ஆன்மீகம் – மெய்யியற்தேடல்

ஆன்மீகம் – மெய்யியற்தேடல்

……

இந்தியக் கலைமரபு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பலரும் சொல்லும் விடயங்களில் முதன்மையானது ஆன்மீகம்.

மனித புத்திக்கு எட்டாத, அப்பாற்பட்ட விடயங்கள் என்று மனம் கருதும் விடயங்களை நோக்கிய தேடலே ஆன்மீகம். ஆன்மாவினூடு நடைபெறும் தேடல் என்பது அதன் பொருள்.

இந்தியக் கலை மரபிலிருந்து ஏனைய கலை மரபுகளை வேறுபடுத்திக் காட்டும் தன்மையுடையது ஆன்மீகம். எனினும் ஏனைய நாட்டுக் கலைமரபுகளில் ஒட்டுமொத்தமாக ஆன்மீகம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியக் கலைமரபில் ஆன்மிகம் என்பது அதீதமாக முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

”கலைகளின் நோக்கம் கடவுளைக் காண்பது” என்பதான ஒரு கருத்தியலாக ஆன்மீகத் தேடலை முன்வைக்கும் நிலை இன்றைய இந்தியக் கலைமரபிற் காணப்படுகின்றது.

அன்றைய கலைகள் யாவும் சடங்குகளுடனும், இயற்கையுடனும் தொடர்புடையவையாக இருந்திருக்கின்றன என்பதைக் குகையோவியங்கள் மூலம் அறிகிறோம். கலையென்பது கடவுளை அடைவதற்கான வழி என்ற கருத்தை நாம் எந்த மூலநூல்களின் மூலமும் அறிகிலோம்.

நாட்டியக்கலையின் மூலநூல்களான நாட்டிய சாஸ்திரம், கூத்த நூல், தொல்காப்பியம், அபிநயத்தர்ப்பணம், பஞ்ச மரபு போன்ற நூல்களை ஆய்ந்தறிவது கருத்திற்கொள்ளத்தக்கது.

இடைக்காலத்து அழகியற்கலைகள் பற்றிய சிந்தனைகள் இறையியல் நோக்கிற் கட்டமைக்கப்பட்டன. சமய அமைப்புகளே கலையின் ஓட்டத்தைத் தீர்மானிக்கத் தொடங்கின. வழிபாட்டுத் தலங்களே அழகியற்கலைக்கான நிலையங்களாகவும் ஆயின.

பக்திமரபு எழுந்த காலங்களும் (பொ.யு 500) கோயில்களினூடு கலைகள் வளரத்தொடங்கிய வரலாறுகளும் (பொ.யு 1000) ’கலைகளின் நோக்கம் கடவுளைக் காண்பது’ என்ற கருத்தியலை ஒரு மரபாக ஏற்படுத்தியிருகின்றன. நாட்டியக்கலை வரலாற்றின் ஒரு பாதி வழியில் இருந்து கொண்டுவரப்பட்டதே «கடவுளைக் காணுதல்» எனும் கருத்தியல் என்பதை நாம் நாட்டிய மூலநூல்களை ஆய்வுசெய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அன்றிலிருந்து, ’கலைகளின் நோக்கம் கடவுளைக் காண்பது’ என்ற கருத்தைச் சமூகம் உள்வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடாகத்தான் கலைகளும் கருத்தாக்கங்களும் கடவுளைக் காணும் நோக்கில் இன்றுவரை பயணிக்கின்றன. இவ்வழக்கு இன்றைய நவீன காலங்களிலும் தொடர்ந்து கைமாற்றப்பட்டுவரும் ஒரு கருத்துவடிவமாகவும் இருக்கின்றது.

”கடவுளைக் காணுதல் எனும் ‘புரிதலிலிருந்துதான்’ ஆடல், பாடல், இசை, சிற்பம், ஓவியம் என அனைத்தும் பக்திமரபுக் காலங்களுக்குப் பின் வளர்க்கப்பட்டிருக்கின்றன.

எனினும் இப்படியான புரிதலினூடு தொடரப்பட்ட மரபைப் பேணிச் செல்வதே கலையையும் அதன் பாரம்பரியத்தையும் பேணிச் செல்வதாகும் என்ற கருத்து நமது கலைஞர்களிடத்து இன்றும் ஆழ வேரூன்றி இருக்கின்றது. இம் மரபின் தொடர்ச்சியை விட்டுச் செல்லும் கலையானது அதனுடைய அடிப்படை, சாரம், நோக்கம் மற்றும் அழகியல் தன்மையை இழந்துவிடும் என்றும் பெரிதும் நம்பப்படுகின்றது.

«கலைகளின் நோக்கம் கடவுளைக் காண்பது» என்றே எடுத்துக்கொண்டாலும் அதன் பின் இருக்கக்கூடிய கடவுள் என்பது யார் அல்லது இங்கு குறிப்பிடப்படும் கடவுள் என்பது என்ன என்பதையும் தேடுதல் வேண்டும்.

இக்கேள்விக்கான ஒரு விடையையும் இந்தியக் கலைமரபு கண்டு சொல்கின்றது. அவ் விடையைக் கலைக்கூடாகவே வெளிப்படுத்தியும் இருக்கின்றது.

பொதுவாக மனிதர்கள் விளங்கிக் கொள்வது போல கருவறையில் வைக்கப்பட்டிருக்கும் கடவுள் சிலையும் அதன் தோற்றமும் தான் கடவுள் என்று விளங்கிக் கொள்வதா? அல்லது அச்சிற்பங்களுக்குள் இருக்கும் பொருளை விளங்கிக் கொள்வதா?

இவற்றை விளங்கிக் கொள்வதற்கு இந்தியக் கலைமரபு இரு பெரும் சான்றுகளை வைத்திருக்கின்றது.

  1. நமது அகத்தை அறிந்து கொள்ளல்
  2. நம்மைப் பிரபஞ்சமளாவிப் பார்த்தல்

நமது அகத்தை அறிந்து கொள்ளல்.

நமது சிற்ப மரபுகளிலே கடவுளர்களுடைய உருவச் சிலைகளை உருவாக்குகின்ற போது, அவற்றினுடைய கண்களை நேராக நிமிர்ந்து பார்ப்பது போல அல்லாமல் அவை தமது மூக்கின் நுனியைப் பார்ப்பதாக அமைக்கப்பட்டிப்பதைக் காணமுடியும்.

கண்களைப் பாதி மூடித் தியான நிலையிற் தனக்குட் தான் பார்ப்பதாக இருக்கும் சிலைகள் இந்திய மரபினைச் சேர்ந்தவை. அதன் நுண்பொருளாவது நம் அகத்தை நாம் உள்நோக்க வேண்டும் என்பதே.

தேடியுள்ளே கண்டு தீர்ந்தற்றவாறன்றே – திருமந்திரம், திருமூலர்

இப்படியாக கடவுள் சிலைகள் மூலம் ஆன்மீகத் தத்துவங்களை உருவகிக்கும் ஒரு கலை மரபை இந்தியக் கலை உருவாக்கி வைத்திருக்கின்றது.

நடராஜர், புத்தர், மகாவீரர் உட்பட அனைத்து கடவுளர் சிலைகளிலும் (நாட்டார் மரபு தவிர்ந்த) இக்கலை மரபை நாம் காணமுடியும்.

இங்கே கலைகளின் நோக்கம் என்பது நம் அகத்தை உணர்தலாம். தனக்கு உள்ளே தன்னைப் பார்த்தல் என்பவற்றின் குறியீடாகும். பகுத்தாய்ந்தவர்கள் சொன்னது போல ‘உன்னை நீ அறி’ என்பதாகும்.

அகத்தை உணர்தல் என்ற கருத்தை நாம் மற்றொரு விடயத்தோடும் ஒப்புநோக்க முடியும். மனித மனம் எப்போதும் ஒரு பொருளின் இருமைத் தன்மைகளை வைத்தே சிந்திக்கின்றது. அதாவது இரவு என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு பகல் என்ற ஒன்று தெரிந்திருக்க வேண்டும். உண்மைக்கு பொய் என்ற ஒரு விடயம் தெரிந்திருக்க வேண்டும். இது மனித மனதின் இயங்கியற் கோட்பாடு.

மனதின் இயங்கியலான இருமைக் கோட்பாட்டை என்றென்றைக்கும் கடந்து நிற்பதே பேரின்ப நிலையை அடைவதற்கான வழியெனக் கருதப்படுகின்றது. ஒரு மனிதன் தன்னைத்தான் கடந்து நிற்றல் என்ற நிலையை, ஒரு கணநேரம் ஏதோ ஒரு விடயத்துடன் தன்னைத் தான் மறந்து (இழந்து) லயித்து நிற்றலின் மூலமே பெறுகின்றான். அது ஒரு அழகியற் பொருளை இரசிப்பதன் மூலமோ, காதலின் உச்சத்திலோ அல்லால் ஒரு நாட்டியத்தினை ஆற்றுகை செய்வதன் மூலமோ பெற்றுக்கொள்ள முடியும்.

’நான்’(மாயை) என்ற நிலையில் இருந்து விடுபட்டு நிரந்தரமாகப் பேரின்ப நிலையைப் பெற்றுக் கொள்வதற்கான வழியே இருமைத்தன்மையைக் கடப்பதாகும்.

இருமைத்தன்மையைக் கடந்து நிற்கும் அறிவை நித்தியமாகப் பெறுவதே இங்கு கடவுளைக் காணுதல் என்ற பொருட்படுகிறது.

‘நான்’ என்பதைக் கடந்த நிலையை மனித உயிர்கள் அடையமுடியாவிட்டாலும் கூட, இப்படியாக ஒரு கருத்தினை எமக்கு நினைவூட்டும் பொருளாகவே கடவுற் சிற்பங்கள் கண்களைப் பாதி மூடி அகத்தினைக் காணும் நோக்கிற் செதுக்கப்பட்டிருக்கின்றன.

கலைகளின் மூலம் வரை சென்று சிந்தித்த அத்தனை கலைதொடர்பான மூலநூல்களிலும் நாம் இச்சிந்தனை வடிவத்தைக் காணமுடியும்.

இவ்விடயத்தை பேச ‘உயிர் மிகும் ஓவியங்கள்’ நடனநாடகப் படைப்பில் இரு காட்சிகள் வடிவமைக்கப்பட்டன. நமது அகத்தை அறிந்து கொள்ளல் என்ற விடயத்தையும் உலகின் உயிர்தொடர்ச்சியையும் பேசும் வகையில் அமைந்த பாரதி பாடல் ஒன்றும், நம்மை பிரபஞ்சமளாவிப் பார்த்தல் என்பதைப் பேசும் வகையில் அமைந்த பாரதிதாசன் பாடல் ஒன்றிற்கும் நடனமமைத்தோம்.

கீழ்க்காணும் புகைப்படங்கள் அகம் மற்றும் உயிற்தொடர்ச்சி சார்ந்தவை.

எடுத்துக்கொண்ட பாரதி பாடலின் பொருள் விளக்கத்தை இவ்விணைப்பில் வாசித்தறிய முடியும்.

பிரபஞ்சதத்துவம் சார்ந்த பதிவு தொடரும்…

……

பின்னூட்டமொன்றை இடுக