”மீண்டும்” திரைப்படம் ஒரு பார்வை – கவிதா

 

இந்தியத் திரைப்படக்குவியலுக்குள் புதைந்து கிடக்கும் எம் உறவுகள் தமது சொந்த ஈழப் படைப்புகளுக்கு வரவேற்ப்புக் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத் தமிழர்களும் திரைப்பட படைப்பாளர்களும் தமது படைப்புகளை வெளிக்கொணர முயற்சிப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. அந்த வரிசையில் நோர்வே நாட்டில் பல குறும்படங்களைத் தயாரித்து வழங்கிய NT picture ன் ”தொப்புள்க்கொடி” யைத் தொடர்ந்து இரண்டாவது முழுநீளத்திரைப்படம் ”மீண்டும்” 12.09.09 அன்று மாலை ஒஸ்லோவில் இரண்டு தடவைகள் திரையிடப்பட்டது.
காதலுடன் கூடிய அடிதடிக் கும்பலின் சில பக்கங்களே திரையின் கதை. புலம் பெயர்ந்து பல குற்றச்செயல்களைச் சாதாரண வாழ்க்கையாக்கிக் கொண்ட ஒரு ரவுடியின் காதல் கதை. ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாக கதை நகர்ந்த விதத்திற்கு இயக்குனரை பாராட்டியாக வேண்டும். படப்பிடிப்பும் தொகுப்பும் கண் உறுத்தவில்லை. உறுத்திய விசயம் இந்தியத் நகைச்சுவை நடிகரின் ”என்ன கொடுமை சார்” ”ரூம் போட்டு யோசிப்பாங்களோ” போன்ற வசனங்களை நாம் மீள்பிரசுரிப்பது இரசிப்பை எற்படுத்தவில்லை. திணிக்கப்படவேண்டும் என்று சேர்க்கப்பட்ட இந்நகைச்சுவைபோல் கதாநாயகி கதாநாயகர்களின் இந்தியத்திரையுலகப் பேச்சுத்தமிழ் முயற்சி வீண் என்றே தோன்றியது. கதாநாயகி நிலாவின் அம்மா அப்பாவின் நடிப்பும் பேச்சும் யதார்த்தம். இலங்கைத்தமிழை நாடகத்தன்மையின்றி பேசி மனதில் இடம் பிடித்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.அடிதடிக் காட்சிகள் ஆரம்பத்தில் அதிக அளவில் காணப்பட்டாலும் பல சந்தர்பங்களில் மிக நேர்த்தியான நடிப்புத் தெரிகிறது. தொழில்நுட்பத்தில் பல அடிதடிக்காட்சிகளில் கூடுதலான ஒளிப்பதிவுக்கருவி பாவித்திருக்கலாமோ என்றே தோன்றியது. படத்தொகுப்பில் முறிவுகள் அவதானிக்கக்கூடியதாக இருந்தாலும் இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக இரசிகர்களை கட்டிவைத்த படத்தொகுப்பாளிக்கும் நெறியாழ்கைக்கும் இசைக்கும் சபாஷ் போடலாம். என்னால் இரசிக்க முடியாதிருந்த ”பஞ்ச்” வசனத்திற்கும் சில நடன அசைவுகளுக்கும் அப்பால் ”த்றொம்சோவின் ஈரக் காற்று… அது உன்னைக் கண்டு அகதியாச்சு” என்ற பாடலின் பல்லவியும் இசையும் படம் முடிந்தபின்னும் மனதில் ஈரமாகவே இருக்கிறது.திரைவசனங்களில் செருகப்பட்டிருந்த ஆங்கிலப்பிரயோகம் அதிக அளவில் சேர்க்கப்பட்டது மட்டுமில்லாமல் பல இடங்களில் உச்சரிப்புகளும் முகம் சுழிக்கவைக்கிறது. மக்கள் இரசனைக்கேற்ப படைப்புகளைக் கொடுப்பவன் கலைஞன் அல்ல, மக்கள் தேவை அறிந்து படைப்புகள் செய்து அதில் வெற்றி காண்பவன் சிறந்த கலைஞன். இந்தியத் திரையுலகின் மசாலாப்படங்களைத்தான் முன்மாதிரியாக எடுக்க வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடில்லை ”பசங்க” ”நாடோடிகள்” போன்ற படங்களையும் முன்மாதிரியாகக் கொள்ளலாம். நாடோடிகள் கலைப்படமோ வியாபாரப்படமோ அல்ல.. ஆனால் சிறந்த கலையம்சத்துடன் வந்து வியாபாரத்திலும் மக்கள் மனதிலும் வென்று நின்ற மாற்றுசினிமா என்பது பொதுக் கருத்து.

 

எம் சமூகத்தின் இரசிகத் தன்மையை நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடகூடாது.எந்த ஒரு படைப்பும் இன்னொரு படைப்பைப்போல் இருக்கவேண்டும் என்று அல்லாமல் எதைப்போலும் இல்லாது தனித்துவம் சூடி சிறக்கவேண்டும். இயல்பாக இருப்பது என்பது சுகம் மட்டுமல்ல அது அழகும் கூட. இயல்பான கதை, கதைக்கேற்ற மனிதர்கள் என இந்தியத் தமிழ்த் திரைபடங்கள் மாற்றத்திற்கான பாதையில் பயணிக்கையில் நாம் ஏன் பின்னோக்கிச் செல்ல வேண்டும்? இன்று தமிழ்நாட்டிலும் இலங்கை வானொலிச் சேவையை விரும்பிக் கேட்பவர்கள் அதிகம். அதே போல் எம் ஈழத்து திரையுலகமும் மேம்பட வேண்டும்.”மீண்டும்” திரைப்படம் வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்டதல்ல, இருந்தும் ஏன் இந்திய சராசரியான தமிழ்ச்சினிமாவை முன்னோடியாகக் கொண்டு பெண்களை அழகு பொம்மைகளாகவும் கவர்ற்சிப்பபெருளாகவும் பல காட்சிகள் தொகுக்கப்பட்டுக் காட்டி இருப்பதின் நோக்கம் புரியவில்லை என்றாலும் வன்முறையில் வாழத்தொடங்கியவன் தன் வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டாலும் மீண்டும் அந்த வன்முறையால் அழிந்து போவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டும் திரையின் இறுதி வசனம் (கரு) படத்தை நிறைவுப்படுத்தியது என்பது என் கருத்து.

 

எம் சமூகத்திடையே உள்ள இந்தியத் திரை மோகமும் எம்மவர் படைப்புகளுக்கு அளிக்காத ஊக்கமும் மனவருத்தத்தை அளிக்கிறது. பாதியே நிறம்பிய இரண்டாவது காட்சி நோர்வேயில் உள்ள எம் கலாஇரகிகர்களை மட்டுமல்ல பிற கலைஞர்களையும் எங்கே என்றே கேட்க வைக்கிறது. எந்த ஒரு கலைஞனும் தனது படைப்புகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்றே ஆதங்கப்படுவான். கருத்துவேறுபாடு, உடன்பாடின்மை, மோதல்களைத் தாண்டி தனது நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல எம் சககலைஞர்களின் நிகழ்வுகளுக்கும் மக்கள் சமூகம் அளிக்க வேண்டும், எமது கலைத்திறன் வளர வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் அது எம்மையும் எம் ஈழத்துக் கலைஞர்களையும் மேம்படுத்தும்.இந்தியாவில் திரையுலகம் நிறுவனமாக்கப்பட்ட நிலையில் இங்கு சிலர் கூடி ஒரு முழுநீளத்திபை;படம் எடுப்பது என்ற முயற்சியும் அதில் வெற்றி பெறுவதென்பதும் இலகுவல்ல. அந்த வகையில் NT Picture ரையும் அதில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களையும் வாழ்த்துவதோடு நில்லாமல் பாராட்டியும் ஆகவேண்டும். படம் முடிந்து வெளியே பேசப்பட்ட விடயங்களில் ”மீண்டும்” திரைப்படம் பலர் மனதைக் கவர்ந்ததாகவே சொல்ல வேண்டும். இரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிவைக்கக் கற்றுக்கொண்ட திரைப்படக்கலைஞர்கள் மேலும் இனி ஆக்கபூர்வமான படைப்புகளை வழங்குவர் என்றே நம்பத்தோன்றுகிறது.Nt Picture ன் முந்தய முழுநீளத் திரைப்படத்துடன் (தொப்புள்க் கொடி) ஒப்பிடும் போது ”மீண்டும்” திரைவிருந்தில் இயக்குனர், படப்பிடிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர்களின் சிறப்பான வளர்ச்சி தெரிகிறது. குறை நிறைகளுக்கப்பால் தனிப்பட்ட மனிதர்களாக நின்று சாதிக்கவேண்டும் என்ற தாகத்திற்கு கிடைத்த வெற்றியே ”மீண்டும்”. குறைகளும் கருத்துக்களும் சொல்வது இலகு, நிறுவனமாக்கப்படாத நிலையில் தமது நேரங்களை அர்ப்பணித்த கலைஞர்களை மேற்கூறிய கருத்துக்கள் மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையோடு…

பின்னூட்டமொன்றை இடுக