மனிதம் – மானுடம்: ஓர் ஒப்பீட்டு நோக்கு

மனிதம் மற்றும் மானுடம்: ஓர் ஒப்பீட்டு நோக்கு


மனிதம் மற்றும் மானுடம் இரண்டும் ஒத்த கருத்துப் போல தோன்றினாலும், இரண்டும் நுணக்கமான, ஆழமான வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட சொற்கள்.


இச்சொற்களின் மூலம் வடமொழி. மனு, மனுஸ்ய என்ற வடமொழியில் இருந்தே நாம் தமிழில் அதற்கான அர்த்தங்களை கற்பித்துக்கொண்டிருக்கிறோம்.


இவ்விரு சொற்களும் ஒரே பொருளைத் தருவது போல் தோன்றினாலும், ஆழமாக நோக்கும் போது இவற்றின் பயன்பாட்டிலும், தத்துவத்திலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.


மானுடம்: மனித இனத்தை, குழுமத்தை அடையாளப்படுத்தும் சொல்


மானுடம் என்பது உலகில் வாழும் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும், மனித நாகரிகத்தையும் குறிக்கும் சொல்லாகும். நிறம், இனம், மொழி, நாடு எனப் பல பிரிவுகளாக மனிதகுலம் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய மனித வர்க்கத்தை ‘மானுடம்’ என்ற சொல் குறிக்கிறது.


மனிதன் மற்ற விலங்குகளை வென்று, பூமியின் முதன்மை இனமாக உருவெடுத்த வரலாறு அவனது உடலமைப்பு, அறிவு மற்றும் சமூகக் கூட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியால் சாத்தியமானது. கருவிப் பயன்பாடு, நெருப்பின் கட்டுப்பாடு, மொழி மற்றும் கூட்டுமுயற்சி, விவசாயப் புரட்சி, இன்றைய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி மூலம் காடுகளையும், இயற்கைச் சூழலையும் மாற்றி அமைத்து, ஒட்டுமொத்த உலகின் மீது மனிதன் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டினான். உடலாலும், அறிவாலும் இந்த உலகின் முதன்மையான உயிரினமாக வளர்ந்தது மானுட வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் போது விலங்குகள், இயற்கை, அழிவு, போர், பிற இனங்களின் அழிப்பு போன்ற அனைத்து உள்ளடங்கும்.

இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி, அதன் சாதனைகள் மற்றும் உலகளாவிய இருப்பைப் பற்றிப் பேசும் போது இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மானுடம் என்பது மனிதர்களின் அறிவு சார்ந்து பார்க்கப்படுகிறது. “மானுடம் வென்றது” என்று கூறும் போது, அது ஒட்டுமொத்த மனித குலத்தின் கூட்டு வெற்றியைக் குறிக்கிறது.

மானுடம் , உலகளாவிய ஒட்டுமொத்த மனித சமூகத்தைச் சார்ந்தது.
புறம் சார்ந்தது (சமூகக்கட்டமைப்பு).

மனிதம்: மனித குலத்தின், (மானுடத்தின்) பண்பின் அடையாளம்


மனிதம் என்பது ஒரு மனிதனுக்குள் இருக்க வேண்டிய நற்பண்புகளின் ஒட்டுமொத்த வடிவமாகும். இது மனிதநேயம், அன்பு, கருணை, இரக்கம் மற்றும் அறநெறி ஆகியவற்றைக் குறிக்கும் குணம் சார்ந்த சொல்லாகும்.


பிறரின் துன்பத்தைக் கண்டு இரங்குவதும், தனக்கு இருக்கும் வசதிகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும், மனிதர்களை மட்டுமன்றி, அனைத்து உயிரினங்களையும் சமமாக பார்ப்பதும், நடத்துவதும் மனிதத்தின் அடிப்படைப் பண்புகளாகும். உலகத்தில் உள்ள உயிரற்றவைகள் மீதும், இப்பிரபஞ்சத்தின் மீதும் அக்கறையும், நேசமும் கொண்டிருப்பதும் மனிதம் சார்ந்த பண்புகளே.


ஒரு மனிதன் விலங்குணர்விலிருந்து விடுபட்டு, உயரிய ஒழுக்கத்துடனும் சுயநலமின்றியும் வாழும் போது அவனுள் «மனிதம்» உருக்கொள்கிறது. «அவரிடம் இன்னும் மனிதம் உயிரோடு இருக்கிறது» என்று கூறும் போது, அது அவரின் கருணை உள்ளத்தையும், நற்குணத்தையும் மட்டுமே குறிக்கிறது.


மனிதம், தனிமனிதனின் தார்மீக ஒழுக்கத்தைச் சார்ந்தது.
அகம் சார்ந்தது. (உள்மனக்கட்டமைப்பு)

சங்க இலக்கியங்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று, மானுடத்தின் பரந்த எல்லையைப் பேசுகின்றன. சிவனும் பிரம்மனும் உள்ளிட்ட தேவர்களின் பெருமையை விட, அந்தப் விஷ்ணு மானிடனாகப் பிறந்து மானிடப் பிறப்பின் பெருமையை உயர்ந்தோங்கச் செய்துள்ளது என்று கம்பர் வியந்து «மானுடம் வென்றது» என்று கூறுகிறார். இவை மனிதகுலம் சார்ந்து பேசப்பட்டது.

அதே வேளையில், வள்ளுவர் அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்று அன்பின் உயர்வைப் பேசுகிறார். பாரதி “காக்கை குருவி எங்கள் ஜாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று அனைத்து உயிர்களையும் இயற்கையையும் தன்னோடு இணைத்துப் பார்க்கிறார். தாயுமானவர் “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று அனைவரின் நலனையும் விரும்புகிறார். இவை அன்பு, கருணை, உயிர்நேயம், பொதுநலம் ஆகிய மனிதத்தின் உயரிய பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன.

……

பின்னூட்டமொன்றை இடுக