வாழ்க்கை பராபட்சமானது.

 

07A_12508

மனித மனம் சில நேரங்களில் திடீரென ஒரு நிலைமாற்றம் அடைகிறது.

ஆழ்கடலில் இருந்து எழுந்த பழைய ஞாபகங்கள் முடிவிலி அலைகள் போல அடிக்கத் தொடங்குகிறது.

மனிதப் பிறவிகளுக்கு அதற்கென்ன குறைவு? எத்தனை கசப்புகள்? எத்தனை இழப்புகள்?

தனிமைப் பொழுதுகளுக்குத் தெரியும் எப்போது எதை எடுத்து மனத்திரையில் நிறுத்தவேண்டுமென?

சட்டென நெஞ்சு பாரமடைந்துவிடும். இரத்த நாளங்களில் நினைவுத் திரள்கள் உருண்டு அடைத்துக் கொண்டு நிற்கும். அது ஒரு உறவின் மரணமாக இருக்கலாம். ஒரு நட்பின் பிரிவாகவும் இருக்கலாம்.

சில நேரங்கள் சில வார்த்தைகள் ஒரே இடத்தில் இதயத்தைக் கீறிக்கொண்டு இருக்கும். வார்த்தைகள் கூடத் தேவையில்லை.

சமயங்கலில் ஒரு உடல்மொழி எத்தகைய ரணங்களையும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

இன்றும் அப்படித்தான்!

அந்த மனிதனுடைய இழப்பு திடீரென உலுப்பியது. கண்கள் பலமாக நனைந்து சடசடவெனக் கொட்டத்தொடங்கியது. எதுவும் என் கட்டுப்பாட்டில் நிற்க மறுத்தது. கால்களை மடக்கி ஒரு ஓரமாய் போய் அமர்ந்து கொண்டேன்.

அந்த மனிதன் எனக்கு அறிமுகமாகும் போது ஒரு ஐந்து வயதிருக்கும். நாற்பதுக்கும் ஐம்பதிற்கும் இடைப்பட்ட தோற்றம். வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி. தோள்களில் இருந்து குறுக்காக ஒரு கறுப்பு பை தொங்கிக் கொண்டிருக்கும்.

பொல்லின் நுனியில் ஒரு பொம்மை மிக்க அலங்காரத்தோடு செய்யப்பட்டிருக்கும். அந்தப் பொம்மையில் இல்லாத நிறங்களே இல்லை எனலாம். அத்தனை வர்ணங்களும் உடுத்திக்கொண்ட அழகு பொம்மை அது. மலைப்பாம்பின் தொக்கையளவில் பொம்மையின் கீழே ஜவ்வுமிட்டாய் சுற்றப்பட்டிருக்கும்.

அந்த ஜவ்வுமிட்டாய்காரர் எப்போதும் எங்கள் குடியிருப்புகளின் வெளிப்பக்க இரும்புக் கதவின் பின்னால் சுவரோடு ஒட்டிய வண்ணம்தான் நிற்பார்.

அங்கிருந்துதான் சத்தம் வரும்.

ஒரு பத்து பைசா போதும். அத்தனை அழகான ஒரு கடிகாரமோ, அன்னமோ, ஒரு பூவோ ஜவ்வுமிட்டாயை இழுத்து எடுத்து கையில் கட்டிவிடுவார். ரயில் கூட செய்து குடுப்பார்.

ஜவ்வுமிட்டாயில் அவர் செய்யும் உருவத்தின் வண்ணங்களையும் அதன் வடிவங்களையும் எத்தனை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக்கொண்டு ஊர்க் குட்டிகள் எல்லாரோடும் நானுமங்கு நின்றிருக்கிறேன் தெரியுமா?

அந்த மனிதர் விசித்திரமான அன்புக்காரர். அவரிடம் பணம் கொடுத்தால் மட்டும் போதாது. அவர் கேட்கும் ஒரு கேள்விக்கும் விடை சொல்ல வேண்டும். அது ஒரு விடுகதையோ, அல்லது பொது கேள்வியாகவோ இருக்கும்.

பத்து பைசா இல்லாமல் வந்து வாய் பார்த்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கும் ஏதாவதொரு குட்டி உருவமேனும் செய்து கொடுப்பார். எனக்கும் சில முறை ஓசி ஜவ்வுமிட்டாய் கிடைத்தது.

அவருடன் பேசிக் கூத்தடிப்பதற்கென்றே நாங்கள் அவர் குரலுக்கு சிலவேளைகளில் காசு எடுக்க மறந்து ஓடிப்போவதுண்டு. எல்லாம் முடிந்த பின்னும் அவரோடு அடுத்த தெருவரை பின்னால் போய் அவரை இன்னொரு குழு சூழ்ந்து கொள்ளும் வரை பயணிப்பதுண்டு.

இப்போது அந்த ஜவ்வுமிட்டாய்க்காரர் என்ன செய்துகொண்டிருப்பார்?

எங்கே இருப்பார்?

இன்னமும் குழந்தைகள் அவரிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கின்றனரா?

தெரியவில்லை!

அந்த மனிதர் ஏன் என் நினைவுக்குள் இன்று வந்தார்?

ஏன் இத்தனை அசௌகரியமாக இருக்கிறது? நான் ஏன் இத்தனை உணர்ச்சிவசப்பட்டுப்போய் இருக்கிறேன். இத்தனை வருடங் கழித்து மனது வருந்திக்கிடப்பதன் காரணம் தெரியவில்லை?

எங்கள் உலகத்தை அழகாக்கியவர்கள் ஜவ்வுமிட்டாயக்காரர்கள் மட்டுமா? சேமியா ஐஸ்காரரில் இருந்து நாவல்பழம் விற்கும் பாட்டி, ரொட்டிக் கடைக்காரர், பஞ்சுமிட்டாய் விற்பவர், குட்டிக் குட்டிச் சில்வர் பாத்திரம் விற்பவர் என எத்தனை அழகான மனிதர்களையெல்லாம் தொலைத்துவிட்டிருக்கிறது வாழ்வு.

இவர்களால் கொடுக்கப்பட்ட அன்பையெல்லாம் என் பிள்ளைக்கு ஒருத்தியாய் கொடுக்க வேண்டும் என்பது எத்தனை அழுத்தம்!

இந்த வாழ்க்கை ஏன் ஒரு ஜவ்வுமிட்டாய்க்காரனை என் மகனுக்கு அறிமுகப்படுத்தவில்லை?

பின்னூட்டமொன்றை இடுக