
முன்பு போல பார்க்கும் எல்லாவற்றிற்கும் எனது கருத்தைப் பதிவிடும் மனநிலை இப்போது என்னிடமில்லை. ஏதோ ஒரு வகையில் ஒரு படைப்பு முக்கியமானதாகப்பட்டால் மட்டுமே எழுத மனம் உந்தும். நீளிரா எனக்கு அந்த வகை.
பெரும் போர்க்காலத்தைக் கடந்த ஒரு சமூகம், காலத்திற்கேற்பத் தன்னை மீளமைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும் தளங்களில் திரைப்படத்துறையும் ஒன்று. இத்தனை காலமாக இலங்கைத் தமிழர்களிடம் இருந்து வந்த திரைப்படைப்புகளை அவதானித்தவரை, மனதில் இனம்புரியாத அச்சவுணர்வொன்று இருக்கத்தான் செய்தது. அந்த இறுக்கத்தைச் சற்றே தளர்த்தியிக்கிறது நீளிரா. இலங்கைத் திரைப்படம் ஒன்றிற்கு இலகுவான மனதோடு எழுதுவது இதுவே முதல் முறை.
படத்தின் கதைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதை யாவரும் திரையில் காணட்டும்.
1988 இல் ஒரேயொரு இரவைத் திகில் நிறைந்ததாகக் காட்டியிருந்தாலும், அது அந்த ஒரு இரவுமட்டுமல்ல. அது அந்த இறந்தகால இரவும்தான். நிகழ்கால இரவும்தான், இடம், காலம் தாண்டி அது எதிர்கால இரவும்தான். அதனாற்தான் குறிப்பு வினைத்தொகையாக «நீளிரா» என்ற தலைப்பு இலக்கண ரீதியாகவும் கலைத்துவமாகவும் பொருந்தி வருகிறது.
இசையும், கலையும், ஒளிப்பதிவும் துருத்திக்கொண்டு தனியாகத் தெரியாமல் இயைந்து போயிருப்பது படத்தின் பலம். நடிகர்களும் பலம்.
இப்படியாக அரசியலும் மக்கள் போராட்டமும் எனக் காட்டப்படும் திரைக்கதைகளை நாம் நினைத்தது போல வெளிக்கொணரல் அத்தனை சாத்தியப்பாடுள்ளதல்ல. தான் நினைத்தனையெல்லாம் கொண்டுவர முடியாத காட்சிகள் பலவும் இப்படத்தின் இயக்குனருக்குள் இன்னும் இருக்கும் என்பது எனது ஊகம். அரசியற் போராட்டங்கள் சார்ந்த திரைப்படங்களுக்கு யதார்த்தம் இப்படியாகத்தான் இருக்கமுடியும். தடைகளைத்தாண்டி அக்காலத்தின் (1988) தன்மையை முக்கிய பாத்திரங்களின் வசனங்கள் வழியாகவும், காட்சிப் படிமங்கள் ஊடாகவும் கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்திடம் «உதவிக்காக என்று வந்து, இன்று உங்களையும் எதிர்த்துப்போராட வைத்துவிட்டீர்களே» போன்ற கேள்விகள் அரசியல் விமர்சனமாக வெளிப்பட்டு, இறுதி வசனமாக வரும் «இன்னும் எத்தனை பேரிடம் மன்னிப்புக் கேட்கப்போகிறீர்கள்» எனபது வரை தொடர்கிறது.
போராளிகளின் கெட்டித்தனங்கள் மட்டுமின்றி மூர்க்கத்தனங்களும், இந்திய இராணுவத்தினரின் அராஜகங்களையும் சில காட்சிகளில் உணர்த்த முடிந்திருப்பதை வெற்றியாகத்தான் பார்க்க முடிகிறது.
அரசியல் கடந்து வரலாறுகளைச் சொல்வது அத்தனை சுலபமல்ல. இருந்தும் இந்திய இராணுவத்தினாலும், தமிழீழப் போராளிகளினாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திரைக்கதை சற்றே தூரநிற்க வைக்கலாம். கேள்விகளைத் தோற்றுவிக்கலாம். தத்தமது அனுபங்கள்தானே அவரவர் பார்வைகளை மாற்றி மாற்றிப் போடுகிறது. எது எப்படியிருந்தாலும் படைப்பாளியின் பார்வை ஒட்டுமொத்த உயிர்களின், சமூகத்தின் நலன் சார்ந்தபிரதிபலிப்பாக வர வேண்டும்.
திரைக்கதை முழுதும் திகில் உணர்வைத் தாங்கி நிற்கிறது. கதை இறுதியைத் அண்மிக்கும் தருணத்தில் கொஞ்சமாய் இந்தியத் சினிமா தனத்தை சேர்த்துக்கொண்டமை படத்திற்கு வலுச்சேர்த்ததா இல்லையா என்று எனக்குச் சொல்லத்தெரியவில்லை.
கதையில் சில காட்சிகள் நேரடியான பதில்களைச் சொல்லிவிடாது விடைகளை தேட வைக்கிறது. படம் முடிந்த பின்னரும் கேள்விகள் துரத்திக்கொண்டிருப்பதும் ஒரு படைப்பின் சாதுர்யம்தான்.
கதையில் தெரிந்தவர்களான என் தோழி அபிக்கும், நகுலனுக்கும் மனம்நிறை வாழ்த்துகள்.
«மக்கள் விரும்புவதையெல்லம் கொடுப்பவன் அல்ல கலைஞன், மக்கள் நலன் அறிந்து, அதை அவர்கள் விரும்பும் வகையில் கொடுப்பவன் சிறந்த கலைஞன்» என்பது எனக்கு நானே திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்ளும் ஒரு மந்திரம். ஈழத்துச் சினிமாவும் இம்மந்திரச் சொல்லைத் தனக்குள் உள்வாங்கி நகரவேண்டும் என்பது என் அவா. நீளிரா போல.
வாழ்த்துகள், இயக்குனருக்கும் மற்றும் அனைவருக்கும்.
இலங்கை திரைப்படத் துறை தனக்கான ஒரு பாதையையும் அடையாளத்தையும் கண்டு கொள்ளும் என்ற நம்பிக்கையோடு…
கவிதா லட்சுமி









