” தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர்.
இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்றன. ஆண்- பெண் உறவு, பெண்களின் சமூக இருப்பு, காதலின் பல்வேறு அர்த்தங்கள் பல கவிதைகளின் பொருட்களாகின்றன.”
அணிந்துரை – பேராசிரியர் சண்முகரட்ணம்.
என்னுரை – (கறுத்தபெண் கவிதைநூல்)
இங்கே, இலையுதிர்காலம். மரங்கள் முழுதாய்த் தம் பச்சை வசந்தங்களைச் சிந்திவிட்டிருக்கின்றன. எங்கும் கனதியான இருள். நட்சத்திரங்களெல்லாம் பூமிக்குள் கொட்டியது போலத் தெருவெங்கும் இருட்டை வெள்ளையாக்கும் முயற்சியில் மின்விளக்குகள். வானம் கறுத்து, இரசிக்கும் படியாய் ஏதுமில்லை. மழை இன்னமும் பெய்து கொண்டிருக்கின்றது. பல நாளாய் எழுத நினைத்த என்னுரையை எழுதத் தொடங்கியிருக்கின்றேன்.
கவிதை என்பது சுகமான மழையுதிர்காலத்து மாலை நேரம் போன்றது. இந்த மாலை நேரங்களை நான் பெற்றுக்கொள்ளக் காரணமாயிருந்தவர்களைப் பற்றிய எனது நினைவுகளைச் சொல்ல ஆரம்பிக்கும் போது எனது முதற் கவிதையைப் பற்றிப் பேசியாக வேண்டும். இருபத்திநான்கு வருடங்களுக்கு முன் நான் கவிதை என்று எதையோ எழுதியது நினைவில் இருக்கின்றது. அதில் நான் என்ன கிறுக்கி வைத்தேன் என்பதெல்லாம் நினைவிலில்லை. அது வெறும் குப்பையில் போட வேண்டிய ஒரு காகிதம் என்று கசக்கியெறியாமல்;, இன்னும் அதைப் பாதுகாப்பாய் எடுத்து வைத்திருக்கும் அப்பன்மாமாவையும் (பாஸ்கரன் சின்னத்தம்பி), எனக்கு இலக்கிய உலகை, அதன் ஆழத்தை அறிமுகப்படுத்திய குட்டிமாமாவையும் (தங்கவேல் கணபதிப்பிள்ளை) இங்கு குறிப்பிடுவதில் மனநிறைவடைகிறேன். நோர்வேயில் தாய்மொழிக் கல்வியை சிறுவர்பள்ளியில் கற்பித்தலோடு நிற்காமல் என்னைக் கவிதையும் எழுத வைத்துப் பார்த்த கவிஞர் சிவதாஸ் சிவபாலசிங்கம் அவர்களையும் நினைவுகூருதல் இத்தருணத்தில் பொருந்தும். சிறுவயதிலிருந்து எனது இலக்கிய ஆர்வத்திற்குத் துணைநின்றும், எனது சந்தேகங்களுக்கு இன்முகத்தோடு பதிலளித்துக்கொண்டும்,; நல்வழிகாட்டியாய் இருக்கும் கவிஞர் இளவாலை விஜயேந்திரனையும் இந்தருணத்தில் நினைவுகூருகின்றேன்.
நாடுவிட்டு, கண்டம் தாண்டி உலகெங்கும் வாழும் தமிழர்களாய் நாங்கள் இங்கு, எமக்கு முற்றிலும் மாறுபாடுள்ள சூழலின் பண்பாடுகளைக் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக்கொண்டும், காவி வந்த மரபுகளைக் கட்டிக்கொண்டும்;, முகங்களைத் தொலைத்து, அடையாளங்களை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நோர்வே நாட்டின் கனத்த இரவுகள் போல, மனித வாழ்க்கையின் கனத்தையும் பல சமயங்களில் உணரக்கூடியதாக இருக்கின்றது. மன உளைச்சல்களும், இத்தேசத்தில் எம் குறுஞ்சமூகம் ஏற்படுத்தும் காயங்களும், பிளவுகளும், இரட்டைக் கலாசார வாழ்வுமுறையின் பிரதிபலிப்புகளும், பல இரவுகளை விழுங்கிச் செமித்திருக்கின்றன. இரவுகள் எனக்கு முக்கியமானவை, எனது அமைதியான நிமிடங்களைச் சலனப்படுத்த நான் யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்ற உறுதியோடு உறங்கிய நாட்கள் ஏராளம். இருந்தும், ஏதுமில்லாத ஒன்றுக்காய் யாருமில்லாத வீட்டின் படிகளை ஏறிக் களைத்த காலங்கள்; நான் பெண் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இது இயல்பு, உலக நியதி என்று இவைகளை ஒதுக்கிவைக்க முடியாமல் இப்படியான இரவுகள்; வலுக்கட்டயமாய்க் கைகளிற் திணிக்கப்படும் நேரங்களில் நான் எதையாவது எழுதத் தொடங்குகின்றேன்.
எனக்குள் ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் பல சமயங்களில் என் எதிரியாகவும், அதே சமயம் சுயத்தை இழக்காது சோர்வுறும் தருணங்களில் என்னை இழுத்து இதுதான் நீ என்பதையும் உணர்த்திக்கொண்டிருக்கின்றது. வாசிப்பும், இலக்கியத் தேடல்களும்; எனது காலங்களிற் பெறுமதி நிறைந்த காலங்கள் எனலாம். ஆனாலும், எனது உரையாடல் ஆர்வத்திற்கு, வாசிப்பின் பின் கலந்துரையாடலுக்கு நபர்கள் இல்லாத நண்பர் வட்டத்துள் இருப்பது அவ்வளவு இலகுவானதாக இல்லை. இதில் சில விடயங்களை வெளிப்படையாகவே பேசியாக வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதுவரை இங்கு இன்னொரு பெண்ணிடம் எனது இலக்கிய ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு அமைந்ததில்லை என்பதை நம்ப முடிகிறதா? இது புலம்பெயர் சூழலின் யதார்த்தம்.
பொதுவாகவே, இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு அன்றிலிருந்து இன்றுவரை ஒப்பீட்டு ரீதியில் மிகக் குறைவானது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். வேலை, வீடு, குழந்தை என இயந்திரமாக்கப்பட்ட இந்தச் சூழலிற் புத்தகத்தை வாங்கி இலக்கியத்துள் மூழ்கிப்போக யாருக்கும் இங்கு சம்மதமில்லை. இதைப் பற்றிப் பேசவும் பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த நண்பர்களை, இயல்பாகவே ஆணாதிக்கச் சிந்தனை திணிக்கப்பட்ட ஒரு சமூகம் எப்படிப் பார்க்கிறது? குற்ற உணர்வைப் பிறர் மீது ஏற்படுத்துவதிலும், திணிக்கப்பட்ட ஆதிக்கத்தின் விழுமியங்களைக் காவிக்கொண்டு பரப்புவதிலும் பெண்களும் காரணமாயுள்ளனர் என்பதுதான் மிக வருத்தத்திற்குரியது. குறிப்பாகப் புலம்பெயர் தேசங்களில் வாழும் முதற்சந்ததிப் பெண்களின் முன்னேற்றம், அவர்களின் புறவாழ்க்கையில் மட்டுமே வளர்ச்சி கொண்டிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளைத் தேடி அலைவதிலும், சந்தைப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பதிலும், அழகியல் கலையிற் தேர்ச்சி பெற்றவர்களாகவும், மிகச்செலவில் கலாச்சாரவிழாக்களைக் கொண்டாடுவதிற் புதுமைகளைச் செய்வதிலுமே பெரும்பான்மையினர் ஈடுபட்டிருக்கின்றோம். இதிற் சிறிதளவு சக்தியையாவது சிறுமை களைவதிலும், சுதந்திர மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதிலும் காட்டாமல் ”ஒழுங்கான பெண்” என்ற வார்த்தையைப் பெறுவதற்காய் இங்கேயும் பெண்கள் தற்சிந்தனையின்றிக் காலத்தையோட்டத் தயாராக இருக்கின்றோம்.
பெண்கள், தாம் இப்படி இருப்பதையே விரும்பி ஏற்றுகொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எப்பொழுதும் என்னுட் குடைந்துகொண்டிருக்கின்றது. இதை உடைத்துப் போட ஏன் முடியாதிருக்கின்றது? ஆண் பெண் நட்பு ஏன் மறுக்கப்பட்டிருக்கின்றது? தந்தை, கணவன், சகோதரன், மகன் தவிர உண்மையான நட்புடன் ஆண் பெண் பழகுதல் அசிங்கமாகவே பார்க்கப்படுவது ஏன்? பெண் செய்வதெல்லாம் மிக நுணுக்கமாய்க் கவனிக்கப்படுவதன் காரணம் என்ன? மிகச் சாதுரியமான முறைகளிற் பெண்களின் செயற்பாடுகள் ஆண்களைச் சார்ந்தே சிந்திக்கப்படுவதை எப்போது நாம் கடந்து போகப் போகின்றோம் என்பதற்கெல்லாம் விடை தேட முயற்சித்த காலங்களிற் கிறுக்கியவை இந்தக் கவிதைகள் எனலாம்.
’நான் யாருக்காக எழுதுகிறேன்’ என்பது எழுதத் துவங்கும் போதெல்லாம் என்னுள் எழும் கேள்வி. இவை யாரிடம் போய்ச் சேரப்போகின்றன என்பதை நானோ இக்கவிதைகளோ தீர்மானித்திருக்கவில்லை. யாருடைய முகவரியும் என் கவிதைகளில் இல்லை. ”இது எனக்காக எழுதியது” எனக் கவிதைகளைப் படிக்கப்போகும் முகம் தெரியாத வாசகர் ஒருவரின் எண்ணம் கவிதையை முழுமையாக்கும் என்பது எனது கருத்து. இங்கே கிடப்பன தெரிந்த கேள்விகளுக்கான விடைகள் அல்ல. தெரியாதது போல் இருப்பதே புனிதம் என்று, கேட்கப்படாமல் நழுவிப்போய்க்கொண்டிருக்கும் கேள்விக்களுக்கான சில சொற்கள். இன்று, நாளை அல்லது நூறு வருடங்களின் பின் இவை படிக்கப்பட்டாலும், எங்கோ பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் முகம் தெரியாத ஒரு வாசகன் அல்லது வாசகி தேடிய கவிதை இதுவாயிருக்கலாம்.
தோழமையுடன்
கவிதா (நோர்வே)
28.11.2011 இரவு 11:00










