நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

ஒரு கவிதையின் உயிர்

 « நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே »

     

பாரதியார் எழுதிய பாடல்கள் கணிசமான தொகையுடையவையாக இருந்தாலும், தமிழ்த் திரைப்படங்களில் கையாளப்பட்ட பாரதி பாடல்களே பெரும்பான்மை மக்களால் அறியப்பட்டவையாக இருக்கின்றன. அத்தோடு கர்நாடக இசை-ஆளுமைகள், பாடகர்களினால் வெளியிடப்பட்ட இசை அல்பங்களிலும் கணிசமான பாரதி பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் திரையுலகும், இன்னபிற படைப்புலகும் பாரதியின் பாடல்களிலிருந்து சூழ்நிலைகளுக்குரிய, பேசுபொருள் சார்ந்த வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து தத்தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. முழுமையான ஒரு படைப்பினை  நறுக்கிப் பாவிப்பதன் சரி-தவறு பற்றியதல்ல இக்கட்டுரை. இருப்பினும்,  பாரதி பாடல்களை நறுக்கிப் பயன்படுத்துவதன் மூலம் அப்பாடல்கள் சொல்லவிழைந்த ஆழ்ந்த பொருளையும், தத்துவங்களையும் இழக்க நேரிடுகிறது என்பதையும் சமூகம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

பாரதியின் பாடல்களிலிருந்து தேவைக்கேற்ற வீரியமுள்ள  வரிகளை மட்டுமாக எடுத்தாள்வது சமூக வழமையாகிவிட்டது. பாரதியின் “உலகை நோக்கி வினவுதல்” என்ற தலைப்பிலான பாடலில், இறுதி அடிகளை நீக்கிய பின், மீதமுள்ள வரிகள் அனைத்திற்கும் இசை கொடுத்திருக்கிறது திரையுலகு.  ஓரிடத்தில் பாடல் வரிகளின் ஒழுங்கையும் மாற்றியிருக்கிறது.  இப்படியாகப் பாடலை உருவாக்கியதன் மூலம் பொருட்சிதைவையும் கொடுத்து நிற்கிறது. இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம், பாரதி.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்

சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?”

என்று தொடங்குகின்றது பாடல்.

மேலும்

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?

நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?”

பாரதி திரைப்படத்தில், கருத்தொழுக்கம் கலைத்தும், ஒழுங்கை மாற்றியமைத்தும் இப்பாடல் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆழ்ந்த கருத்துப் புலனாகும்படிக்கு எழுதப்பட்ட இறுதி மூன்று வரிகளையும் இழந்துவிட்ட பாடலாக இக்கவிதை வலம் வருவது கவலைக்குரியது. பாரதியை வேதாந்தியாகவே பார்த்துப் பழகிவிட்ட சமூகத்தினால், பாரதியின் பரந்துபட்ட முகத்தை கண்டறிய முடியாதபடி, ஒரு இசைப்படைப்புக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

முதற்பாகமும் – பொருளும்

(மாயாவாதத்தைக் கேள்விகளுக்குள்ளாக்குதல்)

இந்திய மண்ணில் பெரும் பிரசித்தி பெற்ற சங்கர-வேதாந்த தத்துவப்படி பரமாத்மாவையும் ஜீவார்த்மாவையும் வேறுபடுத்துவது மாயையாகும். இந்த மாயை பொய்.  மாயையின் வெளிப்பாடாகிய  இந்த உலகும் பொய். பாரதி «மாயைப் பழித்தல்» என்ற தனது மற்றுமொரு பாடலில் இக்கருத்தையே பிரதிபலிக்கிறார்.  

தூரத்தே கயிறு, பாம்பு போல கண்களுக்குத் தெரிவது போல, பிரம்மமே இந்த உலகமாகத் தெரிகிறது. அதனால் பிரம்மம் மட்டுமே நித்தியமானது, உண்மையானது என்கிறது மாயாவாதம் மற்றும் அத்வைதம்.

வேதாந்தத்தில் மாயை என்பது பிரம்மத்தை அறியவிடாமல் மறைக்கும் ஒரு சக்தியாம். இல்லாததை இருப்பது போல காட்டும். இருப்பதை இல்லாதது போல காட்டும். அது ஒரு அறியாமை நிலையாம். மாயை என்பது நிஜம் போல தோன்றும் பொய். மாயத்தோற்றம் தரும் மாயை. அம்மாயையை பாரதி அற்பமாயை என்று விளிக்கிறார்.

இத் தத்துவம் எழுப்பும் கேள்விகளை, கேள்விகளாகவே பாடலின் முதல் மூன்று சரணங்களிலும் கவிதைநயத்தோடு கையாள்கின்றார் பாரதி.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்

சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே! கேட்பதுவே, கருதுவதே நீங்க ளெல்லாம்

அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்

கானலின் நீரோ? -வெறுங் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்

நானுமோர் கனவோ? -இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,

சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

இங்கு கையாளப்பட்ட உவமைகள் அனைத்துமே வேதாந்த தத்துவம் (மாயாவாதம்) கூறும் கருத்துகளை நோக்கிய கேள்விகள்தாம். அல்லது உலக சமயங்களுக்கும் தத்துவங்களுக்கும் அடிப்படையான கேள்விகள்.

மாயாவாதம் என்பது, நாம் காணும் இந்த பிரபஞ்சமும் உலகியல் வாழ்க்கையும் நிலையானவை அல்ல, அவை ஒரு மாயை (illusion) என்று கூறும் தத்துவக் கொள்கையாகும். இது முதன்மையாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தம் மற்றும் பௌத்த தத்துவங்களில் காணப்படுகிறது. மாயாவாதம் பிரமத்தையே முழுமுதற்கடவுளாகக் கொண்டுள்ளது. பிரம்மம் என்பது பிரபஞ்சத்தின் எல்லையற்ற, அழிவற்ற முழுமுதற் கடவுள் அல்லது மெய்ப்பொருளாகும். இதுவே அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் நிறைந்துள்ள பேரறிவு. மற்றும் எல்லையற்ற ஆற்றலாகும். பிரம்மம் என்பது உருவமற்ற ஒரு தத்துவம்; இதுவே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அடிப்படையான ஆதாரமாக விளங்குகிறது என்கிறது மாயாவாதம்.

ஆனால், சைவசித்தாந்தப்படி மாயை என்பது «மா யா” என்ற இரண்டு சொற்களால் ஆனது. தோற்றமும் ஒடுக்கமும் என்பதே அதன் பொருள். எதுவும் பொய்யல்ல. ஒன்றுக்கொன்று சூக்குமமாக இருப்பவை. தோன்றுவது ஒடுங்கும், ஒடுங்குவது தோன்றும் என்பது சைவசித்தாந்தத்தின் சற்காரியவாதம்.

காலமும் காட்சியும் – கோட்பாடுகளும்

«கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ

காலம்:

உலகில் காணும் சித்தாந்தங்கள் காலத்தைப் பற்றிய பலவிதமான கோட்பாடுகளைக் கொண்டுள்ளன.

  • மாயாவாதம் காலத்தை ஒரு சார்புநிலைத் தத்துவமாகப் பார்க்கிறது. இங்கு காலம், இடம், காரியம் அனைத்தும் மாயையின் சாரம்.
  • பௌத்தம் காலத்தை உண்மையல்ல என்கிறது. கணத்தில் அழியும் காலம் என்றும் அது மனதின் உணர்வாலும், பொருட்களில் உருவாகும் மாற்றங்களாலுமே அறியப்படுகிறது என்கிறது.
  • சைவசித்தாந்தம், காலமும் நியதியும் உயிரின் கட்டுகள் என்கிறது. இது, சைவசித்தாந்தம் கூறும் 36 தத்துவங்களுள் அடங்குபவை.

காட்சி:

  • காணும் காட்சிகள் யாவும் ஊனக்கண்களால் காண்பவை, வெறும் பொய் (மாயை) என்கிறது மாயாவாதம். கானல் நீர் போலானதே காட்சியென்றும், அது (காட்சி) பொய்த்தோற்றமே என்றும் சொல்கிறது. காட்சி என்பது ஒரு நினைவேயொழிய வேறில்லை என்கிறது.
  • காணும் காட்சிகள் யாவும் நிலையற்றவை, மாறிக்கொண்டே இருப்பவை என்று வரையறை செய்கிறது பௌத்தம். அதை விளங்கிக்கொள்வதே உண்மையான காட்சியாகும் என்கிறது.
  • காணும் காட்சிகள் யாவும் சிற்சக்தி அருள் என்கிறது சைவசித்தாந்தம். காணும் அனைத்திற்குமே தோன்றுவதற்கான மூலமுண்டு. காண்பவற்றின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும்  காரணமானது மாயையென்ற இறையின் சிற்சக்தி.

வேதாந்தம் சொல்லும் காலமும் காட்சியும் வெறும் நினைவும் பொய்யுமென்றால், தானும் ஒரு கனவாகத்தானே இருக்கமுடியும் என்ற கேள்வியை எழுப்புகிறார் பாரதி. தத்துவவிசாரணைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட பாரதி இப்பாடலின் முடிவில் சைவசித்தாந்தம் கூறும் சற்காரியவாதியாகத் தன்னை வெளிப்படுத்துகிறார்.

சற்காரிய வாதம்  என்பது இந்தியத் தத்துவத்தில், குறிப்பாக சாங்கியம் மற்றும் சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் ஒரு காரண-காரியக் கொள்கையாகும். இதன்படி, ஒரு காரியம் (விளைவு) தோன்றுவதற்கு முன்பே அதன் காரணம் (மூலப்பொருள்) மறைந்திருக்கிறது என்பது இதன் அடிப்படைக் கருத்தாகும்.

உள்ளது அழியாது, இல்லது தோன்றாது

“உள்ளது அழியாது, இல்லது தோன்றாது” என்பது சற்காரியவாதத்திற்கு மேலும் விளக்கம் தரும் ஒரு கூற்றாகும்.

காணும் எந்த ஒரு காரியமும், மூலம் என்ற ஒன்று இல்லாமல் தோன்றுவதில்லை. ஒரு காரியத்திற்கான காரணம் சூக்கும (புலனாகா நிலை) வடிவில் இருந்து தோற்றம் பெறுகிறது.

”Nothing is Lost, nothing is created,  everything is transformed” (Antoine Lavoisier). 1800ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் எழுந்த தத்துவமும் இதையே சொல்கிறது.

ஒரு மரம் உருவாகுவதற்குரிய சூக்கும வடிவம் விதையில் இருப்பது போல, சட்டி உருவாகுவதற்குரிய சூக்கும வடிவம் மண்ணில் இருப்பது போல, மழை விழுவதற்கான சூக்குமம் காட்டிலும், கடலிலும் கிடப்பது போல, அண்டத்தில் நடக்கும் காரியங்கள் அனைத்திற்குமான காரணங்கள் சூக்கும வடிவங்களாக இருக்கின்றன என்பதை சற்காரியவாதம் எடுத்துரைக்கிறது.

சைவசித்தாந்தத்தின் அடிப்படை சற்காரியவாதம்தான். ‘இல்லது என்றும் இல்லதே – உள்ளது என்றும் உள்ளதுதான்’. அப்போ அழிதல் என்பது, இருந்த பொருள் கண்ணுக்குத் தெரியாமல் நுண்மையான முறையில் ஒடுங்கிப்போவதுதான். இங்கே அழிதல் என்பது ஒடுங்குதல்; என்ற பொருள் தருகிறது.

அண்டத்தில் உள்ளவை அனைத்தும் சக்தியின் வெளிப்பாடுகள். அவை ஒடுக்கத்திலிருந்தே (சூக்கும வடிவில் இருந்து) தோற்றம் பெற்று மீண்டும் ஒடுக்கத்திற்கு வருபவை.

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?

வீண்படு பொய்யிலே நித்தம் விதிதொடர்ந் திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை

காண்பது சக்தியாம் இந்தக் காட்சி நித்தியமாம்

காண்பவை மாயையல்ல (பொய்யல்ல) என்ற மாயாவாதக் கருத்தை இறுதியில் மறுதலித்து சைவசித்தாந்தம் கூறும் சற்காரியவாதத்தை முன்வைக்கும்  பாரதியையும் நாம் அறிவது நன்றே.

பின்னூட்டமொன்றை இடுக