எனது திரைப்பாடல் தொடர்பான பானுபாரதியின் விமர்சனம்…
கவிதா சினிமாவுக்குப் போனால்…? by piraththiyaal//
பெண்ணியக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த கவிதா, தமிழக சினிமா சகதிக்குள் எப்படி, எப்படி விழுந்தாரோ…? ஆணாதிக்கத்தை ஆவேசமாகச் சாடிய கவிதா எப்படி எப்படி இப்படி…?
“உன் விரல்களில் வில்லாய் உடல் வளைகிறதே, கழுத்துவரை புது உலகம் ஒன்று நகர்கிறதே… கணைகளுமே என் விழியில் வந்து பாய்கிறதே…” ஆணின் போகப்பொருளாய் பெண்ணுணர்வுகளை எப்படி வெளிப்படுத்த முடிகிறது.// முகநூலில் பதிவிடப்பட்ட கவிதாவின் இந்தப் பாடலுக்கு இப்படியொரு குறிப்பை நான் எழுதிவிட்டேனென்று சிலர் ஆவேசப்படுகிறார்கள். நல்லது.
மொட்டாயிருந்தாள்
பூவாய் மலர்ந்தாள்
பஞ்சாய்ப் பறந்தாள்
மடியில் விழுந்தாள்வீணையின் வடிவமாய் என்முன் கிடந்தாள்
அள்ளியெடுத்து நரம்பினைத் தொட்டேன்
இசையாய் சிணுங்கி உள்ளம் கவர்ந்தாள்
வியர்வையின் குளத்தில் நீந்தித் திளைத்தாள்என் விரல்கள் தொட்டதும் நாணத்தால் சிவந்த நங்கை
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பை அணிகலனால் சுமந்த மங்கைஉச்சம் எதுவென வரி வரியாய் காட்டிய கொங்கைஎச்சில் துளியிலும் தெவிட்டாததேன் சுரக்கும் விந்தைஇப்படி மென்மையின், பலவீனத்தின் பிறப்புத்தான் பெண் என்றும், ஆணுக்குரிய போகப்பொருள்தான் பெண் என்றும் பிரகடனப்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் ஆணாதிக்கவாதிகள், உலக மானிடத்தின் சரிபாதியான பெண்ணைத் தங்களது அடிமைகொள்ளும் எண்ணத்தையும், ஆணாதிக்க அபிலாசைகளையும் தாங்கள் தங்கள் வாயிலாக சொல்வதைவிட, அதைப் பெண்ணின் வாயிலாகவே சொல்லிவிட்டால் பங்கம் வராது என்ற திருட்டு எண்ணத்தில் செய்யும் வேலைதான் காதல் என்ற பெயரால் பெண் வாயிலாகவே பெண்ணை மென்மை, பலவீனம் என்று சொல்ல வைப்பது.//நீ தேடும் தளத்தில் உனக்குரிய உரிமைகளை வென்றெடுப்பதற்கான குரலையும், உனது சுதந்திரமான கருத்தை வெளியிடுவதற்கான உரிமையையும், உனக்கெதிரான கருத்துக்களுக்கு எந்தவித தடையுமில்லாமல் நீ எதிர்க்குரல் எழுப்பும் சுதந்திரமும் இல்லையெனில் அந்த தளத்தைக் கொண்டாடாதே! தூக்கி எறி!! முடிந்தால் கையகப்படுத்து!!!//
தென்னிந்திய சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவே இந்த ஆணாதிக்க வாதிகளின் கையில்தான் இருக்கிறது என்பதற்கு எந்த சாட்சியையும் தரதரவென இழுத்து வந்து நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. சினிமா பலமுள்ள ஊடகம்தான். அதை மறுக்க முடியாது. ஆனால் இன்று சினிமா யாரின் கையில் இருக்கிறது என்பதுதான் பிரச்சனை. கவிதாவின் இந்தப் பாடலுக்கும், இசைக்கும், குரலுக்கும் சினிமாவின் அத்தனை விருதுகளையும் தட்டிச்செல்லும் வல்லமையுண்டு என்பது எனக்கும் தெரியும். எனது கேள்வி இந்தப் பின்னூட்டவாதிகளெல்லாம் கவிதாவின் கவிதைகளைப் படித்தார்களா என்பதுதான். கவிதா மிக அழகான காதல் கவிதைகளும் எழுதியிருக்கிறாள். சுதந்திரமாய் எழுதியிருக்கிறாள். அற்புதமான கவிதைகள் அவை. இந்தப் பாடலில் கவிதாவும் செத்து, கவிதையும் செத்து, கவிதா வரித்துக்கொண்ட கருத்தும் செத்து சினிமாவுக்கான இன்னொரு தாமரை பிறந்தாள் என்பதைவிட மேலதிகமாக என்னத்தை சொல்லிவிடப் போகிறீர்கள்.ஏதோ சினிமாவில் பாட்டெழுதுவதுதான் கவிதாவின் இந்தப் பிறப்புக்கான பெரும் சுபீட்சம் என்றும், அவள் தனது இந்த ஜென்மத்தின் முக்தியை அடைவதற்கு சினிமாவால் வழி திறந்து விடப்பட்டதென்றும் சிலர் பண்ணும் வார்த்தை ஜாலங்களை சகிக்க முடியவில்லை.கவிதா இதுவரை மூன்று தொகுப்புக்களை வெளியிட்டாள். அந்தத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையைக்கூட இந்தப் பாடல் ஈடு கட்டவில்லை. மாறாக, கவிதாவின் கவிதைகள் சொல்ல விளையும் கருத்தியலுக்கு எதிரானதாய்த்தான் இந்தப் பாடல் வரிகள் சில அமைகின்றது.அதில் இன்னொருத்தர் வந்து காமத்தைப்பற்றி வகுப்பெடுக்கிறார். சரிதானையா! காமம், காதல், கலவி, பெண்ணடிமைத்தனம், கருத்தியல், உரிமை, சுதந்திரம், உணர்வை மதித்தல், சமையலறை, இனப்பெருக்கம், வாரிசு உருவாக்கும் யந்திரம், உடுப்புத் தோய்க்கும் மெஷின், குடும்ப கவுரவக் காப்பாற்றாளர்… இப்படி ஏகப்பட்ட விசயங்கள் விரவிக்கிடக்கிறதே…பெண்ணியம் என்று சொல்லி விட்டேன் என்பதற்காக அது ஏதோ ”கொஞ்சப்பேர் ” சொல்லித்திரியும் வெற்று வார்த்தைகளாய் நினைத்து பல ஆண்மக்கள் தூற்றுவதும், பாராமுகமாய் இருப்பதும், நையாண்டி பண்ணுவதும் ஏற்கவும் முடியவில்லை, சகிக்கவும் முடியவில்லை. ஆணாதிக்கவாதிகளின் அபிலாசைகளை சொல்வதற்கு ஒரு பெண் வந்துவிட்டாள் என்ற பூரிப்பிலிருந்து பேசுகிறீர்கள் ஆண்களே! (நீங்கள் திட்டமிட்டே அடக்கப்படுவது தெரியாமல் ஆணியம் சார்ந்து பேசும் சில பெண்களே)சரி, எதுவுமே வேண்டம், கவிதாவின் இந்தப் பாட்டைக் கேட்டு குய்யோ முறையோ என குரவைக்கும் நீங்கள் கவிதாவின் கவிதைகளைத்தான் வாசிக்கவில்லை, குறைந்தபட்சம் ”கரடிபொம்மை” என்ற கவிதாவின் சிறுகதையையாவது படித்துப் பாருங்கள்.(கரடிபொம்மை.) சினிமாவில் மூஞ்சை காட்டுவதென்பது முற்பிறப்பின் பயனோ…? அடச் சீ…
சினிமாத் திரையில் அரங்கேற நிறையப்பேர்தான் பூச்சுப் பூசத் தயாராய் இருக்கிறீர்கள்போல் தெரிகிறதே…. வாழ்க…! யாரைத்தான் சினிமா விட்டுவைத்தது…?இந்தப் பாடலைவிட…, கவிதாவின் பாடல்கள் பலவற்றிற்கு வே.இரவிக்குமார் இசையமைத்துள்ளார். அந்தப் பாடலிசைக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுதான் உண்மை. வே.இரவிக்குமார் ஈழத்தவன். திறமைசாலி. ஆனாலுமென்ன பயன்…? எங்கள் சாபக்கேடு தென்னிந்திய குப்பைப் பத்திரிகைகளையும், அழுக்குச் சினிமாவையும், அக்கிரகாரத்து அம்மாஞ்சிகள் அழுது வடிந்துகொண்டும், வில்லத்தனம் செய்துகொண்டும் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களும்தானே எம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன… சிலவேளை வே.இரவிக்குமார் சினிமாவினால் தெரியப்பட்ட இசையமைப்பாளராய் இருந்திருந்தால் இவர்களெல்லாம் காவடி எடுத்திருப்பார்களோ என்னவோ…?










