உலகின் மிக அழகிய புத்தகக் கடை

தமிழகத்திற்கோ, இலங்கைக்கோ சென்றால் புத்தகக் கடைகளுக்குச் செல்வது வழக்கம். ஐரோப்பிய பயணங்களில் புத்தகக் கடைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தப் புத்தகக்கடை விதிவிலக்கு. அங்கு புத்தகங்கள் வாங்குவதற்காகவும் நான் செல்லவில்லை.

எனது ஸ்பெயின் நடை பயணத்திற்காகப் போத்துக்கல்லின் பொட்டோ (Porto) என்ற நகரத்தில் வந்திறங்கி, யாத்திரைக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக ஒரு நாள் அங்கு தங்க வேண்டியிருந்தது. அந்த நகரில் உலகின் அழகிய புத்தகக் கடை இருப்பதை அறிந்து சனிக்கிழமையன்று காலையிலேயே சென்றோம். சனிக்கிழமைகளில் கடைகளை அடைக்கும் வழக்கம் அங்கு உண்டு. கடைக்குச் சென்றபின் தான் அத்தகவலை அறிந்து கொண்டோம். மிகக் கவலையாயிற்று. அதனால் நடைப்பயணத்திற்குப் பின்னர் புத்தகக் கடையைப் பார்ப்பதென ஒத்தி வைக்கப்பட்டது.

அதேபோலப் பயணத்தை முடித்து, மீண்டும் பொட்டோ நகரத்திற்குள் வந்த சாயங்காலமே புத்தகக் கடைக்கு சென்றால், ஒரு பெரும் கூட்டமே அங்கு காத்திருந்தது. அதுவும் ஒரு வரிசை அல்ல. இரண்டு மூன்று வரிசைகள். ஒவ்வொரு வரிசையின் முன்னும் நேர அட்டவணை பதியப்பட்டிருந்தது. அந்த கடைக்கு செல்வதற்கு முன்கூட்டியே நாம் இணையத்திற் பெயரையும் நேரத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று அப்போதுதான் அறிந்து கொண்டேன். மீண்டும் சலிப்புடன் திரும்பி தங்கும் இடத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

எப்போதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல அடுத்த நாள் காலை, இணையத்தில் நேரத்தை பதிவு செய்து முதல் ஆளாகப் போய் நிற்கலாம் என்று ஏழு மணிக்கே சென்றோம். அங்கே ஏற்கனவே சிலர் எமக்கு முன்னதாக நின்று கொண்டிருந்தார்கள். பரவாயில்லை, எப்படியேனும் இன்று பார்த்துவிடுவது என்று அந்த வரிசையில் நானும் நின்றேன். பக்கத்திலிருந்த ஒரு தேநீர்க் கடையில் வாங்கிய சூடான தேநீர்க் குவளையோடு வரிசையில் நின்றதும் நன்றாகத்தான் இருந்தது. சில காத்திருப்புகள் எப்போதும் சுகம் தானே. அப்படியாகவே தான் உலகின் அழகிய புத்தகக் கடையை பார்க்கக் காத்துநின்றதும்.

உலகத்திற் சில புத்தகக்கடைகள் மாத்திரமே அழகான புத்தகக் கடைகள் என்ற பெயரைப் பெற்றுள்ளன. அதில் பொட்டோவில் உள்ள இந்த லெல்லோ (LIVRARIA LELLO) புத்தகக் கடை முதன்மையானது. இந்தக் கடையைப் பார்ப்பதற்கென்று பலரும் வந்து செல்கின்றனர். தற்போது இது ஒரு சுற்றுலாத் தளம் போலவே பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றது. இப்புத்தகக் கடைக்கு வரும் பலரும் புத்தகங்களை வாங்குவதற்காக அல்லாமல், ஒரு பார்வையாளராகவே வந்து போகின்றனர். ஆதலாற் தற்போது கடைக்குள் நுழைவதற்கு நுழைவுச்சீட்டுக்கள் விற்கப்படுகின்றன. இங்கே வந்து செல்லும் பார்வையாளர்களில் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே புத்தகங்களை வாங்குவதாகக் கணக்கெடுப்புச் சொல்கின்றதாம்.

பொறியியலாளர் பிரான்சிஸ்கோ சேவியர் எஸ்டீவ்ஸால் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஜோஸ் மற்றும் அன்டோனியோ லெல்லோ என்ற இரு சகோதரர்களால் 1906 இல் இப்புத்தகக்கடை திறக்கப்பட்டது.

நுண்ணிய மர வேலைப்பாடுகள், சிவப்பு நிறத்திற் சுழற்படிக்கட்டுகள் மற்றும் வர்ணங்களாலான கண்ணாடிக் கூரை வடிவமைப்புகள்- பாலங்கள் எனச் சிறிய இடமானாலும்- கலையின் உச்சமாக அக்கட்டிடம் விளங்கியது. இரண்டு மாடிகள் உள்ள மிக ஒடுக்கமான ஒரு கட்டிடமானாலும் கலைமகள் தன்னை ஒப்புக்கொடுத்த இடமாக அது விளங்கியது.

புத்தகக் கடையின் வேலைப்பாடுகள் ஒரு தேவாலயத்தின் பிரதிபலிப்பினைக் கொண்டுள்ளன. சுவர்கள் மற்றும் அடுக்குகள், படிக்கட்டுகளின் வளைவுகள் என அனைத்திலும் நோவியோ (Art-Nouveau)பாணிக் கலை வடிவமைப்பு என்று அறிய முடிந்தது.

புத்தகங்களைப் பார்ப்பதைக் காட்டிலும் கட்டட வேலைப்பாடுகளையும் கலை நுணுக்கங்களையும் வர்ணக் கலவைகளையும் பார்ப்பதிலேயே மனம் சுழன்று கொண்டிருந்தது. எனக்கு மட்டுமல்ல அங்கு வந்திருந்த பலரும் அப்படியாகவே காணப்பட்டனர்.

புத்தகக் கடையின் அழகினை மனம் நெகிழப் பார்த்து முடித்த பின் புத்தகங்களை பார்ப்போம் என்று இறங்கினால், புத்தகங்கள் எல்லாம் போர்த்துகீச மொழியிலே அச்சிடப்பட்டிருந்தன. ஆங்கில நூல்கள் ஏதேனும் இருக்கின்றனவா எனக் கேட்டபோது, ஒரு சிறிய அலமாரியைக் காட்டினர். அதிலிருந்த புத்தகங்கள் பலவும் போர்த்துக்கீச மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கில நூல்களாக இருந்தன. சேக்ஸ்பியர் போன்ற மிகச் சில எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் சிலவும் இருந்தன. புத்தகங்கள் அந்தக் கடையினாலேயே பதிப்புச் செய்யப்பட்டு, அட்டையில் உலகத்தின் மிக அழகிய புத்தகக் கடையின் வடிவமைப்பு என்று எழுதப்பட்டும் இருந்தது. அதற்காகவே எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஷேக்ஸ்பியரின் சில நூல்களை வாங்கிக் கொண்டேன்.

இப் புத்தகக்கடையின் மேலதிகத் தகவல் ஒன்று. உலகின் பிரபலமான ஹரி பொத்தர் (Harry Potter) நூல் முதலில் எழுதப்பட்டது இங்குதான் என்று சொல்லப்படுகிறது. ஹரி பொத்தரின் ஆசிரியரான Joanne Rowlin அவர்கள் ஆங்கில ஆசிரியராக பொட்டோவில் பணிபுரிந்த போது இப்புத்தகக் கடைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். புத்தகக் கடை அவருக்கு மனதுக்கு நெருக்கமான இடமாகி இருந்ததால் அங்கிருந்துதான் ஹரி பொத்தர் என்ற நூலை எழுதத் தொடங்கி இருக்கின்றார். நூலில் காணப்படும் கலை நுட்பங்களுக்கான கற்பனை வளத்தினை இந்த கடையில் இருந்தே பெற்றுக்கொண்டதாக ஆசிரியர் கூறியிருக்கின்றார். இந்தப் புத்தகக் கடையைப் பார்க்கும் போது அதை எம்மாலும் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனாலும் பிற புத்தகக் கடையில் அல்லது நூலகங்களில் இருக்கக்கூடிய அமைதி இங்கு இருக்கவில்லை. எந்த இடத்திலும் அமைதியாக அமர்ந்து புத்தகங்களை பார்ப்பதோ படிப்பதோ முடியாதபடி, திருவிழாக் கோலம் பூண்ட ஒரு தளமாகவே இரு மாடிகளும் காட்சியளித்தன. ஹரி பொத்தர் எழுதிய காலத்திற் புத்தகக் கடைக்குள் இத்தனை மனிதர்கள் இருந்திருந்தால் நிச்சயமாக அவரால் புத்தகத்தை அங்கே எழுதி இருக்க முடியாது. அந்தக் காலத்தில் இப் புத்தகக் கடை காட்சிப்பொருளாக அல்லாமல் ஒரு அழகான புத்தகக் கடையாக மட்டுமே இருந்திருக்கக்கூடும்.

புத்தகப் பிரியர்களுக்கும் வாசிப்பில் அலாதியான பிரியமுடையவர்களுக்கும் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் லெல்லோ புத்தகக் கடை பார்க்க வேண்டிய இடம்.

நல் அழகியல் அநுபவம்.

பின்னூட்டமொன்றை இடுக