பரமசிவம் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

334213077ஈழத்துப் பெண் ஜெயமோகனுக்கு எழுதிக்கொள்வது.

பெண்கள் தொடர்பாக அடிப்படை அறமே உம்மிடம் இல்லையே ? எழுத்தாளர் பட்டியலில் எப்படி உம்மை இருத்தி வைத்தார்கள்?

கவிதைகளால் பெண்களின் கற்பழிந்து போகும் என்றால் என்ன? எப்படி யோசித்தும் புரியவேயில்லை? உமது பார்வையில் பெண்களிடத்தில் கற்பு கடைசியாக எங்கே இருக்கிறது?

எம் மண்ணின் கவிதைகள் அல்லது கவிஞர்கள் எந்த விதத்தில் பெண்களின் கற்பை அழித்துவிடுவார்கள் என்ற கவலை உமக்கு? விளக்கமாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோமல்லவா?

உம் போன்றவர்களை இன்னும் எழுத்தாளர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் தமிழகத்தை எந்த முறி மருந்தால் நாங்கள் குணப்படுத்துவது?

அதுசரி எங்கள் எழுத்தாளர்களைப் பட்டியல் போட்டுத் தரும்படி உம்மிடம் யார் கேட்டார்கள்?

நீங்களாகவே உங்களைப் பெரிய எழுத்தாளராகக் கற்பனை பண்ணிக்கொண்டு இருந்தால் போதுமா?

ஏற்கனவே நச்சுப் புகையடித்து இறந்துபோன ஒரு சமூகத்திலிருந்து தப்பி, தமது வாழ்வின் மீதியை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்திடம், தனக்கென்று ஒரு நிலமற்ற, அரசற்ற, உரிமையற்ற உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்திடம் ஒரு எழுத்தாளன் பேசும் பேச்சா இது?

உமது கொழுப்பேறிய மண்டைக்குப் புரியாத சில விடயங்களை நான் சொல்லித்தருகிறேன்.

வாய் பொத்தி மண்டியிட்டு அமர்ந்து கேட்டல் நன்று.

பல தசாப்தங்களைக் காவு கொண்ட எமது போராட்ட காலங்களில் உட்கார்ந்து இலக்கியம் படைத்துக்கொண்டா இருந்தனர் எமது சமூகத்தினர்?

எத்தனைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் துப்பாக்கிகளை ஏந்தியிருப்பர், உயிரை இழந்திருப்பர், கல்வியை இழந்திருப்பர்?

தம் எல்லாவற்றையும் இழந்து அகதியாயிருப்பர்?

அடிப்படைக் கல்விகூட அறுந்து போன நிலையிலிருந்து தான் அவர்கள் தமது அடுத்த சந்ததியினரை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இலக்கியத்தில், கலையில் அதன் கண்ணி அறுந்திடாது தொடர்ந்து இயங்கும் வாய்ப்பு உள்ள தமிழகத்திலே தான் எத்தனை எழுத்தாளர்களை கைக்காட்ட முடியும்?

அரச அங்கீகாரங்களையும், விருதுகளையும் வைத்து எழுத்தாளர்களை கண்டுகொள்ளும் தமிழகம், நிறுவனமற்று இயங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய எமது சமூகம் இக்காலத்தில் என்ன செய்ய முடியும்?

சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் ஆதிக்க மொழியாகத் தமது தலையால் ஏற்று தமிழைப் புறக்கணித்து வரும் தமிழகத்தின் அடுத்த சந்ததிகளைக் காட்டிலும், உலகம் முழுவதும் சிதறிக் கிடந்தாலும், தாம் சென்ற ஊரெல்லாம் தமிழ்க் – கலைக்கூடங்களை வைத்து தமது குழந்தைகள் தமிழ் பேச உழைக்கும் ஈழத் தமிழர்களை பற்றி உமக்கு என்ன தான் தெரியும்?

போகட்டும்.

நான் வசிக்கும் மண்ணில் இந்நாட்டு மக்களின் தொகை 5 மில்லியன் தான். ஆனால் ஒரு நூல் பிரசுரமானால் 5000 முதல் 16000 நூல்கள் விற்பனையாகின்றன.

தமிழகத்தில் உம்முடைய நூல் ஆயிரத்தைத் தாண்டினாலே பெரிய விடயம்.

அதுவும் இங்குள்ள இலக்கியங்களின் தரம் உம்மால் அறிந்து கொள்ள முடியுமா? இவர்களை வைத்து அங்கே பூச்சி மருந்து அனுப்பி வைக்கவ் சொல்கிறோம்?

குறைந்தபட்சம் போரின் பின்னால் எழுந்து வரும் சமூகம் எப்படி இருக்கும், எந்த விடயங்களை முதன்மைப்படுத்தும் என்றாவது தெரியுமா? தெரியாவிட்டால் அது தொடர்பான ஆராய்ச்சி நூல்களை வாங்கி வாசிக்கத் தொடங்கலாமே?

இத்தனை காலமாக குழந்தை இலக்கியங்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

உங்கள் தெருக்களில் எத்தனை தமிழ்ப் புத்தகக் கடைகள் உள்ளன?

அதெல்லாம் சரி நீங்கள் எழுதுவதெல்லாம் சிறப்பென்று நீங்களே சொல்லிக் கொண்டிருந்தால் சரியா?

நீங்கள் எழுதிக் குவிக்கும் தமிழ் இலக்கியங்களை வேறு எந்தச் சமூகமாவது நிமிர்ந்து பார்க்கிறதா?

உங்கள் எழுத்துக்கள் ஏதேனும் பிற சமூகங்களில் எடுத்துக்காட்டாகப் பேசப்படுகிறதா?

இவ்வுலகத்திற்கு உங்கள் இலக்கியங்களின் பங்களிப்பென்ன?

வீழ்ந்து எழுந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திடம் ஆதிக்க சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நீங்கள் ஏன் உங்களை ஒப்பிட வேண்டும்?

ஆதிக்கம்தான் அனைத்தையும் வழி நடத்திச் செல்கிறது. அது போலத்தான் எமது சமூகம் தமிழகத்தைப் பார்க்கிறது.

ஏன் உங்கள் சமூகம் இன்னமும் ஆதிக்கம் செலுத்திய சமூகங்களுடைய கருத்துக்களை கடைபிடித்துக்கொண்டு இன்றும் கும்மியடித்துக் கொண்டிருக்கவில்லை?

அவர்கள் பட்டியலிட்டதை நீங்கள் அப்படியேக் கேட்டு கேள்வியில்லாமல் இன்னமும் வைத்திருக்கவில்லை? அதிலேதும் மாற்றம் கொண்டு வரமுடிகிறதா உங்களால்?

உங்களுக்கு மேலே ஏறி நின்று உங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கும் சமூகங்களை நோக்கி உங்கள் நச்சுப்புகை திரும்புவதே ஆரோக்கியம் என்பது அறிக.

”எங்களுக்கு மேலுள்ள சமூகமா? எங்களைப் பார்த்துச் சிரிக்கிறதா? நாங்கள் அப்படி எதை கண்மூடிக்கொண்டு பின்பற்றுகிறோம், அவர்கள் பார்வைகளை நாங்கள் எங்கே எமது கருத்தாகவும் கொண்டுள்ளோம் என்ற கேள்விகள் எழுகிறதா?

மீண்டும் வாய்பொத்திக் கைகட்டி அமரும். சொல்லித்தருகிறேன்.

– கவிதா லட்சுமி.
✍️

4 thoughts on “பரமசிவம் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

  1. வணக்கம் சகோதரி!
    ஜெயமோகன் மீது இத்தனை சாடல்களுக்குமான அவரது எந்த எழுத்துப்பதிவுகள் காரணம். யெயமோகனை ்அண்மை காலமாக தான் படித்தேன். அவரது புறப்பாடுகளை வாசித்தேன். ஓஷோ பற்றிய அவரது விம்ப உடைப்பை படித்தேன். உங்களுடைய கடைசி நூல்கள் பற்றி செவ்வியின் பின்னர் தான் உங்களை முழுதாக அறிகிறேன். இவ்வளவு நாட்களும் பரதநாட்டிய கலைஞராகவே கண்டேன். நானும் ஒரு பரதக்கலைஞரே. உங்களை வியப்பதுண்டு அந்த கற்பனை ஆற்றலை கண்டு. நீங்கள் எழுதியிருப்பவையை செவ்வியின் மூலமே அறிந்தேன்.உங்கள் அழகான உயிர்ப்பான கவிதைகள் என்னை கவர்கின்றது அவை நடுவே இந்த கட்டுரையையும் படித்தேன். யெயமாகன் ஈழ்த்து படைப்பாளிக்கு எதிரானவரா? அல்லது பெண்கள்/ ஈழத்தவருக்கு எதிரானவரா..? தங்களுங்கு நேரம் இருப்பின் சிறிய பின்னூட்டத்தில் அதை அறியத்தரமுடியுமா?. யார் ஈழத்தவரை நகைப்புடைத்தாலும் ஏற்க தகுந்தது அல்ல அதனால் அவரது படைப்புகளை மேலும் படிக்க முன் அறிய விருப்பத்தில் இதை கேட்கிறேன். நன்றிகள்!

    Like

Anbu -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி