பிரேம்ராஜ் நெறியாள்கையில்,
நோர்வே துரொண்ஹைம் தமிழ் அரங்கம் (Trondheim Tamil Theatre) கலைஞர்களின் ‘என்னோற்றான் கொல்’
—————————————————–

‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா.
புலம்பெயர் தமிழர்களின் முதற் சுற்று முடிந்துவிட்டது. எமது இரண்டாம் தலைமுறையின் சுற்று ஆரம்பித்திருக்கிறது. என்னோற்றான் கொல் இவர்களின் வாழ்வியல் பற்றிப் பேசுகிறது.
என்னோற்றான் கொல் எமது கதை. புலம் பெயர்ந்த மனிதர்களின் மனநிலை. எம்மைச் சுற்றி இருக்கும் மனித மனத்தின் உளவியலைப் பேசும் திரைக்கதை.
கதையின் பேசுபொருளே இந்தப் படத்தின் நாயகமாக இருக்கிறது.
சமூகத்திற்குத் தேவையான கதை, தேர்ந்த நடிப்பு, புலம்பெயர் ஈழத்து சினிமா என்பதற்கான அத்தனை அம்சங்கள் இருந்தும், திரைக்கதை எடுக்கப்பட்ட விதமும், அதன் ஒளிப்பதிவின் தன்மையும் எமது அடுத்த சந்ததியைப் போய்ச் சேருமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
தொழில்நுட்பரீதியில் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் பலரைச் சென்றடைந்திருக்கும். சென்றடைய வேண்டிய படம். உண்மையில் இந்தத் திரைப்படத்தின் பார்வையாளர்களாக இருக்க வேண்டியவர்கள் இளம் வயதினரே.
எமது அடுத்த சந்ததியினருக்கு இந்தப் படம் போய்ச் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
என்னோற்றான் கொல் திரைப்படத்தின் ஒளிப்பதிவு, தொகுப்பு மற்றும் இதர தொழில்நுட்பங்களில் நேர்த்திக் குறைபாடுகள் தெளிவாகவே தெரிகிறது. இருந்தும் படத்தின் கதையும் நடிகர்களும் எம்மை ஒன்றரை மணித்தியாலங்கள் உட்காரவைத்து விடுகிறார்கள் என்பது இப்படத்தின் சிறப்பு.
நடிகர்கள் தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்துகிறார்கள். எம்மை படத்தோடு ஒன்றிப் போகவும் வைத்துவிடுகிறார்கள்.
பணம் பெறுவதற்கு குறுக்குவழிகளை இளைஞர்கள் கண்டெடுப்பதன் விளைவுகள் எப்படியெல்லம் ஒரு குடும்பத்தை சிதைத்துவிடுகிறது என்பதும், நட்பு, சுற்றம், சமூகம் அதில் எப்படி தம் பங்கினைச் செய்கிறது என்பதும் தான் கதையின் மையம்.
படம் முடிந்து என் மகனோடு பேசியதில் படத்தின் கருத்தை உள்வாங்கிக் கொண்டவனாகவே காணப்பட்டான். அது இத்திரைப்படத்தின் பெரிய வெற்றி.
என்னோற்றான் கொல், படத்தின் கதைத் தேர்வும், நடிகர்களும், திரைக்கதையாடலும் சமூக அக்கறையும் சிறப்பு.
படத்தில் நிறைவுகளைப் போலவே, இதில் கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய இடங்கள் சிலவற்றைக் கூறுவது, துரொண்யம் நாடகக்குழுவின் அடுத்த கட்ட நகர்விற்கு துணை நிற்கும் என்றே நினைக்கிறேன்.
படத்தின் ஆரம்பக்காட்சிகள் மிக நீளமாக இருந்தன. நீளம் குறுக்கிச் சொல்லியிருக்கலாம்.
அடுத்த சந்ததியினரின் வாழ்வியல் முறை சிக்கலே படத்தின் பிரதான கதையென்பதால், ஆரம்பக் காட்சியில் வைக்கப்பட்ட குடி தொடர்பான சமூகவிழிப்புணர்வு அதிமாகப் போய்விட்டது.
ஒரு படத்தில் ஒரு விடயத்தை ஆழமாகப் பேசும்போது அது படத்தை மேலும் தெளிவாகவும், கட்டுமானமாகவும் வைத்திருந்திருக்கும்.
கூறியது கூறல் என்பது இந்தப் படத்தின் நீளத்தைக் கூட்டிவிடுகிறது. அதுவும் பிரச்சாரத் தன்மை கொண்டதாக இருப்பதால் திரைக்கதைக்கான அழகியல் தன்மை சற்றே விடுபட்டு நாடகத்தன்மை புகுந்து விடுகிறது. பல இடத்தில் வசனங்கள் நீளமாக இருப்பதும் பிரச்சாரத் தன்மையை அதிகப்படுத்திவிடுகிறது.
ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் கவனிக்க வேண்டும் என்பது நிச்சயம் இப்படத்தின் கலைஞர்களுக்கு தெரிந்திருக்கும்.
படத்தொகுப்பு மூலம் நிச்சயம் இப்படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
சில இடங்களில் உள்ள சினிமாத்தன்மையிலும் கூறியது கூறல் இந்தப்படத்திற்கு வெளியே கொண்டு போய்விடுகிறது.
உதாரணமாக மகன் ஜெயிலில் இருந்து பல தடவைகள் பேசுவது. படிமமாக கிளிகள் இரண்டையும் பலமுறை காட்டுவது.
இறுதிக் காட்சியில் காட்டப்பட்ட அந்தப் பறவைகள் மட்டுமே போதுமானது என்று எனக்குத் தோன்றியது.
எனக்கு இதில் பிடித்த விடயம் யாதெனில் எமது ஈழத்தமிழர்களின் மொழி என்பது திரைப்படத்திற்கு ஆகாதது என்ற கருத்தும், நாம் திரைப்படத்திற்காக மொழி ஒன்றைக் கண்டுகொள்ள வேண்டும் என்ற சர்ச்சைககளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் மத்தியில் இத்திரைப்படத்தின் மொழி முகம் இயல்பாக இருந்தது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும்.
என்னோற்றான் கொல் படத்தின் கதை, அதை நகர்த்திய விதம், நடிப்பு என்பவை எமது மொழியோடு சேர்ந்து யதார்த்தமாக நகர்கையில் எம்மால் ஒன்றிப் போகவும் முடிந்தது என்பது எனது கருத்து.
சில இடங்களில் கண்கள் கலங்கிப் போயின. இங்கே ஈழத்தமிழர்களின் மொழி ஒரு பிரச்சனையாகவில்லை.
அப்போ எப்படியான படங்களுக்கு எமது மொழி பொறுத்தமற்றதாகப் போகிறது என்பதை இனிவரும் இயக்குனர்கள்தான் கண்டு கொள்ளவேண்டும்.
இந்தியத் திரைப்படங்களிலும் யதார்த்தமான மொழியைக் கையாலும் படங்களும் இருக்கின்றன, திரைக்காக ஒரு மொழியை உருவாக்கிப் பேசும் திரைப்படங்களளும் இருக்கின்றன.
ஈழத்துச் சினிமாவும் அதன் வளர்ச்சியும் இந்திய மசாலாப்படங்களைப் பின்பற்றி செல்லப்போகிறதா? அல்லது தனக்கான ஒரு அடையாளத்தை கண்டுகொள்ளப் போகிறதா என்பதை நாம் இனிவரும் திரைக்கலைஞர்களிடம் இருந்துதான் கண்டுகொள்ள வேண்டும்.
இப்படியாக ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்து முடித்த வேளையில்
’இது காலம்’ என்ற சுவிஸ் வாழ் கலைஞர்களின் மற்றுமொரு திரைப்படம் திரையிடப்பட்டது.
சத்தியமாக முடிந்தவரை இருந்து பார்த்தேன். முடியாத கட்டத்தில் கிளம்பிவிட்டேன்.
இருந்து பார்த்த இரண்டாவது படம்தான் மனதில் காயத்தை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காயம் எமது புலம்பெயர்ந்தவர்களின் கலைவளர்ச்சி மற்றும் கலைஞர்கள் குறித்த காயம்தான். அதனால் பார்த்தமட்டும் பதிவிடுகிறேன்…
தொடரும் 🖋…









