தொல்காப்பியம் கூறும் உலக வழக்கு – நாடக வழக்கு

நாடக வழக்கு உலக வழக்கு என்ற சொற்பதங்களை தொல்காப்பிய இலக்கணநூல் பொருளதிகாரத்திற் பேசுகிறது.

தொல்காப்பியம் கூறும் வழக்குகள்

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்

(தொல்: பொருள்: அகத்: 56)

இலக்கியம் சார்ந்த புலனெறி வழக்கத்தை, நாடக வழக்கிலோ, உலகியல் வழக்கிலோ சொல்லும் பொழுது, கலிப்பாடல், பரிபாடல் என்ற இரு வடிவங்களும் ஏற்றதாக இருக்கின்றன என்று புலவர்கள் சொல்கின்றனர்.

விளக்கவுரை

புலநெறி வழக்கத்தை, நாடகவழக்கு எனப்படும் இலட்சியப்படுத்தப்பட்ட புனைந்துரையாகவும், உலக்கியல் வழக்கு என்ற உலகத்து நடைமுறையாகவும் செல்லும் பொழுது, இதற்கு மாத்திரமே உரித்துடையதாக (சிறப்பானதாக) இருக்கும் பாடல் வடிவங்கள் கலிப்பாடலும் பரிபாடலும் என்று புலவர்கள் கூறுவார்கள்.

. . .

தொல்காப்பியக் கூற்றுப்படி வழக்குகள் இரண்டாகும்.

  1. உலக வழக்கு
  2. நாடக வழக்கு

மேற்கண்ட சூத்திரத்தில் சொல்லப்படும் புலனெறி வழக்கு – புலனெறி ஒழுக்கம் என்றும் திணை என்றும் அறியப்படுகிறது. இலக்கியங்களின் உரிப் பொருள் எனவும் அழைப்பர். புலனெறி ஒழுக்கம் அகத்திணைக்கு உரியது.

உலக வழக்கையும், நாடக வழக்கையும் இயல்பிலேயே புலனெறி வழக்கம் தன்னகத்தே கொண்டது. ஆகையால், உலகவழக்கு, நாடகவழக்கு என்ற வகைமைக்குள், இவையிரண்டோடு மூன்றாவது வழக்காக நாம் புலனெறி வழக்கை எடுத்துக்கொள்ளல் முடியாது.

உலக வழக்கு

உலகத்து இயற்கை, உலகத்தில் இயற்கையாக நடக்கின்றவை, யதார்த்தமான வாழ்க்கை முறை, உலகில் நடைபெறும் உண்மை நிலை, மனித நடத்தைகள் ஆகியன உலக வழக்கெனப்படுகிறது.

நாடக வழக்கு

நாடக வழக்கெனப்படுவது புனைந்துரை என்றே அகராதிகள் கூறும். உலகியல் வழக்கில் இருந்து தான் நாடக வழக்கு உருப்பெறுகின்றது என்றும், உலக இயற்கையில் இருந்து படிமங்களை எடுத்து, அவைகளை இலட்சியப்படுத்தி அதைக் கலையின் பேசுபொருளாகக் கையாள்வது என்றும் குறிப்பிடுகிறது.

படைப்பாளிகள் தமது கருத்தைப் பிறருக்குச் சொல்வதற்காகவே ஒரு படைப்பை உருவாக்குகின்றனர்.

யதார்த்த உலகையும், அதன் அத்தனை பாகங்களையும் ஒரு படைப்பாளி தனது படைப்பினுள் கொண்டுவர முடிவதில்லை. தம்மாற் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருட்களையும், தெரிவு செய்யப்பட்ட பாகங்களையும் மட்டுமே கையாளுகின்றனர். இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருட்களைத் தத்தமது கருத்திற்கேற்ப புனைந்துரைத்தே படைப்புகள் உருவாகுகின்றன.

உலக யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு அவைகளை இலட்சியப்படுத்திக் காட்டுவதன் மூலம் உலக வழக்கு நாடக வழக்காக உருப்பெறுகிறது.

சூத்திர வைப்புமுறை

மேற்கண்ட சூத்திரம், எந்த நூலில் எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் போடப்பட்டிருக்கின்றது என்பதற்குக் கருத்துண்டு. ஒரு சூத்திரம் அடுக்கப்பட்ட விதத்தையோ, போடப்பட்ட இடத்தியோ வைத்து கருத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.

சூத்திரங்கள் அதிகரணங்களால் ஆனவை. இச் சூத்திரம் நான்கு அதிகரணங்களால் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அதிகரணமும் தனித்தனியாக விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும்.

பொருளதிகாரத்தில், அகத்திணை இயல் என்ற பாகத்தின் இறுதியில் சொல்லப்பட்ட இச்சூத்திரம், அகத்திணை இயலை (அன்பின் ஐந்திணையை) விளக்குவதற்காக எழுத்தப்பட்ட சூத்திரங்களில் ஒன்றாகும்.

அதிகரணங்கள் நான்கு

  1. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    புனைந்துரை வழக்காகினும் உலக வழக்காகினும்.
  2. பாடல் சான்ற புலனெறி வழக்கம்
    புலவரால் பாடப்படுகின்ற அகத்திணைப் (புலன் நெறி) பாடல்களானவை
  3. கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும்
    கலிப்பாட்டு வடிவத்திற்கும் மற்றும் பரிபாடல் வடிவத்திற்கும் பாடப்படுவதற்கு உரித்தானவை.
  4. என்மனார் புலவர்
    மேற்சொன்னவை தொல்காப்பியத்திற்கு முன்பே புலவர்களால்
    கடைப்பிடிக்கப்பட்ட மரபாக இருந்துள்ளது.

மேற்கண்ட சூத்திரத்தில் நாடக வழக்கையும் உலக வழக்கையும் ஒரு அதிகரணமாகவும், புலனெறி வழக்கை தனியான அதிகரணமாகவும் அடுக்கியிருப்பதில் இருந்து இவை மூன்றும் ஒரே வகைமைக்குள் வரா என்பது தெளிவாகிறது.

கலிப்பாடல் பரிபாடல்

லிப்பாடல்: சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான
எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூல் கலித்தொகை. துள்ளல் இசையுடையது கலிப்பாடல், நாடகமாகவும் நடித்துக்காட்டப்படக்கூடியவை.

பரிபாடல்: எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. நெகிழ்வும், அன்புமுடையது. காமங் கண்ணிய இசைப்பாட்டு. பரிந்து பாடுதல் வகையைச் சேர்ந்தது.

அகத்திணை – புலன் நெறி வழக்கு

மேற்கண்ட சூத்திரத்திற்கு அடுத்ததாக தொல்காப்பியம் கூறும் சூத்திரம்:

மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்

(தொல்: பொருள்: அகத்: 57)

தலைவன் அல்லது தலைவியினுடைய பெயர்கள் சுட்டிக்காட்டாமல் விடுவது  அகத்திணையில் அன்பின் ஐந்திணை மரபு.

தலைவன் தலைவியுடைய பெயர்களை நாடகவழக்கில் குறிப்பிடும் போது
அவை இலட்சியத்தன்மையை அடைய முடிவதில்லை. பெயர் குறிப்பிடாததன் மூலமே தலைவனும் தலைவியும் இலட்சியப்படுத்திக் காட்டப்படுகின்றனர்.

  1. கைக்கிளை – ஒரு பக்கக் கை, சிறியகணப் பொழுதை
    உடையது ஒரு பட்சக் காதல் – காமம்.
  2. குறிஞ்சித் திணை – புணர்தல்
  3. பாலைத் திணை – பிரிதல்
  4. முல்லைத் திணை – இருத்தல்
  5. மருதத் திணை – இரங்கல்
  6. நெய்தல் திணை – ஊடல்
  7. பெருந்திணை – வாழ்வில் பெருங்காலம் நிலைப்பது.
    பொருந்தாக்காமம்

அகத்திணை ஏழில், அன்பின் ஐந்திணையாகிய குறிஞ்சித் திணை, பாலைத் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை யாவும் இலட்சியப்படுத்தப்பட்டவை.

«சுவைப்பட வருவனவெல்லாம் ஒரித்து வந்தனவாகத் தொகுத்துக்கூறல்» என்பது இளம்பூரணர் கூற்று. உலகில் யதார்த்தமாக நடப்பது போல அல்லாமல் மிகைப்படுத்திக் கூறல் என்பது பொருள்.

மிகுதியான கைக்கிளையும் பெருந்திணையும் உலக யதார்த்தம் மிக்கு வரப்பெறுபவை.

கைக்கிளையினதும் பெருந்திணையினதும் பெரும்பான்மைக் கருப்பொருள் உலகியல் வழக்காக இருந்தாலும், புலனெறி ஒழுக்கமும் வரலாம் என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் கருத்தாகும்.

புலனெறி ஒழுக்கங்கள் பல இலக்கிய வகமைக்குள்ளும் வரும். ஆனால் கலியிலும் பரிபாட்டிலும் புலனெறி ஒழுக்கம் அல்லாத வேறு கருப்பொருள்கள் வரமாட்டாது என்பதை விளக்கவே தொல்காப்பியத்தில் இச்சூத்திரம் சொல்லப்படுகின்றது.

தொல்காப்பியர் கூறும் நாடக வழக்கு – உலக வழக்கு

தொல்காப்பியர் கூறும் நாடக வழக்கு என்பது, வெறுமனே நாடகத்திற்கோ, நடிப்பிற்கோ மட்டுமானதல்ல. கலைகளுக்கு அடித்தளமாக இருக்கின்ற இயங்குவியல் விதியைப் பற்றியே தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

சில கேள்விகளை முன் வைப்பதன் மூலம் தொல்காப்பியம் கூறும் நாடகவழக்கின் இயங்குவியலைப் புரிந்துகொள்ள முடியும்.

உலக வழக்கிலிருந்து, எந்தக் காட்சி எந்தக் கோணத்தில் யாருடைய பார்வையில் எந்தக் காலத்தில் எந்தச் சமூகத்திற்கு எதைச் சொல்வதற்காக இயற்றப்படுகிறது எனும் கேள்விகளுக்கான விடையை நாம் கண்டறியும் போது எத்தருணத்திலும் அவை புனைந்துரையாகவே படைக்கப்பட முடியும் என்பதை அறிகின்றோம்.

நாடக வழக்கின் (ஒரு கலைப்படைப்பின்) இயங்குவிசை என்பது படைப்பாளி தான் இலட்சியப்படுத்த எத்தனிக்கும் விடயங்களால் வெளிப்படுவதாகும்.

அரங்கியல் கலைக்களுக்கு மட்டுமல்லாது, அனைத்துக் கலைகளுக்குமான இயங்குவியல் புனைந்துரையே ஆகும்.

நாடகவழக்கு விளக்கங்கள்

மதுரைத் தமிழ் பேரகராதி: புனைந்துரை வழக்கு

வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி: இல்பொருளாய்ப்
புகழ்ச்சியிடத்துப் புனைந்துரையாகத் தோன்றுவது

தண்டியலங்காரம்
‘கூறிய நெறியின் ஆறுவகை மலைவும்
நாடக வழக்கில் நாட்டுதற் குரிய’ (124)

இளம்பூரணர் உரை
சுவைப்பட வருவனெல்லாம் ஓரித்து வந்தனவாகத் தொகுத்துக் கூறல்

உலக வழக்கு விளக்கங்கள்

மதுரைத் தமிழ்ப் பேரகராதி: உலகநடை, உலகியல்பு, உலகவழக்கம்,
உலகியற்கை, தேசாசாரம்

இளம்பூரணர் கூற்று: உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருதல்

பின்னூட்டமொன்றை இடுக