பொது நிகழ்வுகளில் நிறுவனங்களின் இலட்சனை (Logo) பாவிக்கும் முறையும் – முரண்பாடுகளும்.

நாட்டியக் கலைக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்ச்சியிருப்பினும் அது காலத்தினூடு பல மாற்றங்களைக் கடந்தே இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. சில தசாப்த காலங்களுக்கு முன் நாட்டியத்தில் நிகழ்ந்த மாற்றங்களோடுதான் பெருவாரியாக இன்றும் நாட்டியம் பயணப்பட்டு வருகின்றது. நாட்டியக்கலையில் புதிய விடயங்களை எடுத்துச்செல்வதற்கு எதிரான கருத்துக்களே பெரும்பான்மையாக இருப்பினும் எனது கருத்துநிலை வேறானது. .

நல் மாற்றங்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் உட்படுத்துவது, எமது அடுத்த சந்ததிகளுக்கு இலக்கியம் சார்ந்து, சமூகம் சார்ந்து பேசும் ஒரு கலையாக நாட்டியக் கலையை நகர்த்திச் செல்வது போன்ற செயற்பாடுகளில் எனக்குக் கவனமுண்டு. இக்கருத்தில் எனக்கான தெளிவுமுண்டு. அதுவே எமது கலைக்கூடத்தின் முன்னெடுப்பினது தளமாகவும் படைப்பாக்கங்களின் அடையாளமாகவும் இருந்துவருகின்றது. எம்மை உலகலாகரீதியில் அடையாளப்படுத்தியிருப்பதும், வேறுபடுத்திக்காட்டுவதும் இவைகளே.

எப்போதோ எழுதி, இசையமைத்துக் காலகாலமாக ஆடப்பட்டு வரும் நடனங்கள், அதேபோல திரையிசைப்பாடல்கள், stand up comedy புத்தக வெளியீடுகள் போன்ற நிகழ்வுகளுக்குரிய மேடையமைப்பிற்கும், ஒரு பிரதான கருத்தை, கதையைக் காட்சிப்படுத்தும் நாட்டிய அரங்க நிகழ்விற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு கலையும் தனித்துவமானவை. ஒவ்வொன்றிற்குமுரிய தேவைகள் வேறு என்பதைப் பொதுத்தளத்தில் ஈடுபாடுகொண்ட அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். நிறுவனங்களின் இலட்சனையை அரங்கின் வடிவமைப்பாக வைக்கும் பட்சத்தில், அரங்காற்றுகையின் கதைக்கேற்ற மேடையமைப்பையும், பேசுபொருளையும் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்திச்செல்ல முடியாது போய்விடும்.

கலாசாதனா கலைக்கூடத்தின் பெரும்பான்மை நடனங்கள் புதிதான கருப்பொருளை அரங்காற்றுகையாக, எழுதி இசையமைத்துப் புதிதாக நடனநெறியாள்கை செய்யப்பட்டு மேடையேறுபவை. இதற்குப் பின்னால் வாசிப்பு, ஆய்வு, எழுத்து, இசையமைப்பு, அரங்கமைப்பு என்று நேரச்செலவோடு பொருட்செலவும் உண்டு.

என்னதான் புதிய படைப்பானாலும், அவை எத்தகைய காத்திரமான விடயங்களைப் பேசினாலும், ஒரு படைப்பு நோர்வே நாட்டில் ஒரு மேடையைத்தான் கண்டு கொள்கிறது. அதுதான் இங்குள்ள யதார்த்தம். எமது படைப்புகளையும் எமது கலைஞர்களையும் வேறு கண்டங்களுக்கு இனம்காட்டும் ஒரே ஊடகம் ஒளிப்பதிவுகள்தான். அந்த வகையில் இவ் ஒளிப்பதிவுகள் சரியானமுறையில் அமையவேண்டும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

உதாரணமாகச் சொல்வதென்றால் 2006 ஆண்டில் இருந்து,

கண்ணகியும் கண்ணம்மாவும் – 2006, சீதையின் காதல் – 2008, சிவகாமியின் சபதம் – 2011, குருசேத்திரம் – 2014, சங்க இலக்கியம் தொட்டு பாரதி வரை – 2014, பாரதி தமிழிசையில் ஆடல் – 2015, தமிழ் இலக்கியத்தில் பெண் – 2016, இராஜேந்திரச் சோழன் – 2017, பறை – 2017, அசையும் கவிதைகள் – 2018, ஞானரதம் – 2018, அரியாத்தை – 2018, அரங்காடுகாதை – 2020, உயிர்மிகும் ஓவியங்கள் – 2023

இவையனைத்தும் படைப்புகள், இப்படைப்புகளுக்கான கருத்தாக்கம், எழுத்துரு, இசை, குரல், நடனம், வடிவமைப்பு, அலங்காரம் எப்படி இருக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்தக் கலையின் பகுதிகள் ஆகும். இதில் அரங்க அமைப்பும் ஒளி அமைப்பும் அடக்கம். இப்படைப்புகளுக்கு பிரதானமான அரங்க அமைப்பின் தேவையுண்டு என்பது ஒரு நெறியாள்கையாளராக எமது அனுபவமும் கருத்துமாகும்.

இப்படியான படைப்புகளை மேடையேற்றும் போது மட்டுமே மேடையில் இலட்சனைகளைத் (Logo) தவிர்த்துக்கொள்ளுமாறும், இலட்சனையை ஒளிப்பதிவில் சேர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய படைப்புகளை நிறுவனங்களில் மேடையேற்றும்போது மட்டுமே கலாசாதனா கலைக்கூடம் சார்பில் இலட்சனை சார்ந்தும், அரங்க அமைப்பு சார்ந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதை புரிந்துகொண்டவர்களும் உண்டு, முரண்பட்டு பின் புரிந்து கொண்டவர்களும் உண்டு. அமைப்புகள் கலைத்துவம் சார்ந்து புரிந்துகொண்டாலும், வேறு துறைகளில் இயங்கி வரும் கலைஞர்கள் இன்றும் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதை அறியமுடிகிறது. இன்று எது எப்படியாயினும் ஒரு புதிய படைப்பு எப்படியாக காட்டப்பட வேண்டும் என்பது நெறியாள்கை செய்பவரது உரிமை என்பது கலைஞர்களின் கருத்தாக இருக்கும் என்று நம்பும் அதேவேளை நானும் அவ்வாறே எண்ணுகிறேன்.

பலருக்கும் இதன் தர்க்கமும், இதைச் சொல்வதன் முக்கியத்துவமும், அதன் உண்மை புரிந்திருக்கிறது. ஆனாலும் இது வாத்ததிற்கு இப்போது வரை மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்பதற்கான காரணம், ஒரு பெண் அல்லது ஒரு கலைக்கூடம் எப்படி இப்படியான கோரிக்கைகளை முன்வைத்து அதை நடைமுறைப்படுத்த முடியும் என்ற சிந்தனையாக இருக்குமோ என்ற எண்ணத்தையும் என்னால் தவிர்க்க முடியவில்லை.

அரங்கக்கலை எமது ஆத்மார்த்தமான பிடிமானத்திற்கும் ஈடுபாட்டுக்கும் உரியது. இலக்கியமும் அஃதே. தெரிந்தோ தெரியாமலோ கலையும் இலக்கியமும் கலாசாதனாவின் பயணத்தில் ஒரு பெரும் பகுதியை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கண்மூடித்தனமான எந்த வழக்கங்களுக்கும் பெரும்பான்மைப் போக்கிற்கும் இடம்கொடுத்ததில்லை. படைப்பு எதைக் கோருகிறதோ, அதை கொடுத்துப் படைப்பை முடிந்தவரை முழுமையாக்குவதே கலைக்கூடத்தின் நோக்கம். இந்த இடத்திற் சமரசப்படின் கலை கலையிழந்தே போகும்.

இதைச் சக கலைஞர்களே புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது மனதை நெருடுகிறது.

பின்னூட்டமொன்றை இடுக