
ஹென்றிக் யுகான் இப்சன்
பருவம் ஒன்று
இடம்: ஷீயன்
………
கலைஞர்களும் இலக்கியவாதிகளும் ஹென்றிக் இப்சனைத் அறியாது இருப்பது அரிது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்துப் பெரும் நாடக எழுத்தாளராக அறியப்படுபவர் இப்சன். மேடைநிகழ்வு சார்ந்தோ, மொழிபெயர்ப்பு சார்ந்தோ ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு படைப்பாக்கம் அவருடைய எழுத்துகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் அருங்காட்சியகத்தில் சொல்லபடுகிறது.
ஷேக்ஸ்பியருக்கு அடுத்து மிக அதிக அளவில் இப்சனுடைய நாடகங்களே மேடையேற்றப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் இப்சனுக்கு 300 ஆண்டுகள் முந்தையவர் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. இப்சனுடைய நாடகங்கள் பலவும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும், மேடையேற்றப்பட்டும் இருக்கின்றன.
நாடகங்கள் தவிர, கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் என்று பல படைப்புகளை இப்சன் கொண்டுவந்திருந்தாலும், நோர்வே நாட்டிலும், உலகமெங்கும் தனது நாடகங்களுக்காகவே இப்சன் கொண்டாடப்படுகின்றார்.
பெண்ணியம் சார்ந்தே இப்சனுடைய நாடகங்கள் பேசுகின்றன என்ற பொதுக்கருத்துண்டு. இப்சனின் “பொம்மை வீடு” நாடகப்பிரதியே உலகம் முழுதிற்கும் அதிகம் மேடையேற்றபப்பட்டமை காரணியாக இருக்ககூடும். முழுமையாக இப்சனுடைய படைப்புகளைப் வாசிக்கும் போது, அதில் மனித உளவியல், அதன் போலித்தன்மைகள், சமூக உளவியலின் இரட்டைத்தன்மை, ஆண்கள் கட்டமைத்த சமூகமும் அதன் நியாயமற்ற தன்மைகளும், மனித இருப்பும் சுதந்திர வேட்கையும், ஆண் பெண் உறவுநிலைகளின் மாதிரி வடிவங்கள் போன்ற விடயங்களே அடிப்படையாகக் காணப்படுகின்றன. இந்நாடகங்கள் மனித-சமூக உளவியலை மிகக்கூர்மையாகவும், ஆழமாகவும் பேசுகிறது. அதனாலேயே இப்சனுடைய பல நாடகங்கள் சமூகத்தில் முரண்பாடுகளையும், எதிர்வினைகளையும், விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறது.
நோர்வேயில் இப்சனுக்கு மூன்று அருங்காட்சியகங்கள் பிரதானமானதாக இருக்கின்றன.
- ஷீயன் : இப்சன் பிறந்து வளர்ந்த வீடு
- கிரிம்ஸ்தா: இளமைக்காலத்தில் தனது கல்விக்காக வாழ நேர்ந்த இடம்
- ஒஸ்லோ: தனது முதுமைக்காலத்தில் வாழ்ந்த வீடு
இம்மூன்று வீடுகளும் அருங்காட்சியமாகக் காணக் கிடைக்கின்றது. இவ் அருங்காட்சியகங்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாகப் பார்த்த பின்பே இதை எழுத ஆரம்பிக்கிறேன்.
அவருடைய பிறந்த ஊரான ஷீயன் நகரத்தில் வாழ்ந்த பணக்காரக் குடும்பங்களில் ஒன்று இப்சனுடையது. மேற்தட்டு சமூகத்தில் பிறந்து வளர்ந்த இப்சனின் தந்தை நகரத்தின் பெரும் வியாபாரி.
மர ஏற்று-இறக்குமதிகளில் சிறந்து விளங்கிய தந்தையினுடைய வியாபாரம் காலப்போக்கில் சரிவடைந்து, பொருளாதார வீழ்ச்சி கண்டதால் இப்சனின் குடும்பம் நகரத்தில் இருந்து கிராமத்துப் பண்ணை வீட்டிற்குக் குடிபெயர நேர்கிறது. வியாபாரம் சரிவடைந்தாலும் பண்ணை வீட்டில் தமது அந்தஸ்த்து குறையாமலே வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பண்ணைவீடே இன்று அருங்காட்சியமாகவும் காணக்கிடைக்கிறது. இப்சன் பிறந்த நகரமான ஷீயன் 1886 இல் தீக்கிரையானதில் அந்நகரமும் பிறந்தவீடும் இழக்கப்பட்டது.

இப்சன் `ஷீயன்` பண்ணைவீடு
இப்சனுக்கு ஐந்து சகோதரர்கள். தமையன் ஒரு வயதிலேயே காலமாகிவிட, அடுத்ததாகப் பிறந்த இப்சன் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே இப்சன், சக சிறுவர்களைப் போல அல்லாது தனிமை விரும்பியாக இருந்ததாக கூறப்படுகிறது. பொம்மையாட்டம் செய்யும் சிறு நாடக மேடை ஒன்றை, தந்தை இப்சனுக்கு வாங்கித் தந்திருக்கிறார். சிறு வயதில் இருந்தே பொம்மை நாடகங்களை மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் நிகழ்த்துவது அவரது பெரும் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது.
காகிதங்களையும் மட்டைகளையும் வைத்து தான் கைகளாற் செய்த மனித உருவங்களை நூலில் கட்டி பொம்மலாட்டமாகவும், பொம்மை நாடகங்களாகவும் நடாத்தியுள்ளார். அடுத்தவர் எவரையும் தனது பொம்மையாட்ட மேடையை தொடக்கூடவிடாத அளவு அதில் பற்றுக்கொண்டவராக இருந்திருக்கிறார்.


பொம்மையாட்டம் செய்யும் நாடக மேடை
ஒருமுறை இப்சன் இல்லாத பொழுதில் பக்கத்துப் பண்ணை வீட்டுப்பெண் தனது பொம்மையாட்ட மேடையில் விளையாடிய தடையங்களைக் கண்ட இப்சன் அந்தப் பெண்ணின் முடியை இழுத்தும் திட்டியும் இருக்கிறார். இப்சனுக்கு நாடகத்தில் இருந்த ஆர்வத்தை அறிந்துகொண்ட தந்தை, அன்றிலிருந்து பொம்மையாட்ட மேடையை வேறு யாரும் தொடாதவாறு பார்த்துக்கொண்டிருக்கிறார்.
சக வயதினரோடு சேர்ந்து விளையாட விருப்பமற்றவராக, துடிப்பற்ற, எப்போதும் கற்பனையுலகத்தில் இருப்பவராகவும் காணப்பட்டிருக்கிறார். மேட்டுக்குடியினரின் மனோபாவமும் அவரிடமும் அன்றை காலங்களில் காணப்பட்டிருக்கிறது. ஓவியம் வரைவதிலும் ஆர்முடையவராக இருந்திருக்கிறார். சிறுவயதில் இப்சன் வரைந்த ஓவியங்கள் அவரது அறையில் இன்னும் மாட்டப்பட்டிருக்கின்றன.

இப்சன் வரைந்த ஓவியம்
சிறுவயதிலேயே வாசிப்புப் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கிறார். பண்ணைவீட்டின் இருண்ட மாடியில், ஹரிஸன் எழுதிய -லண்டனின் வரலாறு- என்ற நூல் ஒன்றைக் கண்டெடுத்து தனது பத்து வயதிலேயே, அப்பெரும் நூலைப் படித்தும் முடித்திருக்கின்றார். இப்சனின் பண்ணைவீட்டில் முந்தைய காலங்களில் வாழ்ந்த கப்பற்தலைவன் ஒருவர் லண்டனில் வாங்கிய நூலாக இது இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இந்நூல் பற்றிய குறிப்புகளையும், பண்ணைவீட்டின் இருண்ட மேல்மாடியைப் பற்றியும் பிற்காலத்தில் தனது நாடகமொன்றில் (காட்டுவாத்து) கொண்டுவருகிறார். இந்நூல் இன்றும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நூல் மட்டுமன்றி பைபிள் மற்றும் பல நூல்களை குழந்தைப்பருவத்திலேயே வாசித்து முடித்திருக்கிறார் இப்சன்.
சிறுபிராயத்தில் தனது இரு சகோதரர்களை, ஒருவரை குரங்காகவும், மற்றவரை நரியாகவும் வீட்டுச்சுவற்றில் வரைந்திருக்கிறார். அவ் ஓவியங்கள் சுவர்துண்டோடு சேர்த்து அப்படியே சட்டகமாக்கப்பட்டு ஷீயன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இப்சனுடைய உயரம் 157 சென்ரிமீட்டர்களே. தன்னை உயரமாகக் காட்டுவதற்காக குதியுயர்ந்த சப்பாத்தின் உள்ளேயும் குதியுயர்வு வைத்துள்ளார். உயரமாகக் காட்டும் வகையில் தொப்பி அணிவதும் அவர் வழக்கமாக இருந்திருக்கிறது. இவைகளோடு மேலும் பல குழந்தைப்பருவத்து உடமைகள் ஷீயனில் அவரது பண்ணைவீட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புகழ்பெற்ற நோர்வேஜிய ஓவியர் எட்வாட் முங் தனது ஓவியங்களில் இப்சனுடைய நாடகக் காட்சிகளை வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ் ஓவியங்கள் சிலவும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.





பண்ணைவீட்டின் இருண்ட மேல்மாடி
இப்சன் எப்படி வாழ்ந்தாரோ அப்படியே அப்பண்ணை வீட்டை கட்டமைப்பதற்காக அரசாங்கம் தற்போது திருத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. அவ்வீட்டின் ஒவ்வொரு அடியும் அச்சு அசலாக வடிவமைப்பதற்கு நான்கு வருடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டிக்கிறது.
தனது மேற்படிப்பைத் தொடர்வதற்காக பண்ணை வீட்டைவிட்டு, கிரிம்ஸ்தாட் என்ற நகரத்திற்குப் இடம்பெயர்ந்து மருந்துக்கடை ஒன்றில் பணிபுரியத் தொடங்குகிறார். அப்போது இப்சனின் வயது பதினைந்து. அங்குதான் அவரது அச்சிடப்படப் போகும் முதல் நாடகப் பிரதியை எழுதத் தொடங்குகிறார். முதற்காதலும் தொடங்குகிறது.
தொடரும்..

இப்சனின் அறை









