‘The Great Indian Kitchen’

ஒரு திரைப்படம் பற்றி நான் எழுதுவது என்பது, எனக்கு நானே எழுதிக்கொள்வது போன்றது. திரைக்காட்சிகள் தரும் மெய்யுணர்வை எழுத்துக்களால் நிரப்பிவிட முடியாது. சில படங்களைப் பார்க்கும்போது அதைப் பற்றி யாரிடமாவது பேசவேண்டும் போல தோன்றும். பேசிய பின்னும் மனதில் ஏதோ ஒன்று படிந்துபோய் இருந்தால் எழுதத் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் பேனா மிகப்பெரும் சுமைதாங்கி.

இந்தப்படத்தின் கதையொன்றும் புதிய கருப்பொருளைப் பேசவில்லை. பலகாலமாக கவிதைகளும் சிறுகதைகளும் கையாண்டுவரும் பேசுபொருள்தான். ”மூலைகள்” என்ற எனது கவிதையும் இதே பேசுபொருள்தான். ஆனாலும் எடுத்துக்கொள்ளப்பட்ட கருவினை திரையில் காட்சிகளாக, ஒளியாக, ஒலியாக, கவித்துவமாக வளர்த்தெடுப்பது சவால்கள் நிறைந்தது. அந்த வகையில் மிக நேர்த்தியாகவும் உணர்வுபூர்வமாகவும் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது ‘The Great Indian Kitchen’ என்ற மலையாளத் திரைப்படம்.

இது மிகப்பழைய கதை. பாட்டி, பாட்டியின் பாட்டி, அம்மம்மா, அம்மா… எனப் பல யுகாந்திரங்களைக் கடந்து வரும் ஒரு சாதாரணப் பெண்ணின் கதை. எனது அப்பம்மாவோ, அம்மம்மாவோ பற்றிய நினைவுகள் வரும்போதெல்லாம் அவர்கள் கல்லடுப்பின் அருகிற்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

சரி இனிப் படத்திற்கு வருவோம். நாயகி நடனம் கற்பவள். எழுத்தோட்டத்தில் காட்சி கடந்து செல்கிறது. ஆச்சாரமான (கௌரவாமான என்று கருதப்படுகிற) ஒரு குடும்பத்தில் அவளைப் பெண் குடுப்பதோடு கதை தொடங்குகிறது.

எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாத குடும்பம். தானே எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்யும் ’நல்ல’ மாமியார். வேலையும் வீடுமாக இருக்கும் ’நல்ல’ கணவன். குரலை உயர்த்திப் பேசாத ’நல்ல’ மாமனார். வேறு என்ன வேண்டும் என்று சமூகம் இலகுவாகக் கடந்து செல்லும் குடும்பச்சூழல். அனைவரும் இந்தியச் சமூகத்துப் பார்வையில் மிக நல்லவர்கள். இவர்களை நாம் எந்த வகையிலும் தனிப்பட்ட ரீதியில் குற்றம் சொல்லிவிட முடியாது. அப்படி நாம் கையை நீட்டுவதென்றால், நீட்டவேண்டியது எம் சமூகத்தை நோக்கித்தான். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியலை நோக்கித்தான். குடும்பம், திருமணம், பெண்கள் பற்றிய கற்பிதங்கள் மீதுதான்.

கதை,
மாமியார் தன் மகளுக்குப் பிரசவம் பார்க்கப் போக, நாயகி சமையல் வேலைகளைப் பொறுப்பெடுக்கத் தொடங்குகிறாள்.

படம் முழுவதும் இரைந்து கிடக்கும் சமயலறையும், சாப்பாட்டு மேசையும் கூறியதுகூறலாக காட்சிகளாகிக் கொண்டே இருக்கின்றன. அவள் சமைத்துக் கொண்டே இருக்கிறாள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நமக்குச் சலிப்பூட்டும் வரை இவைதான் காட்சிகள்.

குடும்பம் என்றால் யாராவது ஒருவர் சமைக்கத்தானே வேண்டும் என்றுதான் இப்போதும் நினைக்கத்தோன்றும். அப்படிச் சிந்திக்கத்தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.

சமயலறைகளை, வீட்டின் அனேகப் பொறுப்புகளைத் தன் தலைமேல் சுமப்பதில் பல தசாப்பதங்களைக் கடந்து கொண்டிருக்கிறாள் பெண். இதை ஒரு மிக நுட்பமாக ஒரு காட்சியினூடு சொல்லிவிடும் திறமை இப்படத்தின் இயக்குனரிடம் இருக்கிறது.

இத்திரைப்படத்தோடு ஒப்புநோக்கின், மேலத்தேய நாடுகளில் அளவீடுகள் மாறுபடலாம். பாத்திரங்கள், வசதிவாய்ப்புகள், பொருளாதார நிலைகள் மாறுபடலாம் ஆனாலும் மனம் என்பது ஒப்பீட்டளவில் அப்படியாகவேதான் இருக்கிறது (விதிவிலக்குகள் இருக்கலாம்). மேலத்தேய நாடுகளிலும் ஒரு குடும்பத்திற்கான நாளாந்தச் சமையல் பொறுப்பினை பெண்களே அதிகம் சுமக்கின்றனர் என்பது மிகையல்ல.

காட்சியொன்றில், நாயகி வீட்டின் ஆண்களிடம் தான் வேலைக்குப் போக அனுமதி கேட்கிறாள். மறுக்கப்படுகிறது. கேட்பதே அநீதிதான். மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஒரு வீட்டினை நல்லபடியாக வைத்துப் பெருமை சேர்ப்பது கலெக்டெர் வேலையைவிட சிறப்பானது என்ற அறிவுரை, மதஅடிப்படைவாத்தின் பெரும் வஞ்சகம். காலம், தேசம் கடந்து இப்படியான கருத்துப் பிரயோகங்களும் மேலத்தேய நாடுகளுக்கும் அந்நியமானவையல்ல.

பல நுட்பமான, நேரடியான அவமதிப்புகளை, சுயம் சார்ந்த இழப்புகளைக் கடந்து செல்கிறாள் நாயகி. ஆனால் நாயகனுக்கு அப்படியல்ல. ஒரே ஒரு கேள்வி அவனின் கர்வத்தை சீண்டக்கூடியதாக இருக்கிறது.

அழுக்குகளும், பலநாள் திருத்தப்படாத கழிவுநீர்க் குழாய்க் கசிவின் மணமும் அவளைக் உறக்கம் வரை துரத்துகிறது. இரவுகள் அனைத்தும் வலி நிறைந்ததாகவே இருக்கிறது. உடலுறவின் போது வலி இருப்பதாகச் சொல்கிறாள். உடலலுறவு சார்ந்த அந்தரங்க விடயங்களைப் பெண் பகிர்ந்து கொள்வது அத்தனை இழுக்கானதாகப் பார்க்கும் ஆணின் மனம் அப்பட்டமாக திரையில் காட்டப்படுகிறது. இயக்குனர் மீண்டும் தன்னை நிரூபிக்கும் காட்சி.

சந்தர்பங்களில் ”உனக்கு இது தெரியாதா? என்ற ஆணின் கேள்வியில் மறைபொருளாக இருப்பது உடலுறவு பற்றி மட்டும் தெரிந்திருக்கிறதே என்பதுதான்.

ஆண்-பெண் கூடல் காட்சியாகப்படுவது ஒரு அசௌகரியமான காரியம்தான். அதன் முக்கியத்தும் அறிந்து, அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தினை உணர்ந்து இக்காட்சிகள் அமைக்கப்படுவதே காத்திரமானது. பல திரைப்படங்கள் இக்காட்சிகளை வியாபார உத்தியாகவோ, துணிகரமாகன செயல் என்ற புகழுக்காகவோ காட்சிப்படுத்துவதையும் நாம் பல திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். உடலுறவுக் காட்சியில் நாயகியின் முகத்திற்கு மட்டும் வைக்கும் close-up மனதை பிழிந்து செல்கிறது.

இப்படத்திற் காட்டப்படும் படிமங்கள் காத்திரமானவை.

  • வரிசையாகப் பல தலைமுறைகளின் திருமணப் புகைப்படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருப்பதை நாயகி கவனிப்பது. ஒரு சுமைதாங்கிப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் காட்சி.

  • கல் அடுப்பு எரிய (அவ்வீட்டு ஆண்களுக்கு கல்அடுப்பு அரிசிச்சோறுதான் வேண்டும்) அதன் முன்பு மடிக்கணணியில் வேலை பார்க்கும் நாயகி. பழமையையும் நவீனத்தையும் ஒரே சமயத்திற் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்.

  • மாதவிடாயின் போது உதவிக்கு வரும் உறவுக்காரப் பெண், பெரும்பான்மை சமூகத்தின் குறியீடு. ஆணின் மனநிலைக்கு தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கும் பெண் அவள். அவர்கள்தான் தம்மை சுற்றியுள்ளவர்களிடம் குற்றஉணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் பக்கத்து வீட்டு அத்தைகள்.

  • தினமும் பால் கொண்டுவரும் ஒரு குட்டிச்சிறுமி. அப்பாவித்தனம் மாறாது சில மீறல்களைச் செய்ய எத்தனிக்கும் பெண். ஆனாலும் எதிர்காலத்து வேலைகளுக்கான ‘பெண்ணாயிருப்பதற்குரிய’ வகையில் கச்சிதமாகப் பழக்கப்படுத்தப்படுகிறாள்.
  • தான் செய்யும் வேலைகளை இரசித்து செய்யப் பழகிவிட்ட வேலைக்காரப் பெண்.

  • பிரசவத்திற்கு மகள் அழைத்ததும், ஒரு சமையல் அறையையே பெட்டிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டு புறப்படும் ஒரு தாய்.

  • இப்படத்தில் எந்த இடத்திலும் பின்னணி இசை கிடையாது. அதுவே ஒரு பெருங்குறியீடுதான்!

  • வீட்டின் ஆண்களுடைய முகத்தில் கழிவு நீரை விசிவிட்டு வீட்டைவிட்டே கிளம்புகிறாள். அப்போதூன் கடலும், பரந்தவெளியும், காற்றும் என விரிந்த உலகமொன்று படத்திற் காட்டப்படுகிறது. அந்தக் காட்சி வரும்போதுதான் பார்வையாளர்களான நாமே மூச்சுவிடத் தொடங்குகிறோம்.

  • நாயகியின் பிறந்த வீட்டில் ‘நீ பிரிந்து வந்தது தவறு’ என்ற வழக்கமான அறிவுரைகள்.

  • அவளுடைய தம்பி தாயிடம் தண்ணீர் கேட்கிறான். தாய், சின்ன மகளைத் தண்ணீர் எடுத்துக்கொடுக்கச் சொல்கிறாள். ஒரு பெண்ணிடம் வேலை வாங்கப் பழக்குவது நாயகிக்குச் சீற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சமூகத்தின் ஆண் பெண் சார்ந்த வளர்ப்புமுறைக்கு எதிரான அகச்சீற்றம் அது.

இத்திரைக்கதையில், நாயகி இன்னொரு திருமண பந்தத்தை நாடவில்லை. ஒரு ஆணையும் நாடவில்லை. தனக்கான ஒருவனை அவள் கண்டடையக்கூடும். தற்போதைக்கு தனது கனவுகளை நிறைவேற்ற மிடுக்கோடு புறப்படுகிறாள். ஆனாலும் அத்தோடு படம் நிறைவுறவில்லை.

அவள் போனால் என்ன? எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். அவள் சமைத்த அதே சமயலறையில் இன்னொரு பெண் அமர்த்தப்பட்டிருக்கிறாள். கணவனுக்கான தேனீர் குவளையைக் கழுவிக்கொண்டிருந்த புதியவளிடம் அதே மலர்வு, அதே வெட்கம், அதே நெகிழ்வு. அதே போல தன் புது மனைவி அருகில் ஆசையோடு நின்று கொண்டிருக்கிறான் மீண்டும் அவன். ”நீ வேலையைச் செய்துகொண்டிரு, நான் தயாராகி வருகிறேன்” என்ற பல யுகாந்திரங்களாய்ச் சொல்லப்பட்ட வசனத்தை அவனும் சொல்வதோடு படம் முடிகிறது.

காலகாலமாய் இந்த ஆண்களும் பாவம்தான். ஒரு பெண்ணினுடைய மிக நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளவே எத்தனிக்காத ஆண்கள் பாவமானவர்கள்தானே. அவர்கள் தாங்கள் சொல்வது செய்வது எல்லாம் சரி என்றே நம்பப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருமன வாழ்வின் அழகியல்களை, பேரன்புகளை அனுபவிக்க முடியாதவர்களாவே வாழ்ந்து மடிகிறார்கள்.

குடும்பச்சூழலில் அவதிப்படும் நிறைப் பெண்களை அறிந்திருக்கிறேன். அவர்களிடம் வேலை இருக்கிறது. வசதி இருக்கிறது. சமயல் என்பதும் பெருஞ்சுமை இல்லை. ஆனாலும் அவதி மட்டும் ஒரேபோல இருக்கிறது. சலிப்பூட்டும் வழக்கமான வாழ்வில் இருந்து தப்பித்து விடுவதற்கு கலையோ, தனிப்பட்ட ஒரு விருப்போ இருபாலருக்குமே அவசியமானது. நல்ல வேளையாக படத்தின் நாயகிக்கு ஒரு கலை தெரிந்திருந்தது. கிளம்பிச்செல்வதற்குப் பிறந்த வீடும் ஒன்று இருந்தது. ஒன்றிலும் ஈடுபாடுமின்றி, பிறந்த வீடுமின்றி வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

பெண்களைப் பற்றித்தான் படம் பேசுகிறது. தம்மைத்தாமே அறிந்து கொள்ளக்கூடிய பெண்களுக்கான படம்தான். இருந்தும் இது ஆண்களுக்கான படம். முக்கியமாக பெண்களின் நுண்ணுணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாத, புரிந்து கொள்ள விரும்பாத, புரிந்து கொள்வதே இழுக்கென நினைக்கின்ற ஆண்களுக்கான படம். இந்தப் படம் என்ன சொல்லிவிடப் போகிறது, என்ன சொல்லிவிட்டது என்ற கருத்தினைக் கொண்டுள்ள அனைத்து ஆண்களுக்குமான திரைப்படம்.

மலையாளப்படங்கள் தம்மை நிரூபித்துக்கொண்டே இருக்கிறன. பல காட்சிகள் சமயலறையிலே நகர்ந்தாலும் இது சமயற்சுமை பற்றிய படமே அல்ல. படம் இந்தியச் சமயலறையைப் பற்றி பேசுவதாக இருக்கலாம். ஆனாலும் கதையின் மூலம், சமயலறைச் சுமை மட்டுமேயல்ல.

மனஉணர்கள், அதன் நுட்பங்கள், அதன் இயங்குவிசைகள், வெளிப்பாடுகள் பற்றியது. சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டுக் காக்கப்படும் கற்பிதங்கள், ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள், இயல்புகள், முரண்கள் எதிர்பார்ப்புகள், சலிப்புகள், ஏக்கங்கள், சுயங்கள் என விரிந்த தளத்தில் இயங்குகின்ற திரைக்கதை. சமூகத்தின் அகமும் தனிமனிதனின் மனமும் ஒன்றுதானே!

The Great Indian Kitchen   திரைப்படத்தைப் பார்ப்பதற்காக OTT தளமொன்றில் தேடியபோது தேடியபோது நடிகர் விஐயின் மாஸ்டர் படம் மலையாத்திலும் மொழிமாற்றம் பெற்றிருப்பதைக் கண்டேன். திக்கென்று இருந்தது எனக்கு.

4 thoughts on “‘The Great Indian Kitchen’

  1. வணக்கம். நான் சிபி Fb@தோழர் தமிழ்த்தேசியன் சிபி. நான் தொடங்க உள்ள உள்ளுறை காலாண்டிதழிற்கு தங்கள் படைப்புகள் வேண்டும். என்னுடைய மின்னஞ்சல் :sibisibisibisibi57@gmail.com. நன்றி.

    Liked by 1 person

kavithalaxmi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி