விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே முரண்பாடுகள் பற்றி பேசுவதாக யோசிக்ககூடாது. கவிதாவின் கவிமழையில நனைந்தபோது இடியாகவும், மின்னலாகவும் முதலில் முரண்பாடுகளே எனது கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆண் ஆணாக இருக்கட்டும், பெண் பெண்ணாக இருக்கட்டும்.. பிரச்சனை இல்லை. ஆனால், பெண்ணாக தன்னை இனம்காட்டி கவிதை படைத்துள்ள கவிஞர் அவர்கள் ஆணாக இருக்கக்கூடியவர்களை தனக்கு ஒப்பான இடத்தில் வைத்து தரிசிக்
கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பெண்கள் எவ்வாறு எவ்விதத்திலும் ஆண்களிற்கு சளைத்தவர்கள் இல்லையோ அதுபோலவே ஆண்களும் பெண்களிற்கு நிகரானவர்கள்தானே? பெண்கள் தாழ்த்தப்பட்டு உள்ளார்கள் என்பதற்காக ஏன் ஆண்களையும் தாழ்த்தவேண்டும்?
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,
இன்று மீண்டும் ஓர் நூல்விமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக நோர்வேயில் வாழ்கின்ற ஈழத்து கவிஞர் கவிதா அவர்கள் படைத்த “என் ஏதேன் தோட்டம்” கவிதைத்தொகுப்பை பெற்று இருந்தேன். ஓர் இனிய மாலைப்பொழுதில் கவிதாவின் கவிவரிகளை படித்துச்சுவைக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
யார் இந்த கவிதா?
எனக்கும் யார் என்று தெரியாது. ஓர் ஆர்வக்கோளாற்றில் கவிதாவின் நூலை வடலியூடாக வாங்கியிருந்தேன். கவிதா ஓர் நாட்டிய தாரகை, ஈழத்தில் குரும்பசிட்டியை சேர்ந்தவர், தற்சமயம் நோர்வேயில் வசிக்கின்றார், இது இவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு, “பனிப்படலத் தாமரை” எனப்படுகின்ற இவரது முதலாவது கவிதைத்தொகுப்பு நோர்வேஜிய மொழியிலும் வெளிவந்துள்ளது… இவை நூலில் வாசித்து அறிந்தவை.
கவிதாவின் கவிதையில் உள்ள முரண்பாடுகள்:
விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே முரண்பாடுகள் பற்றி பேசுவதாக யோசிக்ககூடாது. கவிதாவின் கவிமழையில நனைந்தபோது இடியாகவும், மின்னலாகவும் முதலில் முரண்பாடுகளே எனது கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆண் ஆணாக இருக்கட்டும், பெண் பெண்ணாக இருக்கட்டும்.. பிரச்சனை இல்லை. ஆனால், பெண்ணாக தன்னை இனம்காட்டி கவிதை படைத்துள்ள கவிஞர் அவர்கள் ஆணாக இருக்கக்கூடியவர்களை தனக்கு ஒப்பான இடத்தில் வைத்து தரிசிக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பெண்கள் எவ்வாறு எவ்விதத்திலும் ஆண்களிற்கு சளைத்தவர்கள் இல்லையோ அதுபோலவே ஆண்களும் பெண்களிற்கு நிகரானவர்கள்தானே? பெண்கள் தாழ்த்தப்பட்டு உள்ளார்கள் என்பதற்காக ஏன் ஆண்களையும் தாழ்த்தவேண்டும்?
ஓர் கவிதையில் இப்படி கூறுகின்றார்:
தேவதை என்கிறாய்
தென்றல் என்கிறாய்
மலர் என்கிறாய்
மது என்கிறாய்
உணர்வுகளின் உச்சத்தில்
நீ உளறுவதில்
நானும் உருகிவரலாம்
உன்னோடு
இப்பொழுது நான்
கங்கைதான்
நீ நீந்தலாம் என்னோடு
காலப்போக்கில்
வற்றிவிடும் நதியாக
சுடு மணலில்
நீ நடக்கவேண்டி வரலாம்
பின்னர் இன்னோர் கவிதையில் இப்படியும் வரிகள் நீளூகின்றன:
ஒரு முறை அடித்தால்
மறு கன்னத்தைக்
காட்டச்சொன்னார் இயேசு
அடிக்கடி நினைவில் வந்து
தொலைக்கிறது
நீ கொடுத்த முத்தத்தில்
ஆற்றாமல் துவளும்
நெஞ்சம் அது
உன் அணைப்பின் பின்
மறு நிமிடம்
இன்பப் படுக்கையில்
உன் நினைவுகளின்
இறைமீட்பு
மணமேடை எனப்படுகின்ற கவிதையில் இப்படிக் கூறுகின்றார்:
முகத்தினை மூடி
அழைத்துச் சென்றனர்
என்னை மட்டும்
தலைகுனிந்து நடக்கச் சொன்னார்
என்னை மட்டும்
+++
தாலியும் கட்டினர்
முடிச்சுக்கள் போட்டனர்
எனக்கு மட்டும்
+++
திருமணம் நடந்தது
எனக்கு மட்டும்
பின்னர் திருமணம் எனப்படுகின்ற கவிதையில் இப்படிக் கூறுகின்றார்:
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை
என்ற பொழுது
திருமணம் ஒரு நல்ல வழிதான்
இல்லையென்றால்
காதலுடன் வாழ
கல்யாணமெதற்காம்
உண்மையில் புரியவில்லை.. கவிதை புரிகின்றது ஆனால்.. கவிஞர் சிந்தனைகள் புரியவில்லை.. கவிதையில் சொல்ல வருகின்ற செய்திகள் என்று பார்க்கும்போது பலவாறான புதிர்களையும், முரண்பாடுகளையும் தாராளமாக நூலில் காணமுடிகின்றது. கவிதையில் கவிஞரின் சிந்தனைப் போக்கு அங்கும் இங்குமாக நெளிந்து, வளைந்து சீரற்று செல்கின்றது. கவிதாவின் கவிதையில் முகில் கூட்டங்களின் வடிவங்கள் மாறுபட்டு செல்வதுபோல் பன்முகத்தன்மையை காணமுடிகின்றது.
மழைக்காலம் ஜன்னல் ஓரம்:
மாலை நேரம் – மழை தூறும் காலம் – என் ஜன்னல் ஓரம் – நிற்கிறேன்!
நீயும், நானும் – ஒரு போர்வைக்குள்ளே – சிறு மேகம்போலே – மிதக்கிறேன்!
ஓடும் காலங்கள் – உடன் ஓடும் நினைவுகள் – வழி மாறும் பயணங்கள் – தொடர்கிறதே!
இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா? மனம் ஏனோ என்னையே – கேட்கிறதே!
ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது – கவிதை ஒன்று முடிந்தது – தேடும் போதே தொலைந்தது – அன்பே!
இது சோகம் ஆனால் ஒரு சுகம் – நெஞ்சின் உள்ளே பரவிடும் – நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே!
இது தருமே …!
இந்த அழகியபாடல் ஓர் தமிழ் சினிமா படத்தில் இடம்பெற்று இருக்கின்றது. நான் பல தடவைகள் இந்தப்பாடலை கேட்டு இருக்கின்றேன். சரியாக இதேபாணியில் – அதே உணர்வுகளை நாம் பிரசவிக்கக்கூடிய வகையில் கவிதா அவர்கள் “மழைக்காலம் ஜன்னல் ஓரம்” எனப்படும் ஓர் கவிதையை எழுதி இருக்கின்றார். மேற்குறிப்பிட்ட பாடலிற்கு முன்பே கவிதாவின் இந்தக்கவிதை வெளிவந்துவிட்டது என்று நினைக்கின்றேன். எனவே, இதை ஓர் தற்செயலான நிகழ்வு என்று கூறலாம்.
மழைக் காலம்
சாரல் வீசும்
ஜன்னல் ஓரம்
நீயும் நானும்
தேனீர்க்குவளை என் கையில்
நான் நெகிழ்ந்து உன் கையில்
மறைந்து போனது
முதுகின் பின் உலகம்
பக்கம் இருக்கும் கவிதையாய் நீ
என் நெற்றிப்பொட்டின் நேரே
விரல் நீட்டி அழைக்கிறாய்..
இமைமூடி நான் நகர்கிறேன்
இவ்வாறு தொடர்கிறது.
கவித்துவம்:
நூலிற்கு அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் அறிவுமதி அவர்கள் நாட்டிய தாரகையான கவிதாவின் கவிதைகளும் நாட்டியமாகவே தென்படுகின்றன என்கின்ற தொனியில் கருத்து கூறி இருந்தார். நிச்சயமாக பலவித அபிநயங்களுடன் அரங்க காட்சிகளை ஆடல்பாணியில் கவிதா அவர்கள் ‘ஏதேன் தோட்டத்தில்’ வெளிபடுத்தி இருப்பதாகவே உணரமுடிகின்றது.
என்னைக் கவந்த சில கவிவரிகள்:
எந்த அறிகுறியும் இல்லாத
வருடக்கணக்கில் காத்திருப்பு
சுவாசிக்க முடிகிறது
உணவும் கிடைக்கிறது
என்பதற்கான வாழ்தல்
கலைக்கப்படாத என் தவத்தில்
கடவுள் வரப்போவதில்லை என்று
நன்றாகத் தெரிந்த பின்தான்
நான் என் மனதின் அமைதியில்
குவியல் செய்து
புதைந்து கிடக்கின்றேன்
+++
நீ சூரியனா
இருந்து கொள்
தூரம் என்றாலும்
உன் கதிர்கள் என்னை
உரசிக்கொண்டுதானிருக்கும்
நான் பூமி
நீ பறவையோ
தூரம் போவாயோ போய்வா
நீ நிச்சயம் வருவாய்
உன் கூடு என் விரல்களில்
நான் மரம்
காற்றாக மாறு
காணாமல் போ
ஒவ்வொரு நொடியும்
என்னுள் நிரப்பிக் கொள்வேன்
நான் சுவாசம்
மேகமாகி நீ
அலைந்து திரி
பொழிந்து கொட்டு
எங்கோ வீழ்ந்து
எங்கும் பாய்ந்து
நீராகி நதியாகி
உன் இறுதிச் சங்கமம்
என்னிடம் தான்
நான் கடல்
+++
என்னிடம் பெண்மையில்லை
மன்னித்துவிடுங்கள்
வளையல் குலுங்க
கொலுசொலியுடன் வளையவரும்
பெண்மை
காலை முழுகிக்
குங்குமத்துடன் கணவனைத்
தட்டியெழுப்பும்
பெண்மை
நாற்சுவரில் தூசிதட்டி
நல்ல பெயர்வாங்க
முடியவில்லை என்னால்
கண்மூடி நின்று
கணவனுக்கும் குழந்தைகளுக்குமாய்
மட்டும்
பிரார்த்திக்க விருப்பமில்லை எனக்கு
அதற்கு மேலும்
சிந்திக்க முடிகிறது
+++
கவிதையில் பேசப்படுகின்ற விடயங்கள்:
கவிஞர் அவர்கள் தனது நாளாந்த வாழ்வியல் அனுபவங்களை கவிதைகளாக அழகாக கோர்த்து தந்து இருக்கின்றார். பல கவிதைகளில் அவரது உணர்வுகள், அனுபவங்களை படிக்கும்போது கவிதாமீது ஆழ்ந்த இரக்கம் தோன்றுகின்றது. அடிப்படையில் நமது சமுதாயம் பெண்களிற்கு செய்கின்ற கொடுமைகளின் எதிரொலிப்பை கவிதையில் காணமுடிகின்றது. கவிதைகள் பெருமளவில் நாத்திகத் தன்மையில் இருந்தே படைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான ஏமாற்றமும், இழப்புகளும் இதற்கான காரணமாக இருக்கலாம்.
இறுதியாக..
கவிதாவின் கவிதைகள் தரம் வாய்ந்தனவாகவும், இரசித்து சுவைக்கத் தக்கனவாகவும் இருக்கின்றன. நல்ல கற்பனை வளத்தை காணமுடிகின்றது. யதார்த்தத்தை மற்றும் துன்பங்களைக்கூட மற்றவர்களை மகிழ்விக்கக்கூடிய மொழிக்கு மாற்றப்பட்டு கவிதைகள் படைக்கப்பட்டு இருக்கின்றன. ஓர் நாட்டிய தாரகையாக இருப்பதால் கவிதாவினால் இப்படியாக ஓர் வித்தியாசமான கவிதைத் தொகுப்பை படைக்க முடிந்துள்ளது என்று கூறலாம்.
நீங்களும் கவிதாவின் “என் ஏதேன் தோட்டத்திற்கு” சென்று பாருங்களேன்!
விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே முரண்பாடுகள் பற்றி பேசுவதாக யோசிக்ககூடாது. கவிதாவின் கவிமழையில நனைந்தபோது இடியாகவும், மின்னலாகவும் முதலில் முரண்பாடுகளே எனது கவனத்தை ஈர்த்துள்ளன.








