எழுத்து என் சுதந்திரம்

நேர்காணல் செய்தவர்: றஜித்தா சாம்

கவிதா லட்சுமி: இலங்கையில் பிறந்து, இந்தியாவில் சிறுபராயத்தின் சில ஆண்டுகளைக் கடந்து, புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் குறிப்பிடத்தக்க இளம் பெண் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியம், நடனம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என பன்முக ஆளுமை கொண்டவர். தமிழ் இலக்கிய தேடல் உள்ளவர். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆழமான கருத்தியல்களைப் பதிவாக்கம் செய்பவர். கவிதையும் நடனமும் இவருக்கு உடலும் ஆன்மாவும் போன்றது. பனிபடலத் தாமரை, என் ஏதேன் தோட்டம், தொட்டிப்பூ, கறுத்தப் பெண், சிகண்டி என பல கவிதை நூல்களையும் , கட்டுரை நூல்களையும் வெளிட்டிருக்கிறார். பல சஞ்சிகைகள் இணைய இதழ்களில் இவருடைய ஆக்கங்கள் வெளி வந்துகொண்டிருக்கின்றன. நோர்வே கலாசாதனா நடப்பள்ளியின் இயக்குனராக நடன ஆசிரியராகவும் இயங்கிக்கொண்டு பல புதுமைகளை பரதக்கலையிலும் ஏற்படுத்தி இருக்கின்றார். உள்ளம் சஞ்சிகைக்கான நேர்காணலில் அவரை சந்திக்கிறேன்

வணக்கம் கவிதா

தங்களுடைய கலை இலக்கிய பரப்பு விரிந்ததாக இருந்தாலும், கவிதையியலோடு தங்களுடைய ஈடுபாடு அதிகம் என்பதால் தங்களுடைய இலக்கிய அனுபவங்களை உள்ளம் சஞ்சிகை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். கவிதை நூல்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறீர்கள். கவிதையைக் கல்லாத கலை என்பார்கள். கலைகளின் அரசி என்பார்கள். கவிதை என்பதற்கான தங்களுடைய புரிதல் என்ன?


கவிதையோ, நடனமோ, ஓவியமோ, இசையோ அனைத்தும் மனித மனதின் வெளிப்பாடுதான். ஒவ்வொரு மனமும் தனது வெளிப்பாட்டிற்குரிய வடிவத்தை தேர்ந்து எடுத்துக்கொள்கிறது. சிறுவயதில் இருந்தே எனக்குக் கவிதை வடிவத்தில் ஈடுபாடு இருந்தது.

நோர்வேக்கு வந்தபோது எனது வயது பன்னிரண்டு. அப்போது எனக்கு இந்த நாட்டின் மொழி தெரியாது. பண்பாடுகள் தெரியாது. எனது நண்பர்களின் இழப்பு, தனிமை என்பவையெல்லாம் என்னை வாசிப்பு பழக்கத்திற்குள் தள்ளியது.. எனது தனிமையை விரட்டவே நான் வாசிக்கத் தொடங்கியதும், எழுதத் தொடங்கியதும். எனது மனதில் இருப்பவற்றை இறக்கி வைத்துவிடும் ஒரு முயற்சியே. எனக்கு மட்டுமான அந்த உலகம் தனிமையிலும் அழகாக இருந்தது.

கலைகளைக் கற்றல் என்று பார்க்கும்போது, கவிதையில் மட்டுமல்ல எந்த ஒரு கலையிலும் அதன் இலக்கணங்களை, அதன் வடிவங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் கற்ற இலக்கணங்களையும் வடிவங்களையும் மட்டும் வைத்து உயர்ந்ததொரு கவிதையையோ கலையையோ படைத்துவிட முடியுமா என்பது கேள்விக்குரிது. மிகச்சிறந்த அறிஞரைப்போல கலையின் விதிகளை கற்றுக்கொள்ளுங்கள். அப்போதான் கலைஞர்களாக நீங்கள் அவைகளை உடைத்துப்போடலாம் – என்ற சொல் மனதிற்கு நெருக்கமாகவிட்ட ஓவியர் பிக்காசோவினுடையது.

உயர்ந்த கலைகளுக்கு இலக்கணம் தாண்டிய சிலவிடயங்கள் தேவைப்படுகிறது. அதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவையாக நான் கருதுகிறேன். ஒன்று எடுத்துக்கொண்ட கலைக்கான பொருளை நெஞ்சில் கொள்வது, அது மனதில் இருந்து உண்மையாக வெளிப்படும். அடுத்து மனதின் நுண்ணுணர்வு சார்ந்த விடயம். இவ்விரண்டு விடயங்களையும் பற்றி தொல்காப்பியம் மிக ஆழமாக எடுத்துரைக்கிறது.

..நெஞ்சுகொளின் அல்லது
காட்டலாகாப் பொருள் என்ப..

என்றும்,

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே

என்றும், இச் சூத்திரங்கள் சொல்வதும் இதைத்தான். நுண்ணுணர்வு உடைய மனிதர்களே கவிஞர்கள் கலைஞர்களாகின்றனர். கற்றதை ஒப்புவிக்கும் கலைஞர்களுக்கும், தன் உணர்வுகளை கலையாக வெளிப்படுத்தும் படைப்பாளிகளுக்கும் பெரும் வேறுபாடுண்டு. அதை இலகுவில் இனங்காணமுடியும்..

நுண்ணறிவும், நுண்ணுணர்வும் கொண்ட மனிதர்களின் மனதில் இருந்து உண்மைத்தன்மையோடு வெளிப்படும் விடயங்களே உயர்ந்த கலை அனுபவங்களாக உணரப்படுகிறது.

கவிதைதான் கலையின் அரசி என்பது ஏற்புடையதல்ல. அனைத்து நுண் கலைகளும் உயர்ந்த தன்மையுடையவையே!

பெண் கவிஞராக கவிதை இலக்கியப் பரப்பில் தாங்கள் சுதந்திரமா இயங்குவதாகக் கருதுகிறீர்களா? மனதிற்கு பட்டதை துணிச்சலாக எழுதும் சூழ்நிலை தங்களுக்கு அமைந்திருக்கின்றதா? பெண் என்ற நிலையில், சொல்ல நினைத்தவற்றை தணிக்கை செய்த சந்தர்ப்பங்கள் உண்டா?


நடனத்துறையைவிட கவிதைத்துறையில் நான் சுதந்திரமாகவே இயங்குகிறேன். நாட்டியக்கலையில் பேசுபொருள் சார்ந்த பல விடயங்களை கட்டுடைத்துச்செல்ல வேண்டிய நிலைதான் இன்னும் இருக்கின்றது. இலக்கியம் தன்னை கட்டுடைக்கத் தொடங்கிப் பல காலம் ஆகிவிட்டது. மனதி;ல் பட்டதை எழுதும் துணிவும் எனக்கு இருக்கிறது. எழுத்து எனது சுதந்திரம்.
தனிநடனம் ஆடுவதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் நினைத்த கருத்தை ஆடும் துணிவு எனக்குண்டு. மாணவர்களின் மூலம் வடிவமைக்கப்படும் படைப்புகள் பலவற்றுள் முழுமையான சுதந்திரம் இருப்பதில்லை என்பது உண்மை.


எனது எழுத்துகளைச் சுதந்திரத்தோடு எழுதுவதாகவே உணர்கிறேன், இருந்தும்;, எல்லா கவிதைகளும் எல்லாருக்கும் புரிவதில்லை, எல்லாருக்கும் எல்லா கவிதைகளும் பிடித்துப்போவதில்லை. விமர்சனர்கள், கருத்துகள், முரண்பாடுகளைச் சந்தித்திருக்கிறேன்.
அநேக முரண்பாடுகள், விமர்சனங்கள் பெண் சார்ந்த அல்லது பெண்ணியம் சார்ந்த கவிதைகளுக்கானவையாகவே இருந்திருக்கின்றன. புலம் பெயர்ந்த மண்ணிற்கூட ஒரு பெண்ணியவாதியாக இருப்பது அத்தனை இலகுவானதல்ல. அதை ஒரு பிரச்சனையாகவே பார்க்கும் சமூகமாகத்தான் தமிழ்ச் சமூகம் உள்ளது.


பெண்ணியக் கருத்துக்களைச் சுதந்திரமாகப் பேசும்போது, பொய் முகநூல் கணக்குகளால் சேறடிப்பது, பேச்சுக்களால் குற்ற உணர்வுகளைக் கொடுப்பது, குத்திப் பேசுவது, முடக்குவது, தூற்றுவது என்று அருவருக்கத்தக்க வகையிலான பல காரியங்களைச் இச்சமூகம் செய்துகொண்டேதான் இருக்கிறது. இதை நான் சொந்ம அநுபவத்திலிருந்துதான் பேசுகிறேன்.
எமது சமூகத்திற்கு பெண்ணியம் என்பது ஒரு பெண்ணின் இலக்கணப் பிறழ்வு. இதையெல்லாம் தாண்டி நான் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறேன். எமது சமூகத்தைப் பற்றிய புரிதல் எனக்கு இருப்பதால், இவைகளையெல்லாம் ஒரு தடையாக நான் கருதுவதேயில்லை
ஒரு பெண்ணியவாதியாக. பெண் சார்ந்த என் எழுத்துகளுக்காக வாழ்க்கையில் நான் கொடுத்திருக்கும் விலை அதிகம்தான். சமூகம் கொடுத்திருக்கும் பெண் இலக்கணத்திற்குள் இருந்துவிடுவது வாழ்க்கையை சுலபமானதாக வைத்திருந்திருக்குமோ என்றுகூட சிலவேளைகளிற் எண்ணியிருக்கிறேன்.


இருந்தாலும் இன்று ஒரு பெண் தனது அனைத்து உரிமைகளையும் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறாள் என்றால், அவை தெருவில் இறங்கிப் போராடிய மாந்தர்களினால் கிடைக்கப்பெற்றதே தவிர, பெண் இலக்கணத்துள் ஒழிந்துகொண்டு வாழப்பழகியவர்களால் அல்ல.


ஒரு விடயத்தை தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகு, நல்லபெயர் வாங்குவதற்காக வரித்துக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து இருந்து பின்வாங்குவது கோழைத்தனம். சமூகத்திடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அதை நான் செய்வதற்கில்லை.

’ஆற்றாமையும் இயலாமையும் தோற்றுவித்த அனுபவங்களின் வார்ப்படம் இது’ என்று தங்களுடைய கவிதை நூல் பற்றி மேத்தா குறிப்பிட்டிருக்கிறார். தங்களுடைய கவிதைகள் பிறப்பெடுக்கும் ஊற்று ஆற்றாமையா? கவிதைத் தளத்தில் தொடர்ச்சியாக இயங்க தங்களை உந்தித் தள்ளும் இரகசிய ஊக்கி என்ன?


மேத்தா குறிப்பு எழுதியது எனது ஆரம்பகால கவிதைத் தொகுதிக்கு. அந்த கவிதைத் தொகுப்பு அதிகமாக வலி சார்ந்து இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். போர், இழப்பு, புலப்பெயர்வு, திருமணவாழ்வு பலதும் தந்த வலிகளாக அந்தக் கவிதைகள் அமைந்திருக்கும். இளமைக்காலக் கவிதைகள். ஆற்றமையில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது. ஆனால் அவைகள் எல்லாம் ஆற்றாமையோடு முடிவதில்லை. முடியப்போவதில்லை.


எனது கவிதைகளில் மிடுக்கிருப்பதாகவே பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலர் அதையே திமிர் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். கவிதை எழுதுவதோடு எனது பணி நிறைவுற்றது. மீதம் வாசிப்போரின் பார்வைகள். அவை அவரவர் வைத்திருக்கும் அளவுகோல்களுக்கேற்ப பார்வைகள் மாறுபடுபவை. கவிதை நான் தேர்ந்தெடுத்த ஒரு வடிவம் அல்ல. அது இயற்கையாக நிகழ்ந்தது.

பல கவிஞர்கள் இயற்கையைப் பாடுவதோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் தங்களுடைய கவிதைகளில் பிரபஞ்சத்தின் பிணைப்போடு மனித உணர்வுக் கடத்தல்கள் நிகழ்கின்றதாக தோன்றுகின்றது. பிரபஞ்சத்தை தாங்கள் இறுகப்பற்றிக் கொள்வதன் நோக்கம் என்ன?


இந்த அண்டத்தின் ஒரு புள்ளி அல்லது ஒரு துகள்களின் துகள்தானே நாங்கள். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரு புளுவைவிட, ஒரு மிருகத்தைவிட மனிதன் ஒன்றும் அத்தனை முக்கியமானவன் அல்ல. இங்குள்ள எல்லாமே ஒன்றுதான். சொல்லப்போனால் மனிதனைவிடவும் மரங்கள் மிக அதிக காலங்கள் பூமியோடு பிணைப்புள்ளன. பூமியில் உள்ள ஏனைய உயிரினங்களோடு நானும் ஒரு உயிரினம்தான் என்று புரிந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.


அப்படி உணரும்போது எனது மனம் இலகுவாகிவிடும். இந்தப் பிறப்பு, இறப்பு பற்றிய எந்த தடுமாற்றமும் தகர்ந்து போகும். எதுவும் அத்தனை வலி செய்யாது.


பல சமயம் எல்லாமும் மிக நெருக்கத்தில் இருப்பவைகளாகத் தோன்றும், அறியாத ஒரு நட்சத்திரத்தைப் பார்ப்பது போல அவைகளையே தொலைவில் நிறுத்திப் பார்க்கவும் தோன்றும்.
பிரபஞ்சத்து வெளியில் நின்று உலகை நோக்கினால் எப்படி ஒரு வட்டத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாதோ. அதே போல நாம் எம்மையும் எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பார்ப்பது. இந்த உயிர்களின் ஓட்டத்தையும், ஆட்டத்தையும் தூரநின்று பார்ப்பது அத்தனை அலாதியானது. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.


பிரபஞ்சம் என்பதுதான் மானுடத் தேடலுக்கான பொருள். தேடல்தான் எதனிடத்தும் தொடக்கம். தேடலில்லாத மானிடரை ருசியற்ற வாழ்வு வாழ்வதாக மகாகவி சொல்கிறான்.


இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமோடு நானும் ஒன்றுதான் என்ற நினைப்பு அலாதியானது. நம்மிடம் இருக்கும் எந்தச் செல்வத்திடமும் ஒப்பிட முடியாத இடமது.


இந்த விடயத்தைத்தான் மதங்கள் யாவும் ஆய்வு செய்கின்றன. அதற்காக இதை மதத்தின் சாரமாகவோ, ஒரு துறவு நிலையென்றோ எடுக்கத் தேவையில்லை. நாம் செய்யும், படைக்கும், இச்சைகொள்ளும், கோவப்படும் விடயங்களை நாமே தூரநின்று கவனித்தல்தான் இது.
இந்த நிலையை முழுமையாக உணர்ந்தவனாக நான் கவிஞன் பாரதியை உணர்கிறேன். நான் என்ற ஒரு கவிதையிற் சொல்வான்.


விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

மானிடா பற! என்கிறான். 

பறக்கப் பறக்கப் பிரபஞ்சம்தானே!

உங்களுடைய கவிதைகளுக்கு உயிர்ரேற்றம் தருகின்ற விடயங்கள் என்று எவற்றை குறிப்பிடுவீர்கள்


எனது மனம்தான். வேறில்லை. எனது மனம் இந்தச் சமூகத்தோடான, இந்தப் பிரபஞ்சத்தோடான தொடர்பை எப்படி உணர்கிறது என்பதன் வெளிப்பாடுதான். எனது மனம் லயிக்கும் மற்றும் சங்கடப்படும் கணங்கள்தான் கவிதைகளாக இருக்க முடியும்.

தாங்கள் படித்த கவிதைகளில் தங்களை உலுக்கி நிமிர வைத்த கவிதை என்று யாருடைய கவிதையைச் சொல்வீர்கள்? இதுவரை தங்களைப் பாதித்த கவிஞர்கள் யார்?
கவிதையில் அழகியலை எத்தனையோ கவிதைகளில் இரசித்திருக்கிறேன். என்னைப் பாதித்த கவிதைகள் என்று சொல்வதைவிட என்னை சிந்திக்க வைத்த கவிதைகள் என்று சில உண்டு. அதே போல ஒரு கவிதையின் ஆழத்தை நோக்கி செல்ல வைத்த கவிதைகளும் உள்ளன.


சில கவிதைகள் படிக்கும் போது மண்டைக்குள் பொறிதட்டும். சில அழகுணர்ச்சியை அநுபவிக்கத்தரும். சில கவிதைகளை வாசிக்குப்போதே ஒரு நெருடல் வரும். இந்தக்கவிதை வேறு எதையோ பேசுகிறது என்று மனது சொல்லும். ஆனால் கவிதையின் பின்னணியை, ஆழத்தை அறிந்து கொள்ள முடியாமற் போவதற்குக் எமது போதாமை ஒரு காரணம். அந்த நேரங்களில் தமிழ் மட்டுமல்லாது, எழுத்தின் ஆழத்தை அறிந்து சொல்லக்கூடிய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.


தற்போது ஆழப்படிக்க விரும்பிய கவிதை பாரதியின் சக்திக் கூத்து. சில தினங்களாக அந்தக் கவிதைதான் எனது மண்டைக்குள் சுழன்று கொண்டிருக்கிறது. பாரதியின் ஞானத்தைப் பேசும் கவிதைகள் பிடிக்கும்.


தமிழ்க் கவிதையில் பெண் விடுதலை பேசிய பாரதியும் பாரதிதாசனும் தங்களுக்கு பிடித்தமானவர்கள். அவர்கள் சொன்ன பெண்விடுதலை தற்காலத்தில் கிடைத்திருக்கின்றதா?
இந்தக் கேள்விக்கான விடை ஏற்கனவே 2வது கேள்வியில் உள்ளது.

ஒரு நல்ல கவிஞரின் கவிப் புலமைக்கு மொழியாட்சி மட்டுமன்றி வாசிப்புப்பரப்பும் அவர் படைப்பாகதத்தை சிறப்பாக்கும் என்ற கருத்தும் உண்டு. புலம்பெயர் தேசத்தில் நோர்வேயின் இலக்கிய கலை கலாசாரத்துடனான ஈடுபாடும் நோர்வேஜிய அல்லது மேலைத்தேய வாசிப்பு பரீட்சியம் தங்கள் கவிதைகளில் எவ்வித தாக்கத்தை செலுத்துகின்றன?


நோர்வேஜிய சமூகம் ஒரு நூற்றியைம்பது வருடங்கள் முன் இருந்த இடத்தில்தான் எமது சமூகம் தற்போது இருக்கிறது. நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதைகளின் கருப்பொருளைத்தான் இன்று நாம் எமது சமூகத்தில் எழுதிக்கொண்டிருக்கிறோம். அக்கவிதைகள் பல மொழியாக்கம் செய்திருக்கிறேன். நிச்சயம் அதன் தாக்கம் எனக்குள் இருக்கத்தான் செய்யும்.
இன்றைய எமது சமூகம்தான் பின்னோக்கி இருக்கிறது. ஆனால் எமது இலக்கியங்கள் ஈராயிரம் ஆண்டுகள் முன்பே தற்போது மேலைத்தேய நாடுகளின் சிந்தனை என்று நாம் தூக்கிக்கொண்டு திரியும் விடயங்களைவிட காத்திரமான பொருட்களைக் கையாண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.


நோர்வேஜய கவிஞர்களில், மரிய தக்வம், கமில்லா கொல்லத், ஸ்தைன் மெஹ்றேன், ஹெ;றிக் இப்சன் என்று பட்டியலில் இன்னும் பலர் உண்டு.


நோர்வே நாடக ஆசிரியர் மற்றும், கவிஞர் ஹென்றிக் இப்சன் ஒரு தத்துவவாதி. எழுத்தில் பல வகையுண்டு. எம்மைச் சுற்றிள்ளவற்றிலிருந்து எமது மனம் சுட்டிக்காட்ட விரும்பும் விடயங்களை எழுதுவது. மானுடர்க்கான தத்துவவிசாரங்களை நோக்கி எழுத்தையும் மனத்தையும் இட்டுச்செல்வது, மற்றொன்று. இதில் இரண்டாவது வகையைச்சேர்ந்த எழுத்தாளர்களே காலத்தால் நினைவு கூறப்படுகின்றனர். அதில் ஹென்றிக் இப்சன் உலகலாவிய ரீதியில் முக்கியமானவர்.


ஹென்றிக் இப்சனுடைய பொம்மைவீடு மட்டுமே தமிழ்சமூகத்திற்கு பெரும்பாலும் பரீட்சியமானது. இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதைத் தாண்டி பேர் கிந்த் என்ற நாடகப்பிரதி மிகமுக்கியமான எழுத்தாக நோர்வே மக்களால் கொண்டாடப்படுகிறது. அதற்கென்ற விழாக்கள் வருடந்தோரும் பல இடங்களில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. அது என்னைப் பாதித்த ஒரு படைப்பாகவும், ஒரு சிறந்த படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எனக்கு கிடைத்த பதிலாகவும் இருக்கிறது.


கடலில் இருந்தொரு கன்னி என்ற நாடகப்பிரதி ஒரு பெண்ணின் அகவாழ்வு குறித்துப் பேசுகிறது. எனது கவிதையொன்றில வரும் ஒரு பெண்ணுக்கான சுதந்திரத்தோடான காதல் என்ற வரி இந்த நூலின் பாதிப்புத்தான். ஒரு பெண்னுக்குக் சுதந்திரத்தோடான காதல் மிகப்பெரிய விடயம், அதுவும் எமது சமூகத்தில் கிடைத்ததற்கரிய பொருள்.


புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?


புலம் பெயர் தமிழ் இலக்கியம் என்று வரும் போது, எமது முதற் சந்ததியினர்தான் அங்கு செயற்படுகின்றனர். அவர்கள் உண்மையில் ஒரு பாவப்பட்ட சமூகம். தமது வாழ்வின் பாதியைப் போரிலும் மீதியை புலம் பெயர்வாழ்வுச் சிக்கல்களிலும் கழித்தவர்கள். இழந்துபோன அனைத்து வளங்களுக்குமாக தமது வாழ்வைப் அர்ப்பணித்து தமது அடுத்த சந்ததியினரைக் கட்டியெழுப்பிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய காலம் முடிந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய கனவும் வாழ்வும் அவர்களுடைய குழந்தைகள்தான்.


வாழ்க்கையின் ஓட்டத்தில் அவ்வப்போது இலக்கியம் செய்தவர்கள். முழு நேர இலக்கிய கர்த்தாக்களாக வாழ அவர்களுக்கு வாழ்வு இடம் கொடுத்ததேயில்லை. போரினால் இழந்துபோன ஒரு சமூகத்திலிருந்து வந்த மனிதர்களிடம் இருந்து வரும் இலக்கியங்கள்தான் இன்றை புலம்பெயர் இலக்கியம். அவர்களுடைய வாழ்வை, அவர்களுடைய பார்வையை, அவர்களுடைய இடத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கவனத்தில் உள்ள இலக்கியவாதிகள் என்று தமிழகத்துடன் ஒப்பீட்டளவில் பார்த்தால் மிகக் காத்திரமான எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அங்கே நாலு பேர் என்றால் இங்கே இரண்டு பேர் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான்.


ஆனால் பார்த்தீர்களானால், ஒரு நாடு உள்ள சமூகத்தைப்போல, நாடில்லா சமூகத்திற் தமது கலை வாழ்வைக் கட்டியெழுப்புவதில் சிக்கல்கள் உள்ளது. படைப்புகளைக் வெளிக்கொணர்வதில் இருந்து, அதை மக்களிடம் கொண்டு செல்லல், அரசினால் தரக்கூடிய கவனம், தளம், தொடர்ச்சி, கலைஞர்களுக்கான வெளி என்று பலதும் கிடைக்காத சூழலிற்தான் நாடற்றவர்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இலங்கையில் இருந்த இலக்கிய ஆளுமைகளின் தொடர்ச்சி முற்றிலும் அறுந்து போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.


எமது சமூகத்தின் அடுத்தடுத்த புலம்பெயர் சந்ததிகள் வளம் மிக்கவர்கள். அவர்களால் மிகச்சிறந்த கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், ஆளுமை மிக்கவர்களாகவும் திகழமுடியும். ஆனால் அது தமிழில் நிகழுமா என்பதுதான் கேள்வி. தமிழ் அவர்களுக்கு தாய் மொழியல்ல. தனது தாய் பேசிய மொழியாக மடடுமே இருக்கிறது.

புலம் பெயர் இலக்கிய விமர்சனப் பரப்பு ஆளுக்காள் முதுகு சொறிதலாக இருப்பதாக பலர் விசனம் தெரிவிக்கின்றார்கள். இது பற்றி தங்களுடைய கருத்து என்ன?


அது இலக்கியத்தில் மட்டுமல்ல, அனைத்துவிதமான கலைப்பரப்பிலும் இருக்கிறது. சாதாரணமான வாழ்க்கைக்குள்ளேயே அது நடக்கும். பிடித்தவர்களுக்காக் புகழ்வதும், பிடிகாதவர்களின் செயல்களை எல்லாம் விமர்சிப்பதும் இலக்கியத்திற்கானது மட்டுமல்ல. மனித மனம் அப்படித்தான் பெரும்பாலும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.


நான் சொல்வது பெரும்பான்மை. முதுகு சொறிபவர்களைவிட கொடுமை தம்மைத்தாமே புகழ்ந்து கொண்டிருப்பதற்கு அடிமையாகிவிட்டவர்கள். அவர்களுடைய நோக்கம் பதவிகள், பிரபலநிலை, பட்டங்கள், முன்னிலை வகித்தல் என்பதை நோக்கியே இருக்கும். மேற்கூறியவற்றை அடைவதற்கான சாதனமாகவே அவர்களுடைய படைப்புகள் நிகழ்கின்றன.


எல்லா இடத்திலும் சமநிலையான மனிதர்களும் இருப்பர். அவர்கள் அநேகமாகத் தேவையற்று, அளவுக்கதிகமாக தம்மை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதில் அவர்களுக்கு ஆர்வம் இராது. ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்துகொண்டே இருப்பர். அவர்களை நாம் இனம் காண வேண்டும்.

தமிழ் இலக்கிய புராணக் கதைகளில் கண்ணகி, மாதவி, மணிமேகலை, சீதை அகலிகை, பாஞ்சாலி என பெண் பாத்திரங்கள் விரவிக்கிடக்க சிகண்டியைத் தங்களின் கவிதைத் தொகுப்பின் தலைப்பாக்கியிருப்பது ஏன்?


நீங்கள் குறிப்பிட்ட பெண் பாத்திரங்கள் அனைத்துமே ஒருவகையில் காத்திரமான பாத்திரங்கள்தான் எனினும் எனக்கு சிகண்டியை பிடித்ததற்குக் காரணம் ஒன்றை அடைவதற்கான அவளுடைய முயற்சி, அவளுடைய திடம், அந்த அலட்சியம், அந்த மிடுக்கு!


அதுமட்டுமல்ல. அவள் தனது இலக்கை அடைவதற்காக இழக்கத் துணிந்த விடயங்கள். தனது பால் அடையாளத்தையே இழக்கத் துணிந்தது.


ஒரு பெண்ணாய்ப் பிறந்து அவள் எதிர்க்கத் கிளம்பியது அதிகாரவர்க்கத்திற்கு அடிநாதமாக செயற்படும் ஒன்றையாகும். அது அத்தனை சுலபமானதல்ல. அவள் அதற்காக தன்னைத் தானே இழக்கத் துணிகிறாள், புதிதாய்ப் பிறக்கிறாள், மீண்டும் தன்னை, தனது உடல் (பால் நிலையை) கடந்து நிற்கிறாள். அதுதான் சிகண்டி!


சிகண்டியின் முற்பிறப்பான அம்பை பாவப்பட்டவள். எம் சமூகத்தின் பாதிப்பெண்களைப் போல. சிகண்டி போராளி! ஆனாலும் போராளிளும் பாவம்தான். இங்கிருக்கும் பல பெண்ணியவாதிகள் போல! போராளிகளாகவே வாழ்ந்து மடிகின்றனர். அவர்களுடைய அகமனதை அறிந்து பகிர்ந்து வாழும் வாழ்க்கையோ, காதலோ அவர்களுக்கு அத்தனை இலகுவில் கிட்டிவிடுவதில்லை. மறுக்கப்பட்டே இருக்கிறது. மேலாதிக்கத்திற்கெதிராய், போராடக்கிளம்பிய ஒரு பெண்ணின் வடிவம் சிகண்டி!


சிகண்டி தன்னையும் கடந்தவள்! அதனால் பிடிக்கும்.


தமிழ்க் கவிதைக்கு நீண்ட மரபு உண்டெனினும் பெண் கவிஞர்கள். தங்கள் மொழியையும் படைக்க வேண்டியிருக்கிறது. இலக்கியம் என்ற பரந்த வெளியை ஆண்களே அடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பெண்ணாக உங்களுக்கான இடத்தை நிறுவிக்கொள்ள தாங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

ஈழத்து பெண் கவிஞர்கள் தன்னக உலகத்தைப் பற்றித்தான் அதிகமாக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே. இது பற்றி தங்களுடைய கருத்து என்ன? தங்கள் கவிதைகள் தன்மைய மனநிலைக்கவிதைகளா?


ஒரு மனிதனுடைய எல்லா படைப்புகளுமே மனதின் வெளிப்பாடுகள்தான். நான் என்பதிலிருந்துதான் அனைத்துமே தொடங்குகிறது. நான் என்ற சொல் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கக்கூடும். ஒரு மனிதன் தன் சொந்த அனுபவத்தில் இருந்து எழுதுவது உண்மைக்கு மிக நெருக்கமாகவும் இருக்கக்கூடும்.


ஏற்கனவே சொன்ன பாரதி கவிதையொன்றின் வரிகளையே பாருங்களேன்.


நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.


இதன் அர்த்தம் பாரதி தன்னகம் பற்றி மட்டுமாக எழுதுகிறான் என்று சொல்ல முடியுமா? அண்டத்தில் உள்ள அனைத்திலும் ஒளிர்கின்ற தீ ’தான்’ என்கிறான். இது பாரதியும்தான், நானும்தான், நீங்களும்தான்!


ஒரு கவிதையை நாம் எப்படிப்பார்கிறோம் என்பதிலிருந்துதான் அந்தக் கவிதை விரிவடையத் தொடங்குகிறது. அது எத்தகைய உணர்வுகளைக் கடத்துகிறது, எத்தகையை உரையாடல்களுக்கு இட்டுச்செல்கிறது என்பதில்தான் அதன் பொதுவுணர்வுத் தன்மை விரவடைவதாகப் புரிந்துகொள்கிறேன்.


அப்படியில்லை என்றே வைத்துக்கொண்டாலும், ஈழத்துப்பெண்களுக்கு தம்மை பற்றிச் சொல்ல அதிக விடயங்கள் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமே. தமிழகத்தில் பெயர்பெற்ற கவிஞர் தமது அடுப்படியில் இருந்து தொலைபேசி யிp வரை என்ன சங்கதி என்று போடும் போது, ஈழத்தில் எத்தனையோ சித்திரவதைகளை அனுபவித்து, இன்றை உலகிலிருந்து எத்தனையோ வருடங்கள் பின்தங்கி நிற்கும் பெண்களின் குரலில் இருந்து என்ன வருகிறது என்பதையும்தான் கவனியுங்களேன். கவிதைகளைப் படிக்கும் போது அதன் காலம், இடம், தேவை என்ற வரலாற்றுத் தகவல்களோடு பார்க்கும் போது, கவிதைகள் வேறு அர்த்தங்களையும் உணர்வுகளையும் கொடுக்கக்கூடும்.


அது நிச்சயம் mainstream ல் ஓடிக்கொண்டிருக்கும் குத்துப்பாட்டாக இருக்காது. அவை குரல்வளை நெரிக்கப்பட்ட ஈனக்குரலில் பாடும். அதுவும் மாறும்!


கவிதைகளில் ’நான் என்பது வெறும் நான் மட்டுமே அல்ல’!

தங்கள் கவிதைகளில் அதிகம் கவனம் பெற்ற கவிதை எது?


ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று பேசப்பட்டிருக்கிறது. தற்போது ஒரு பறவையைக்கொல்வது எப்படி? என்ற கவிதை பலருக்கும் பிடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் எனது கவிதைகளில் எனக்குப் பிடித்த கவிதைகள் வேறு!


தங்களுடைய கவிதைகளில் எங்கே காதல் கவிதைகளைக் காணோமே? இளம் கவிஞர்களில் காதலைப்பாடாதவர்கள் குறைவு என்றே சொல்லலாம்? காதல் பற்றி தங்களுடைய அபிப்பிராயம்


அப்படி நான் சொல்லவே மாட்டேன். எனது கவிதைகளில் காதல்தான் அதிகம் இருக்கிறது. கடந்த சில வருடங்கள் நான் காதல் கவிதைகள் எழுதியதே அதிகம். அடுத்த வருடம் அந்தக் கவிதைகள் தாகினி என்ற தலைப்பில் நூலாக கொண்டுவர முயற்சிக்கிறேன்.


தங்களுடைய கவிதை காடுக்குள் நுழைந்து வெளியேறும் போது வரும் பெருமூச்சின் வெப்பத்தை தங்கள் கவிதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள் என்பது தங்கள் கவிதைகளின் வாசகியான எனது அபிப்பிராயம். வாழத்துக்கள் கவிதா.

நன்றிகள்.
கேள்விகளுக்கும். எனக்குள் சென்று எனது எண்ணங்களோடு என்னைப் பயணிக்கச் செய்ததற்கும்.

பின்னூட்டமொன்றை இடுக