ஹம்சகீதே
பொதுவாக நாவல்கள் திரைக்கதையாக மாறும் போது படைப்பு முழுமையடைவில்லை என்றே தோன்றும். மோகமுள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் அதற்குச் சாட்சி சொல்லும். ஹம்சகீதே என்ற நாவலைத் திரைப்படமாக்கியவர் இயக்கியவர் ஜி.வி.ஐயர்.
நல்லவேளையாக நான் ஹம்சகீதே நாவலைப் படிக்கவில்லை. நாவலைப் படிக்காமல் திரைப்படத்தைப் பார்த்த வகையில் முழுமையான படைப்பென்றே சொல்லவேண்டும். ஹம்சகீதேவை எனக்குப் பிடித்துப்போனதற்குப் பல காரணங்கள் உண்டு.
ஹம்சகீதே அகம் சார்ந்த கதை. இசை, நடனம், வரலாறு என்ற கூறுகளை அடப்படையாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் கதை.
இசைப்போட்டிக்கு தனது மாணவனையே அழைக்கும் குருவோடு நாயகன் போட்டியிட வேண்டிய கட்டாயம். குருவை மாணவன் வென்றுவிடுகிறான். தோல்வி காரணமாக அவமான எண்ணத்தில் குரு தன்னை மாய்த்துக் கொள்கிறார். மாணவன் வெங்கட சுப்பய்யா. இசையில் பெரும் ஞானமும், பற்றும் உள்ளவன்.
எமது சமூகத்தைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமா? குருத் துரோகி, குருவையே அவமரியாதை செய்தவன் என்று ஏனைய சங்கீத ஆசிரியர்களும் அவனை நிந்தனை செய்கின்றனர். அவனைப் பார்க்கவே மறுக்கின்றனர்.
அவனது இசை ஆர்வத்தை அறிந்துகொண்ட அவனது மாமா அவனுக்கு ஒரு குரு கிடைக்கவேண்டும் என அவனோடு அலைகிறார். இறுதியில் அவனைக் கொண்டு சேர்ப்பது ஒரு பரதேசியிடம். இசைஞானத்தை இயற்கையாகக் கொண்ட பரதேசி.
பிராமணனான வெங்கட சுப்பையா அவனிடம் இசைக்கற்கவே வந்திருக்கிறான் என்பதை அறிந்ததுமே பரதேசி ஓடிவிடுவார். படம் முழுவதும் ஹம்பியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாறைகளும் குன்றுகளும் நிறைந்த இடம். பரதேசியைத் தேடி செல்வதும், இசையை கற்பதற்காக தனது காதணியை விற்று பரதேசிக்கு சாராயம் வாங்கிக் கொடுப்பதும், பிச்சை எடுத்து உணவு கொடுப்பதும் என அவனது இசைப் பயணம் தொடர்கிறது.
பரதேசியும் இறந்து போக, நாயகன் ஊருக்குத் திரும்புவதும், அவனது திறமையால் அரசவைக் கலைஞன் ஆவதும், அதனால் அகங்காரம் கொண்ட மனநிலையை அவன் அடைவதும் ஒரு கலைஞனது வாழ்வில் நிகழக்கூடியவையே. அகங்காரத்தினால் சாம கானத்தை காம கானம் என்று பாடிவிட அவமானப்பட நேர்கிறது.
அவனது வாழ்க்கையில் ஒவ்வொரு திருப்புமுனையும் அவனுக்கு ஒருவித ஞானத்தை அளிக்கிறது.
ஒரு கட்டத்தில் அரசவை உத்தியோகத்தை மறுத்து அவனை விரும்பிய ஒரு தாசியிடம் செல்கிறான். அவளிடம் செல்வதற்குப் பணம் வேண்டும். ராகங்கள் இரண்டை அடகு வைக்கிறான். பணத்தை மீளக் கொடுத்துவிட்டே அவ்விரு இராகங்களையும் பாடுவேன் என அவன் அடகு வைத்த இராகங்கள் கல்யாணியும்; பைரவியும்.

அவளோ தன்னை மறந்தாலும் பாடுவதை மறக்காதே என ராகங்களை மீட்டு வந்த சீட்டைக் கொடுத்து வழிஅனுப்புகிறாள்.
அன்றிலிருந்து தனக்காக மட்டும் தனது அகம் விரும்புவதை மட்டுமே பாடி வரும் சுதந்திரக் கலைஞனாக வாழத் தொடங்குகிறான். மலைக் குன்றுகளெங்கும் அவனது பாடல் ஒலிக்கிறது.
இக்காலத்தில் ஆட்சி மாறுகிறது. திப்பு சுல்தான் ஆட்சிக் வந்த காலம். வெங்கட சுப்பய்யா திப்புக்கு முன் பாட மறுத்துவிடுகிறான். பாடாவிட்டால் அவனது நாக்கு அறுக்கப்படும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. வெங்கட சுப்பையாவோ தானே தனது நாக்கினை அறுத்து அரசனுக்கு அனுப்பி வைக்கிறான்.
எதை அடைய விரும்பினானோ அதையே இழக்கவும் துணிவது ஞானத்தின் உச்சம். இந்த நிலை அடைவதற்காக அவன் சென்ற பாதைகள்…
கலையை ஒரு பரதேசியிடமும் கற்றது
பிராமணனாக சாராயம் வாங்கி குருச் சேவை செய்தது
அகங்காரத்தால் அவமானம் அடைந்தது
ஒரு தாசியோடு வாழச் சென்றது
அனைத்தையும் உதறிவிட்டு தான் நினைத்தபடி சுந்திரக்கலைஞனாக வாழத்தொடங்கியது
என
ஞானத்தை ஒருவன் எப்படியெல்லாம் பெறுகிறான் என்பதையும்
இறுதியில் தான் பெற்றதையே இழக்கத்துணிகிறான் என்பதையும்
காட்சிப்படுத்திய விதத்தில் இப்படத்தினுடைய மூலநாவல் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகவே இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
படத்தின் இரு முக்கியமான விடயங்கள் இசையும் நடனமும். ஹம்பி சன்னிதானத்தில் ஆடவரும் தஞ்சையை சேர்ந்த தேவரடியார் பெண்ணின் நடனத்தை வடிவமைத்தவர் அடையாறு லட்சுமணன். இந்தப் படம் முழுதும் இசையமைத்தவர் பாலமுரளி கிருஸ்ணா. பல இடங்களில் ஜதியையே பின்னிசையாகப் பாவித்திருப்பது இன்னும் மனதில் நிற்கிறது.



படம் முடிந்ததும் கல்யாணி இராகத்தையோ பைரவி ராகத்தையோ உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். அல்லது என்னைப் போல இரகங்களை எப்படி அடகு வைத்தான் என்று யோசித்துக் கொண்டும் இருக்கலாம்.
இந்தப் படத்தைப் பார்த்தபின் புதிதாக வந்த படங்களைப் பார்த்து மனநிலையைக் குழப்புவானேன் என்று வேறு படங்களை இன்னும் பார்க்கவில்லை. எனக்கு அந்த ஜதிகளையே மீள்ளொருமுறை கேட்க வேண்டும்.











தாசி என்பவள் பணத்திற்காக ஆண்உடம்பைசுமக்கும் தொழிளாலி அல்ல.அவள்கலை
ஞானமும் உண்டு.நந்திக்கலம்பகத்தில் தன் வீட்டு வாசலில் வந்து முனிவனிடம் பாடலைவிரும்பிக்கற்றுக்கொள்ளும்தாசிப்பெண்பற்றி கூறப்பட்டுள்ளது.தாசிகள் என்பவர்கள் தன்உடலை விற்பவள்இல்லை கல்வியறிவுடையவர்களாக விளங்கினர் என்பதுஇலக்கியத்தில்கூறப்பட்டுள்ளது.கவிதாலட்சுமி நல்ல இலக்கியவாதி
LikeLike
நீங்கள் விபரிப்பதைப் பார்த்தால் ‘ஸ்வாதித்திருநாள்’ சித்திரம்போல ஹம்சகீதேவும் இருக்குமெனத்தோன்றுகிறது. எப்பிடியும் பார்த்துவிடுவேன். நன்றி.
LikeLike