கொஞ்சம் தேனீர்!

3c15a51a9c7cfea74e9f2cdf7dc77008

எனக்குத் தெரிந்த உலகின் மிக ரம்யமானதொரு கலைப்பொருள் என்றால் அது தேனீர்க்குவளைதான். ஒன்றுபோல் டசின் கணக்காக வாங்கி வைத்திருக்கும் தேனீர்க் குவளைகளைவிட அப்பப்போ தனித்தனியாக அழகியல் வேலைப்பாடுகளுடன் குவளைகளை வாங்கிச்சேர்ப்பதில் தனி ஆர்வம் உண்டெனக்கு. இப்போதும் தேனீர்குவளையில் இருந்து கிளம்பி காற்றோடு கலந்துவிடும் ஆவியின் அழகினைப் பார்த்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். குவளையின் விளிம்பில் இருந்து அதன் வாசம் போதையெனக் கிளம்புகிறது. விரல்களைச் சூடேற்றியபடி இந்தப் பனிக்காலத்தை பருகியிருத்தல் என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.

பிறர் தரும் தேனீர்த் தருணங்களில் மனம் ஒரு விசித்திர மனநிலையை சட்டென்று அடைந்துவிடுகிறது. தேனீர் கிடைத்ததன் பேரானந்தம் ஒருபுறமும்; அதன் சுவைபற்றிய சிந்தனை மறுபுறமும் பெருவேகமெடுத்துச் செயல்படுகின்றன. பிறகு இந்தச்சுவையும் மனம் இன்னுமொரு தகவலாகச் இதயத்தின் ஒரு ஓரத்தில் சேகரித்து வைத்துவிடுகிறது.

தேனீருக்கு என்றே ஒரு வாசனை உண்டு. அந்த வாசத்தை நீங்கள் நுகர்ந்ததுண்டா? அம்மா தரும் தேனீர்ச் சுவைக்களைத்தாண்டிய ஒரு சுவையைக் கொண்டது. அம்மா வாசனை கலந்த தேனீர் எதற்கும் நிகரிலல்லா நெருக்கத்தை உடையது.

தேனீர் வாசனை, காலங்களைக் கடந்து பின்நோக்கி என்னை அழைத்துச்செல்லக்கூடியது. தேனீர் எப்போதும் ஒரே வாசனையையுடையதல்ல. வைன் அருந்தும்முன் அதன் வாசனையை நுகருதல் வேண்டும் என ஒரு வைன் பிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தேனீர்க்கு உள்ள சுவையும் அப்படியே. ஒவ்வொரு முறையும் வரும் வாசனை அதற்கேயான காலத்திற்குள் எம்மைக் கடத்திப் போகிறது. அது எந்த இடமோ காலமோ என்பதையெல்லாம் தாண்டி, பிரபஞ்சத்தின் எந்த மூலையையும் நொடிக்குள் அடைந்துவிடுகிறது. அந்த இடம், ஒருநாள் நாம் கண்ட கனவின் சிறுகணமாகக்கூட இருக்கலாம்.

ஒரு தேனிர் குவளை இல்லாமல் எழுதப்படும் எனது கவிதைகளில் சுவையிருப்பதில்லை என்பது நானே அறிந்துகொண்ட புதியதகவல். ஒரு மழைநாளில் அருந்தும் தேனீரின் சுவையை, அந்த மழைமேகம் வானில் இருந்து அனுப்பிவைப்பதாக உங்களுக்கு எப்போதேனும் தோன்றியிருக்கிறதா? திறந்த சாளரத்தினூடாக ஊடுருவும் மழைச்சாரலோடு நின்று தேனீர் பருகி இருக்கின்றீர்களா? அல்லது ஒருநாளேனும் மழைநாளொன்றில் வெளியில் நின்று உங்கள் தேனீர்க்குவளையை மழைதுளிகள் நிரப்பிவிடுவதைNயுனும் பார்த்து அனுபவித்ததுண்டா? அல்லது ஒரு மெல்லிய போர்வையினுள் குடங்கிய வண்ணம் தேனீர் பருகிய அனுபவமுண்டா. பாரதியோ, பிரமிளோ அல்லது பிடித்த ஓரு கவிதைநூலோ, தேனீருடன் படிக்கையில், அந்தக்கணம் நாம் அருந்தும் தேனீரின் சுவை கவித்துவமானதாகி விடுகிறது. கையில் தேனீர்குவளை இல்லாமல், படிக்கும் நூல்கள் எல்லாம் சமயங்களில் வெற்றுக் காகிதங்களைப் போன்றே தெரிகின்றன. மேற்கூரிய அனுபவங்கள் எல்லாம் எல்லாருக்கும் சாதாரணமாக நிகழக்கூடிய வாழ்பனுபவங்கள்தாம். ஆனாலும் நீங்கள் இவைகளைப் பிரக்ஞைபூர்வமாக உணர்தல் என்பதே வாழ்தலையும் உணரச்செய்கிறது.

எனக்கு கிடைக்கும் பரிசுகளில் மிகவிரும்பத்தக்கதாக இருப்பது தேனீர்குவளைகள்தாம். அவைகளின் மேல் எனக்குள்ள நேசம் அபாரமானது. பரிசுகளாகத் தரப்பட்ட தேனீர்க்கோப்பைகள் தந்தவர்களுடைய, பொழுதுளையும் நேசங்களையும் மீளத்தருகிறது. அவர்களுடைய நேசத்தை மீண்டும் மீண்டும் பருகுவதற்குரிய வாய்பாக மாறிவிடுகிறது.

0b636f2911ddf70c1d8a974fb8ba98ee

எந்தவொரு வேதனையான தருணங்களையும் தேனீர்கோப்பைகள் எனக்கு நினைவுபடுத்துதில்லை என்பது என் அனுபவம். முருகவேள் மொழிபெயர்த்த ”எரியும் பனிக்காடு” என்ற நாவலோ, பாலாவின் பரதேசி திரைப்படமோ கூட மற்றவர்கள் சொன்னது போல எனது தேனீர் பிரியத்தை மட்டுப்படுத்தவில்லை. சொல்லப்போனால் படம் பார்க்கும் தருணங்களில் கூட தேனீர் குடிப்பதே ஒரு தனி ஆனந்தம். தேனீர்குவளைகளை நான் எனது அனைத்துப்பபொருட்களைக் காட்டிலும் பெறுமதிமிக்கதாக பாதுகாத்;து வைத்திருக்கிறேன் என்பது சத்தியமாகப் பொய்யல்ல. வீட்டில் எனது நூல்களுக்குச் சமமாக நேர்த்தியுடன் இருக்கப்பெற்ற இரண்டாவது பொருள் தேனீர்க்குவளைகள்தாம்.

எனக்கென தனிப்பட்ட முறையில் வாங்கிச் சேகரித்த தேனீர்க்குவளைகளை மற்றவர் எடுத்துக்கொள்வதை மனது எப்போதும் அனுமதித்ததில்லை. இந்த விடயத்தில் பல நேரங்களில் நல்ல மனிதர்களை நான் காயப்படுத்திக்கொண்டிருப்பது இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பல சமயங்களில் ஆங்காங்கே வீட்டின் மூலைகளில் இருக்கும் பாதியருந்தப்பட்ட தேனீர்க்குவளைகளே வீட்டு மனிதர்களின் இருப்பைச் சொல்கிறது.

புத்தனின் ஓவியம் வரைந்த தேனீர்க் குவளையில் தேனீர் அருந்துவது போதிமரநிழலின் அமைதியை சுவைப்பது போலானது. புத்தனோ யேசுவோ தேனீரைப் பற்றி என்ன சிந்தித்திருப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு வரும் போதெல்லாம் எனக்கு ஏதும் மனநிலைக் குழப்பமுண்டோ என்று பயந்துவிடுகிறேன். ஒரு புத்தனின் படமோ, வேறு ஓவியங்களோ வரையப்பட்ட தேனீர்க்குவளைகளுக்கும் வார்த்தைகள் எழுதப்பட்ட தேனீர்க்குவளைகளுக்கும் உள்ள வேறுபாடு சுவையிலும் கலந்துவிடுகிறது.

பிறந்தநாள் வைபவங்களிலோ, வேறு கொண்டாட்டங்களிலோ ஞாபகார்த்தமாகத தரப்படும் மனிதர்களின் (சுய) புகைப்படம் போட்ட தேனீர்க்கோப்பைகளை என்ன செய்வதென்றே எனக்குப் புரிவதில்லை. அது ஒரு அசௌகரியநிலை. அந்தக் தேனீர்க் கோப்பைகள் பரிதாபத்திற்கு உரியவை. ஒரு தேனீர்க்குவளையையிட்டு மனம் சஞ்சலப்படுவது இத்தகைய தருணங்களிற்தான்.

சில அசௌகரியமான உரையாடல்களை தொடங்குவதற்கு தேனீரைப் போன்ற அற்புதமான தொடக்கம் எதுவுமில்லை. ”டீ குடிப்போமா” என்ற கேள்வியே பல அசௌகரியங்களை இறக்கிவைத்துவிடுகிறது. நீங்கள் உங்கள் காதலைச்சொல்லத் தவிக்கும் ஒருவர் அருகில் இருக்கிறார் என்றால் நீங்கள் குடிக்கப்படாத ஒரு தேனீரின் சுவையை அருந்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தேனீர் தயாரித்தபின், அதை அருந்தாமல் சட்டியைக் கழுவிஅடுக்கிக்கொண்டிருப்பவர் நிச்சயமாக ஒரு தேனீர் இரசிகரல்ல. தேனீரைக்காட்டிலும் அவுருடைய விருப்பு ஒரு கட்டமைக்கப்பட்ட ஒழுக்கத்தில் இருக்கிறது.
தேனீர் தயாரிப்பதில் மட்டுமின்றி அதை அருந்துவதிலும் உள்ள அழகியலை நீங்கள் உணரும் கணத்தில் நீங்கள் வாழ்தலையும் உணரத்தொடங்குகிறீரீகள். கொஞ்சம் தேனீர் என்பது வெறும் ஒரு குவளைத்தேனீர் அல்ல.

வாழ்தல் இனிது!

14962546_1026075117500994_7965611453829004900_n

One thought on “கொஞ்சம் தேனீர்!

Megala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி