‘கண்ணகி’ திரைப்படத்தை முன்வைத்து

கலை என்பது என்ன? பெரும்பான்மை சமூகம் விரும்பவதெல்லாம் சிறந்த கலையாகிவிடுமா? நாயக முன்னிலைப்படுத்தல்கள், சமூகத்தை ஒடுக்கும் பஞ்ச் வசனங்கள், யதார்த்தமற்ற திரைக்கதைகள் தான் சிறந்த திரைப்படங்களுக்கான அடையாளமா அல்லது அளவுகோலா? பெண் உடலை வியாபாரப் பெருளாக்கும் காட்சிகளை, இலட்சியப்படுத்தப்பட்ட உடல்களை, பெண் ஆளுமையைச் சிதைத்து, நலிந்த மலினமான பாலினமாக்கும் உத்திகளை, எல்லா ஆணிகளையும் நாயகனே (ஆண்) பிடுங்குவான் என்ற பார்வையை, இரட்டை அர்த்தத்தில் வக்கிரத்தைக் கொட்டும் பாடல்களை, வசனங்களை, நகைச்சுவைகளைச்; சிறந்த கலையாக்கம் எனலாமா? ஆனால் இவைதான் இன்றைய சமூகத்தில் நிலவும் ‘பெருங்கலை வளர்ப்புப்’ போக்காக இருக்கின்றது. தமிழக அரசும் தமிழ் ஊடகங்களும் தமிழ் அமைப்புகளும் எதிர்காலச் சந்ததிக்காய் வளர்த்தெடுத்துக்கொண்டிருப்பது இந்த வக்கிரங்களைத்தான்.

இத்தகைய திரைப்படங்கள் எமது சமூகத்தை உயர்ந்த சிந்தனைக்குள் எடுத்துச் செல்லாமல், ஒருவித மயக்கத்திற்குள்ளும் மந்தநிலைக்குள்ளும் வைத்திருக்கும் காலத்தின் பெரும் போதை. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை மலினமாகவும் வலிந்தும் கொடுக்கப்படும் போதை இதுதான்.
இப்படியான திரைப்படங்கள் தொழில்முறையையோ, பாடசாலைக் கற்கைமுறையையோ நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால் ஒரு மனிதனினுடைய, ஒரு சமூகத்தினுடைய ஆழந்த தேடலையும் பெறுமதிகளையும் விழுமியங்களையும் சிதைத்துவிடுகின்றன. இதற்கு விதிவிலக்கான திரைப்படங்கள் உண்டு. ஆனால் அவை கவனம் பெறுவதே இல்லை.

கண்ணகி கவனம் பெறவேண்டிய திரைப்படம்!

கண்ணகி என்ற பாத்திரத்தின் பின்னால் இருக்கும் சமூகத்தின் பொதுவான கருத்தைத் தொடக்கத்தில் இருந்தே உடைத்துப்போடுகிறது இந்தத் திரைப்படம். கண்ணகி என்ற தலைப்பு மிகப் பொருத்தமானதும் சரியானதுமான தேர்வுதான்.

கண்ணகியும் சிலப்பதிகாரம் கூறும் கூற்றுக்களும்!

.

கண்ணகி என்ற பெயர், பாத்திரம் தொடர்பாக நமது சமூகம் வைத்திருக்கும் விம்பத்திற்கும், இத்திரைப்படத்திற்கும் எத்தனையோ முரண்கள் உள்ளன. ஆனாலும் இத்திரைப்படத்தில் காட்டப்பட்ட ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் கண்ணகிதான் என்பதைச் சிலப்பதிகாரத்தின் உயிரையும் உணர்வையும் புரிந்து கொண்டவர்களால் உணர்ந்து கொள்ளமுடியும்.

பெண்ணுடைய உடல் சார்ந்து மட்டுமே கண்ணகியைப் புரிந்து வைத்திருக்கும் எவராலும் இத்திரைக்கதையை ஜீரணிக்க முடியாது என்பது யதார்த்தம். சிலப்பதிகாரத்தின் கண்ணகி கணவனுக்காக மதுரையை எரித்தாள் என்பதே ஒரு கருத்துப் பிறழ்வுதான். அவள் நீதி கேட்டதும் பாண்டியமன்னன் ‘நானே கள்வன்’ என்று உயிர் துறந்ததுமே அவளுக்கான தீர்வு கிடைத்துவிடுகிறது. அன்றைய காலச் சிந்தனையின்படி கணவனை இழந்த அவளுக்கான விடயங்கள் சில கிடைக்கப்பெறவில்லை என்ற சீற்றமே அவளுடையது. அரசை, அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வியெழுப்பி, அதில் வெற்றியும் பெற்ற துணிச்சலுடைய பெண் என்ற கோணத்தில் கண்ணகியைப் பார்த்தல் என்ற இடத்திலிருந்துதான் இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

சிலப்பதிகாரம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது, கண்ணகி கற்பின் சின்னம் என்பதிலெல்லாம் உடன்படத்தேவையில்லை. கற்பு என்பதன் இலக்கணத்திற்கும் (தொல்காப்பியம்), சமூகம் வைத்திருக்கும் விளக்கத்திற்குமே பெரும் வேறுபாடு உண்டு. அதேபோலவே வெறுமனே சிலப்பதிகாரத்தைத் தூக்கி வீசு என்ற மற்றுமொரு பார்வையிலும் உடன்படத் தேவையில்லை.

ஒரு இலக்கியத்தை நாம் எப்படி இன்றைய காலத்திற்கு ஏற்ப பார்ப்பது என்பது முக்கியமானது. கண்ணகி திரைப்படம் சிலப்பதிகாரத்தின் உயிர்நாடியைப் பிடித்து அழகாகக் கையாண்டிருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது என்பதும், உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது என்பதும், ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும் சிலப்பதிகார நோக்கத்தின் அடிப்படைக் கூற்றுக்கள்.

கண்ணகி திரைப்படத்தில் வினைகள் (வாழ்வில் நடக்கும் காரியங்கள்) என்பது எப்படியாக ஒருவர் வாழ்வை, மனநிலையை, செயற்பாடுகளை, பார்வையை, சீற்றத்தை, ஆளுமையை அதன் வழி அவளுடைய முடிவுகளை நகர்த்திக்கொண்டு செல்கிறது என்பதே திரைக்கதையின் மையமாக அமைந்திருக்கிறது. அதனை வெகுவாக ரசித்தேன்.

நான்கு வேறுபட்ட பெண்களாகக் காட்டப்பட்ட ‘பெண்-வாழ்வின்’ வினைகளை அடுக்கி ஒரே பெண்ணின் வாழ்வாக முடித்திருக்கும் உத்தி இங்கே கையாளப்பட்டிருக்கிறது. இவ்வுத்தியானது, ஒரு பெண் தன் வாழ்விற் சந்திக்கும் சிக்கல்களில் இருந்து எப்படியாக தனது இயல்புகளை மாற்றிக்கொண்டு செல்கிறாள் என்பதைக் கதையின் வேராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அது கிளைவிட்டு பல விடயங்களைப் பரந்துபட்டுப் பேச விளைகின்றது.

வடிவமைத்திருக்கும் நான்கு பெண்களுடைய வாழ்வும் அத்தனை சுலபமானதல்ல. பெரும்பான்மைச் சமூகப் பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதும் அல்ல. அதனாற்தான் சிலப்பதிகாரம் கூட உயர்ந்தோர் ஏற்பது என்கிறது. கதையில் வரும் பெண்ணை, அவளது வாழ்வுதனை உயர்ந்த சிந்தனையுடையவர் ஏற்பர் என்பதில் எந்தத் தயக்கமுமில்லை. அதையும் கடந்து ஒருவருடைய வாழ்க்கை முறையை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன? ஒரு பெண் தனது வாழ்வினை யாரும் அங்கீகரிக்கவேண்டுமென்ற எண்ணங்களைக் கடக்க வேண்டாமா? பிறருடைய எதுவித அங்கீகாரமும் அவசியமற்றது என்ற ஒரு கட்டத்தைப் பெண் அடைவாள். அதுவே நதியாக வரும் கதாபத்திரத்தின் மூலம் அறிமுகமாகத் தொடங்குகிறது.

பெண்நிலைக் காட்சிகள்

பெண்கள் சார்ந்து பேசும் படம்தான் எனினும், ஆளுமையான ஆண்களைப் பற்றியும் பேசுகின்றமை இத்திரைப்படத்தின் வெகுசிறப்புகளில் ஒன்று. எதையும் உயர்த்தாமல், எதையும் தாழ்த்தாமல் வாழ்வின் இயல்புகளை எப்படி ஏற்று நகர்த்துவது என்பதைக் கலைத்துவமாகச் சித்தரித்திருக்கின்றமை, தமிழ் திரையுலகு கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விடயம். கதாநாயகர்களும் இயக்குநர்களும் கதையாசியர்களும் முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய பொருள்.

இங்கே எதுவும் புனிதப்படுத்தப்படவில்லை. பெண்களை மலினப்படுத்தும் எழுதப்படாத நடைமுறைகளை, நம்பிக்கைகளைப் போகிற போக்கிற் தகர்த்தெறிகிறது. நான்கு பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சற்றும் பிரச்சாரமோ பிசிறோ இன்றிப் பேசுகிறது. எத்தனையோ மனித அகங்களை, பெண் ஒடுக்குமுறைகளை, சமூகத்தின் சீர்கேடுகளை, ஆதிக்கச் செயற்பாடுகளை, சடங்குகள் என்ற பெயரில் நடக்கும் அநியாயங்களைப் உடைத்துப்போடுகிறது.

சேர்ந்து வாழுதலில் இருக்கும் ஒருவன் தன் காதலியிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து, மணம் புரியக் கேட்கிறான். வேண்டாம் என்றால் மறுத்துவிட்டு நகர்வதுதானே பண்பு. அதைவிடுத்து மோதிரத்தைக் காலால் உதைத்து வீழ்த்தி ஒரு குத்தாட்டம் போட்டு ஒருவனை அவமதிப்பது என்ன மனநிலை? திருமணம் செய்யக் கேட்ட ஒரு ஆண்மகனை இப்படியா நடாத்துவது என்ற கேள்வி இக் காட்சியைப் பார்த்தபோது எனக்கும் தோன்றியதுதான். ஆனால் யோசித்துப் பார்த்தால், இந்த சமூகத்தில் எத்தனை மனைவியர் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எத்தனை பெண்களின் மேல் அசிட் ஊற்றப்படுகிறது. எத்தனை பெண்கள் ஆணவக்கொலை, சிசுக்கொலை என்று உயிர் பறிக்கப்படுகின்றனர். எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஒரு பெண்ணின் ஓரு உதை மட்டும் ஏன் எம்மை இத்தனை கோபப்படுத்துகிறது? இந்த இடத்தில் நதி என்ற இக்கதாபாத்திரத்திற்கு மனஅழுத்ததம் இருப்பதாகக் காட்டியிருக்கத் தேவையில்லையோ என்பது எனது கருத்து. மனஅழுத்தம் இல்லாவிடினும் ‘இப்படித்தான் நதி’ என்ற மிடுக்கைச் சற்று குறைத்துவிட்ட உணர்வு எனக்கு.

சமூகத்தின் அந்தஸ்து, சொத்துரிமை, திருமண ஒப்பந்தம் போன்றவற்றின் பின்னணியில் எப்படியெல்லாம் பெண்ணுடைய பிறப்புறுப்பு சம்பந்தபடுகிறது என்ற விடயம் காட்சியாக்கப்பட்ட விதம் சிறப்பு. தாலி எதற்கு என்ற கேள்விக்கு, சங்கிலியாற் கட்டப்பட்டிருக்கும் ஒரு நாயையும் சங்கிலியாற் கட்டப்படாத ஒரு நாயையும் நோக்கி காட்சி நகர நான் சிரித்தே விட்டேன். தொடர்ந்து “ச்சூ..போ” என்பது மட்டுமே பதிலாக வருகிறது. தாலியின் இருப்பினை இதைவிடக் காத்திரமாக எப்படிச் சொல்லிவிட முடியும்? இனி தாலிகளைக் காணும் போதெல்லாம் கட்டப்பட்ட மற்றும் கட்டப்படாத நாய்களின் காட்சி கண்முன் வருவதைத் தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.

எப்போதும் கதாநாயர்களையே கொண்டாடும் சமூகம் இயக்குனர்களைப் பெரியதாகக் கண்டுகொள்வதில்லை. இப்படியான இயக்குனர்களைக் கவனிக்கத் தொடங்குவோம். பெண் உலகு சார்ந்த ஆழந்த கவனிப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் யஸ்வந் கிஷோர். உங்கள் முகம் தனியாகத் தெரிகிறது.

.


• கலையையும், மனிதத்தையும் முன்னிறுத்தி, வாழ்வை நகர்த்த நினைக்கும் கொம்யுனிஸ்ட் தந்தை.

• நீ இதுவரை எப்படி இந்தாயோ அதைப்பற்றிக் கவலையில்லை. இனி எப்படி இருக்கப்போகிறாய் என்பதும் பிரச்சனையில்லை. நான் உன்னைத் திருமணம் செய்கிறேன் என்று சொல்லும் மாப்பிள்ளை.

• மணவிலக்கான பெண்ணைக் காதலிப்பதிற் பின்நிற்காமல் – முற்போக்கு முகம் காட்டி – திருமணம் என்றதும் குடும்பத்தின் முடிவுகளின் பின்னால் ஒழிந்து கொண்டு கோழையாகிவிடும் ஆண்.

• திருமண பந்தம் இல்லாமலே அன்போடு சேர்ந்து வாழமுடியும் என்று தீர்மானித்து – பின் திருமணம் வேண்டும் என்ற மனநிலைக்குள் சென்று – திருமணத்திற்கு அவள் மறுத்ததும் அவளுடைய முன்வாழ்வு, மனநிலை போன்றவற்றால் தன்னிலை நிலைதடுமாறும்; ஆண்.

• பெண்ணுடல் பெண் அவளது உரிமை, சுதந்திரம் என்பதை மதித்து, தான் திருமணம் புரியவிருக்கும் பெண்ணின் கருக்கலைப்பு விடயத்தில் அவளுடன் நின்று தாங்கும் ஒரு ஆண்.

• மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில், எந்தக் கருத்தையும் முன்வைக்காத, ஆனால் கனவுகளோடு இருக்கும் ஒரு கிராமத்துப் பெண்.

• சாதி, அந்தஸ்து, வசதி, பகட்டு என்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்டிவைக்கும் தாய்.

• மணவிலக்காகி தனியாக உலகைச் சந்திக்கப் பயந்து, விசமாகிப் போன குடும்ப வாழ்க்கையையே மேல் என்று வாழ நினைக்கும் பெண்.

• ஒருத்தனுக்கு ஒருத்தியாய் வேண்டாம் ஒருவருக்கு ஒருவராய் இருப்போம் என்று வலியுருத்தும் பெண்.

• மணவிலக்கான பெண்ணை மறுமணம் செய்ய வாழ்த்தினாலும் அவள் தன் வீட்டிற்கு மருமகளாய் வருவதை ஏற்க மறுக்கும் பெண்.

One thought on “‘கண்ணகி’ திரைப்படத்தை முன்வைத்து

  1. நான் இன்னும் கண்ணகி படம் பார்க்கவில்லை. உங்களது விமர்சனத்தின்படி கருத்து சொல்லும் படம்போலுள்ளது. முன்னரையில் திரைப்படத்தில் கலையை தேடுகின்றிர்கள் . கலைக்கும் தமிழ் திரைப்படங்களுக்கும் ஏதும் தொடரபுஇருப்பதாக நினைக்க இயலாது . ஹீரோயிசம் – புகைத்தல், மது ,மாது ,வன்முறை , வல்லவன் வெல்வான் – சட்டவிரோத செய்லகளே நியாயத்தை நிலை நிறுத்துவது , art -film நடைமுறை வாழ்விற்கும் சம்பந்தம் இருக்கென்று சொல்லலாமா

    Like

Susilkumar Arumugam -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி