
எகிப்து
பயணங்களும் பதிவுகளும்
பயணத்தின் அனுபவங்களையும், அதிர்வுகளையும் சேகரித்து வைப்பதே இதுவரை எனது வைப்பில் இருக்கும் மிகப்பெரும் சொத்துக்கள்.
முதன் முதலாக எகிப்து பற்றி அறிமுகமாகும் போது எனக்குப் பத்து வயது. ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் சொல்லித்தந்த வரலாற்றுப் பாடத்தில் தான் எகிப்து பற்றியும் உலகின் தொன்மையான சமூகம் ஒன்று வாழ்ந்து பயிர்த்தொழில் செய்யத் தொடங்கிய இடத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அப்போதே அந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
2018- இல் எகிப்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் எகிப்தின் உயர்ந்த பிரமிட் தொகுதியான புணைய பிரமிட்டின் அழகினைப் பார்த்தபடி இருக்கும் ஒரு அறையும் கட்டிலும் கிடைக்கப் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி.

பெரிய பிரமிடு ((The great pyramid)
எகிப்தில், முதல்நாள் இரவு, விடுதியின் மொட்டைமாடியில் அமர்ந்து உணவருந்தியபடியே பிரமிடின் ஒளிநடனத்தை பார்ப்பது பேரானந்தம். நாள்தோறும் இரவில் ஒளிப்பாய்ச்சலும், ஒலி வடிவிலான கதை சொல்லலும் ஒளி-ஒலி நிகழ்வாக அங்கு நடைபெறுகிறது.
எகிப்தில் காணக் கிடைக்கும் நூற்றுக்கணக்கான பிரமிடுகளில் கீசாவில் இருக்கும் பிரமிட் தொகுதியில் ‘பாரோ கூபு’ பிரமிடு அங்குள்ளவற்றில் அளவில் பெரியது.
கிசா நகரமும் பிரமிடுகளின் தொகுதியோடு தொடங்கும் பாலைவனமும் ஒரு கோடாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் பிரமிடின் அருகில் நின்று பார்க்கும் போது காண முடியும். அங்கு நின்ற நாட்களில் அந்தக் காட்சியைப் பலமுறை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.
பிரமிடுகளை அருகில் பார்ப்பது ஒரு அனுபவம் என்றால், தூரத்திலிருந்து அவைகளைச் சுற்றி வட்டமிட்டுப் பார்ப்பது வேறோர் அனுபவம். ஒட்டகங்களின் மீதேறி பிரமிட்டைச் சுற்றி பெரிதாய் ஒரு ஆளவட்டமிட்டுக் காட்டுவதற்கென்றே ஒட்டகக்காரர்கள் இருக்கிறார்கள். அத்தகைய ஒட்டகச் சவாரியின் போது மஞ்சள் பாலை மணலுக்கும் நீல வானத்திற்கும் இடையில் உயர்ந்து நிற்கும் பிரமிடுகளின் காட்சி அத்தனை அழகாகத் தோற்றமளிக்கும்.
பிரமிடுகளைப் பக்கத்திலிருந்து பார்க்கும் போது அதன் பிரம்மாண்டம் பார்க்கும் யாவரையும் பிரமிக்க வைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனாலும் ஒருநாள் முழுவதும் பிரமிடின் தூரத்து தரிசனத்திற்கு மட்டுமே செலவிட வேண்டும். முதலிலேயே அருகில் போய்ப் பார்த்து அதன் காட்சி அனுபவத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.
4500 வருடங்களுக்கு முன் மக்கள் இத்தனை பிரம்மாண்டமான பிரமிடுகளை எப்படிக் கட்டினர்? பிரமிடுகள் கட்டப் பயன்படுத்தப்பட்ட பாறைகள் ஒவ்வொன்றும் பல டன்கள் எடையுள்ளவை. பாறைகளில் மேற்புறத்தில் சுண்ணக் கற்களால் பளிங்கு போல காணப்படும் கற்கள் இன்று சிதைந்துவிட்ட நிலையில் உச்சிப் பகுதியில் மட்டும் சில எஞ்சியிருக்கின்றன. பாறைகளை ஏற்றிவந்த கப்பல் பற்றிய தகவல்களோடு சிறு அருங்காட்சியகம் ஒன்று அங்கேயே உள்ளது.
எகிப்தின் மிகப்பெரிய பிரமிடுகளில் ஒன்றான கூபு மற்றும் காப்ராவின் பிரமிடுக்குள் நுழைவதற்கான நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டேன். பொ.ஆ.மு 2250-இல் கட்டப்பட்ட இந்தப் பெரிய பிரமிடு ஏறத்தாழ 4250 ஆண்டுகள் தொன்மையுடையது. ஒவ்வொரு பிரமிடுகளுக்கு உள்ளும் நாம் நுழைந்து பார்க்க முடியும். ஒருவர் மட்டுமே நுழையக் கூடிய வாயில். உள்ளே பாறைகளைக் குடைந்தெடுத்து மேல்நோக்கி நகரும் படிக்கட்டுக்கள் இருக்கின்றன. சில இடங்களில் பலகைப் படிகள் உள்ளது. பாதி தூரம் நாம் குனிந்த படியே தான் செல்ல முடியும். ஒருவகை இடுக்கமான பாதை. மூச்சு முட்டுவது போல இருக்கும்.
பிரமிடின் உச்சி நோக்கி ஓரளவு தூரம் சென்ற பின் ஒரு இருட்டான அறை காணப்படுகிறது. அறையின் நடுவே பாறையில் குடைந்தெடுக்கப்பட்ட சமாதி ஒன்று இருந்தது. தற்போது அது ஒரு குளியல் தொட்டிபோல திறந்தபடி காட்சியளித்தது. இங்கே தான் ‘பாரோ கூபு’வினது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
பிரமிடினுள் உள்நுழைந்து சமாதி வரையிலான பயண அனுபவம் என்றும் நினைவில் நிற்கக் கூடிய ஒன்று. அடுத்ததாக பிரமிட் அருகில் இருக்கும் உணவு விடுதிகளும் அதன் மொட்டை மாடிகளுமாகும். மாலை நேரங்களில் மொட்டை மாடியில் அமர்ந்து தேநீர் குடித்தபடி பிரமிடுகளைப் பார்த்து கொண்டிருப்பது அத்தனை புத்துணர்வு தருவதாக இருந்ததால் அநேகமாக மாலை நேரங்களில் அங்கு அமர்வது எனக்கு வழக்கமாகிப் போனது.
நைல் நதி

உலகின் மிக நீளமான நதியான நைல் நதி கீசாவிலிருந்து சிறு தொலைவில் தான் இருக்கிறது. பத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் ஊடாகப் பாயும் நதியில் பயணம் செய்வதற்கென்றே அழகிய சிறிய படகுகள் விடப்படுகின்றன. எகிப்திய மொழியில் நைல் நதியின் பெயர் ‘இடுரு’ என்று படகோட்டி சொன்னார்.
சூடான் முதல் எகிப்து வரையிலான நதியில் சில மணிநேரம் பயணம் செய்யலாம். நைல் நதியில் கால் நனைத்தபடி படகில் செல்லும் போது எனது ஐந்தாம் வகுப்பு வரலாற்று ஆசிரியையும் எனது சினேகிதியும் நினைவில் வந்து புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.
பண்டைய எகிப்தின் நகர நாகரிகத்தின் முக்கிய நீர்வழிச் சாலையைக் கண்டதில் கிடைத்த மகிழ்ச்சியோடும், இருகரையும் நகரம் இருக்க நடுவில் நைல் நதியின் போக்கில் பயணப்பட்ட மகிழ்சியோடும் ஒருநாள் கழிந்தது.
இரவுச் சந்தை

எகிப்தின் பழைய நகரச் சந்தை (கடைத்தெரு) எகிப்தில் பிரபலமான ஒன்று.
ஒரு மாலை அங்கு சென்றமை நல்லதோர் பொழுதாக அமைந்தது. ‘கெய்ரோ – ஊயசைழ’ செல்லும் சுற்றுலாப் பயணிகளை இங்கு காணமுடியும். பொ. ஆ. 1300 ஆண்டுகளில் கட்டப்பட்ட இத்தெருவும் விடுதிகளும் இன்றளவும் இருக்கின்றதே என்ற நினைவோடு அங்கே உலாவித் திரிவதே ஒரு போதை.
எகிப்திய ஆடைகள், அணிகலன்கள், விளக்குகள் என்று தெருக்கள் முழுவதும் நூற்றுக்கணக்கான கடைகளையும், பழைய நகரத்தையும் பார்க்க ஒரு நாள் போதாது. வாங்கி வந்த எகிப்திய அணிகலன்கள் பலவற்றை எனது நடன நாடகத்திற்கான ஒப்பனைக்குப் பாவித்திருக்கிறேன்.

எனது இந்தப் பயணம் அங்குள்ள பல மனிதர்களை அறிமுகப்படுத்தியது. எங்களுடைய சுற்றுலா வழிகாட்டி, பிரமிட் போஸ்டர்கள் விற்கும் ஒரு குட்டி எகிப்திய அழகி, ஓட்டகக்காரர் என்று இவர்கள் எல்லோரும் அவ்வப்போது எங்களோடு தேநீர் அருந்தும் நேரங்களில் இணைந்து கொள்வார்கள்.
விடுதியின் அருகில் வீடுகள், கழுதைகளில் ஏறிச் செல்லும் சிறுவர்கள். ஒட்டகக் கூடாரங்கள் என்று ‘கிசா’ பிரமிடுகளைச் சார்ந்து வசிக்கும் மனிதர்கள் இன்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே தான் இருக்கின்றனர்.
சுற்றுலா வழிகாட்டியின் அழைப்பின் பேரில் அவருடைய வீட்டிற்குச் சென்று ஒரு எகிப்திய வீட்டின் அமைப்பினையும் பார்த்தேன். இன்னும் பார்க்க எத்தனையோ பல இடங்கள் உண்டு. பிரமிடுகளின் வடிவங்களே பல வகையுண்டு.
நான் அங்கு சென்றது ஐந்து நாட்கள் மட்டும் தான். எகிப்தினை அனுபவிப்பதற்கு இந்த நாள்கள் போதுமா என்ன? நிச்சயம் போதவே போதாது.
எகிப்து போக விரும்புபவர்கள் எகிப்து பற்றிய நூல்களையும், Khartoum (1966) மற்றும் Cloepatra (1963) என்ற திரைப்படத்தையும் பார்த்து விட்டுச் செல்லவேண்டும்.
இப்சனின் பேர் கிந்த் கவிதை நாடகத்தில் ஒரு பாகம் முழுவதும் எகிப்தின் கெய்ரோ நகரத்தில் நடப்பவை. இப்சனின் கவிதை நாடகம் படித்த பாதிப்பு வேறுவிதமான மன அனுபவத்தினையும் எனக்குத் தந்து கொண்டிருந்தது. பாதி மனித உருவமும் பாதி மிருக உருவமும் கொண்ட ஸ்பிங்ஸ் (sphinx) சிலை என்னுடனும் பேசுகிறதா என்று கொஞ்சம் பைத்தியகாரத்தனச் சிந்தனைகள் தோன்றி மறைந்தன.
பிரம்மாண்டம் என்பது இங்கு வெறும் வார்த்தை மட்டுமல்ல. மீண்டும் ஒருமுறை நான் எகிப்து போயாக வேண்டும்.






























