அன்பினைச் சேர்தது ஐம்பூதங்கள் ஆறு!

இன்னும் சில மணிநேரங்கள் தான்…

ஒரு நொடிப்பொழுதுதான்…

அவ்வளவே தான்!

இன்னுமொரு ஆண்டும் ஓடியேவிட்டது.

இவ்விரவில் நான் சந்தித்த மனிதர்களையும், கண்ட அனுபவங்களையும் நினைத்துப்பார்க்கிறேன்.

எத்தனை நொடிகள்?
எத்தனை நகரங்கள்?
எத்தனை மனிதர்கள்?

பரிமாறிக் கொண்ட நேசங்களும், கோபங்களும், கடந்து போன மனிதர்களும், கடந்து போக எண்ணும் உறவுகளும் தான் எத்தனை? எத்தனை?

அன்பும் கோபமும் அவ்வளவு நெருக்கமானவையா என்ன? இந்த ஆண்டில் தான் நான் முன்னைக்கும் மேலாக மிகவும் கோபப்பட்டிருக்கிறேன். மனதுடைந்தும் போயிருக்கிறேன். சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் அன்பை முழுமையாக, உண்மையாகக் காட்டியுமிருக்கிறேன்.

அன்பு என்பது இயைவுதானே!

ஆனாலும் அன்பு இயைவிற்கும் மேலானது. அன்பில் ரசங்கள் இருக்கின்றன.

அன்பென்ற சொல்லில்தான் எத்தனை இனிமை. எத்தனை பொருள். இருந்தும் அன்பு காட்டுவது ஒன்றும் அத்தனை எளிதானதல்ல.

இந்தப் பிரபஞ்சத்தில் பிசிரற்ற அன்பைக் கொடுப்பதும், பெறுவதும்தான் மிகக் கடினமானது. வாழ்வின் பெரும் சூட்சமம் அதில்தான் அடங்கிக்கிடக்கிறது.

இந்தப் பனிதேசத்து மரங்கள் எல்லாம், தமது பச்சை நிறத்தைத் தாமே உறிஞ்சி உள்ளிழுத்து, அடைகாத்து வேனிற்காலத்தில் துளிர்விடும் இலைகளுக்கு ஊட்டுவதை கண்டிருக்கிறீர்களா?

எத்தனை நிறைவுதரும் இயைவு இது! இயைவு என்பது அன்பின் இன்னொரு பக்கம் தானே?

வானம் ஏன் கடலை உறிஞ்சுகிறது?
இந்த மேகங்கள் ஏன் மோதி உடைகின்றன?
மழை தொட்டு மழை தொட்டுப் பூக்கள் சிந்துகின்றனவே!
அருவிகள் குதித்துக் குதித்து எங்கு ஓடுகின்றன?

சின்னக் குமிழிகள் கூட புதிது புதிதாய் சடசடவென்று உடையுதற்கான காலப்பிரமாணந்தான் எது?

பூதங்கள் ஐந்தும் தனித் தனியாக இருப்பதில் பயனுண்டோ? அதன் இயைவுகள்தானே பிரபஞ்சத்தையே அர்த்தப்படுத்துகிறது?
இயைவு!
அணைத்தும் இயைவின் சாரம்!

என்னதான் அன்பானவள் என்றாலும் எல்லாருக்கும் அன்பின் தாயாக இருக்க முடிவதில்லையே, ஏன் தெரியுமா?

பல சமயங்களில் அன்பைக் காட்டுவதே அபத்தமாகி விடுகிறது. இந்த உலகில் அன்பு காட்டுவதற்கென்று மனிதர்களுக்குச் சில அளவீடுகள் இருக்கின்றன போலும்.

அளவீடுகள் எல்லாம் ஒவ்வொரு மனிதர்களின் தலைக்குள்ளும் கனகச்சிதமாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதை அவர்கள் தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் வகையில் உபயோகிக்கத் தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இருக்கவும் வேண்டும்.

அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஊசி முனையளவு இடைவெளியுண்டு. அதனுள் சிறு பொத்தல் விழுந்தால்கூட, சிறுகச்சிறுக பொத்தலினூடாக அன்பு ஒழுகத் தொடங்கிவிடுகிறது. வெறுப்பு அதன் பொந்துகளையெல்லாம் நிரப்பத்தொடங்குகிறது.

அந்தக் கணத்தில் பிரக்ஞையோடு எவரையும் காயப்படுத்தாமல் அந்த இடத்தைவிட்டு கடந்து போய்விடுவதும் அன்பு தான். இந்த மாபெரும் சூட்சுமம் தெரிந்தவர் யாவரும் மாபெரும் அன்புக்காரர் தான்.

மாறாக, அவ்விடத்தை விட்டு நகரமால் எவ்வளவு தூரம் வெறுப்புணர்வைக் காட்டமுடியுமோ அவ்வளவு தூரம் வெறுப்புணர்வைக் காட்டுவதென்பது மனித மனத்தின் ஒருவித இயலாமை என்றுதான் சொல்லவேண்டும்.

மனிதன் இங்குதான் மனிதத்தை இழக்கிறான்.

நகர்ந்து செல்ல இயலாத சந்தர்ப்பங்களில் தான் வாழ்வின் உன்னதங்களும் தொலைக்கப்படுகின்றன.

அன்புதான் இயக்கம். அன்பில்லா இயக்கத்துள் கட்டுண்டு உழலும் மனிதர்கள் பாவப்பட்டவர்கள்.

பூமிக்கும், பிரபஞ்சத்திற்கும், ஓர் உயிருக்கும், உயிரற்றவைக்கும் ஆதராம் அன்புதான்.

ஐம்பூதங்களும் ஒன்றோடு ஒன்று உரசுவதினாற்தான் இயற்கையும் இயங்குகிறது.

அணைத்துக்கொள்வதும், ஆறுதல் தருவதும், தேடிப்போவதும், காத்திருப்பதும், கடிந்துகொள்வதும் எப்படி அன்பெனப்படுகிறதோ அப்படியாகவே அன்பை வெளிப்படுத்த முடியாதவிடத்து கடந்துபோவதும், அதுதான் சக உயிரிடத்தின்பால் காட்டும் பேரன்பு என்பேன்.

உலகு யாவும் அன்பு. ஆம், அது புள்ளி புள்ளியாக அன்பினால் ஒரு வட்டவடிவில் வரையப்பட்டிருக்கிறது. ஒரு புள்ளியாக நானும், ஒவ்வொரு புள்ளிகளோடும் இணைந்து பிரபஞ்சத்தோடு கலந்திடவே விரும்புகிறேன்.

அன்பு இனிது.

அனைவருக்கும், எனது அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

…………………..
31.12.2018 – 23:00

 

49342371_10218058769291361_1460536150497165312_n

 

One thought on “அன்பினைச் சேர்தது ஐம்பூதங்கள் ஆறு!

பின்னூட்டமொன்றை இடுக