சிப்பியும் சூனியக்காரியும்

(பயணம் 1 )

பயணங்களைப் பற்றி எழுதுவது என்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன். பயணங்களை நாம் எழுதும் போது அங்குள்ள தகவல்களைத் தரும் ஒரு கட்டுரையாக எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. இன்றைய தகவற் தொழில்நுட்பக் காலத்திற் தகவல்களை நாம் இணையத் தளங்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு பயணத்தின் போது மனிதன் எதைப் பெற்றுக் கொள்கின்றான்? பெற்றுக் கொள்கின்றானா… இல்லவே இல்லை. அவன் தன்னை இழக்கத் தொடங்குகிறான் என்பதே முதன்மையானது. ஒரு பயணத்தில் நீங்கள் உங்களை இழக்கவில்லை எனில் அது பயணம் அல்ல. அது வெறும் சுற்றுலா தான்.

இந்த நடைபயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து கடைசி நாள் வரை நான் என்பவள் வேறொருத்தியாகவே இருந்தேன். என்னிடம் இருந்த அடையாளங்கள் அனைத்தும் களையப்பட்டிருந்தன.

நான் ஒரு புத்தகப் பிரியையாகவோ, நடனக் கலைஞராகவோ, அல்லது ஒரு கவிதை விரும்பியாகவோ கூட என்னை உணரவில்லை. எனது பணி, நான் மேற்கொண்டிருந்த புதிய விடயங்கள், எனது குடும்பம் எனது நண்பர்கள் அனைத்தும் என்னில் இருந்து களையப்பட்டிருந்தன. கணினியில் இருந்து துடைத்து எறியப்பட்ட தரவுகளைப் போல மனம் பெருவெளியெனச் சுமைகளை இறக்கி ஒரு இறகினைப் போல ஆகிவிட்டிருந்தது.

அப்போதுதான் பூமிக்கு வந்த ஒரு மனுஷியைப் போல அங்குள்ள சக பயணிகளுடன் ஒரு பயணியாக மட்டுமே வாழ்ந்த நாட்கள் இவை. இயற்கையுடனும் நிலத்துடனும் ஆகாயத்துடனும் இன்ன பிற உயிர்களுடனும் மிகத் தொடர்புள்ள ஒரு மனுசியாக நான் உணர முடிந்தது இந்தப் பயணத்திற் தான்.

இந்தப் பயணத்தின் மூலம் நான் இழந்தவற்றையும் நான் பெற்றுக் கொண்ட புதிய இனிய கதைகளையும் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கு தொடங்குவது? எங்கு முடிப்பது? சில கதைகளோடு பயணிப்போம்.

போர்த்துக்கல் நாட்டின் போர்டோ நகரத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் சந்தியாகோ தி கொம்பஸ்டெலா (Santiago De Compestela) நகரத்திற்கு மேற்கொண்ட நடை பயணத்திலிருந்து சொல்ல கதைகள் ஏராளம் உண்டு. எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்பதுதான் கடினம்.

ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ‘கலீசியா தன்னாட்சிப் பிராந்தியத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் ஐரோப்பியக் கத்தோலிக்கர்களின் புகழ்பெற்ற பாதயாத்திரைத் தலமாகும்.

இந்த நடை பயணத்திற் போகும் வழி எங்கும் எமக்குத் திரும்பத் திரும்ப சில குறியீட்டு வடிவங்கள் காட்டப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்தக் குறியீடுகளில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவன சில. அதைப்பற்றி எழுதுவதிலிருந்து நடைப்பயண சுவாரிசியங்களை தொடங்கலாம் என்று தோன்றியது.

• ஒரு சிப்பியின் குறியீடு.

• மஞ்சள் நிற வழிகாட்டிக்குறி.

• சிவப்பு நிறச் சிலுவை

• ஊன்றுகோல்

• சூனியக்காரியின் வடிவம்

இந்த குறியீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதையுண்டு. ஊன்றுகோல், நடைபயணத்தை மேற்கொள்பவர்கள் இலகுவாகத் தமது நடைபயணத்தை முடிப்பதற்குக் கொண்டுவரும் தடியாகும். மஞ்சள் நிற வழிகாட்டி அம்புக்குறியானது வழிநெடுக எமக்குப் பாதையைக் காட்டி உறுதிப்படுத்துவதற்காக வரையப்பட்டிருக்கும் வழிகாட்டியாகும். சிவப்பு நிறச் சிலுவை 12 சீடர்களில் ஒருவரான யாக்கோப்பை குறிப்பதாகும்.

இங்கே, சிப்பியினதும் சூனியக்காரியினதும் குறியீடுகளுக்குரிய கதைகளே என்னைக் கவர்ந்தன. முக்கியமாக சூனியக்காரியின் கதை.

சிப்பி

……….

ஸ்பெயின் நாட்டை நோக்கிப் பாத யாத்திரை மேற்கொள்ளும் அனைத்துப் பயணிகளும் ‘சந்தியாகோ தி கொம்பஸ்தெலா’ தேவாலயத்திற்குச் செல்கின்றனர். அங்கேதான் அவர்களுடைய யாத்திரை முடிவடைகிறது. இயேசு கிறிஸ்துவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான பெரிய யாக்கோபின் கல்லறை இந்தத் தேவாலயத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

44வது வயதில் ஜெருசலேமில் தூக்கிலிடப்பட்ட பெரிய யாக்கோபின் கல்லறை, 813ஆம் ஆண்டு இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டதிலிருந்து இத்தலத்திற்கு மக்கள் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். ஜெருசலேமில் தூக்கிலிடப்பட்டாலும் உடலின் எச்சங்கள் அவர் ஒரு காலம் பணியாற்றிய கெம்பஸ்டெலாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்றிலிருந்து இந்த நகரம் ஐரோப்பிய கத்தோலிக்கர்களின் புகழ்பெற்ற புனித யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

இயேசு கிறிஸ்துவின் சீடரான யாக்கோபு எருசலேம் நகரின் அரசரால் கொல்லப்பட்டிருந்தாலும் அவருடைய உடலைத் தேவதூதர்கள் கடல்வழி தேவாலயம் இருக்கும் சந்தியாகோ தி கொம்பஸ்தெலாவிற்குக் கொண்டு சென்றதாகக் கதைகள் உள்ளன. அப்படியாகக் கடலிலிருந்து கிடைக்கப்பெற்ற அவரது உடலைச் சிப்பிகள் முற்றிலுமாக மூடி இருந்ததாகவும் – அதை ஒரு மேய்ப்பன் கண்டெடுத்ததாகவும் – எடுக்கப்பட்ட எச்சங்கள் அங்கே பின்பு புதைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது. யாக்கோப்பின் கல்லறை என்று நம்பப்படுகின்றமையால் அங்கே வரும் பயணிகள் பார்வைக்கும் அவர் சமாதி வைக்கப்பட்டிருக்கின்றது.

யாக்கோப் புதைக்கப்பட்ட இடத்தில் ஆரம்பத்தில் ஒரு சிறு தேவாலயம் கட்டப்பட்டுப் பின் 1000ஆம் ஆண்டில் இந்தக் கத்தோலிக்கத் தேவாலயத்தின் கட்டுமானப்பணிகள் பிரமாண்டமாகத் தொடங்கியது. இன்று வரை இத்தேவாலயத்திற்கு நாளுக்கு மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் பாதயாத்திரிகள் வந்து செல்கின்றனர். வந்து செல்லும் அநேக பாதயாத்திரிகள் பல வடிவங்களிற் சிப்பிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இச் சிப்பி குறியீட்டிற்கு வேறு பல கதைகளும் சொல்லப்படுகின்றன. வீகோ என்ற அங்கு உள்ள ஒரு நகரத்தில் உள்ள சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட கதை வேறொன்றாகும்.

ஒரு திருமண வைபவத்தில் மணமக்களும் அங்கு வந்திருந்த விருந்தினர்களும் குதிரைகளில் ஏறி ஒரு தடியை எறிந்து விளையாடிய படி இருந்தனர். எறியப்படும் தடி மண்ணில் விழுவதற்கு முன் அதைக் கைப்பற்ற வேண்டும் என்பதே விளையாட்டின் விதி. அந்த விளையாட்டில் மணமகன் எறிந்த தடி கடலிற் சென்று விழுந்தது. அதை எடுப்பதற்காகச் சென்ற மணமகன் அவனுடைய குதிரையோடு கடலில் மூழ்கினான். சற்று நேரத்தின் பின் அந்தக் குதிரையோடு மணமகன் கடலிலிருந்து வெளிவந்தான். அப்படி வரும்போது அவனதும் குதிரையினதும் உடல் முழுவதும் சிற்பிகளால் மூடப்பட்டிருந்தன. அது சந்தியாகோ என்ற தேவதூதரின் செயல் என்றும் நம்பப்படுகின்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மணமகனும் அங்கிருந்த பலரும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றத்தொடங்கினர் என்றும் கூறப்படுகின்றது.

சிப்பியின் முக்கியத்துவத்திற்கு வேறு கதைகளும் உண்டு. பாதயாத்திரை மேற்கொள்ளும் மக்கள் போகும் வழியிற் தமது தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கா நீரை நிரப்புவதற்காகச் சிப்பிகளைப் பயன்படுத்தியதாகவும் கதையுண்டு. அதன் காரணமாக இச்சிப்பிகள் இத்தேவாலயத்தின் குறியீடாக மாறியதாகவும் சொல்பவர்கள் உண்டு.

இந்தச் சிப்பிகள் பல அளவுகளிலும் கிடைக்கின்றது. செல்லும் வழியெங்கும் உள்ள குட்டி குட்டிக் கடைகளில் ஒரு வியாபாரப் பொருளாகி இருப்பதை காணமுடியும். ஆபரணங்களாகவும் உடைகளில் வடிவங்களாகவும் தொப்பிகளிலும் பலவிதமான பொருட்களிலும் பொறிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் விரும்பி வாங்கப்படுகின்றது.

பயணிகள் தமது தோள் பையிலும் சட்டைகளிலும் சுமந்து வரும் ஒரு குறியீடாக சிற்பிகள் மாறி இருக்கின்றன. மட்டுமல்லாமல் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டித் தூண்களிலும் வழிகாட்டும் குறியீடுகளிலும் அந்த சிப்பியே பிரதான குறியீடாகப் பாவிக்கப்படுகின்றது.

நடந்து சென்ற பாதைகள் எங்கும் இருக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் தமது வீட்டைச் சுற்றியுள்ள வேலிகளில் இச்சிப்பியை பிரதான வடிவங்களாக பலரும் பாவித்து இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. தரையிற் பதிக்கும் கற்களிலும் தூண்களிலும் எனவாகக் காணும் இடங்களில் எல்லாம் சிப்பியின் வடிவங்களால் நடந்து செல்லும் பாதை எங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பயணத்தில் நானும் இரண்டு சிப்பிகளை வாங்கியுள்ளேன். சக பயணிகளைப் போல ஆரம்பத்திலேயே நான் அந்தச் சிப்பிகளை வாங்கவில்லை. சுமக்கும் பொதியின் கனத்தை நான் எந்த வகையிலும் அதிகப்படுத்த விரும்பாததால் எனது பயணத்தை முடித்தபின் தேவாலயச் சுற்று வட்டாரத்தில் உள்ள கடைத் தெருக்களில் சிப்பியை வாங்கிக்கொண்டேன். அவை எனது தோட்பையையும் அலங்கரித்துள்ளன. எனது வீட்டில் உள்ள மின்விளக்கிலும் சிப்பி தொங்கவிடப்பட்டிருக்கிறது.

போகும் வழியில் அறிந்துகொண்ட கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது சூனியக்காரிகளின் கதையாகும். சூனிக்காரிகளின் தோற்றமும் அங்கு பல வடிவங்களிற் காணப்படுகிறது. இது வெறும் வாய்வழிக்கதையல்ல. வரலாறு.

அடுத்த பதிவிற் சூனிக்காரி வருவாள்.

One thought on “சிப்பியும் சூனியக்காரியும்

பின்னூட்டமொன்றை இடுக