
இந்த அற்புத நகரத்துள் நீங்கள் வந்ததுண்டா
இங்கேதான்
மழைப்பெண்ணாக அழகிய மகள் ஒருத்தி
பல்லாயிரம் ஆண்டுகளாய் வாசம் செய்கிறாள்
தனது நகரத்தின் சுவர்களை
அழகுணரத் துளிர்க்கத் துளிர்க்கத்
பெருவெளிகளாலும் மழைத்துளிகளாலும் மிளரச்செய்கிறாள்
பேதமற்ற மனித குழந்தைகள் குதித்தாட
நீர்தேக்கங்களை நகர வெளியெங்கும் சமைத்து
நீர்ப்பெண்ணாய் ஊறிவருகிறாள்
அடைமழையில்
மூழ்கத்தானே செய்யும் காகிதக்கப்பல்கள்
காற்றலையும் சேலையோடும் தலைப்பூவோடும்
சமயங்களில் முள்ளந்தண்டில் சிறகு முளைக்க
தன் நகரம் தாண்டியொரு பறவையாகி கடல்மேவிக்
வெளியோடு கரைந்துபோகிறாள்
கண் எட்டும் தூரம்வரை
அவளது கனவுகள் எழுந்து
பேரலையாய் அதிரச்செய்கின்றன
ஓர் சமயம்
கலைந்த தேனீக்களைப்போல அச்சமூட்டுகின்றன
ராக்காலத்து நட்சத்திரங்களைப் போல நிறைந்திருக்கிறது
அவள் அகம்நிறையக் காதல்மழை
பிறகு அவை துடிதுடிப்போடு பல சிட்டுகுருவிகளாகி
வாழ்வின் மின்கம்பிகள் நெடுகிலும்
ஒரு முத்தத்திற்காகக் காத்திருக்கிறது
அலைகள் எழுகின்றன
குளங்கள் கரையுடைக்கின்றன
இயற்கை வான்பார்த்தாடுகிறது
மேற்புழுதி ஆழ்நிலைக்குள்ளாகிறது எனினும்
அடிமண் அப்படியே கிடக்கிறது
வாழ்வின் நடனம்!
அவர்கள்
நனைதலுக்கெதிராய் குடைபிடிக்கிறார்கள்
சேறென ஓதுங்கி நடக்கிறார்கள்
மழையென கதவடைக்கிறார்கள்
மழை உயிரின் துளி!
மழை பெண்!
மழை யாவருக்கும் பிடிப்பதில்லை!
மழை யாவற்றையும் நனைப்பதில்லை!









