ஊர் – Conques

சென்ற நடைப்பயணத்திலேயே பிடித்த கிராமத்தின் பெயர் கொங்க்ஸ். பேரழகு வாய்ந்ததொரு கிராமம். கிராமத்தின் அழகை என்னிடம் உள்ள சொற்களை கொண்டு வர்ணித்து விட முடியாதிருக்கிறது.


அக்கிராமம் ஒரு மலையின் இடுக்கில் இருக்க, மலைத் தாழ்வாரத்தில் மிக அழகிய நதி ஒன்றும் அதன் மீது கடந்து செல்கிறது. பழமை வாய்ந்த பாலம் ஒன்றும் அழகின் முத்தாய்ப்பாய் காணக் கிடைக்கின்றது. கிராமத்தைச் சுற்றி மலை காடுகள் பச்சை பசேல் என்று விரிந்து கிடக்கிறது. ஆங்காங்கே முகில்களை தமக்குள் உறிஞ்சி கொண்டிருந்தபடி எம்மைச்சுற்றலும் மலை முகடுகள்.


மலை இடுக்குகளில் எல்லாம் ஆங்காங்கே இயற்கையான கற்களால் எழுப்பப்பட்ட வீடுகளின் அழகும், நேர்த்தியும், பழமையும், வனப்பும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதற்கு இல்லை. மலை இடுக்கின் சிகரமாய் தேவாலயமொன்று கம்பீரமாய் உயர்ந்து நின்றது.


ஏறத்தாழ ஆயிரமாம் ஆண்டுகளில் உருவாகத் தொடங்கிய இக்கிராமம் பிரான்ஸ் நகரத்தின் மிக அழகிய கிராமமாகக் கருதப்படுகின்றது. இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் ஒரு ஊராகும்.


ஆரம்பத்தில் 1300 குடிமக்கள் வாழ்ந்த இந்நகரம் 1800 மக்கள் வரை வாழ்ந்து அதன் பின் படிப்படியாக குறைந்து, தற்போது அறுபது பேர் மட்டுமே அங்கே வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் முதியவர்களே.


அம்முதியவர்கள் தம்மை அழகாக அலங்கரித்துக் கொண்டு, கைகளை தத்தம் துணைவரோடு கோர்த்து, காதலோடு, மெதுவான நடையில் ஆங்காங்கே சென்று கொண்டிருப்பர். நின்று பேசுவர். அம் முதியவர்களும் குளிர் காலத்தில் அங்கிருந்து சென்று மீண்டும் வசந்த காலத்தில் திரும்புவர் என அறியப்படுகின்றது. இவ் ஊரானது குளிர்காலத்தில் முற்றிலுமாக மூடப்படுகிறது.


பத்தாம் நூற்றாண்டில் இருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை கட்டப்பட்ட ஒரு தேவாலயம் அங்கே பிரசித்திபெற்றதாக இருக்கின்றது. வசந்த காலங்களில் இங்கே யாத்திரை செய்யும் மனிதர்களுக்குத் தங்கும் வசதிகளைச் செய்த ஒரு தளமாக தேவாலயம் இயங்கியிருக்கிறது.


இத் தேவாலயத்தின் வாயிலில் தேவனின் கடைசித் தீர்ப்பினை விபரிக்கும் ஒரு பெருஞ்சிற்பம் ஒன்றிருக்கின்றது. அதைப்பற்றிய உரையாடல் ஒன்றை தேவாலயத்தின் பாதிரியார் அன்று இரவு நிகழ்த்தினார். அவ்வுரையாடல் ஒருமணித்தியாலத்தினைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒன்றும் புரியவில்லை. பிரஞ்சுமொழியில் நிகழ்த்தப்பட்ட உரையாடலைக் கேட்டு, ஒரு மூலையில் அமர்ந்து கொண்டேன்.


இந்த ஒரு சிற்பத்தைப் பற்றிப்பேச இத்தனை நேரமென்றால், இந்தியச் சிற்ப வரலாறுகளை பேச எத்தனை யுகம் வேண்டும் என்று மனது நினைத்துக்கொண்டது.
தேவாலயத்தின் சிற்பமோ, கட்டட வேலைப்பாடுகளோ என்னை ஆர்வங்கொள்ளச் செய்யவில்லை, ஆனால் கொங்க்ஸ் கிராமத்தின் வீதிகளும், வனப்பும் என் இறுதிக்காலம்வரை நினைவு நிற்கும். அத்தனை அழகான ஊரை நான் வாழ்நாளிற் கண்டதில்லை.


உணவுகள், விடுதிகள், சிறு கடைத்தெருக்கள் என கோலாகலமாக இக்கிராமம் இன்று விளங்கினாலும், இயற்கையும் பசுமையும், வினோதமும் நிறைந்த இக்கிராமத்தின் தரிசனத்தைப் பெற்றது, என் வாழ்வு எனக்களித்த பேரன்பே.

பின்னூட்டமொன்றை இடுக