ஆரோக்கியமான விமர்சனங்கள் ஒரு ஆரோக்கியமான சூழலில்தான் எழமுடியும். ஒரு கலைஞனோ ஒரு அமைப்போ தனது படைப்பின் அல்லது தனது குழுவின் மீது தெளிவான நம்பிக்கை கொண்டுள்ள இடத்திற்தான் அதற்கமைய ஆரோக்கியமான விமர்சகங்களுக்கான சூழல் அமைகின்றது.
தனது படைப்பில் தெளிவான கருத்துடைய ஒரு படைப்பாளியால் தன் தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ அல்லது செவிமடுத்துகொள்வதிலோ தான் தாழவில்லை இதனால் முடிந்தவரை நான் உயர்வதற்கான வழிகளையே உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்ற மனநிலையில் இருந்து ஒரு விமர்சனத்தைப் பார்க்க முடியும்.
ஒரு விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாது விமர்சகர்கள் முட்டாள்கள் அவர்களுக்கு என்ன தெரியும் என்ற மறைத்தல் செயலில் ஈடுபடுவது தன்னம்பிக்கையீனத்தின் வினைகளே.
முன்பெல்லாம் விமர்சனம் என்பது ஆரோக்கயமானது என்ற கருத்து என்னிடம் இருந்தது. ஆனால் அதுவே தனி மனிதர்களது மோதல்களாக அமைந்துவிடுவதையே இன்றைய அனுபவம் கற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமல்ல விமர்சனங்கள் படைப்பாளிகளுக்கு எதிரானவை அவை குறிப்பிட்ட ஒருவரின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கிலேயே எழுதப்படுகின்றன என்ற கருத்துமே இன்றை படைப்பாளிகளிடம் பரவலாக வளர்ந்து வருகிறது.
எழுதப்படும் எல்லா விமர்சனங்களும் சிறந்தவையல்ல. எந்த ஒருவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. எந்த அமைப்பும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதுமல்ல. ஆனாலும் இந்தகணத்தில் ஒரு விமர்சனம் படித்துமுடித்தபின் அந்த விமர்சகரின் எதிர்கால நிலையை நினைத்துப்பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை.
எதுவும் மாறும்! சமூகம் வளரும்!
இதுவும் கடந்து போகும்!
தற்போதய காலங்களில் விமர்சனத்தால் விமர்சனத்திற்குரிய படைப்போ, படைப்பாளியோ பெறும் நன்மை தீமைக்கப்பால் விமர்சகரின் நிலை பரிதாபத்திற்குரியது என்பதே உண்மை. ஒரு நிகழ்வைப்பற்றி யாராகினும் கருத்து வெளியிட்டால் அதை திசைதிருப்பி கருத்துத் கூறியவர் மீதே கேவலமான பழிச்சொல்லும், பழிவாங்கலும் தொடர்வதையே காணக்கிடைக்கிறது. பொதுவில் அவை விடயச்சார்பற்று தனிமனித தாக்குதல்களாகவே மாறிவிடுகின்றன. விமர்சகர்கள் கூறியது சரியான விடயங்களாக இருந்தாலும், கருத்துக்கூறியவர் மீதான காழ்புணர்ச்சியும், பழிவாங்கல் செயல்களும், தனிமனித அந்தரங்கங்களைக் கேவலப்படுத்தும் பதில்களையும் விமர்சகர்கள் பெற்றுக்கொள்வது போன்ற சூழலே இன்று நம்மிடம் வளர்ந்திருக்கின்றது(?). தற்போதெல்லாம் கருத்தைச் சொல்பவர்களுடைய நிலமை பரிதாபத்திற்குரியதாகவே போய்விடுகிறது.









