அனுபவங்களை மட்டுமாய் விதைத்துத்தந்த ஒரு தோப்பு அது

கவிதாவின் கவிதைகள் ஒவ்வொரு மனதிலும் உட்புகுந்து கலகம் விளவிக்கும் கவிதைகளாகும். ஆற்றாமையும் இயலாமையும் தோற்றுவித்த அனுபவங்களின் வார்ப்படம் இது.

சில சமயங்களில் கண்ணன் கைப் புல்லாங்குழலாகவும். பல சமயங்களில் களத்தில் நிற்கும் வீரனின் கைத் துப்பாக்கியாகவும் கவிதாவின் எழுதுகோல் அவதாரம் எடுத்திருக்கிறது.

அரிதாரம் பூசாத அவதாரம் இது!

மு.மேத்தா.

தொட்டிப்பூ என்னுரை

குரும்பசிட்டி என்னும் எனது கிராமத்தை எனக்கே தூரத்தில் ஒரு ஓவியம் போல மங்கலாய்தான் தெரியும். போரும் உறவுகளின் இழப்பும் என்னை மூன்று முடிந்து சில மாதங்களைக் கடக்குமுன்பே அகதி ஆக்கியது. இந்தியாவில் கரிசைக்காடு என்னும் பொட்டல் கிராமத்தில் அம்மாவும் நானுமாய் புலம் பெயர்ந்து வாழத் தொடங்கியபோது நம்பிக்கை மட்டும்தான் எம் கையிருப்பு. தோப்பும் குடிசையும் பார்த்து மூன்று வயதில் முதலில் முகம் சுளித்தாலும் ஏழ்மை பற்றி எனக்கு புரியவைத்த காலம் அது.

என்பதுகளில் எழுப்பிக் கொண்ட பல விடுதலை இயக்கங்களில் ஒரு இயக்கத்தின் முகாம் அது. பல ஈழத்து இளைஞர்கள் மத்தியில் இருந்த அந்த வாழ்க்கைமுறை சற்று வித்தியாசமான அனுபவங்களை ஈட்டித்தந்தது. இருபது முப்பது பேர்கள் இணைத்து வாழ்ந்த கூட்டுகுடும்ப வாழ்க்கை போன்றது. இன்று வரை நான் யாருடனும் பகிர்ந்கொள்ளாத, விரும்பாத ரணங்களை தந்த இடமும் அதுதான். பசிக்கு மட்டுமாய் உண்டு. தேவைக்கு மட்டுமாய் உடுத்து மழைக்கு வேறிடம் தேடி வசதிகள் மறுக்கப்பட்ட கிராமத்துக் குட்டியாய் இழக்க முடியாத இன்னும் பல நினைவுகள் சுமந்து கசப்பானவைகளை புதைத்து அனுபவங்களை மட்டுமாய் விதைத்துத்தந்த ஒரு தோப்பு அது.

முப்பது வருடத்தை முட்டி நிற்கும் எனக்கு சமயம், போராட்டம் சார்ந்த சில கருத்துக்களின் வித்து போடப்பட்டது அந்த குடிசைகுள்ளேதான். குந்தியிருந்து யோசித்துப் பார்த்ததில் என்னைத் தோண்டி எதுவும் விதைக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும். அங்காங்கே என் சுற்றங்கள் நட்டுவைத்தததை எனது கைகள் தாமாகவே பறித்துச் சூடிக்கொண்டன. எனது கருத்துக்களை நான் ஆராய்ந்து பார்த்ததில் அதில் மாற்றம் செய்ய இன்றுவரை தோன்றவில்லை. மாறாக கடவுள் பற்றியோ சமூகம் தொடர்பாகவோ இருந்த அன்றைய கருத்துக்கள் இன்று மேலும் வலுபெற்றிருக்கிறது என்பதைச் சொல்வதில் எனக்கு ப+ரணச் சம்மதமே.

பிறப்பில் இந்துவான நான் முதல் கால் பதித்தது காதர்முகைதீன் என்ற இஸ்லாமிய பாடசலையொன்றில் அதனைத் தொடர்ந்து கிருஸ்தவப்பாடசாலையிலும் எனது சிறுவயதுக்கல்வி நிறைவுபெற்ற நிலையில் அம்மாவின் தலைப்பைப் பிடித்துக்கொண்டு மீண்டும் என் பிறந்த இடம் வந்து சேர்ந்த போது எனக்கு வயது பத்து.

குரும்பையூர் வந்து வாரங்கூட ஆகாத சில நாட்களுக்குள்ளே இன்றும் என் நினைவுகளை வருடும் மயிலிறகாக நிற்கும் அம்மம்மா தாத்தா என்ற புதிய உறவுகள் மீண்டும் என்னைத் தத்தெடுத்துக்கொண்டன. சாபகேடு வந்த பூமியது. என் அம்மா வீடும் தோட்டமும் முழுமையாய் அறிமுகமாவதற்குள்ளே அப்பா ஊருக்கு ஓடச்சொல்லி உத்தரவு. ஆமி வாறான் என்று உடுவில் கிராமத்தில் அப்பாவின் சுற்றங்களும் அப்பம்மாவின் அரவணைப்புடன் கொஞ்சநாள் கொழும்பு வாழ்க்கையும் கட்டாயமாயிற்று.

தமிழ் பாடசாலையையும் இந்து சமயத்தையும் நான் கொஞ்சம் அறிந்தது கொழும்பு கொட்டாஞ்சேனை மகாவித்தியாலயத்தில்தான். ஓராண்டு காலம்தான் என்றாலும் என்னையும் அறியாமல் நான் ஒன்றிப்போனது இந்தப் பாடசாலையில் மட்டும்;தான்.

எந்த நட்பும் நிலைபெறமல் அதைப்பற்றிய எந்த சிந்தையும் இல்லாமல் எனது கடைசி இடப்பெயர்வுதான் நோர்வே மண். புதிய கலாச்சாரம், புதிய மொழி புதிய வட்டம். இங்;கேதான் என் கவிதைப் பயணம் தொடங்கியது.

ஈழமண்ணிலும் இந்திய மண்ணிலும் கிடைக்காத தனிமையை இந்த நாடு அள்ளிக் கொடுத்தது. என் வயதொத்த தமிழ் பேசும் சினேகிதர் இல்லாத வனம் போல் இந்நாட்டில் நான் வாழ்ந்த இடமும் காலமும தோன்றின. இந்நாட்டு மக்களுடன் ஒட்டாத தன்மையும் இந்நாட்டு மொழியுடன் இருந்த என் உள் மோதல்களும் இன்னாட்டுக் கலாச்சாரத்துடன் ஒன்ற முடியாத என் மனப்போராட்டமும் என்னைத் தமிழ்க் காதலியாக்கியது. பாடசாலைகளிலும் தனிமையும் கவிதையுமே என் நண்பர்களாகிப் போயினர். இந்த தமிழ் காதலை அள்ளிகொடுத்ததில் பெரும் பங்கு மாமாமார்களையும் என் அம்மாவையுமே சாரும். என் தமிழக் காதலுக்கு தூது போனவர்கள் இவர்கள்தான்.

எமது மக்கள் இன்று அனுபவிக்கும் வாழ்க்கையில் ஒருவீதம் கூட அனுபவிக்காது சின்ன சின்ன சிராய்வுகளுடன் புலம்பெயர்ந்த எனக்கே இத்தனை வலியென்றால், கொலைக்களங்களில் முகாமிட்டு அங்கங்கள் தெறித்து விழ தமது கடைசி நிமிடத்தை கையில் வைத்திருக்கும் என் தேச உறவுகளுக்கு என்னதான் நான் சொல்ல? எங்கள் கைகளை மீறிக்கிடக்கும் இந்த அகோரப் போரைத்திணித்தவர்கள் மீதான கோபமும் அன்றைய நியாயமான போராட்டத்தை வழிதவறச்செய்தவர்கள் மீதான ஆவேசமும் பிற கருத்துக்களை ஏற்காத அத்துமீறல்களும், மனிதத்தை தொலைத்துவிட்ட பேரினவாத தோள்களும் என்னை கதறவைக்கிறது. தோள் வலிமையற்றவள் நான். எனது கதறல் எல்லாம் கவிதைகளாகவே பிரசவிக்கிறது.

பனிப்படலத்தாமரை, என் எதேன் தோட்டம் கவிதைத் தொகுதிகளை அடுத்து இது எனது மூன்றாவது கவிதைத்தொகுதி ”தொட்டிப்பூ”. குறுகிய காலத்தில் எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள். தமிழஈழத் தீவிரமும் அரசின் கொலைத்திறனும் மோதிக்கொண்ட இறுதிக்கட்டத்தில் என்னை மேவி எழுந்த கவிதைகள்தான் இவை. என் மனதின் வலி என்று சொல்வதை விட கோபத்தைச் சுமந்த பாரத்தில் விழுந்திருக்கிறது இந்தத் தொட்டிப்பூ என்றே சொல்வேன்.

எமது கலாச்சாரங்கள், போராட்டங்கள், எம் சித்தனை நடமுறை தொடர்பாகவும் உள்ள என் முரண்பட்ட கருத்துக்களை என் கவிதைகள் மூலம் பகிர்ந்து கொள்வதில் நான் திருப்தி அடைகிறேன். ஏதோ சில காரணங்களுக்காக எம் சமூகம் தம்மை குறுக்கி கொண்டுள்ளது ஏன் என்பதை அறிய முற்படுகிறேன். அதையே உங்களுடன் பகிரவும் முன்வந்துள்ளேன். பால்கட்டிய மார்பின் வலிபோல… சுரக்கும் உணர்வுகளை முழுமையாய் கொடுக்காத உணர்வு பிரசவித்த ஒவ்வொரு கவிதைக்குப் பின்னும் மனதில் இருக்கத்தான் செய்கிறது. இக் கவிதைத் தொகுதி எமது போராட்டங்களின் இறுதிக் காலத்தில் எழுத்தப்பட்டது. போராட்ட காலத்தில் என் சார்ந்த உணர்வுகள் கருத்துக்கள், மோதல்கள் சுயவிமர்சனங்களே இத்தொகுதியில் வரையப்பட்டுள்ளன.

கருத்துப் பரிமாற்றங்கள் என்பதும் கருத்துச்சுதந்திரம் என்பதும் எம் சமூகத்தினிடை இல்லாத ஒரு பழக்கமாகவே கருதுகிறேன். என்னைச் சுற்றிய சமூகத்துடனும் நட்பு, உறவுடனும் நான் என்றுமே கருத்துக்களை ஆழப் பகிர்ந்து கொண்டதில்லை. முரண்பாடுகள் முட்டி உறவுகள் தெறிப்பானேன் என்ற கொசுருக் காரணம்தான். அதனால் நான் மனம் திறப்பது என் கவிதைகளோடுதான்.

எதையம் குத்திக் காட்டுவதோ, சுட்டிகாட்டுவதோ எனது நோக்கமல்ல இவை என்னை நானே கேட்டுக்கொண்டவை.  என் கவிதைகளோடும் அதன் கருக்களோடும் முரண்பாடுகள் வந்து போகலாம் உங்களுக்கும். முகம் திருப்பாதீர்கள். எழுந்து வாருங்கள் தொட்டிப்பூக்களுடனும் தோட்டத்து பூக்களுடனும் உட்கார்ந்து பகிர்ந்து கொள்வோம் எம் உணர்வுகளையும் உரசல்களையும். எம் வளர்ச்சிக்கு நாமே நீருற்றிக் கொள்வோம் இனி. பரிமாறிக்கொள்வோம் எம் கருத்துக்களை. எங்கள் மண்ணும் எங்கள் மரத்தடியும் இன்றுவரை காத்திருப்பது நாம் கலந்திருந்து கருத்துரையாடத்தான் என்பதே எனது நம்பிக்கை.
காத்திருப்புடன்
கவிதா

பின்னூட்டமொன்றை இடுக