இயற்கையை அனுபவிக்க நோர்வே ஒரு மிகச் சிறந்த நாடு. மலைத் தொடர்கள் அதனோடு சேர்ந்த உட்கடல்கள் என இயற்கையின் பிரம்மாண்டங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. நள்ளிரவுச் சூரியன் (Midnight sun) வடதுருவ ஒளி (Northen lights) போன்ற இயற்கையின் அற்புதங்களையும் அதிசய நிகழ்வுகளையும் இங்கு கண்டுகளிக்கலாம்.
வார இறுதியில் மலைகளுக்குச் செல்வதும், மலைவீடுகளிற் (மலைக் குடில்களில்) தங்கி வருவதும் நோர்வே மக்களுக்களின் வழக்கங்களில் ஒன்று. நானும் அவ்வப்போது நண்பர்களோடு சென்று வருவது உண்டு. சமீபத்தில் இங்குள்ள துறொல்துங்கா (Trolltunga) மலைக்குச் சென்றேன். இதுவரை நான் சென்றதிலேயே ஒரு மறக்க முடியாத நெடிய மலைப் பயணமாக துறொல்துங்கா பயணம் இருந்தது.
துறொல் (Troll) என்றால் நோர்வேஜிய மொழியில் காட்டுப்பூதம் என்று பொருள். இந்தத் துறொல் பூதம் பற்றி பல கதைகள் இங்குண்டு. நோர்வே நாட்டு விமான நிலையங்களில் விற்கப்படும் துறொல் பூதங்களின் சிலைகளை நோர்வே வரும் சுற்றுலாப் பயணிகள் பயணத்தின் நினைவாக வாங்கிச் செல்வார்கள். இங்குள்ள பாறை, பூதத்தின் நீண்ட நாக்கு போல இருப்பதால் இந்தப் பாறை இருக்கும் மலையை ‘துறொல்துங்கா’ என்று அழைக்கின்றனர்.
துறொல்துங்கா செல்லும் மலைப் பயணமானது அத்தனை சுலபல்ல. பயணத்திற்கு முன் பல ஆயத்தங்களை நாம் முன்கூட்டியே செய்ய வேண்டும். இங்கு செல்ல நோர்வே சுற்றுலாத்துறை பயண வழிகாட்டிகளையும் நியமித்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு தான் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்து நோர்வேயின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக துறொல்துங்கா விளங்குகின்றது. கோடை காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் மட்டுமே துறொல்துங்காவிற்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
கோடைகாலத்திலும் இலையுதிர்காலத்திலும் மட்டுமே செல்லக்கூடிய இந்த பயணத்தின் மொத்த தூரம் 28 கிலோமீட்டர்கள். போகவும் வரவும் குறைந்தது மொத்தமாக 10 மணித்தியாலங்கள் தேவை. முதல் மூன்று கிலோமீட்டகளைத் தாண்டிவிட்டால் ஓரளவு இலகுவாக துறொல்துங்காவை அடைந்துவிடலாம்.
ஏறத்தாழ 1200 மீட்டர் உயரத்தில் இருக்கிறது துறொல்துங்கா மலை. கடினமான மலைப் பாதைகள் என்பதாலும், துறொல்துங்காப் பாதைகளில் மழைக்காலங்களில் சிற்றருவிகளும் ஓடைகளும் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கும் என்பதாலும், மலையேறுவதற்குத் தகுந்த சப்பாத்துக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. குளிருக்கான ஆடைகள், டோர்ச் லைட், முக்கியமாக உணவு – அதிகமில்லாவிட்டாலும் போதுமான சக்திக்கு ஏற்ப உணவுகள் கொண்டு செல்ல வேண்டும். தண்ணீர் மட்டும் போகும் வழிகளில் உள்ள சிறுசிறு நீரருவிகளில் பிடித்துக்கொள்ளலாம்.
நோர்வே நாட்டின் மலைகளிலுள்ள அருவித் தண்ணீரின் சுவையே தனி. சுத்தமும் கூட. மலையேறிச் செல்லும் பாதைகளெங்கும் சிற்றருவிகளும் சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்கும் ஓடைகளையும் பார்த்து மகிழலாம். போகும் வழியில் ஒரு பேரருவியையும் காணலாம். துறொல்துங்கா செல்லும்போது எனது நடன உடுப்புகளையும் கமராக்களையும் காவிக்கொண்டு சென்றது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் மறக்கடித்தது நான் கண்ட பிரதிசூரியனின் காட்சி.
ஒரு குட்டிக் குளத்தினருகே நான் கண்ட இந்தக் காட்சியானது என் வாழ்நாளில் இதுவரை நான் கண்ட இயற்கையின் அற்புதக் காட்சிகளில் இதை ஒரு பேரற்புதமென்றே சொல்ல வேண்டும். எப்போதும் அங்கு பிரதிசூரியன் (சூரியனின் பிரதிவிம்பம், இரண்டு சூரியன்களாகத் தோன்றும் காட்சி) தோன்றுமா எனத் தெரியவில்லை. இதை உபசூரியன் என்றும் சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் ‘Sun dog’ என்கிறார்கள். ஒரு சிறு குளத்தின் அருகே கண்ட இந்தக் காட்சி வாழ்நாளில் மறக்கமுடியாத இயற்கையனுபவம். இந்த இடத்தைவிட்டு நகர மனமில்லாமற் செய்துவிட்டது. அத்தனை அழகு. சில புகைப்படங்கள் மட்டும் எடுக்கமுடிந்தது. பேரொளித் தருணமது.
சில மாதங்கள் முன் பயணித்த எனது துறொல்துங்கா பயண அனுபவத்தை இன்று இந்த ஒளிப்பதிவுடன் பகிரத் தோன்றியது. ஆட்டக்காரர்களுக்கேயான குணம் இப்படிப் போகும் இடங்களில் நடனமாடத் தொடங்குவது. எனக்கு இது வழக்கம்தான் எனினும் இங்கு ஒளிப்பதிவிட்டிருக்கும் நடனம் எந்த முன்பயிற்சியுமின்றி மனம் போன போக்கில் ஆடியது. பயணங்களின் போது இப்படி முற்பயிற்சியின்றி ஆடுவதுண்டு. அப்போது அங்கே தோன்றுவதை ஆடுவது அது ஒரு தனி அனுபவம்.
நாக்கு போன்று நீண்ட இந்தப் பாறையின் அகலம் ஏறத்தாழ 3 மீட்டர் இருக்கக் கூடும். இந்த இடத்தில் நடனம் ஆடுவதென்பது மிகக் கடினம். கொஞ்சம் கூட கவனம் சிதறாமல் கால் வைத்து ஆட வேண்டும். காற்றும் ஓயாமல் வீசும். பாறையும் கரடுமுரடாக சமநிலையற்று காணப்பட்டது. பயணத்தின் நினைவாக எல்லாரும் படம் எடுத்துச் செல்வார்கள். அந்தச் சூழமைவில் நடனம் நன்றாக வராவிட்டாலும் பரவாயில்லை ஒரு நிமிடம் ஆடிவிடலாம் என்று எடுத்துக் கொண்ட ஒளிப்பதிவுதான் இது.
நடனத்தைத் தாண்டி ததுறொல்துங்கா மலைப் பயணம் எனக்கு இன்று வரை மகிழ்ச்சி தந்து கொண்டிருக்கும் ஒரு இனிய பயணம் என்பதில் ஐயமில்லை.
–
–
–
–
–


















–
–
–

















விமர்சனம் செய்ய என்ன
இருக்கிறது.இயற்கை அழகு
என்பார்கள்.நீங்கள் அழகு.
அழகானநடனமங்கை.
ஐ லவ்யூ
LikeLike