தமிழ் சினிமா – தமிழ் சமூகம் – தமிழர் கலைகள்

.

பெருந்தாக்கத்தையும் மாற்றத்தையும் குறுகிய காலத்தில் ஒரு சினிமா கொண்டு வரும். எந்தச் சமூகத்திற்கும் இது பொருந்தும் எனினும் தமிழ்ச் சமூகத்தில் தமிழ் சினிமாவின் தாக்கம் இருக்கிறதே, அதை விளங்கிக்கொள்ளவே முடியாது.

இன்றைய காலம் வரை, நாங்கள் எதைச் சரியென்றும் எதைப் பிழையென்றும் கருத வேண்டும் என்பதைச் சினிமாதான் தீர்மானிக்கிறது. காதல், வன்முறை, நுகர்வு மயமாக்கல் போன்றவற்றைத் தீர்மானிக்கிறது. பார்வையாளர்களின் சமூக, உலகப் பார்வையை மெதுமெதுவாக வடிவமைக்கின்றன. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை வடிகட்டி எடுத்து வந்து, அவற்றை மக்களின் மண்டைக்குள் எதிர்பார்ப்புகளாக மாற்றிவைப்பதில் சினிமவை மிஞ்ச வேறெதுவுமே இல்லை.

திரைப்படத் துறையை வெறும் பொழுதுபோக்கு என்றெல்லாம் கடந்து போய்விட முடியாதபடி, அதுவே மனிதர்களின் மொழியாக, சிந்தனையாக, உணர்வு மற்றும் சமூக நெறிமுறைகளை வலுவாக பாதிக்கும் ஒரு சக்தியாக வளர்ந்து கொண்டே போகிறது.

சமூகத்தில் ஒரு பெண்ணின் இடம் எதுவென்பதைத் தீர்மானிக்கிறது. எல்லா ஆணிகளையும் பிடுங்குவதே ‘ஆண்’ என்ற பிம்பத்தைத் கொடுக்கிறது.

கதாநாய பிம்பத்திற்குக், கோயில் கட்டுவதும், நாட்டைக் கொடுப்பதும், தம் வாழ்க்கையையே அழித்துக் கொள்வதும் தமிழ் நாட்டில் என்றால், புலம்பெயர் தேசத்தில் வேறு பலவாக அதன் பாதிப்பு கவலை தரும்வகையில் வளர்ந்து வருகிறது.

எத்தனையோ கலைகளில் எழுச்சிகொண்டதொரு சமூகத்தின், வீரியத்தை முடக்கிப் போட்டுக்கொண்டிருப்பது பற்றி பெரும்பான்மை சினிமா துறையினர் கவலை கொள்வதே இல்லை. விதிவிலக்குகள் உண்டு. ஆனால் அதை யாரும் கருத்திலெடுப்பதில்லை. ஏன் கருத்தில் எடுக்க வேண்டும்?

சினிமாவின் தாக்கத்தால் தீவிர கலைகளும், இலக்கியங்களும் அடிபட்டு, மறைந்து போனது. இரண்டாம் மூன்றாம் தர நகைச்சுவை, கலாய்ப்பு, திரைமொழிகளே வளர ஆரம்பித்தன. அவை வெகுஜனத்தின் பெருங்கலைகளாகி அவரவர் வாழ்க்கையோடு, உண்பதும் உறங்குவதும் போல ஒன்றிவிட்டது.

மிகக்கேவலமாக எழுதப்படும் பாடல்கள், அதை மேடை போட்டு பாட்டுப்பாடும், ஆட்டம் போடும் தலைமுறையினர் பல்கிப் பெருகியுள்ளனர். வக்கிர, வன்முறை, முகம்சுழிக்கும் பொருள் கொண்ட இத்தகு பாடல்களுக்கு மேடையேறித் தம் குழந்தைகள் கை கால்களை அசைப்பதைக் கண்டு உள்ளம் பூரிக்கின்றனர் பெற்றோர். வேறு கலைகள் இருப்பதையே அறிய முற்படாததொரு சமூகம் இருக்கும் வரை, தொழில் சார்ந்த கல்வி வளர்ச்சியிருக்குமே தவிர, வீரியமான பண்பாட்டையுடைய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருக்கவே இருக்காது.

இங்கே பண்பாடு என்பது, உண்ணும் சோறும், உடுத்தும் சேலையும் மட்டுமல்ல. பண்பாடென்பது நாம் எப்படி சிந்திக்கிறோம், பிற சமூகத்திற்கு நாம் எதை கற்றுக் கொடுக்கிறோம், பிற சமூகங்களுக்கு எம்மை நிமிர்ந்து பார்க்க எம்மிடம் என்ன இருக்கிறது என்பதைச் சொல்வதுதான் பண்பாட்டின் முக்கிய சாராம்சம்.

பொருளாதார ரீதியாக வளர்ந்த இடங்களிலெல்லாம் தமிழ்ர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பொருளாதார வளம் இருக்கிறது.

சரி சிந்தனையில் வளம் இருக்கிறதா?

செயற்பாடுகளில் வளம் இருக்கிறதா?

கலைகளில் வளம் இருக்கிறதா?
கற்கைநெறியில் வளம் இருக்கிறதா?

படைப்பாற்றலிற்தான் வளம் இருக்கிறதா?

சினிமாவைத் தாண்டி ஒரு மேடைநிகழ்வை வடிவமைக்க முடியாத பொதுநிறுவனங்கள் எந்தச் சலனமுமின்றி மலிந்து கிடக்கின்றன. எங்கு போனாலும் ஒரு விடயம்தான். எந்த நிகழ்விலும் எதுவும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தரம்தாழ்ந்த கலைகள் மலிந்து கிடக்கின்றன.

ஏன் அசைகிறோம் என்று தெரியாத ஆட்டங்களாலும், தரமற்ற ஆற்றுகைகளாலும் மற்றும் சினிமா, சினிமா, சினிமா போன்ற நிகழ்வுகளாலும் பரிதாபமாக தமிழ் நிறுவனங்களின் ‘கலை, பண்பாட்டு’ மேடைகள் காணப்படுகின்றன.

கொண்டாட்டங்களும் சினிமாவின் நகலாக்கப்பட்டுவிட்டன. சினிமா காட்டும் அழகின் அளவீடுகள்தான் எல்லார் முகங்களிலும், நிறப் பூச்சுக்களிலும்.

ஒரு குழந்தையை தொழில் ரீதியாக (அது டொக்டரோ, இஞ்சினியரோ) மட்டுமே வளர்ந்துவிடும் சமூகத்தில், பணத்தையும் பகட்டையும் தவிர, எந்த ஆழமும் இல்லை. எந்த நுண்ணுர்விற்கும் இடமில்லை.

இத்தனை காலத்தில் நிமிர்ந்து பார்க்குமளவு ஏதுமற்ற போக்கினால் கழுத்துப் பகுதியில் அத்தனை வலி. தமிழ்ச் சினிமா என்னும் ஊடகம் தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல, எந்த நாட்டில் இருக்கும் தமிழர்களையும் மேவிய ஒரு நிலைக்கு வர விடாத பாங்கு உள்ளது. தமிழ் சினிமாவைத் தாண்டி தமிழர்களுக்கு ஒரு வாழ்வோ கலையோ இல்லை என்ற நிலைமைதான் இன்று. அதில் கலையும் படைப்பும் ஆளுமையும் எங்கிருந்து வரப்போகிறது?

ஆறுகளெல்லாம் கூவமாகிவிட்டது என்பதற்காக, அதிலேயே பயணித்துக்கொண்டிருப்பவன் கலைஞனோ, ஆளுமையோ அல்ல. சூழலைப் புரிந்து, பகுத்தாய்ந்து அக்காலத்தை ஆளத் தெரிந்தவரே ஆளுமையாளர்கள். அவர்களால் மட்டும் வீரியமான ஒரு சமூகத்திற்கு வழிவகுக்க முடியும்.

தொடரும்..

கவிதா லட்சுமி

பின்னூட்டமொன்றை இடுக