(நன்றி: காக்கைச் சிறகினிலே, 04.2019, ஓவியர் மருது)
.
ஈழத்து இலக்கியத்தை முன்வைத்து வல்லாதிக்க சக்திகளின் நலன்சார் அணுகுமுறையின் போக்கு மீதான வரலாற்றுப் பார்வை!
காலனியத்தின் ஆதிக்க ஆட்சிப்பின்னணியைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட ஈழத்து மக்கள் இலக்கியம் வேலப்பணிக்கன் ஒப்பாரி.
இவ்விலக்கியத்தின் முக்கிய கதைமாந்தர்களாக அரியாத்தையும் யானையும் விளங்குகின்றனர். இது யானை பிடிக்கும் சமூகத்தின் கதையாடல். ஈழத்தில் வன்னியில் இருந்து எழுதப்பட்ட இவ் இலக்கியமானது வன்னி மண்ணின் மக்கள் இலக்கியமாக பெண்ணின் வீரத்தைப் பறைசாற்றும் படைப்பாகவே இன்றுவரை பிரபல்யமாக்கப்பட்டிருக்கின்றது.
யானையை அடக்கிய பெண்வீரம் என்பதை முன்னிலைப்படுத்தி மீண்டும் மீண்டும் பேசப்பட்டாலும் இவ்விலக்கியம் உண்மையில் காலனியத்தின் ஆதிக்கமுறையையும் அதன் கட்டமைப்பையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக நமக்குக் காட்டிநிற்கிறது.
ஒல்லாந்தர்களின் காலனிய காலத்தைப் (கிபி 1658 – கிபி 1796) பிரதிபலிக்கின்ற தமிழ் நாட்டார் இலக்கிய வடிவம் வேலப்பணிக்கன் ஒப்பாரி.
நமக்குக் கிடைக்கப்பெற்ற ஏட்டுச்சுவடிகளில் எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாத காரணத்தால் எழுதியவர் பற்றிய மேலதிக விபரங்கள் இல்லை.
வேலப்பணிக்கன் ஒப்பாரி என்ற இலக்கியப் படைப்பை மட்டும் வைத்துக்கொண்டு அதன் உட்பொருளின் ஆழத்தையும், அதன் பின்னணியையும் கிரகித்து விளங்கிக்கொள்ளுவதில் சிரமங்கள் இருக்கின்றன. அதனால் சமகாலத்தில் எழுதப்பட்ட இன்னுமொரு டச்சு ஆவணமும் மூலநூலாக இங்கே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
எடுத்துக்கொள்ளப்பட்ட மூலநூல்கள்
1. வேலப்பணிக்கன் ஒப்பாரி – வ. கணபதிப்பிள்ளை, 1934
2. வேலப்பணிக்கன் ஒப்பாரி – அ. சண்முகதாஸ், த. குணலட்சுமி
3. Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatanam –1697
ஒல்லாந்தர் பற்றிய குறிப்பு பாட்டில் எழுத்தப்பட்டிருக்கிறது என்பதனால் வேலப்பணிக்கர் ஒப்பாரியை ஹென்றிக் ஸ்வாடர்குரூன் எழுதிய அறிக்கையோடு ஒப்பிட்டு நோக்குதல் இங்கு முக்கியமானதாகிறது.
உலாந்தா என்பது ஒல்லாந்தர்களை நாம் அழைத்து வந்த மற்றுமொரு வழக்குமுறை.
உலாந்தா மறியல் என்றால்
என் ஆசை அவுறுகமே
என் ஆசை மச்சாள் தோளியரே – நானும்
கூடவே நானிருப்பேன்
(பந்தி 90, பக்கம் 101, 1934, வ. கணபதிப்பிள்ளை)
வேலப்பணிக்கன் ஓப்பாரியில் சின்ன வன்னியன் மனைவியின் கூற்றாக வரும் மேற்குறிப்பிட்ட பாடல் வரிகளில் “உலாந்தா மறியல்” என்ற வார்த்தை ஒல்லாந்தர் ஆட்சி நடப்பதற்குரிய சாட்சியமாக நமக்குத் தருகிறது.
காலனிய காலத்தில் மக்களுடைய நிலைமையை எடுத்துரைக்கும் இலக்கியமாக வேலப்பணிக்கன் ஒப்பாரி விளங்கினாலும் உலகளாவிய காலனிய ஓட்டத்தில் காலனியத்திற்கு உட்பட்ட அனைத்து மக்களினதும் வாழ்வியற் காலக்கண்ணாடியாக வேலப் பணிக்கர் ஒப்பாரியை நாம் பார்க்கவேண்டும்.
வன்னித் தமிழர்களின் அன்றைய காலனிய வாழ்வின் துயர் மட்டுமல்லாது இன்றைய தமிழர்களின் நிலையோடும் ஒத்துநோக்க வல்ல ஒரு ஒப்புமை இலக்கியமாகவும் வேலப் பணிக்கர் ஒப்பாரி விளங்குகின்றது.
சின்னவன்னியன் என்ற வன்னித்தலைவன் குமுழமுனையை ஆண்டுகொண்டிருந்த காலம், பணிக்கர் என்ற அழைக்கப்பட்ட யானைபிடிக்கும் சமூகத்தின் துணையோடு ஒல்லாந்தருக்கு யானை பிடித்துக்கொடுத்தல் அன்றைய காலத்தில் வன்னித் தலைவர்களின் கடமையாக இருந்தது.
ஒருமுறை ஒரு கொம்பன் யானையைப் பிடிக்கும் வேலை வந்தது. யாராலும் பிடிக்க முடியாதெனக் கருதப்பட்ட யானை அது. வேலப்பணிக்கன் என்ற ஒருவனால் முடியும் என்று வேலப்பணிக்கன் தலைமீது அப்பணி விழுகிறது. அது வேலப்பணிக்கனாலும் முடியாது. அது வேலப்பணிக்கள் மனைவி அரியாத்தையினாற்தான் முடியும் என்ற கிண்டலும் வருகிறது.
இதனால் துயர் அடைந்து வீடுவந்த வேலப்பணிக்கனைப் பார்த்த அரியாத்தை அவனைத் தேற்றித் தானே ஆனை பிடித்துவருகிறேன் எனக் கிளம்புகிறாள்.
கோபங்கொண்ட யானையை தன் ஆத்ம பலத்தாலும், மனோ பலத்தலும், வசியத்தாலும் அடக்கி அதன் மீது ஏறி வன்னியன் மாளிகைக்கு வருகிறாள். அவள் வீரத்தைப் பாராட்டிய வன்னியன் மனைவி அவளை கௌரவப்படுத்துகிறாள்.
மந்திரவசியத்தால் கட்டிவந்த யானையை சில பொழுதிற்குள் வசியக்கட்டு கட்டவிழ்க்க வேண்டும் என்பது அவசியம். அதன் கட்டை அவிழ்க்குமுன்னரே அரியாத்தை உடல் சோர்ந்து பாதி வழியில் இறக்க நேரிடுகிறது. கட்டவிழ்ப்பார் யாருமின்றி யானையும் இறந்துபோகிறது.
அரியாத்தையின் பிரிவுத்துயர் தாங்காத வேலப்பணிக்கன் அவள் குறித்து ஓப்பாரி பாடுகிறான், இறுதியில் உடன்கட்டையும் ஏறுகிறான் என்பது வேலப்பணிக்கர் ஒப்பாரியின் கதைச்சுருக்கம்.
அரியாத்தையின் மரணம் எப்படி நிகழ்ந்ததென்ற செய்திகள் வேலப்பணிக்கன் ஒப்பாரியில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அவளுடைய இறப்பின்; பின்னால் இரண்டு விடயங்கள் இருக்கக்கூடும் என்ற அனுமானங்கள் இருக்கின்றன.
ஒன்று, வேலப்பணிக்கர் குலத்தார் யாரும் பிடிக்கமுடியாத ஆனையை, அரியாத்தை என்ற ஒரு பெண் பிடித்தது தொடர்பாக எழுந்த பொறாமையில் அவளுக்கு வைத்த பாராட்டுத் தாம்பூலத்தில் நஞ்சு வைக்கப்பட்டது என்று (வாய்மொழிக் கதைகள்) சொல்லப்படுவதுண்டு.
இரண்டாவது, யானையை வசியஞ்செய்த மனோபலக் களைப்பாலும், அதனால் இழந்துவிட்ட தன் சக்தியின் காரணமாகவும் யானையின் வசியக்கட்டை அவிழ்க்க முன்னமே அரியாத்தை உடல் சோர்ந்து இறந்து போயிருக்கலாம் என்ற கூற்றுமுண்டு.
மூலநூலில் இறப்பின் காரணத்தைக் குறிப்பிடாது அதை ஒரு குறியீடாக விடப்பட்டிருக்கிறது.
வேலப்பணிக்கர் ஒப்பாரியின் பின்னணி
பெண்ணின் வீரத்தையும் கற்பையும் பற்றிய குறிப்புகள் மூல இலக்கியத்தில் கூறியதுகூறலாக பல வரிகளில் வருவதால் இப்படைப்பை நாமும் அந்த அளவில் பார்த்து நிறுத்திக் கொண்டுவிடுகிறோம்.
சமகாலத்தில் (ஓல்லாந்தர் காலனிய காலத்தில்) யாழ்பாணப் பட்டினம் என்ற இராச்சியத்தின் ஆளுனராக இருந்த ஹென்றிக் ஸ்வாடர்குரூன் யாழ்பாணச் சமூகத்தைப் பற்றி 1697 ஆம் ஆண்டு எழுதிய நினைவறிக்கையைப் படிப்பவர்கள் இவ்விரு எழுத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போது வேலப்பணிக்கன் ஓப்பாரியின் பின்னணியையும் அதன் பின்னால் இருக்கக்கூடிய சமூகஓட்டத்தையும் நாம் பெரிய அளவில் உணர்ந்துகொள்ளக்கூடும்.
• யானை பிடிக்கவேண்டிய நெருக்கடி வன்னித்தலைவனுக்கு ஏன் வந்தது?
• அக்காலத்தில் யானை பிடிக்கும் சமூகத்தின் முக்கியத்துவம் என்ன?
• யானையின் அன்றைய முக்கியத்துவம் என்ன?
• பெண் ஏன் இறந்து போனாள்?
• யானை ஏன் இறந்தது?
இந்த ஐந்து கேள்விகளையும் நாம் எழுப்பும்போது அதற்கான விடையை தளபதி ஹென்றிக் ஸ்வாடர்குரூன் எழுதிய அறிக்கையில் கண்டறிய முடிகிறது. காலனிய ஆதிக்கத்தின் உண்மைமுகத்தினையும் இதன்மூலம் காணக்கூடும்.
Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatnam
தளபதி ஹென்றிக் ஸ்வாடர்குரூன் யாழ்பாணச் சமூகத்தைப் பற்றி 1697 ஆம் ஆண்டு எழுதிய குறிப்பறிக்கை, பின்னர் ஆங்கிலேயரால் 1911ல் மொழிபெயர்க்கப்பட்டு, ”Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatnam–, என்ற தலைப்பில் இன்று மின்னச்சுப்பிரதியாகவும் படிக்கக் கிடைக்கிறது.
ஆளுனர் ஸ்வாடர்குரூன் யாழ்பாணத்திலிருந்து மலபார் பிரதேசத்திற்கு தற்காலிக வேலைமாற்றம் வந்தபொழுது, அவர் அங்கு செல்லும் முன், தான் இல்லாக்காலத்தில் யாழ்பாணத்தை எவ்வாறு ஆட்சி செய்யப்வேண்டும் என்று ஒல்லாந்த நிர்வாகக் குழுவினருக்கு எழுதிய குறிப்பறிக்கை அது.
இது எமது வரலாற்று ஆசிரியர்களால் ஆதாரங்களை முன்வைத்து எழுத்தப்பட்ட ஒரு ஆவணமல்ல. அன்றைய காலகட்டத்தில் ஒல்லாந்தர் தமது நிர்வாக ஆதிக்கத்தை சரிவரச் செய்து முடிப்பதற்காக அவர்களின் நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்ட விபரிப்புக் குறிப்பு. யாழ்ப்பாணச் சமூகம், அதன் கட்டமைப்பு, அதன் உட்கூறுகள், சமூக உளவியல், பண்பாட்டு நடைமுறைகள், சாதியப் பாகுபாடுகள் குறித்து அவர்களின் புரிதலாக எழுதப்பட்டுள்ளது. அந்நிலைமைகளைத் தமக்குச் சாதகமாகக் கையாளுதல் என்பதே இதை எழுதியதற்கான அவர்களின் முதன்மை நோக்கம்.
இதில் நாம் முக்கியமாக கவனிக்கத்தக்கது எதுவெனில், இந்த அறிக்கை பொது மக்களுக்காகவோ அவர்கள் பார்வைக்காகவோ எழுதப்பட்டதல்ல. தமது ஆட்சிமுறையை, தமது எண்ணங்களை, யாழ்ப்பாணம் பற்றிய அவர்களது கணிப்பை, உபயோகிக்க வேண்டிய தந்திரங்களை, ஆளவேண்டிய முறையை, யாழ்பாணத்துச் சமூகத்திற் காணப்பட்ட பிரிவினைகளை தமக்குச் சாதகமாகக் கையாளுவதற்குச் சாதகமான வழிகாட்டல் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போகும் அறிக்கையாகவே இருக்கிறது.
அதாவது தமது காலனிய ஆட்சியின் முகத்தை அவர்கள் தமது கையினாலேயே எழுதிவைத்த பிரதி என்பதே இதற்கு இருக்கும் முக்கியத்துவமாகும்.
முன்னெழுப்பிய கேள்விகளுக்கான விடையை நாம் இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
இன்றைய போர்களில் பாவிக்கப்படும் பீரங்கி வண்டிகளுக்கு நிகராக அன்று யானைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றன.
யானை வணிகத்திற்கான சந்தைகளாக வங்காளம் மற்றும் கோல்கொண்டா (ஆந்திரா) போன்ற இடங்கள் இருந்திருக்கின்றன. யானைகளை மரக்கலங்களில் ஏற்றியும்- பின்னர் கால்நடையாகவோ அல்லது கப்பல் வழியாவோ வங்காள தேசத்திற்கும் கொண்டுசென்று இருக்கின்றனர். காலனிய ஒல்லாந்த கிழக்கிந்திய கம்பனிக்கான யானை வணிகத் தரகர்களாக முதலியார்கள் இருந்திருக்கின்றனர் என்பது ஸ்வாடர்குரூன் அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.
தென்னாசிய உபகண்டத்தில் காலனிய வணிக ஏகாதிபத்தியங்களுடைய போர்களுக்கு யானைகள் முக்கிய தேவையாக இருந்தன. அதனால் தென்னாசிய காலனிய யதார்த்தம் ஒல்லாந்த காலனிய ஆளுனர்களுக்கு யானை பிடிக்கவேண்டி நெருக்கடியைக் கொடுத்தது.
யாழ்ப்பாணத்து ஒல்லாந்தர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய, அவர்களுக்குத் திறை கொடுக்கும் வன்னித் தமிழ்ப்பிரபுக்கள்; யானை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்ப்பிரபுக்கள்; பணிக்கர் சமூகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.
வன்னித் தமிழ்ப்பிரபுக்கள்; யானை பிடித்துக் கொடுக்காத பட்சத்தில் அவர்கள் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவர் அல்லது யாழ்ப்பாணக்கோட்டைச் சிறையில் இருக்க நேரிடும். இந்த அழுத்தம் காரணமாகவும், தமது பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழ்ப்பிரபுக்கள்; யானை பிடித்துக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.
இதன் காரணமாக, பரம்பரையாகப் போர்த் தேர்ச்சி பெற்றவர்களும், பாரம்பரியமாக யானை பிடித்து அதைப் பழக்குபவர்களுமாக இருந்த பணிக்கர் சமூகத்திற்கு காலனியக் காலத்தில் இருந்த முக்கியத்துவத்தை எம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
அதற்குச் சான்றாக
போகவேண்டாம் என்று சொன்னால்
என்நயிந்தை ஆண்டவனே – இந்தப்
பூலோகத்தார் ஏசுவரே
என்ற பாடல் வரிகளில் பணிக்கர் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டிருந்த நெருக்கடியை சொல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அழுத்தங்கள் இப்படியாகக் கைமாற்றப்பட்டுக்கொண்டே போகிறது. உலகலாவிய போர்கள், மற்றும் உலகை ஆளநினைக்கும் காலனியசக்திகள் போன்ற பெரிய சக்திகள் கொடுக்கும் அழுத்தம் யாழ்பாணத்துக் காலனிய ஆட்சியாளர்களுக்கு வருகிறது, பிறகு வன்னித்தலைவர்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது, அதைத்தொடர்ந்து பணிக்கர் சமூகத்திற்கும், பணிக்கர்களுக்குப் பிடிக்கமுடியாத அடங்காத யானை என்பதால் மனிதாபிமான அடிப்படையில் யானை பிடிக்கச் சென்ற அரியாத்தைக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இறுதியில் அழுத்தம் பெண்ணிலும் இயற்கையிலும் வந்து முடிகிறது.
இதில் நாம் மற்றுமொரு விடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இக்காலப்பகுதியில் யானைகளின் தேவையென்பது, பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்களில் காலனிய போர்களுக்காகப் புதியாய் எழுந்த தேவையாகும். எனினும் இக்காலத்திற்கு முன்பிருந்தே யானை பிடிக்கும் சமூகம் இருந்திருக்கிறது. யானைகளின் தேவைகளும் வேறு வடிவங்களில் இருந்திருக்கின்றன.
காலனியகாலத்திற்கு முன்னர், தென்னாசிய அரசுகளுக்கும், அவர்தம் சேனைகளுக்கும், கோவிற்பணிகளுக்கும் யானைகளின் தேவை அன்றைய காலச்சூழலில் இருந்தன. காலாகாலமாக எல்லா ஆதிக்கசக்திகளுக்கும் யானையின் தேவை இருந்து வந்திருக்கின்றது. காலனிய காலத்தில் இத்தேவை புதியவடிவம் பெற்று விளங்கியது என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
ஹென்றிக் ஸ்வாடர்குரூன் பார்வையில் ஈழத்துச் சமூக சாதியமைப்பு மனநிலை
ஹென்றிக் ஸ்வாடர்குரூன் எழுதிய குறிப்பில் சாதிய மனநிலை பற்றிய குறி;ப்புகளும் முக்கியமானவை. ஈழத்து சமூகத்தின் சாதியக் கட்டமைப்பும் சமூகத்தின் மனநிலையும் எப்படிக் கையாளபட்டிருக்கிறது என்பதை அவ்வறிக்கைக்கூடாக அறிகிறோம்.
ஈழத்தமிழ் சமூகம் எப்படிப்பட்ட அற்ப சிந்தனைகளைக் கொண்டிருந்தது என்பதையும் அதை உலக சக்திகள் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் அவர்களின் அறிக்கை விபரிக்கின்றது. இப்படியான சாதியப் பிரச்சனைகளே மக்களின் பிரதான பிரச்சனைகளாகக் காட்டி, சூழ்ச்சியோடு தமது விடயங்களைச் சாதித்துக் கொள்ளும் ஆதிக்க சக்திகள் இன்றுவரை அதையே கையாண்டு வருகின்றன. இதுவே அவர்களுடைய செய்முறைத் தந்திரமாக, கைங்கரியமாக விளங்குகின்றது. எமது சாதிய சமூக ஆதிக்கப் பிரிவினைகளைப் பயன்படுத்தி எப்படி இதைவிடப் பெரிய ஆதிக்கத்தை உலகநாடுகள் எம்மீது திணித்துக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்வதே ஹென்றிக் ஸ்வாடர்குரூன் குறிப்பைப் படிப்பதால் அடையக்கூடிய படிப்பனை.
வேலப்பணிக்கர் ஒப்பாரி ஒரு மக்கள் இலக்கியம்
தமிழகத்தின் காலனியத் துயரை, வீரத்தைப் பேச வீரபாண்டிய கட்டப்பொம்மன் கதை போலவும், ஈழத்து சங்கிலியன், பண்டாரவன்னியன், கதைகள் போலவும், ஈழத்து காலனியத் துயரையும், வீரத்தையும் பேசும் மக்கள் இலக்கியமாக வேலைப்பணிக்கர் ஒப்பாரியைக் குறிப்பிடமுடியும்.
அரசர்களுக்கு ஊடாகக் கருப்பொருளை நகர்த்திச் செல்வதென்பது இலக்கிய வழக்கத்தின் பொதுமுறை. ஆனால் வேலப்பணிக்கன் ஒப்பாரி மக்களின் வாழ்க்கையை ஊடறுத்து அவர்கள் வாழ்வியலையும், அவர்களுடைய சமூக அவலத்தையும் மக்கள் மூலமே எமக்கு எடுத்துக் காட்டுகிறது. இது வேலப்பணிக்கர் ஒப்பாரியின் தனிச்சிறப்பு எனலாம்.
பொதுவாக பெண்களே ஒப்பாரி சொல்லி அழுவது வழக்கு. வேலப்பணிக்கன் தன் மனைவி அரியாத்தை இறந்தபோது சொல்லி அழுத ஒப்பாரி இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகவழக்குக்கு மாறாக ஒரு ஆண் பெண்ணுக்காக உடன்கட்டை ஏறுதல் பற்றியும் இக்கதை எடுத்தியம்புகிறது. முந்தய பிற இலக்கியங்களோடு ஒப்புநோக்கையில் இது ஒரு மாற்றீட்டு இலக்கியம். எக்காலத்திலும் பெண்குலத்தை மட்டுமே தீயிலிட்டுப் பார்த்த இலக்கிய வடிவங்களின் மாற்றீட்டு வடிவமாக இவ்விலக்கியம் விளங்குகிறது. அரியாத்தையோடு வேலப்பணிக்கன் உடன்கட்டை ஏறுவதோடு கதை முடிகிறது.
ஒரு ஆணால் பிடிக்கமுடியாத யானையை பெண் தனது ஆத்மபலத்தல் பிடிக்கிறாள். கொம்பன் யானையைப் பிடிக்கப்போகும் அரியாத்தை சாதாரணமாக யானை பிடிக்கும் முறைகளைக் கையாளவில்லை. அவளுடைய ஆத்ம பலத்தால் பிடிக்கிறாள். அவளுடைய ஆத்மபலத்திற்கு யானையும் கட்டுப்படுகிறது. அவளுடைய ஆத்மபலம் அல்லது மனோபலம் அல்லது வசியபலம் என்பது பெண்களின் அசாதரண உளவியல் ஆற்றலை சொல்கிறது. இந்த இடம் ஒரு படிமக் குறியீடாகவே வருகிறது.
வசியமுறைகளில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் வருவதால் அதன் மரபுப்படி யானையின் வசியக் கட்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவைமுடிந்தவுடன் அவிழ்க்க வேண்டும். அல்லது யானைக்கும் அவளுக்கும் மரணம் நேரிடும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக மரணம் பற்றிய தகவல்களைச் சொல்லாமல் குறியீடாக்கி இவ்விலக்கியம் புனையப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தோம். இக்குறியீடு என்பது பெண் உளவியல் ஆற்றலையும், பெண்கள் தொடர்பான சமூக உளவிலையும் ஆழ்ந்து நோக்கக்கூடிய எமக்கான வெளியை இவ்விலக்கியம் தந்திருக்கிறது.
காலனிய அழுத்தச்சுமை பெரிதும் பெண்களையும் இயற்கையையுமே கடைநிலையில்; வைத்திருக்கிறது என்பதற்கும், அழுத்தங்களின் காரணமாக முழுப் பாரத்தையும் தம் தோள் மீது சுமர்ப்பவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாகவும் இது விளங்குகிறது.
இன்னொரு பார்வையில் இது பெண்ணுக்கெதிரான ஒரு சூழ்ச்சியாக எடுத்துக்கொள்ளவும் முடிகிறது. நஞ்சினால் அரியாத்தை இறந்திருப்பின் இது பெண் ஆளுமை தொடர்பாக எழும் எதிர்வினையாகவும் இதை நாம் பார்க்க முடியும்.
பெண் ஆளுமைகளுக்கு எதிரான சமூகஓட்டத்திற்கும் வேலப்பணிக்கர் ஒப்பாரி ஒரு வடிவம் கொடுத்திருக்கின்றது.
பணிக்கர் குலத்தவன் ஒருவனால், ஒரு ஆணால் அடக்க முடியாதெனக் கருதிய யானையை, ஒரு பெண் அடக்கிவிட்டமை ஆண்குலத்திற்கு அவமானமாகக் கருதி, பொறாமையால் செய்த சூழ்ச்சி என்ற விளக்கமும் இதற்குண்டு.
காலனியப் பின்னணியோடு வரலாற்றுப் பார்வையில் பெண் இருப்புத் தொடர்பாக எடுத்தியம்பும் ஒரு இலக்கியமாகவும் வேலப்பணிக்கர் ஒப்பாரியைக் காணமுடியும்.
வேலப்பணிக்கன் தொடர்பான கலைப்படைப்புக்கள்
வேலப்பனிக்கன் தொடர்பான கலைப்படைப்புக்கள் என்று நோக்குமிடத்து எமது தமிழ்ச் சமூகம் காலனிய மேலாதிக்கத்தை விட்டுவிட்டு, பெண்வீரம், கற்பு என்பவற்றிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது என்பதை மேடையேற்றப்பட்ட பல நாடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஈழத்தமிழர் காலனிய காலத்து யதார்த்தம் இன்றைக்கும் வெளிப்படுத்த முடியாமல் போன துயரமாகவே எம்மத்தியில் இருக்கின்றது. எமது காலனிய காலத்து அடிமைநிலை இன்று மாறியிருக்கின்றதா? அல்லது இப்படியான கட்டமைப்பு புதிய வடிவில் தொடர்ந்து கொண்டிருக்கிறதா என்பதே கேள்வி.
காலனியத்தின் நோக்கத்தை, அன்றைய தமிழ்ச் சமூகத்தால் பகுத்தறிய முடியவில்லை. அதுபோலவே அரசியல், சமூக, பொருளாதாரம் உட்பட பலமுனைகளிலும் பரந்தளவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சக்திகளின் சூட்சும முடிச்சுக்களை அறிந்து கொள்ள முடியாத நிலையிற்தான் எமது சமூகம் சமகாலத்திலும் இருக்கின்றது.
தென்னாசிய மக்களுக்காகவும், ஈழத்தமிழ்ச் மக்களுக்காகவும் நாம் மீளப் பார்க்க வேண்டிய காலனியத்தின் துயர் மிக்க ஓர் இலக்கியவடிவம் வேலப்பணிக்கன் ஒப்பாரி.
உலக ஆதிக்கசேவைப் படிமுறையில், மேலாண்மை சக்திகளாக எவை இருந்தாலும் இறுதியில் தமது ஆத்மபலத்தையும், மனோபலத்தையும் இழக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் கடைநிலையில் இருக்கும் மக்கள் என்பதே இந்த இலக்கியத்தின் உள்ளீடு. அன்றைக்கும் இன்றைக்கும் இப்படியாவே உலக வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வேலப்பணிக்கன் ஒப்பாரியை மூலமாகக் கொண்ட பிற நூல்கள்
ஆனை கட்டிய அரியாத்தை (நாடகம்)
அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா)
வவுனியா: வவனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்,
1வது பதிப்பு 1993
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்.
வெல்லவூர்க் கோபால், இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம், மட்டக்களப்பு,
விபுலம் வெளியீடு, 1வது பதிப்பு, ஜுன் 2003
ஆனையை அடக்கிய அரியாத்தை.
செல்லையா மெற்றாஸ்மயில். யாழ்ப்பாணம், பாரம்பரிய கலைகள்
மேம்பாட்டுக் கழகம், 1வது பதிப்பு ஐப்பசி 1995.
யாழ்பாண வைபவ கௌமுதி
கல்லடி வேலப்பிள்ளை, 1வது பதிப்பு 1918,
2வது பதிப்பு 2002, ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ்
வன்னி நாட்டார் இலக்கியம்
முல்லைமணி வே சுப்பிரமணியம்
1. வேலப்பணிக்கன் ஒப்பாரி – அ. சண்முகதாஸ், த. குணலட்சுமி யாழ்பாணப் பல்கலைக்கழகம்,
2. வேலப்பணிக்கன் ஒப்பாரி – வ. கணபதிப்பிள்ளை, 1934
3. Memoir og Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatanam –1697 – Notes by the Govermnet Archivist, H. C. Cottle, Goverment Printer, Transtlated by Sophia Pieters
ஓவியம்: மருது