சக்திக்கூத்து

பாரதியின் சக்திக்கூத்து
அகம் – அண்டம் – கலவியின்பம் – உயிர்த்தொடர்ச்சி

  • கவிதா லட்சுமி

பாரதியின் கவிதைகள் ஆழமானவை. இந்தியத் தத்துவார்த்தச் சிந்தனை மரபுகள் பலவற்றை எளிமையாக எடுத்தியம்புபவை. கண்ணன் பாடல்கள், சக்திப் பாடல்கள், குயில் பாட்டு என்பவை அவைக்குச் சிறந்த உதாணரங்கள். பாரதியின் சக்திக்கூத்தும் அவ்வகையே.

சக்திக்கூத்தினை இரண்டு வகையாக உணர்ந்துகொள்ள முடியும்.

  • பிரபஞ்சசக்தி இரகசியம் சார்ந்த தேடல்.
  • சாக்த்த தத்துவம் பேசும் சக்தி மற்றும் அதன் சிந்தனை வடிவம்

சாக்த்த தத்துவச் சிந்தனையும் சக்தி வடிவமும்

அகத்தகத்தகத்தினிலே உள்நின்றாள்.
அவள் அம்மை அம்மை எம்மைநாடு பொய்வென்றாள்

‘அகத்தகத்தகத்தினிலே’:அகத்தின் அகத்து அகம்.
மனித அகம் என்றாலும் அல்லது இவ் அண்டத்தின் அகமென்றாலும் அதன் மூலத்தை நோக்கி  ஆய்ந்தறிந்துகொண்டே செல்லச்செல்ல கிடைக்கும் விடை ‘சக்தி’ (Energy), அறிவியலானாலும் ஆன்மீகமானாலும் இதற்கான விடை சக்தி என்றுதான் சொல்கின்றன.

காலங்காலமாக விடை தெரியாத பலவிடயங்களுக்குப் பின்னால் சக்தி ஒன்று இருக்கின்றது என்ற கருத்தை மட்டும் யாரும் மறுப்பதற்கில்லை. சக்தி, அதுதான் மனித அகத்தையும், அண்டத்தையும் இயங்கச்செய்கிறது. சாக்த மரபு சக்திக்குப் பெண் வடிவம் கொடுக்கிறது. காளி, கொற்றவை போன்ற தெய்வங்கள் இங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. சாக்த மரபுக் கருத்தினையும் தாந்திரீகக் கருத்தினையும் ஒருசேர வெளிக்கொணரும் வகையில் எழுதப்பட்டதே இப்பாடல் என்று கருதமுடியும். சாக்த மரபில் தாந்திரீகச் சிந்தனை ஒரு பாகம்.

சாக்த்த மரபில் தாந்திரீகச் சிந்தனை ஒரு பாகம்.

புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே

இரண்டு விதமான கோணத்தில் உய்த்துணரக்கூடிய வகையில் எழுதப்பட்டிருப்பதே இப்பாடல் வரிகளின் சிறப்பு.

கருத்து ஒன்று
அண்டத்து இரகசியம் பற்றிய தேடல்.

  • அண்டத்துள் புகப்புக கிடைப்பது இன்பம். அண்டத்தின் மறைபொருளை, பிரபஞ்ச இரகசியத்தை அதன் ஞானத்தை தேடும் பயணத்திற் கிடைக்கப்பெறும் இன்பம். தேடலினால் முடிவில் கிடைக்கப்பெறக்கூடிய அறிவும், ஞானமும், ஒளிபோல (தீ) விளங்கும். இவ்வகையான தேடல் இன்பம் தரக்கூடியது. இது பற்றி பிழை கூறுபவர்களின் கருத்தை புறம் தள்ளிவிடு.

  • குகை என்பது வடசொல். அகராதி கூறும் மூலக்கருத்து இரகசியம். அண்டத்துள் மறைந்திருக்கக்கூடிய இரகசியங்களைத் தேடும் போது, அங்கே தகித்துக்கொண்டிருக்கக் கூடிய ஞானமானது தீ போன்றது. இது படைப்பும் உயிர்த்தொடர்ச்சியும் பற்றியது.

  • இவை அண்டத்திற்கான தேடலாகவும் இருக்கலாம், மனித அகத்தேடல் சார்ந்ததாகவும் இருக்கலாம். அண்டத்தின் பிரதிபிம்பமே அகம்.

கருத்து இரண்டு
தாந்திரீக வழி சார்ந்து வருவது.

  • இது முழுக்க முழுக்க பாலுறவும் படைப்பும் (கலவியின்பம், உயிர்த்தொடர்ச்சி) சார்ந்து புரிந்து கொள்ளக் கூடியது. ஒருவரில் ஒருவர் புகப்புகப்புக, பொழுதெல்லாம் இன்பம்தான். இது பற்றி இழிவுபடுத்துபவர்களையும் பிழை கூறுபவர்களையும் புறத்தினிலே தள்ளி வைத்துவிடுங்கள் என்கிறது.

  • குகை என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கத்தில் யோனி (பெண்ணுறுப்பு) என்ற
    கருத்துமுண்டு. தீ என்பது பெண்ணின் கருமுட்டை. இது உயிற்தொடர்ச்சி நிகழும் இடமாகும்.

  • குழந்தையதன் தாயடிக்குக் கீழ் சேய்போலே என்ற வரிகளை நாம் பதம்பிரித்துப்
    பார்த்தோமானால், இங்கு தாயடி என்பது, ஒரு குழந்தையினுடைய தாயின் அடி. தாயின் தாய். பின் அவளுடைய தாய் என்று போகக்கூடிய தாய்வழித் தொடர்ச்சி.

  • ஒரு பெண் பிறக்கும் போதே இன்னொரு குழந்தையைத் தாங்கி வருகிறாள் என்ற
    கருத்துபட இவ்வரிகள் வருகின்றன. பெண்ணின் உடலின் தன்மை என்பது உயிர்த்தொடர்ச்சிக்கான அணுக்களைக் கொண்டிருப்பதாகும். ஒருபெண் பிறக்கும் போதே மற்றொரு உயிரைச் சுமந்தே வருகிறாள் என்ற கருத்துப்பட இவ்வரிகள் இருக்கின்றன. இதைத்தான் சாக்த மரபு சக்திவடிவாகக் கொள்கிறது.  

மனிதஉயிர்களின் உயிற்தொடர்ச்சி சார்ந்த இந்த இரண்டாவது கருத்தும் பிரபஞ்ச இரகசியத்தின் ஒரு பாகமாகும்.

இந்த இரண்டு கருத்துகளும்ம் தொனிக்கவே பாரதி இக்கவிதையை உருவகப்படுத்தியிருக்கின்றான். சாக்த சமயத்தில் இருக்கும் தாந்திரீக வழிபாட்டு மரபு, வஜ்ரஞான பௌத்தத்திலும் காணப்படுகிறது. இவ்விரண்டு மரபுகளும் இதை வெறும் பாலியல் சார்ந்த விடயமாகப் பார்க்காமல் அதற்கு ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுத்திருக்கின்றன.

தாந்திரீகம் என்றால் தொழில்நுட்பம் ஒரு வழிமுறை, அல்லது அதீத ஒழுக்கம். உயிரை மீண்டும் மீண்டும் உருவாக்கக்கூடிய திறமை. தாந்திரீகம் என்பது உங்கள்மீது நீங்களே ஆளுமை உருவாக்கிக்கொள்வது என்று குறிப்பிடப்படுகிறது.

காளி சிவனின் உயிர் நீக்கி சிவன் நெஞ்சில் காளி மிதித்து நிற்கும் காட்சியும், பின் அவளே சிவனிற்கு சக்தி கொடுத்து உயிர்த்தெழ வைக்கும் காட்சியும் ஓவியங்களாகக் காணக்கிடைக்கின்றன.

. . .

மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று மைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென

மேற்குறிப்பிட்ட இரண்டு வகைத் தேடல்களினாற் பெறும் இன்பத்தினிலே (களியினிலே) வரும் உடற் சோர்வை, பெற்ற உச்சத்த்தினால் அல்லது ஞானத்தினால் வரும் பெருமிதம் (வீரம்) வென்றுவிடும்.

தாளமும் இசையும் ஒன்றென இயைந்து வரும் ஆட்டத்தைப் போல, உலகில் உள்ள மனிதரெல்லாம் மெச்சும்படியான விடயமாகத் திகழும்.

இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தி

இந்திரன் உலகு இன்பம் சார்ந்த உலகு என்பது புராணக்கூற்று. அங்குதான் இக்காதல் இன்பங்கள் இருக்குதென்பார். ஆனால் நாமோ இவ்வுலகத்திலேயே அவ்வின்பங்களைக் கொள்வோம் என்கிறான் பாரதி.

காமத்திலும்  காதலிலும் வாழ்வினிலும் வார்த்தைகளுக்கு முக்கித்துவம் உண்டு. மந்திரம் போன்ற இவ்வார்த்தைகள் வேண்டும். அத்தோடு நல்வழிப்பட்டு மேன்நிலையை, அதன் உச்ச நிலையை அடையவேண்டும் என்கிறான் பாரதி.

இவ் இன்பங்களிலெல்லாம் திளைத்து ஜொலிக்கும் தங்கம் போல தகத்தக என்று ஆட மாட்டோமோ. பிரபஞ்ச (சிவ) சக்தியை இசைத்துப் போற்ற மாட்டோமோ?

. . .

பழமையிற் புதுமையையும், புதுமையிற் பழமையையும் கோர்த்தவன் பாரதி. சுதந்திரப் பாடல்கள், ஆன்மீகம், உலக அரசியல், மொழிப்பற்று, மனம், கலைநயத்தோடு தத்துவார்த்தமும் அறிவியலும் சொன்ன் கவி என அவனது சிந்தை விசாலமானது.

நாடு, உலகு என்பதைத் தாண்டி அண்டத்தினின்று அனைத்து உயிர்களுக்குமாகப் பாடினான் என்பதே அவனை மகாகவியென மனங்கொள்ளச் செய்தது. ஆம், ‘கவிதை எனக்குத் தொழில்’ என்று பாரதி வெறுமனே கூறிடவில்லை.

அவனுடைய தேடலும் வாசிப்பும் அளப்பெரியன. இன்றைய புலவர்களால் நினைத்துப பார்க்கமுடியாத அளவு வாசிப்பையும் அது சார்ந்த எழுத்தையும் குறுகிய தனது காலத்துட் கொண்டிருந்திருக்கிறான்.

பாரதியினுடைய எழுத்துகள் வேதாந்தமானவை என்ற பார்வையில் வரும் விமர்சனங்களே அதிகமானவை. அவனது எழுத்துகளை ஆழமாகப் பார்க்கும் ஒருவரால் அவனுடைய பல்பரிமாண நிலையினைத் தரிசிக்க முடியும்.

எந்தப் பாடலில் எத்தகைய தத்துவ விசாரங்களை அவன் பேசியிருக்கிறான் என்று உணர்ந்து கொள்வதற்கு, வாசகர்களிடம் அது சார்ந்த ஞானமும் இருக்க வேண்டும். அல்லால் அவனது வரிகளின் ஆழத்தை உணராத விமர்சனங்களும், புரிதல்களுமே மிஞ்சும். ஒரு வேதாந்தியாக மட்டுமாக அவனை உணரவைக்கும்.  

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமை திறவாமல் இருந்த நிலையில்
தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்
இலகு பாரதிப்புலவன் தோன்றினான்

இன்றை காலத்திலும் வேறந்த கவிஞர்களாலும் தரமுடியாத வாசிப்பனுபவத்தை, தேடலை, ஞானத்தை, எளிமையாக்கித் தருகிறான் பாரதி. இவற்றை உய்த்துணர்ந்து அனுபவித்ததனாலேயே மேற்கண்ணடவாறு பாரதியை மெச்சுகிறான் பாவேந்தன் பாரதிதாசன்.

. . .

One thought on “சக்திக்கூத்து

  1. பிங்குபாக்: ஆன்மீகம் – மெய்யியற்தேடல் | Kavitha Laxmi

பின்னூட்டமொன்றை இடுக