ஞானம்தேடிச் சென்றவர் கதை

ஒருவனுடைய தலைகள்
அந்தக் கூடைமுழுவதும் விற்பனைக்கென நிரம்பிக் கிடக்கிறது
கடைகளில் எல்லாம் அதே தலைகள்

கவனத்திற்குரிய தற்கால அழகுப்பொருள்
இந்தத் தலைகள்தான்
முண்டத்தின் தேவை அற்றுப்போனதோ
முழுமை விட்டுப்போனதோ
சுயத்தை முழுதாய் இழந்த தலைகள்
இவைகள் எதற்கும் தயாராயிருக்கின்றன

ஒரு கொரூரத்தோடு வீட்டின் முலைமுடுக்குகளில்
இடமாற்றிக்கொண்டே இருக்கிறேன்
தோட்டத்து இலைகொட்டிப்போன மரத்தடியில்
சமயலறையின் நாற்றம் விரட்ட வைத்த மெழுகின் அருகில்
காலணிகள் கழட்டும் கீழ்படிக்கட்டின் மூலையில்
சின்ன அழகியல் காட்ட வரவேற்பறையில்
சுவரின் நிறத்தோடு ஒத்துப்போக அம்சமாக படுக்கையறையில்
மேலத்தேய நாகரீகமாக குளியலறையில்

தலைகளை வைத்திருப்பவர்களுக்கு
அதை வைத்திருப்பது பற்றிய பிரக்ஞை என்பதும்
தலைகளுக்கு தாம் ஏன் இந்த இடத்தில்
அமர்த்தப்பட்டிருக்கிறோம் என்பதும்
தெரிவதில்லை
எனது கட்டுப்பாட்டில் வைத்த இடத்திலெல்லாம்
இந்தத் தலைகள் இருப்பதில்
எனக்கு ஒரு அதீத திருப்தி.

தலைகள் படும் அவஸ்தையை கண்ட யாசோதரை
கொஞ்சமேனும் தனக்குள் சிரித்திருப்பாள்
நானும் அதே உணர்வோடு
கடைசித்தலையை ஒரு கதவிடுக்கில் வைத்தபோது
எதுவும் அறியாததுபோல்
கண்களை மூடியபடியிருந்தது தலை.

எல்லாத்தலைகளும் இப்படிதான்
என நினைத்துக்கொண்டது மனது

17.11.14 12:09 – கவிதா (நோர்வே)
(யூன் மாத ஆக்காட்டி சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட கவிதை.)

பின்னூட்டமொன்றை இடுக