நமது சமூகத்தில் ஒரு நபரை இழிவுபடுத்த வேண்டும், காயப்படுத்த வேண்டும், ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் ஒரே கையேடு தான் பாவிக்கப்படுகிறது. அதிலும் இரண்டே இரண்டு விடயங்கள் தான் கையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சாதாரணக் குடிமகன்களில் இருந்து பெரியார் வரை இந்த ஒரு விடயம்தான்.
ஆணாக இருந்தால், பெண்கள் விடயத்தில் ஆள் சரியில்லை என்று காட்ட முயல்வது. பெண்ணாக இருந்தால் ஆண்கள் விடயத்தில் சரியில்லை என்று காட்ட முயல்வது. அல்லது ஏதும் பணம் தொடர்பாக கொள்ளையடித்தார்கள், திருடினார்கள் எனக் கூறுவது.
இதனாலேயே பலரும் பல விடயங்களை மனம் திறந்து பேச அஞ்சி ஒதுங்கி விடுகிறார்கள். பெண்களாக இருந்தால் இன்னும் சொல்லத் தேவையே இல்லை.
இவையெல்லாம் நமது சமூகத்தின் மனம், உடல் சார்ந்த வன்முறை. தக்க விடயத்தை நேர் நின்று பேச முடியாத மனிதர்களால் எடுத்துக் கொள்ளப்படும் மிகக் கேவலமான துருப்பிடித்துப் போன ஆயுதம்.

………..
பெண்ணும் பெரியாரும்
………..
பெரியார் பற்றி மட்டுமல்ல, எவராயினும் அவர்கள் பற்றிய முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருப்பது யதார்த்தமே. இருக்கவும் வேண்டும். ஆனால் மணியம்மைக்கும் பெரியாருக்கும் இருந்த வயது வித்தியாசத்தை ஒரு பொருளாக எடுத்துப் பேசிக்கொண்டே இருப்பது சலிப்பூட்டுகிறது.
இதில் என்ன பிரச்சனைதான் இருக்க முடியும்?
திருமண வயதைக் கடந்த ஒரு பெண், திருமண வயதைக் கடந்த ஒரு ஆணுடன் விருப்பப்பட்டு சேர்ந்து வாழ்வதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது. அதெல்லாம் அவர்கள் தனிப்பட்ட விடயம். இது குழந்தை துஷ்பிரயோகம் அல்லவே. கட்டாயத் திருமணமும் அல்லவே.
70 வயதுடைய ஒருவருடன் குறைந்த வயதுடைய பெண் சேர்ந்து வாழ ஆசைப்பட்டாள் என்பதை என்னால் உடல் சார்ந்து மட்டும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. முதலில் நாம் இரு மனங்களின் சேர்க்கை என்பதை உடல் சார்ந்து மட்டும் குறுக்கிப் பார்ப்பதை எப்போது நிறுத்தப் போகின்றோம் என்பதே எனது கேள்வியாக உள்ளது.
பெரியாரிடம் ஒருவர் (பெரியாரைச் சீண்டும் நோக்கில்) கேட்டாராம். உனது மனைவியை என்னோடு அனுப்பி வைப்பாயா என்று. அதற்குப் பெரியார் சொன்ன பதில் ”அவள் விருப்பப்பட்டால் தாராளமாகக் கூட்டிப் போகலாம்” என்பதே.
இந்தப் பதிலைச் சொல்வதற்கு அவருக்கு எத்தனை தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும். பெண்களின் சுயமரியாதை, சுய முடிவுகள், தொடர்பாக எத்தனை ஆழமான சிந்தனை இருந்திருக்க வேண்டும்? அவளது முடிவுகளை ஏற்றுக் கொள்ள எத்தனை மனப்பக்குவம் இருந்திருக்க வேண்டும்.
இப்சனின் பொம்மை வீடு நாடகம் படித்தவர்களுக்குத் தெரியும் ஒரு பெண்ணுக்கு எது முக்கியம் என்பது. உண்மையில் ஒரு பெண் காதலை விட, பணத்தை விட, பொருளை விட, ஏன் அன்பை விட விரும்புவது சுயமரியாதையை. அவளது சுயமரியாதையை உள்ளார மதிக்கும் ஒருவனை விரும்புவதையோ, அவனுடன் சேர்ந்து வாழ்வதையோ தான் பெண் விரும்புகிறாள். இதை ஆண்கள் பலரும் நமது சமூகத்தில் இன்றும் உணர்ந்து கொள்வதில்லை என்பதே இந்தக் காலகட்டத்திலும் துயரமானது.

‘கடலில் இருந்து ஒரு கன்னி’ என்ற இப்சனின் இன்னுமொரு நாடகத்தில் இப்சன் எடுத்துவரும் விடயம் சுதந்திரத்துடனான காதல் என்பதாகும். வாழ்க்கை சுதந்திரமும் காதலும் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்கிறார். இரண்டில் ஒன்று குறைந்தாலும் ஒரு மனிதனுடைய (பெண்ணுடைய) காதல் வாழ்க்கை முழுமையடைவதில்லை என்கிறார்.
நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இப்சனின் ”பொம்மை வீடு” நாடகப்பிரதியின் நாயகன் நமது சமூகத்தில் காட்டப்படும் ஒரு நாயக பிம்பத்திற்கு ஒப்பானவன், அன்பைப் பொழிபவன், தனது மனைவியை (நூரா) கண்ணே, மணியே, கிளியே என்று கொஞ்சிக் கொண்டிருப்பவன், ‘சமூகம்’ எதிர்பாரக்கும் அத்தனை தகுதியும் உள்ள ஆண்மகன். தனது மனைவியை பொத்திப்பொத்தி வைத்திருப்பவன். ஆனால் அவள் ஏன் அவனை விட்டு போகிறாள்? அதுவும் தனது குழந்தையையும் அவனோடு விட்டுவிட்டுச் செல்கிறாள். இப்படியான ஒருவனைப் பிரிந்து செல்லும் ஒரு பெண் (நூரா) மூலம் இப்சன் என்ன சொல்ல விளைகிறார்?

இப்சனின் நூரா அறைந்து சென்ற வெளிக் கதவின் சத்தம் இன்னமும் கேட்டுக் கொண்டிருப்பதாக நோர்வேஜிய மக்கள் இன்றும் சொல்கிறார்கள். அறையப்பட்ட அந்தக் கதவின் சத்தத்தை நமது சமூகம் உணர்ந்து கொள்ள இன்னும் எத்தனையோ நூறு ஆண்டுகள் ஆகலாம் என்பது மனதைக் கனக்கச் செய்கிறது.
இத்தனை ஆண்டுகள் கழிந்தும் பெரியாரை, இப்சனை, சாக்கிரடீசை, பாரதியை, புதுமைபித்தனை, பெண்கள் காதலிப்பதை யாராலும் நிறுத்த முடிவதில்லை என்பது மட்டும் ஆறுதல் அளிக்கிறது!










Hi kavitha, i like to read your tamil literay work, even i have been living in Tamil nadu, i cant write like you. Barathanatinam dance also one of unique performance, i appreciate in your all work. You are proved yourself as Tamil girl
LikeLike
மிகவும் அற்புதமான பதிவு சகோதரி கவிதா . 👍👍
LikeLike