
.
எந்த இடத்தில் இருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கேள்விக்கு உட்படுத்துவது? எதன் அடிப்படையில் இப்படியான அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றன? ஒரு பெண்ணை நிர்வாணமாக்குதல், அவளுடைய உடலை வன்முறைக்கு உள்ளாக்குதல் என்பது எதன் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு திருப்தியையோ மகிழ்ச்சியையோ அளிக்கின்றது? எந்தப் பின்புலமும் இல்லாமல் திடீரெனச் சிலருக்கு இப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றுமா? இப்படியான அவலங்களை நிகழ்த்துவது என்பது ஒரு தனிமனித மனப்பபிறழ்வா அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்பிறழ்வா?
நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து பெண்களை நிர்வாணப்படுத்தி வன்முறைக்கு உள்ளாக்குதல் என்பது ஒட்டுமொத்த சமூகத்தில் இளையோடும் மனப்பிறழ்வு என்ற முடிவுக்குத் தான் வரமுடிகிறது.
• பிறப்பிலிருந்தே பெண் என்பவள் அடுத்த நிலையில் இருப்பவள் என்ற எண்ணம்.
• கலாச்சாரமும் கௌரவமும் பெண்ணின் உடலில் இருக்கின்றது என்ற சமூகத்தின் சிந்தனை மரபு.
• இனம் சார்ந்த ஆதிக்கம், சாதிகள் சார்ந்த ஆதிக்கம், மதம் சார்ந்த ஆதிக்கம், மொழி சார்ந்த ஆதிக்கம், பால் சார்ந்த ஆதிக்கம் என்பதோடு இவற்றுக்குத் தீனி போடும் அரசியல் ஆதிக்கமும் இதற்குப் பின்னால் உள்ளது.
இவை தவிர வேறு என்ன பின்புலங்களை அடையாளம் காண முடியும்?
மேற் சொன்ன விடயங்களுக்கு அடிப்படை எங்கு இருக்கின்றது?
மணிப்பூரில் நடந்த பெண்கள் மீதான வன்கொமுமைகளுக்குப் பின்னாலுள்ள காரணியாக அதிகாரமும் ஆண் வர்க்கமும் மட்டுமின்றிப் பெண்களின் பங்கும் அதில் இருக்கின்றமையும் வியப்பளிப்பதற்கில்லை.
உலகின் கலாச்சாரங்களைக் கட்டிக்காப்பதும் அவற்றைக் காலாகாலமாக இழுத்துச் செல்வதும் பெரும்பான்மையாகப் பெண்கள் தலையிற்தான் சுமத்தப்பட்டு இருக்கின்றது. பெரும்பான்மைப் பெண்களும் அவை தமது கடமை என்று வலுவாக நம்பி, எடுத்துச் செல்வதாலும் இச் சம்பவங்கள் வியப்பளிப்பதற்கில்லை.
மணிப்பூர் வன்முறையில் உயிர் இழப்புக்களும் நடந்தேறியுள்ளன. இழக்கப்பட்ட ஆண்களின் உயிர்களைவிட பெண்ணின் நிர்வாணம் கவனத்திற்குரியதாகவும் பேசுபொருளாகவும் இருப்பது பற்றி நாம் சிந்தித்தே ஆகவேண்டும். ஓர் ஆணின் உயிரைவிட ஒரு பெண்ணின் நிர்வாணம் உலகை உலுக்குவது ஏன்?
குடும்பக் கௌரவங்களை, சமூகக் கௌரவங்களைப் பெண்ணின் உடலிலும் வாழ்விலும் சுமத்தி வாழப் பழக்கப்பட்டிருக்கும் மனித குழுமங்களின் இந்த அவலங்கள் வியப்பளிப்பதற்கில்லை.
இவை அனைத்திற்குப் பின்னாலும் அடிப்படையாக இருப்பது நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் என்று சொன்னால் மிகையாகாது.
ஆணின் எலும்பிலிருந்து பெண் பிறந்தாள் என்று சொல்வதிலும் – குறிப்பிட்ட தினங்களில் பெண் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது என்று சொல்வதிலும் – பெண் உடல் முழுமையும் மறைக்கப்பட வேண்டிய ஒன்று என்று வலியுறுத்துவதிலும் – பெண் உடலையும் மனதையும் புனிதப்படுத்துவதிலும் – தெய்வங்களுக்கு ஒப்பாகக் கருதுவதிலும் தொடங்குகின்றது பெண் இரண்டாம் பட்சப் பாலினம் என்பது.
கடவுளரின் புராண இதிகாசக் கதைகளிற் பெண் நிர்வாணப்படுத்தல் என்பது சமூகத்தின், குடும்பத்தின் கௌரவ இழப்பாகக் காட்டப்படுவதும் – பெண்களின் நிர்வாணத்தோடும் உடலோடும் விளையாடும் சில கடவுளர்களை நாம் இன்றும் ஏற்றுக் கொண்டிருப்பதும் எனவாகச் சமூகத்தின் சிந்தனை மரபுகள் மனித ஆழ்மனதுள் தேங்கிக்கிடக்கின்றன. கடந்து வந்த பாதைகளை பற்றிப் பேசாமல் நாம் புதிய பாதை ஒன்றை நிர்மாணிக்க முடியாது.
…
ஆதிக்க மனப்பான்மை என்பதே இந்த உலகினை ஆட்டுவிக்கும் பெரும் அழிவுப் பாதை.
கீழைத்தேய நாடுகளில் மட்டும்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் அதிகம் காணப்பட்டாலும் மேலத்தேய நாடுகளுக்கு இதில் பங்கில்லை என்று நாம் நம்பிவிடலாகாது.
உலகமயமாக்கப்பட்ட உலகில் பெரும் பங்கு வகிக்கும் விடயம் அரசியல் ஆதிக்கம்தான். இவ்வரசியலும், தொழில்நுட்பமும் உலகத்தினை ஒரு பந்தாக்கி எம்முன் கொடுத்திருக்கின்றது. அரசியல்வாதிகளுக்கும், ஆதிக்க, பணமுதலைகளுக்கும் இப்பந்தினை தமக்கேற்றாற்போல எப்படி விளையாடுவது என்ற நுண்ணறிதல் உண்டு.
…
ஒரு காலத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பிரதேசங்களே காலனியத்துவத்திற்கு வித்திட்டன. காலனியத்துவத்திற்கு ஆட்பட்ட பெரும்பான்மை நாடுகளே இன்று கீழ் நிலையில் இருக்கின்றன.
சாதிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டே சாதிகளை வைத்து பிரித்தாண்டது காலனியத்துவம். பெண் இரண்டாம் பட்சமானவள், அவள் பாவத்துக்கு உட்பட்டவள் என்று சொல்லிக் கொடுத்த காலனியத்துவம், கல்வியைப் புகட்டுகின்றதான போர்வையிற்; தமது மதச் சிந்தனைகளையும் தமது மொழிகளையும் ஆதிக்கத்துக்குக் கொண்டுவந்தது. இன்று பொருளாதரத்தில், சிந்தனை மரபில் உயர்ந்த நாடுகளாகக் காட்டிக் கொண்டிருந்தாலும், தமது கழிவுகளை இன்றும் கீழைத்தேய மண்ணிற்தான் கொட்டிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. வெறும் குப்பைக் கழிவுகளைப் பற்றி மட்டும் நான் இங்கு குறிப்பிடவில்லை. இன்றும் காலனியத்துவம் முடியவில்லை. அவை புதிய புதிய வடிவங்களைக் கண்டுகொண்டிருக்கின்றன.
பெரும் சிந்தனையுடைய வளர்முக நாடுகள் என்று காட்டிக்கொள்ளும் நாடுகள், தமது காலனியத்துவ காலத்தில் எடுத்துக் கொண்ட பொருளாதாரத்தில் இருந்து ஒரு பங்கினையேனும் திருப்பிக் கொடுக்க முயன்றிருக்கின்றனவா? அவர்கள் எடுத்து வந்தவை பொருள்வளங்கள் மட்டும் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்களுக்கு எதிராகத் தம்மை காட்டிக் கொண்டும், சுதந்திரத்தையும் மனித வாழ்வையும் குழந்தைகளையும் முன்னிறுத்தும் மேலத்தேய நாடுகளே பிற நாடுகளில் நடாத்தப்படும் போர்களுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. போர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடாத்திக் கொண்டிருக்கின்றன என்பதற்குக் கடந்த காலத்திலும் சமகாலத்திலும் பல்வேறு உதாரணங்களை அடுக்கமுடியும்.
….
ஐரோப்பா போன்ற நாடுகளிற் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தில் நானும் ஒருத்தி. புலம்பெயர்ந்து முப்பது வருடங்களுக்கு மேற் கடந்து விட்டிருந்தாலும் இந்த வாழ்வு ஒட்டியும் ஒட்டாமலும் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதே யதார்த்தம்.
புலம்பெயர்ந்த சமூகங்களில், குறிப்பாக பெண்கள் தமக்கு இங்கே சுதந்திரம் இருப்பதாகவும், தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற கருத்தோடும் இருக்கும் நிலையை நான் கண்டிருக்கின்றேன். உலகமயமான இந்தக் காலத்தில் இருக்கும் பெண்கள், தாம் வாழ்கின்ற வசதியானதும் பொருளாதார மயப்பட்டதுமான நிலையை மட்டுமே கருத்திற் கொண்டு இப்போது எந்தப் பிரச்சினையும் தமக்கில்லை இல்லை என்று கருதுவது பரிதாபகரமானது.
வாழ்க்கைத் துணை தன்னை அடித்தாலும் அவர் அடிப்பார்தான் ஆனால் நல்லவர் என்று சொல்லும் பெண்களும் – எமக்கு இங்கே முழுமையான சுதந்திரம் கிடைத்து விட்டது என்றும் – நாம் நம் கலாச்சாரங்களைக் காக்க வேண்டும் என்ற பெயரில் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்கு போகாமல் இருக்கும் பெண்களும் – இங்கே யார் சாதி பார்க்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டே தமது குழந்தைகளுக்கு தமது சாதிக்குள்ளே ஜாதகம் பார்க்கும் குடும்பங்களும் இருக்கும் சமூகம்தான் புலம் பெயர்ந்து வாழும் சமூகம். எந்த மதசார் நிறுவனங்களோ பெரும்பான்மைக் குடும்ப நிறுவனங்களோ இதை உடைத்துப்போடத் தயாரில்லை. மனிதனே மனிதனை மதிப்பதில்லை என்பதுதான் பேரவலம்.
மனித சமூகம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது? ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, மானுட விடுதலை, சமாதானம், சமத்துவம், சுகாதாரம் பற்றிய பேச்சுக்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
மறுபக்கம் போர், மனித மனப்பிறழ்வுகள், ஒடுக்குமுறை, அதிகாரம், ஏற்றத்தாழ்வுகள் என்று முற்றும் முரண்பாடுகளை கொண்ட மனிதக் குழுமங்களும் வளர்முக நாடுகளுமாக உள்ளன.
மனித இனம் இன்னும் எத்தனை வன்முறைகளைக் கடக்க வேண்டி வரும்? ஒற்றை வன்முறைக்கு ஒருசில(சிலர்)தானா காரணம்?
மணிப்பூர் வன்முறைக் கொடூரத்தை, நினைக்கும் போதெல்லாம் இவையனைத்தும் கேள்விகளாக என் முன் வந்து நிற்கின்றன.










சிந்திக்க தூண்டும் பதிவு
LikeLike