
சாம(ர்)த்திய வீடு ஏன் இன்று ‘Saree Ceremony’ ஆனது?
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் அண்மைக்காலமாக ஒரு மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. நாம் காலங்காலமாக “சாமர்த்திய வீடு” என்று அழைத்து வந்த நிகழ்வை இன்று பலர் “ளுயசநந ஊநசநஅழலெ”என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏன் இந்தப் பெயர் மாற்றம்? நமது பாரம்பரியச் சொல்லின் பொருள் புரியவில்லையா? அல்லது ஒரு பெண் சாமர்த்தியம் அடைந்துவிட்டாள் என்று சொல்வதில் ஏதாவது வெட்கம் இருக்கிறதா?
முதலில், சாமர்த்தியம் என்ற சொல்லின் பொருளைப் புரிந்துகொள்வோம்.
தமிழில் சாமர்த்தியம் என்பது திறமை, ஆற்றல், வல்லமை, ஒரு செயலைச் செய்யக்கூடிய தகுதி ஆகிய பொருள்களைக் கொண்ட அழகான சொல்.
இலங்கைத் தமிழர் வழக்கில் ஒரு பெண் குழந்தை முதன்முதலாக மாதவிடாய் அடைந்து பருவமடைவதைச் “சாமர்த்தியமாகிவிட்டாள்” என்று குறிப்பிடுகிறோம். அதனை முன்னிட்டு நடத்தப்படும் கொண்டாட்டத்தையே “சாமர்த்திய வீடு” என்கிறோம்.
அதேபோன்று பேச்சுவழக்கில் “புத்திக்கு வந்திட்டாள்”, “பக்குவப்பட்டுட்டாள்”, “பெரிய பிள்ளையாகிட்டாள்” “குமராகிட்டாள்” “வயசுக்கு வந்திட்டாள்” “பூப்பெய்திட்டாள், “ஆளாகிட்டாள்” என்றும் சொல்வதுண்டு. இந்தச் சொல்லாடல்களில் சில அறிவையும் பக்குவத்தையும், சில வயதையும் வளர்ச்சியையும், சில பெண்மையையும், உயிர்த் தொடர்ச்சியையும் அடையாளப்படுத்துகின்றன.
புத்தி என்பதும் அறிவு, புரிந்துகொள்ளும் திறன், பகுத்தறிவு, மனமுதிர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. புத்திக்கு வந்திட்டாள், சாமர்த்தியப்பட்டிட்டாள் என்பதோடு, தொடர்புபட்டே அனைத்து பேச்சு வழக்களும் இருப்பதை பார்க்கமுடிகிறது. ஒரு பெண் பருவமடைவதை, அவளுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியின் அடுத்த கட்டமாக நமது சமூகம் அடையாளப்படுத்தியிருப்பதை இந்தச் சொல்லாடல்களின் வழியாகக் காணலாம்.
ஆனால் மாதவிடாய் அடைவதால் மட்டும் ஒரு பெண் அறிவிலும் மனதிலும் முதிர்ச்சியடைந்துவிடுகிறாள் என்று பொருளல்ல. அது இயற்கையான உடலியல் மாற்றம். இருப்பினும், நமது சமூகத்தில் வழக்கிலிருக்கும் இந்தச் சொற்களின் பொருளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றை ஒதுக்கிவிடுதல் எத்தனை மடத்தனம்.
சாமர்த்திய வீடு ஏன் ளுயசநந ஊநசநஅழலெ ஆனது?
சாமர்த்தியம் என்பது வடமொழிச்சொல். அதற்கு நிகராக பல தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன. அனைத்தும் பெண்ணின் பருவமடைதலைக் குறிக்கிறது. ஆனால் ளுயசநந ஊநசநஅழலெ என்ற பெயர் அவள் அணியும் சேலையை, புறத்தோற்றத்தை முன்னிலைப்படுத்துகிறது.
பெண்ணின் வளர்ச்சியை, முதிர்ச்சியை அடையாளப்படுத்திய ஒரு நிகழ்வு, இன்று அவள் அணியும் ஆடையின் பெயரால் அழைக்கப்படுகிறது. அத்தோடு சிலர் மாதவிடாய் தொடர்பான நிகழ்வு என்று வெளிப்படையாகச் சொல்வதைத் தவிர்ப்பதற்காகவே ளுயசநந ஊநசநஅழலெ என்ற பெயரைப் பயன்படுத்துவதாகக் கூறுவருகின்றனர்.
மாதவிடாயைப் பற்றிச் சொல்வது வெட்கம் என்றால், அதற்காகப் பிரம்மாண்டமான விழா நடத்துவது மட்டும் எப்படி எமது சமூகத்திற்குப் பெருமையாகிறது? சாமர்த்தியம் என்ற சொல்லைச் சொல்லத் தயங்கிக்கொண்டு, அந்தச் சடங்கை இலட்சங்கள், மில்லியன்கள் கணக்கில் பணம் செலவழித்துக் மேம்போக்காகவும், அந்தஸ்துக்காகவும் கொண்டாடத் தொடங்குகிறோம். இது எத்தனை முரண்பாடு?
சேலை என்பது நமது பண்பாட்டின் ஓர் ஆடை. சாமர்த்திய வீடு என்பது பெண்ணின் பருவமடைதலைக் குறிக்கும் பழைய சமூகச் சடங்கு. ஆனால் சேலை அணிவது அந்தச் சடங்கில் இடம்பெறும் ஓர் அம்சம் மட்டுமே. ஒரு பெண் பருவமடைவதற்கும் சேலை அணிவதற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கிறது? ஒரு பெண்ணின் வளர்ச்சியை அவள் அணியும் ஆடைதான் தீர்மானிக்கிறதா?
சாமத்திய வீடு கொண்டாட்டத்தில், பெண்வழி சமூகத்தின் தொடர்பும் மரபும்?
இச்சடங்கு முறை கொண்டாட்டம் மட்டுமல்ல. பெண்களின் உடல் வளர்ச்சி, குடும்ப உறவுகள், திருமண மரபுகள், சமய நம்பிக்கைகள், சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு பண்பாட்டு நிகழ்வாகவும் இருந்து வந்திருக்கிறது.
இந்தச் சடங்குமுறை இலங்கையில் எந்த நூற்றாண்டில் தொடங்கியது என்பதற்கான உறுதியான வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக இல்லை. எனவே இதனைச் சங்ககாலத்திலிருந்தே இன்றைய வடிவத்தில் நடத்திவருகிறார்கள் என்று கூற முடியாது. இது பெண்வழி சமூகத்தில் உயிர்த்தொடர்ச்சியைக் கொண்டாடிய சடங்கின் ஒரு தொடர்ச்சியாக இருக்கலாம்.
சிலரது கூற்றுகளின்படி, இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த தாய்மார்கள், பாட்டிமார்கள், பூட்டிமார்கள் ஆகியோரின் காலத்தில் இன்று நாம் காணும் வடிவிலான சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதற்கான தடயங்கள் சில குடும்பங்களில் காணப்படவில்லை. இது சாமர்த்தியச் சடங்கு அக்காலத்தில் முற்றாக இல்லையென்பதைக் குறிக்கவில்லை. மாறாக, பருவமடைதலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சடங்குகளும் அவற்றைக் கொண்டாடிய முறைகளும் காலத்திற்குக் காலம் மாறுபட்டிருக்கலாம் என்பதையே உணர்த்துகிறது.
இன்று நாம் காணும் ஆடம்பரமான சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்கள் எப்போது, எவ்வாறு உருவாகின? அவை எமது சமூகத்தில் தொன்றுதொட்டு நிலவிய மரபுகளா? அல்லது காலப்போக்கில் சமூக, பொருளாதார மாற்றங்களுக்கேற்ப உருவாக்கப்பட்ட புதிய நடைமுறைகளா? என்பன ஆராயப்பட வேண்டிய கேள்விகளாகும்.
இதனை அறிந்துகொள்வதற்கு ஒவ்வொருவரும் தமது குடும்ப வரலாற்றிலிருந்தே ஆய்வைத் தொடங்கலாம். தமது தாய்மார்கள், பாட்டிமார்கள், பூட்டிமார்கள் பருவமடைந்தபோது என்னென்ன சடங்குகள் நடைபெற்றன? அவை குடும்பத்திற்குள் மட்டுமே நடைபெற்றனவா? இவ்வாறான குடும்ப வரலாறுகளையும் வாய்மொழிச் சான்றுகளையும் திரட்டுவதன் மூலம் சாமர்த்திய வீட்டுச் சடங்கின் வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.
இச்சடங்குகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக மாற்றமின்றித் தொடர்ந்தவைதானா? அல்லது சில தலைமுறைகளுக்கு முன்னர் உருவாகி, காலப்போக்கில் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவையா?
இந்தக் கேள்வியை எழுப்புவதும், நமது குடும்பங்களின் கடந்தகால அனுபவங்களோடு ஒப்பிட்டு ஆராய்வதும், சாமர்த்திய வீட்டுச் சடங்கின் உண்மையான வரலாற்றையும் பண்பாட்டுப் பின்னணியையும் புரிந்துகொள்வதற்கான முக்கியமான தொடக்கமாக அமையும்.
புலம்பெயர் நாடுகளில் சாமத்தியச் சடங்குகள்
ஒரு காலத்தில் “புத்திக்கு வந்திட்டாள்” என்று அவளுடைய அறிவையும், “சாமர்த்தியமாகிவிட்டாள்” என்று அவளுடைய ஆற்றலையும் அடையாளப்படுத்திய சொல்லாடல்கள், இன்று “ளுயசநந ஊநசநஅழலெ” என்ற பெயரில் அவள் அணியும் ஆடையை முன்னிலைப்படுத்தும் நிலைக்கு மாறியிருக்கின்றன. பெண்ணின் அறிவு, ஆற்றல், ஆளுமை, திறமை ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, அவளுடைய வெளித்தோற்றத்திற்கும் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் இப்போக்கு, பெண்ணை ஒரு தனித்த ஆளுமையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, காட்சிப்படுத்தப்படும் ஒரு ‘பொருளாக’ உருவகிக்கும் மனப்பான்மைக்குக்கூட வழிவகுக்கலாம்.
நாம் உண்மையிலேயே முன்னேறிக்கொண்டிருக்கிறோமா? அல்லது நவீனத்துவம் என்ற பெயரில் நமது சொற்களின் பொருளையும் பண்பாட்டு அடையாளங்களையும் புரிந்துகொள்ளாமல் அவற்றை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருக்கிறோமா?
ஒரு மொழியின் சொற்களை அவற்றின் பொருள் அறியாமல் கைவிடும்போது, நாம் இழப்பது வெறும் சொற்களை மட்டுமல்ல் அவற்றோடு இணைந்திருக்கும் நமது பண்பாட்டு நினைவுகளையும் வரலாற்றின் தடங்களையும்தான்.
பண்பாடு என்பது காலத்திற்கேற்ப மாற்றமடைய வேண்டிய ஒன்று. நமது பண்பாட்டிலும் மாற்றங்கள் வரட்டும். தேவையற்ற கட்டுப்பாடுகள் அகலட்டும். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, பொருளற்ற நடைமுறைகள் மறையட்டும். பெண்களின் சுயமரியாதை, தனிமனிதச் சுதந்திரம், விருப்பம் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நமது பண்பாடு மேலும் செழுமையடையட்டும்.
ஆனால் மாற்றம் என்ற பெயரில் நமது மொழியின் பொருள் செறிந்த சொற்களை, அவற்றின் வரலாற்றையும் பண்பாட்டுப் பின்னணியையும் அறிந்துகொள்ளாமலேயே ஒதுக்கிவிடுவது முன்னேற்றமாகாது. மாற்றப்பட வேண்டியது நமது மொழியின் சொற்கள் அல்ல அவற்றின் பின்னால் நாம் சுமந்து கொண்டிருக்கும் காலத்திற்குப் பொருந்தாத சிந்தனைகளும் நடைமுறைகளுமே.
சில விடயத்தை நாம் அடுத்த தலைமுறைக்குச் சரியான வகையில் விளக்கம் கொடுக்காமல், அனைத்தையும் மறுத்தலிப்பதும் , ஒரு வகை கட்டாயப்படுத்தல்தான். விடயங்களை சரியான வகையில் விளங்கப் படுத்துவதே ஒருவிடயம் தேவையா இல்லையா என்பதை நோக்கி எம்மை (அடுத்த தலைமுறையை) சிந்திக்க, செயலாற்ற வைக்கும்.
செய்ய வேண்டும் என்று சொல்வதற்கும், நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கும் இடையில் சில விடயங்கள் அணுகப்பட வேண்டும்.
“சாமர்த்திய வீடு” என்று சொல்வதிலோ, “மாதவிடாய்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதிலோ வெட்கப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனால், மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில் நிகழும் இயற்கையான உயிரியல் மாற்றம் மட்டுமல்ல, உலகின் உயிர்த் தொடர்ச்சி சார்ந்த கொண்டாட்டமும்தான் என்பதை முதலில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சடங்கின் பெயரை ஆங்கிலத்தில் மாற்றிவிடுவதால் மட்டும் அது நவீனத்துவம் பெற்றுவிடாது. மாறாக, அந்தச் சடங்கின் பின்னால் இருக்கும் சிந்தனைகளும் சமூக மனப்பான்மைகளுமே மாற்றமடைய வேண்டும். அதைவிட முக்கியமாக, இத்தகைய சடங்கு இன்றைய காலத்திலும் அவசியமானதா என்பதை மறுபரிசீலனை செய்வதும், அதன் நோக்கம் குறித்துக் கேள்விகளை எழுப்புவதும் தேவையானதாகும்.
சாமர்த்திய வீட்டுச் சடங்கில் கடந்த காலத்தில் நிலவிய, இன்றும் தொடர்கின்ற நடைமுறைகளையும் நாம் விமர்சனபூர்வமாக அணுக வேண்டும். பருவமடைந்த பெண்ணைத் தனிமைப்படுத்துதல், மாதவிடாயைத் தீட்டாகக் கருதுதல், அவளுடைய உடல், உடை, நடத்தை, சுதந்திரம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற நடைமுறைகள் இன்றும் தொடர வேண்டிய அவசியம் என்ன? அதேபோன்று, பருவமடைதலை முன்னிட்டு ஆடம்பரமான விழாக்களை நடத்த வேண்டிய தேவை உண்மையிலேயே உள்ளதா? இத்தகைய கேள்விகளே மரபின் பெயரால் நாம் தொடரும் நடைமுறைகளைப் பகுத்தறிவுடன் மறுபரிசீலனை செய்ய உதவும்.









