
ஹென்றிக் யுகான் இப்சன்
பருவம் இரண்டு
இடம்: கிரிம்ஸ்தா
முதற் குழந்தை – முதற் காதல் – முதல் நூல்
கிரிம்ஸ்தா நகரம், எனது இருப்பிடத்திலிருந்து குறைந்தது நான்கு மணிநேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் கோடைகாலம் கிரிம்ஸ்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தது. பயணம் நீண்டதெனினும் மிகச் சுவாரிசியமானதும் அழகானதுமாக அமைந்தது. வழிநெடுகிலும் இயற்கையின் பேரருள். இப்சன் பணிபுரிந்த மருந்தகத்தின் எதிரிலேயே ஒரு தங்குமிடம். பேரானந்தம் எனக்கு. பழங்காலத்து தளபாடங்களுடன் அமைக்கப்பட்ட அறை. ஓர் இரவுக்குள் ஒரு நூறு வருடங்கள் பின்னோக்கி வாழும் உணர்வை கொடுத்து, விடைபெற்றது. விடிந்ததுமே இப்சன் பணிபுரிந்த மருந்தகத்திற்குச் (தற்போது அருங்காட்சியகம்) சென்றேன்.
மேற்படிப்பைத் தொடர்வதற்காக ஷீயன் பண்ணை வீட்டிலிருந்து கிரிம்ஸ்தாட் நகருக்கு தனது பதினைந்தாவது வயதில் இடம்பெயர்ந்தார் இப்சன். இம்மருந்தகத்தில் அவருடைய மருத்துவம் சார்ந்த கல்விக்கான பயிற்சியை மேற்கொண்டார். மருந்தகத்திலேயே அவர் தங்குவதற்குரிய வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தன. தனது இளமைக்காலத்தில், ஏழு ஆண்டுகள் கிரிம்ஸ்தாவில் வாழ்ந்தார்.
“கிரிம்ஸ்தாட்டும், குறிப்பாக சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் அழகாக இருக்கிறது. இங்குள்ள பெண்கள், ஷீயனில் போல சலானவர்களாக இல்லாவிட்டாலும், நன்றாகவே இருக்கிறார்கள். அவர்களின் கவனத்தைப் பெறுவதற்கு நான் முடிந்தவற்றைச் செய்வேன் என்று நீ அறிவாய்தானே. அத்தோடு, அவர்களுடைய கவனத்தைப் பெறுவது மிகவும் எளிதாகவே இருக்கிறது.”
இம் மேற்கோள், ஹென்ரிக் இப்சன் தன் நண்பனுக்கு 1844. 20. வைகாசி மாதம் கைப்பட எழுதி அனுப்பிய கடித்திலிருந்தவை.
1844 ஆம் ஆண்டில், இப்சனுக்குப் பதினாறு வயது. அவ்வயதிலிருக்கும் அனேக இளைஞர்களைப் போலவே இப்சனும் பெண்களை இரசித்தார். பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று நினைத்தார். மேலும் அவர்களின் கவனத்தைப் பெறுவது எளிது என்ற தற்பெருமையும் கொண்டிருந்தார்.
கிரிம்ஸ்தாவில்தான் காதலும், கவிதையும், மதுவும், மாதும் அவருக்குள் பல கிளர்ச்சிகளை நிகழ்த்தின. அன்றாட வாழ்வின் மிக முக்கியத்திற்குரிய விடயங்களாகவும் இவை ஆகின. புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். மனிதர் பற்றி அவருடைய மேட்டுக்குடி மனோநிலையில் மாற்றங்கள் நிகழ்நதன. கவிதைகள் எழுதத் தொடங்கியதும் இங்குதான். இளைமையின் போக்கில் சில காதல் அனுபவங்கங்களைப் பெற்றதும் இங்குதான். அதிற்சில அனுபவங்கள் மற்றவைகளைவிட பாரிய விளைவுகளையும் பெற்றுத்தந்தது.




முதற்குழந்தை
இப்சன் பணியாற்றிய மருந்தகம் இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கிக்கொண்டிருந்ததால், அவர் தனது வாழ்க்கையை இரவும் பகலும் மருந்தகத்திலேயே கழிக்க வேண்டியிருந்தது. இப்சன் நண்பர்களுக்கு கடிதத்தில் எழுதியது போல அல்லாமல், பெண்களுடன் பழகுவதற்குரிய நேரங்கள் அவருக்கு வெகு சொற்பமாகவே கிடைத்திருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒருநாள், இப்சனினுக்கு ஒரு குழந்தையிருப்பதாக (திருமணமாகமலேயே) கிரிம்ஸ்தாட் நகர் முழவதும் கதை பரவியது.


இப்சனுக்கான படுக்கையறை மருந்தகத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. மருந்தகத்தின் உரிமையாளரும் சில நாட்கள் இப்சனின் அறையிலேயே உறங்கினார். இப்சனின் படுக்கையறையிலிருந்து மருந்தகத்திற்குச் செல்லும் வழியானது மருந்தகத்தின் பணிப்பெண்களின் படுக்கையறை வழியாகவே சென்றது. அங்கு பணிபுரிந்த 27 வயதான சோபி என்ற பணிப்பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்ற விடயம் தெரியவந்தது. அப்போது இப்சனுக்கு வயது பதினேழு. அதே ஆண்டே பிறந்த குழற்தைக்கு ஹன்ஸ் யாகோப் ஹென்ட்ரிக்ஸன் என்று பெயரிடார் சோபி.

அக்குழந்தையின் தாயாரான சோபி எழுதறிவற்றவர். அவர் அரசாங்க அதிகாரி ஒருவரின் உதவியுடன் குழந்தைக்கான ஜீவனாம்சத் தொகை கோரி இப்சனுக்குக் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத இப்சன் தனது பதிற்கடிதத்தில்
«குழந்தையினுடைய தாய்க்கு என்னைத்தவிர பிற ஆண்களுடனும் தொடர்புகள் இருந்தது. அதனால், அந்தக் குழந்தை என்னுடையதாகவும் இருக்கலாம்» என்று குறிப்பிடப்பட்டிருந்தார் . 17 வயதுச் இளைஞனின் தெளிவற்ற வாதத்தினால், இப்சனே அக்குழந்தைக்கு தந்தைவழி ஜீவனாம்சத்தொகையை வழங்கவேண்டும் என்று தீர்ப்பாகியது.
ஹன்ஸ் யாகோப் ஹென்ட்ரிக்ஸன் என்று அழைக்கப்பட்ட தனது குழந்தையை இப்சன் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட சென்று பார்க்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. பிற்காலத்தில் ஒரேயொருமுறை ஹன்ஸ் இப்சனைத் தேடி ஒஸ்லோ நகருக்கு வந்ததாகவும், அப்போது இப்சன் ஹன்ஸின் கைகளில் சில காசுகளைக் கொடுத்து வாசலோடே அனுப்பி வைத்தார் என்றும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் இருக்கிறது.
அன்று கருக்கலைப்பு போன்ற விடயங்கள் இல்லாத காலமாகையால், ஹன்ஸின் தாயார் எல்ஸ சோபி குழந்தை பிறப்பதற்கு முன்பே கிரிம்ஸ்தாட் நகரை விட்டு இடம் பெயர்ந்துவிட்டார் அக்கால சமூகத்தில் திருமணமாகாது பிறந்த ஒரு குழந்தைக்குத் தாயாக வறுமையிலும், அவமனத்துடனும் மீதி வாழ்வை வாழ்ந்திருக்கிறார். மகனும் தனது நாற்பதாவது வயதிலேயே குடிப் பழக்கத்தால் இறக்க, அவ்வழிச் சந்ததி முற்றிலும் அழிந்துபோனது.
கிரிம்ஸ்தாவில் இப்சன் சந்தித்த இருபெண்களையும்; பற்றிப் பேசும் ஒரு அறை அருங்காட்சியகத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே தனது திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைபற்றி, இப்சன் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் பதிவேற்றப்பட்டு ஒலிவடிவமாய் கேட்கக் கிடைக்கிறது. கிளாரா என்ற பெண்ணின் மேல் இப்சன் கொண்ட காதல் பற்றியும் சொல்லப்படுகிறது.
முதற் காதல்
1849 வசந்தகாலமொன்றில், கிளாரா என்ற பெண்ணின்மேல் தீவிரமான காதல் கொண்டார் இப்சன். இப்சனைப் போலவே கிளாராவில் காதலும் அபிமானமும் கொண்ட வேறு சில இளைஞர்களும் கிரிம்ஸ்தாட் நகரில் இருந்தார்கள்.
கிளாரா, அவள் பியானோ வாசித்தாள், இசையமைத்தாள், கவிதைகள் புனைந்தாள், நாடக எழுத்துக்களைப் படித்தாள். இசை-அறிஞனாக அறியப்பட்ட பெத்தோவனின் மொழியைப் பிரகடனப்படுத்தினாள். நோர்வே நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் ஹென்றிக் வர்க்கலண்ந் அவர்களுடைய கவிதைகளை விரும்பி வாசித்தாள்.

கிளாரா அந்நகரத்தின் வசதிபடைத்த மாநகர முதல்வரின் மகள். இப்சனோ, இப்போது மருந்தகத்தின் பயிற்சியாளர் மட்டுமே. இருப்பினும், அவர்களுக்கிடையேயான வர்க்க வேறுபாடு இப்சனுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. இப்சனுடைய பல கவிதைகள் கிளாராவிற்கு எழுதப்பட்டவையே. கிளாரா என்றால் தெளிவு என்று பொருள்படும். கிளாராவிற்காக அவர் எழுதிய முதற்கவிதைதான் “தெளிந்தநற் தாரகைக்கு” என்ற கவிதை.
தெளிந்தநற் தாரகைக்கு
தெளிந்தநற் தாரகையே!
நேசத்தோடு ஒளிரும் உன் விழிச்சுடர்தான்
என் ஆத்மாவின் தேடலானது.
நித்தியமான உனது உயரத்திலிருந்து
ஒரு கையசைப்புச் செய்.
அடர்த்தியான உன் ஓவியமொழி
ஏக்கங்களை மட்டுமாய்த் தட்டியெழுப்புகிறதே!
காலத்திரையினை ஊடுருவி
காட்சிகளைக் காண்பதற்கு
நீ கற்றுத் தருவாயா!
என் நலிந்த உள்ளத்துள் ஊடுருவி
உன் தடுமாறும் கார்மேகங்களைப் பரவவிடு
சுடர்விடும் ஒளித்துகள்களாகி
பேரின்பம் மிளிரும் ஞானநிலைபெற அனுமதி
ஓ.. அர்த்தமற்ற எனது பிரார்தனையை,
உன்னிடம் யாசிக்கத் துணிவுண்டோ,
மண்ணின் மகன் ஒருவனுக்கு
பூமியிலிருந்து தன்னை உயர்த்தும் திறனுண்டோ
ஓ.. மெலிதான சிறுதுண்டு நம்பிக்கையில்
நான் திருப்தி அடைவேன்
சிறிதாய் ஓர் உண்மை புரிந்தாலும்
நம்பிக்கையின் நுனியை அடைவேன்
வானொளியின் சக்தி
தூரத்தே மின்னியெழும் பொழுதுகளில்,
நிசப்தமான அந்த இரவில்,
ஆனந்தமாய் என் தாரகையே,
உன்னைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்
…
அக்காலத்தில் இப்சன் கிரிம்ஸ்தாட்டை விட்டு இன்றைய ஒஸ்லோ (அன்றைய கிருஸ்தியானியா) நகருக்கு இடம் பெயர்ந்தார். கிளாரா தனது சொந்த மாமானையே நிச்சயம் செய்துகொண்டார். இடையில் மாமனுடனான நிச்சயத்தை முறித்துக்கொண்டார் என்றும், அதன்பின் ஒருமுறை இப்சனை ஒஸ்லோவில் சந்தித்தார் (1850) என்றும் குறிப்புகள் உண்டு. அச்சந்திப்புப் பற்றி அதிக விபரம் தெரியாவிட்டாலும், அதற்குப்பின் இப்சன் கிளாராவிற்கு எழுதிய கடிதத்தின் மூலம் அவர்களுக்கிடையில் சில சம்பவங்கள் நடந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இப்சன் கிளாராவிற்கு எழுதிய கடிதத்தில்:
“இத்தோடு இணைக்கப்பட்ட கவிதைப்பிரதிகளை நான் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். கவிதைகளை எழுதத் தூண்டிய எனது மனநிலையை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக உணர்கிறேன். இக்கவிதைகள் என்னைப் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிடச் செய்யும் என்பது எனது நம்பிக்கை. இருந்தும் இறுதியில் எழுதப்பட்ட இந்த வார்த்தைகளைச் சேர்த்திருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதைனையிட்டு என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உண்மையாகவே இவை நான் உங்களுக்கு அனுப்பும் கடைசி வார்த்தைகள்!”

கிளாரா ஒருமுறை, முகமூடி அணிந்துவரும் விழா ஒன்றில் ஆற்றுகை செய்தாள் (1851). அவள், வெண்பட்டில் காற்சட்டையும், செந்நிற ரோஜா மலர் மேலாடையும், இறகுகளால் ஆனா தொப்பியுடனும், 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட – பாணர்கள்- (பிராஸ் இத்தாலியா நாடுகளில் வாழ்ந்த நாடோடிப் பாடகர்கள்) என்ற கவிதைக்கு நடனமாடினாள். உடையலங்காரம் அத்தனை அழகாக அவளுக்குப் பொருந்திப் போயிற்று. ஆனாலும், அவளிடம் இருந்த அழகு அவளது புறத்தோற்றம் சார்ந்ததில்லை, அவளது துடிப்பான, கலையம்சம் மிக்க மனதாலும் செயற்பாடுகளினாலும் அவள் பேரழகியாகப் பார்க்கப்பட்டாள். இப்சனின் மனமும் அவளிடமே சென்றது.
கடைசி வார்த்தைகள் என்று கடிதத்தில் எழுதியிருந்தாலும் அவரால் அந்த வார்த்தைகளை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. பெரும்பாலான இளைஞர்களைப் போலவே, அவரும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார்.
-பாடினிக்கு- என்ற கவிதை ஒன்றை மீண்டும் அவளுக்கு அனுப்பிவைத்தார். அக்கவிதையின் கடைசி வரிகள் சூழ்நிலையின் விம்பமாக இருந்தன. இத்தோடு இன்னும் ஐந்து கவிதைகள் அனுப்பப்பட்டிருந்தன.
பாடினியொருத்தி
மென்மையோடு தந்திகளை மீட்டியபடி
கடவுளுடைய சக்தியோடு விளங்கும் பாடினியே!
கவிதையை உடுத்தியிருக்கும் உனது உயிரை
நீண்டகாலத்திற்கும், மிக்க உயரத்திலும் மிதக்கவிடு,
சுருங்கி மறைந்துப்போகும் வேனில் காற்றைப்போல
மௌனித்துப் போவதற்கானதல்ல உனது இராகங்கள்!
கடவுளின் இயல்போடிருக்கும் பறவையைப் போல
என் உன்னதமான பாடினியே பாடு!
உன் இதயம் பதுக்கி வைத்திருப்பவைகளை
இயற்கையின் மார்போடு மட்டும் இரகசியமாய்ப் பேசு
நான் மௌனமாய் உனது எதிரொலியாகி
உனது குரலை அவதானித்தபடியிருப்பேன்.
உனது ஆன்மா சுமந்துகொண்டிருக்கும்
மென்மையான உன் கற்பனை வளங்களையும்
இனிமையான உன் இசைக்கோர்வைகளையும்
ஓரு மலையுச்சியிலிருந்து அடுத்தொரு உச்சிக்கு
நான் சுமந்து செல்வேன்
..
இப்சனின் வாழ்நாளில் – பாடினி – கவிதை அச்சிடப்படவேயில்லை. நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டுவிட்ட கிளாரா, மீண்டும் அந்த மாமனையே மணமுடித்துக்கொண்டார்.
கிளாராவினுடைய பெயர் வரும்படிக்குப் பொருள்தரும் வகையிலெல்லாம் சொற்களைவைத்து கவிதையை எழுதியிருந்த இப்சன், கிளாரா தன்னை விரும்பவில்லை என்பதை உணரந்ததால், – ஒளிரும் தாரகைக்கு- கவிதை பிரசுரிக்கப்படும் போது அச்சொற்களை -வெளிறிய தாரகைக்கு- என மாற்றி எழுதியே அச்சிற்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கவிதை 1903இல் பிரசுரிக்கப்பட்டது.
ஆய்வாளர்கள் அறிந்தவரை, கிரிம்ஸ்தாத்துடனான இப்சனின் தொடர்புகள் கிளாராவுடன் முடிந்துபோயின. ஆனால் அவளுடைய இராகங்களின் நினைவுகள் அவரிடம் தொடர்ந்தும் காணப்பட்டதை நிச்சயமாய் அவதானிக்கமுடிகிறது என்கின்றனர்.

முதல் நூல்
இப்சன் மருந்தகத்தில் வேலை செய்த காலத்தில் தன்னுடைய ஊர் நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்குக் கவிதையிலும் நாடக எழுத்துகளிலும் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாகவும், மருந்தகத்தில் வேலை செய்வதில் நாட்டமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பிற்காலத்தில் இத்துறையில் எழுதிய பரீட்சையில் இப்சன் தேர்ச்சி அடையவில்லை என்பதும் குறிபிடத்தக்கது.
ஆயினும், அன்றைய காலங்களில் அவர் மருந்தகத்தில் பெரும் பொறுப்பைப் ஏற்றிருந்தார். வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இப்சன் இரவுகளிலும் எழுந்திருக்க வேண்டியிருந்தது. முழுமையான பணியாளனாக இருந்த காலத்தில், இப்சன் பல நண்பர்களைப் பெற்றுக்கொண்டார். நண்பர்களில் நெருங்கியவர்களாக கிறிஸ்டோபர் டியூ மற்றும் ஊல ஸ்குல்லரூ இருந்தனர்.
மருந்தகத்தின், பணியாளர் காத்திருப்பு அறை நண்பர்கள் கூடுமிடமாகியது. நண்பர்கள் இருவரும் இப்சனின் எழுத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தவனர். அறை மேலும் ஒரு சமூக மையப்புள்ளியாக மாறியது. அந்நகரத்துப் மக்களைப் பற்றி கேலிக் கவிதைகள் அங்கே எழுதினார். அதைப் வாடிக்கையாளர்களுக்குப் படித்துக்காட்டினார். அந்நகரத்துப் பெண்களுக்கும் கவிதைகளை எழுதி சமர்ப்பித்தார். சமூகம் சார்ந்தும், புரட்சி சார்ந்தும் கவிதைகள் எழுதினார்.

அன்று பல நாடுகளில் பெரும் புரட்சிகள் நடந்துகொண்டிருந்த காலம். ஹங்கேரியன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரியில் புரட்சிகள் வெடித்தன. அதன் காரணமாக அரசியலும், புரட்சியும் இப்சனுக்கு முக்கிய விடயங்களாக இருந்தன. ஹங்கேரியின் நாட்டுச் சுதந்திரத்திற்கான கவிதைகளையும், டென்மார்க்கிற்கான போர்க் கவிதைகளையும் எழுதினார்.
இப்சன் கிரிம்ஸ்தாவில் எழுதிய கவிதைகளுக்கு புரட்சியே மையக்கருத்தாக இருந்தது.

லத்தீன் மொழி கற்றார். ரோம் புரட்சியாளரும் அரசியல்வாதியுமான கற்றலீனாவைப் பற்றி வாசித்து அதனால் கவரப்பட்டார். கற்றலீனா என்ற மனிதரையே தனது முதல் நாடகத்தின் முக்கிய பாத்திரமாக்கினார். அந்நூல் புனைபெயரிலேயே வெளியிடப்பட்டது. தனது நண்பரின் உதவியால் கற்றலீனா நாடகத்தை நூலாக 1950இல் பதிப்பித்தார். அந்த வருடமே கிரிம்ஸ்தாவை விட்டு வெளியேறினார்.
இப்சனுக்கு மீண்டும் கிரிம்ஸ்தாவிற்குச் செல்லும் ஆசையிருந்தது, ஆனால் இறுதிவரை நிறைவேறாமலே போயிற்று.




…
(கவிதை மொழியாக்கம்: கவிதா லட்சுமி)










