
உயர்மலைக் காட்டின் உள் மௌனம் அடைகாத்த இருட்டின் ஓடுடைத்துப் பறக்கிற ஒளிப்பெண்களின் காலமிது.
உழைப்பு விலக்கி
உணர்வு விலக்கி
பாடல் விலக்கி
ஆடல் விலக்கி
உள்படர்ந்து சுடர்விடும்
காமம் விலக்கி
உடைந்து பேசும்
மொழி விலக்கி
ஊமைகளாய் உள்ளொடுங்கி வாழ்ந்த
பெண்களின் காலம் பெருமழைக் காற்றுப் பிடித்தலுக்கும் அதிர்ச்சிக்கு ஈடுகொடுக்க இயலாத வேப்ப மரத்துப் பில்லுளிச் செடியாய்ப் பிய்ந்து பறக்கிறது.
பாடலும் ஆடலும் வற்றிய உடல்களுக்கு
சுயம் வாய்க்காது
சூரியன் வாய்க்காது
வானமற்ற சிறை இருளே வாய்க்கும்
அப்படித்தான் ஆனது அனைத்துப் பெண்களுக்குமான அநேக காலம்.
பாடல்களால் உயிர் வியர்க்கும்
ஆடல்களால் உடல் வியர்க்கும்
வியர்க்காத உயிரும்
வியர்க்காத உடலும்
வாழ்வின் விளைசலுக்குத் தகுதியற்றவை
கவிதைகளுக்கும்தான்
படிக்காத பாமரப் பெண்கள் அனைவரும் பாடுபவர்களாக இருக்கின்றனர். படித்துப் பட்டம் பெற்ற பெண்கள் அனைவரும் பாடல் கேட்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆடலிலும் அப்படித்தான்.
ஆடலற்றவள்…. குடும்பப்பெண்
ஆடலுள்ளவள்…. பொதுப்பெண்
உடைமைச் சமூகத்தின் இந்தக் கருத்துருவாக்க அடையாளங்களே…. கண்ணகி… மாதவி.
ஆதித் தமிழ்வாழ்வின் ஏக்கமும்… ஆதிக்கத் தமிழ்வாழ்வின் தாக்கமும் கலந்த குழப்பமே கோவலன்
“நெல்லுகுத்து வழிபடும்
கடவுளும்
இலவே”
இது… புறநானூறு
”நெல்லொடு தூஉய்
இது… சிலப்பதிகாரம்.”
நெல் மறுத்தத் தமிழ் விழிப்பு தொடர்ந்திருந்தால் வரகு செத்திருக்காது. கொற்றவைக் கூத்தாட்டும்… குதூகலமும் குலைந்திருக்காது.
சேற்றின் நாற்றம் விலக்கி… உழைப்பின் அதிர்வை துடைத்து… ”வந்தவர்கள்” வடிவமைத்த கலைகளே… செவ்வியல் கலைகள்.
பரதம் தந்தது பரத முனிவரா?
உழைத்து உழைத்து… உழைப்பற்ற காலத்தின் ஓய்வு நேரத்திலும்…மீள் உழைப்பிற்கு உடலை இலகுவாய் இட்டுச் செல்ல உழைப்பின் போலச் செய்தலாய்க் கண்டெடுத்த குரவையும், கும்மியும் கண்டெடுத்த எம் ஆதித் தமிழர்கள் தந்தது. திருவையாற்றுக் கதையும் இத்தகைய திருட்டுக் கதைதான்.
தமிழர்களுக்கான
இசை எங்கே?
கடவுளர்கள் எங்கே?
ஆடல் எங்கே?
இசைக்கருவிகள் எங்கே
தொன்ம நம்பிக்கைகள் எங்கே?
எல்லாவற்றையும் இழந்து நிற்பதனால்தாம்
எல்லோரும் தமிழர்களை ஏறிமிதிகிறார்கள்.
எல்லா அழுத்தங்களையும் தாண்டி… திமிறி எழுந்து.. எதிரிகள் திகைக்க… உரிமைக் கூத்தாட வேண்டுமெனில் உடலில்… உயிரில்… இசை அதிர்வுகளையும்… ஆடல் அதிர்வுகளையும் மீளக் குடியேற்ற வேண்டும்.
மீளக் குடியேற்றிய பெண்களில் ஒருவர்தான் கவிதா.
அதனால்தான் இவரது கவிதைகளில் கொற்றவை அடவுகள் கூடிக்கிடக்கின்றன.
ஒரு கவிதையின் தலைப்பையே பாருங்கள்
”ஆடுகளம்!”
நாணி ஆடவும்
நாண் எற்றவும்
என் சுட்டுவிரல் போதும்
சூடுகுழல் தூக்குவதற்கும் கூட…
…….
யாரும் தூக்கி போட்ட
ஒருநாள் தினம் ஏந்தும்
பிச்சைக்காரியில்லை நான்
நேற்றும்… நொடிப்பொழுதும்
எதிர்காலமும் ஆளத்தெரிந்த
கொற்றவைக்குமரி
……
என்னை நானே செதுக்கி
நிமிர்ந்து நிற்கும்
எனது பார்வையில்
பெண்
நான்
எல்லா சுவர்களையும் இடித்து நொருக்கி எல்லைகளற்றப் பெருவெளியில் எவ்விதச் சிந்தனைச் சிக்கலுமற்று விடுதலைப் பெண்ணாய் வீசியெறிந்துள்ள இந்தத் தமிழ்ப் பெண் ”பாரதி பெண்ணுமில்லை”.
அடவுகள் கொண்டு மேடையில் ஆடவும்… சூடுகுழல் கொண்டு களத்தினில் ஆடவும்…. துணிச்சல் மிக்க தமிழ்ப்பெண். தமிழீழப்பெண்….
தமிழீழப் பெண்… என்பவர்…
என் சுட்டுவிரல் போதும்
சுடுகுழல் தூக்குடற்கும் கூட
என்பதனால்
வன்முறைப்பெண் என்று வரையறை செய்து விடாதீர்கள். வரலாற்றுப் பிழைகளுக்கான வன்மம் கொண்டவள்தான். வன்முறை கொண்டவளில்லை. வன்முறை கொண்டவளாயின்…
எந்தப் பூவையும்
கிள்ள மனமற்று
கண்களால் மட்டுமே
பறித்து வைக்கிறேன்
என்று வள்ளலார் மென்மையில் எழுதமுடியாது
மனிதக் கபாலங்களை
ஆக்ரோஷத்தோடு சுமக்கும்
உன்னிடம் தஞ்சம் அடையும்
என் இனமக்கள்
உன் சுடகாட்டிலேயே
உன்னைத் தூக்கிலிடும்
சிவராத்திரிக்கு
நான் கண்விழிக்கும்
நாள் வரும்
கைதேர்ந்த ஓவியன் இந்த வரிகளுக்கு வண்ணங்கள் குழைத்து வரையத் தொடங்கினால்.. உலகை அதிரவைக்கும் ஓர் ஓவியம் கிடைகலாம்…
எனக்கு வியர்திருக்கையில்
நீ பார்த்திருக்கிறாயா?
என்று
அதிரக் கேட்கும் இவர்…
மிஞ்சிக் கிடக்கும்
என்னில் துளிர்விடும்
மகள்
நாளை தேடமாட்டாள்
அவளை
அவளுக்குரிய வட்டங்கள்
போடப்படும்
அவளது கைகளால்
என்று அடுத்த தலைமுறைப்பெண்களுக்குமான விடுதலைப்பெருவெளியை விரிவு செய்கிறார்.
ஆடல்… பெண்ணான கவிதாவின் மொழி ஆளுமை… சிந்தனைச் செழுமை தாய்மண்வலி… வாழ்விட வாங்கல்… உலக அரசியல்… அனைத்தும் கலந்த சிறப்பு… இவரது கவிதையாடலுக்கான களம் புதிது என்பதை உறுதி செய்கிறது. இவரது கவிதை வெற்றி… தனித்துவம் சூடிச் சிறக்கும்
நம்பிக்கையோடு
அறிவுமதி









