சென்ற வாரம் சென்னை கோகுலம் பார்க் ஹோட்டலில் நண்பர் குகனின் அழைப்பின் பேரில் நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்கு சென்றிருந்தேன். இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ, கவிஞர் மு.மேத்தா, இயக்குனர் பாலுமகேந்திரா, தீனா, கவிஞர் யுகபாரதி மற்றும் சிலர் வாழ்த்துரைக்கவும், விமர்சனம் செய்யவும் வருகை தந்திருந்தனர்.
நூல் விமர்சனத்துக்கும், நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்… நிச்சயம் இல்லை. அந்த விழாவில் பேசியவர்களின் பேச்சுக்கும் கவிதாவின் கவிதை நூலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையோ அது போலத்தான் இதுவும். விழாவை விட்டுத் தள்ளுங்கள், ‘தொட்டிப் பூ’ புத்தகத்தில் எஸ்.பொவின் முன்னுரைக்கும், கவிதாவின் கவிதைகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையோ அது போலத்தான் இதுவும்.
அந்த அம்மணி ஒன்றை எழுதியிருக்க, இதுகள் கிடந்து பினாத்தியதைப் பார்த்து மனம் நொந்து பொருமியதால்தான் மேலே கண்ட பாராவை எழுதி தொலைக்க நேர்ந்தது. இனி கவிதாவுக்கு வருகிறேன்…
கவிதா புலம்பெயர்ந்த தமிழச்சி. அதுவும் இளம் பிராயத்திலேயே நாடு விட்டு செல்ல வேண்டிய சூழல். சின்ன வயதில் சென்னையில் கொஞ்சநாள். பிறகு இதுநாள்வரை நோர்வே. அம்மணி தமிழே கற்கவில்லை என்பது வியப்புக்கு உரியதாகத்தான் இருக்கிறது.
கவிதைகளை கவிதாவின் தமிழ் உயிர்ப்பிப்பதும், உணர்வுகள் உட்கலந்த தெளிந்த நடையும் கவிதாயினியைப் போற்ற தூண்டுகின்றன. இலங்கைத் தமிழரின் அவலம், அகதிகளின் புன்னகைப் பூசிய பெருமூச்சு வாழ்க்கை, போரின் துயரம், இழப்புகளின் வலி, இயலாமையின் ஆற்றாமை, பெண்ணியத்தின் தளை முறிக்கும் முன்னெடுப்பு என்று கவிதாவின் பார்வை சமூகத்தின் நாலாபுறமும் தேடல்களோடும், எதிர்பார்ப்புகளோடும் சுழன்று சுழன்று பேசுகின்றது. எல்லாம் சிறப்புத்தான்… சிறந்த எந்தப் படைப்பாளிக்கும் அமைகின்ற நேர்த்திகள்தான்…. ஆனால் அரசியல் ?
யார் இந்த புலம் பெயர் தோழிக்கு அரசியல் கற்றுக் கொடுத்தது ? வாழ்வா… சமூகமா… முன்மாதிரிகளா? எதுவாய் இருப்பினும், யாராய் இருப்பினும்… நமது வந்தனம். ஈழம்… ஈழம்….தமிழ்… தமிழ்….உரிமை…தாயகம்… என்று வாய்க்கிழிய ஓலமிடும் ‘மெஜாரிட்டித் தமிழன்’ களிடையே காணக் கிடைக்காத அரசியல்…
‘அம்மம்மா கிழவி’ என்ற கவிதையைப் படித்துப் பிறர்க்குச் சொல்லியாகவேண்டும் நீங்கள்.
‘உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது
இவங்களை ஒருசேர
இருத்தி வைத்து
பொங்கிப் போட’
இந்த வரிகளில் இலங்கைத் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் அவலம் பின்னணியாகத் தொக்கி நிற்பதை இனியாவது உணரட்டும் ‘மறத் தமிழர்கள்’…
‘குழந்தைப் போராளி’ கவிதையும் அப்படித்தான். இதை விளக்கப் போவதில்லை நான். ‘தூ…’ என்று கவிதையின் முடிவில் கவிதா உமிழும் ஒற்றைச் சொல் எச்சிலில் ‘தமிழ் மறம்’ என்று இதுநாள் வரை கட்டிக் காத்த பாசாங்கு மாளிகைகள் இடிந்து போகின்றன.
ஓரிடத்தில் கவிதா கேட்கிறாள்…
‘ஆயிரம் கவிதைகளை சுமந்த
என் நலிந்த முனகலைக்
கேட்டதிருமா
விண்ணோரக் கார்மேகம் ?’
தோழி…நீ பாடாததைப் பாடியதாகவும், கூறாததை கூறியதாகவும் திரித்தும், வளைத்தும் எழுதும் முன்னுரைவாதிகளின் பொய்ச் சுவர்களைத் தாண்டி, உன் பாடல் விண்ணில் கேட்கும் ; கார்மேகங்கள் அதிரும்!
காரணம்…உன் கவிதை மட்டுமல்ல, கருத்தும்!
70 ரூபாய்க்கு வெளியிட்டிருப்போர் –
நேர்நிரை, 1/15, TNHB, தெற்கு சிவன் கோவில் தெரு
கோடம்பாக்கம், சென்னை – 24.
-சிங்கப்பூர் ராமசாமி
From : http://ularuvaayan.blogspot.com/2009/07/blog-post_09.html










