத் தொலைத்து விட்டு வாழ்க்கைக்காகப் போராடும் ஒவ்வொருவரினதும் கனவுகள் கனவுகளாகவே தொலைந்து போகும் அவலத்தை புலம்பெயர்ந்த எமது சமூகத்தில் தரிசிக்கின்றோம். இதனை
விடிவுகள்………
இருள் வலைக்குள் சிக்குண்டன.
ஆதவனும் தொலைந்த
நாட்களிது.
வெறும் நிழல்களே இங்கு மீதம்
…………………………
என் சோகத்துடன் பங்கெடுத்து
பனிக் கட்டிகளும் கண்ணீராகும்
இந் நள்ளிரவில்
நீராகிக் கரை தேடும்
என் கானல்கனவுகள்
என கரை தேடும் கனவுகள் என்ற கவிதையில் கூறுகின்றார்.
இன்னமும் இலங்கைத் தீவில் எரிந்துகொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சனை.
ஐக்கிய இலங்கைக்குள் எல்லா இனங்களும் சேர்ந்து வாழ்வதா, பிரிந்து வாழ்வதா என்பது இன்று சர்ச்சைக்குரிய கேள்விதான். பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாழ முடியாதென்ற முடிவில் நின்றே ஈழவிடுதலைப் போர் ஆயுதப் போராட்டமாய்ப் பரிணமித்தது. இன்றைய கால கட்டத்தில் தனித் தேசிய இனமாய்பிரிந்து போவதென்பது சரியான தீர்வுதானா, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணமுடியாதா என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
இன்னமும் முடிந்தபாடின்றிக் கிடக்கும் இந்தப் பிரச்சனை. இரு தாய்க்கு ஒரு குழந்தை என்று மன்னன் சாலமோன் தீர்ப்புக் கூறிய வழக்கை இங்கே இரு குழந்தைக்கு ஒரு தாய் என்று மறு பக்கமாய் முன்வைத்து விசனப்படுகின்றார் தீர்ப்பு என்னும் கவிதையினூடாக.
தாயை…..
வெட்டென்கிறது ஒரு குழந்தை
வெட்டவும் விட மாட்டேன்
கொடுக்கவும் மாட்டேன்
என்கிறது ஒரு குழந்தை
ஒரு குழந்தைக்கும்
இரு தாய்மார்களுக்கும்
தீர்ப்புச் சொன்ன
சாலமா…
எழுந்து வா!
…….
இயற்கையை இரசித்தும், நேசித்தும், அவற்றை மனித வாழ்வோடும், அவலங்களோடும், மகிழ்வோடும் உவமானமாய் எடுத்தியம்பவல்ல படைப்பாளியாய் பல கவிதைகளில் கவிதாவின் ஆற்றலை தரிசிக்க முடிகின்றது. அவற்றிற் சில….
இலையுதிர் காலம்
மழையின்
தொடுதலிலும்,
காற்றின் மெட்டுகளுக்கு
இலைகள்
கூத்தாடுவதையும்
நீங்கள் ரசிக்கவில்லை?
என்றும்,
என் தேசம்
காதலுண்ட
கடல் வண்டுகள்
ஓயாது இசையமைக்கும்
தேன்துளியொத்தது
என் தேசம்.
இப்படி பல வரிகளைத் தொட்டுச் சொல்லக்கூடியதாயுள்ளது.
கவிதாவின் நேர்த்தியான படிமங்களுக்கு இன்னொரு கவிதை சந்ததிகள் என்ற கவிதையாகும். இதன் அழகியலை மீண்டும் மீண்டும் என்னுள் சுவைத்துக் கொண்டேன்.
மனிதத்தைத் கொன்றொழித்துக்கொண்டிருக்கும் சுடுகுழல் மீதான வெறுப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் இரு கவிதைகள்.
எதைப் பற்றியும்
சிந்தையில்லை.
இதன் இருதயம்
இரும்பு.
வெடிக்கவும்,
உயிர் பிரிக்கவும்
மட்டுமே
பழக்கப் பட்டது.
என்று துப்பாக்கி என்ற கவிதையிலும்,
துப்பாக்கியைத் தூர எறிந்த
எனது கைகள்…
எழுதுகோலைக் கம்பீரமாய்க்
கையில் எடுத்தது.
என்று ஆயுத எழுத்து என்ற கவிதையிலும் சிலாகித்துச் செல்கிறார்.
இழப்புக்கள் கனமானவை. கொடூரமானவை. அதிலும் விடுதலைக் காற்றை எமது மண்ணும் மக்களும் நுகரவேண்மென்ற அர்ப்பணிப்போடு புறப்பட்ட போராளிகளை அதிகார மோகம் கொண்டு, நமக்குள் நாமே சகோதர வன்மம் தீர்த்துக் கொண்டதால் ஏற்பட்ட படுகொலைகளும், இழப்புக்களும் சகித்துக் கொள்ளக்கூடியதல்ல. அப்படியானதொரு அபத்தமான இழப்புக்கு தனது தந்தையைப் பலி கொடுத்த கவிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். வெளிப்படையாய் இல்லையெனினும் இந்த இழப்பின் சோகத்தையும், அந்த போராளித் தந்தையின் விடுதலைவிதையாக தான் துளிர்த்து நிமிர்வதையும் திடமுடன் கூறுகின்றார் தொலைந்து போன உறவொன்று என்ற கவிதையில். இந்தக் கவிதையின் படிமங்களும், அழகியலும் மிக நேர்த்தியான வாசமொன்றை விதைத்துச் செல்வதை அனுபவிக்க முடிகின்றது.
புல்லின் கீழ்
மீதமிருக்கும் பனித்துளியாய்
நானிருக்க
அதிகாலைக் கதிரவனாய்
என்னை
தட்டியெழுப்பும்
உன் நினைவுக் கதிர்கள்
…………………………….
உன் விடுதலைக் கனவின்
விம்பங்களில்
வேர் படர்த்தி
விறைத்து நிற்கும்
விழுது நான்.
”விமர்சனங்களே என்னை சிறந்த சிற்பியாக்கும்” என தனது முகவரியில் கவிதா கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆக்கபூர்வமாய் முன்வைக்கப்படும் விமர்சனங்களை சிரத்தையிலெடுத்து, கவிதைப் படைப்புலகில் சிறந்த சிற்பியாக முன்னேறுவாரென்ற நம்பிக்கையோடும் தோழமையோடும்
பானுபாரதி-









