
ஞானரதம்
பாரதி கவிதைகளைப் போலவேதான் பாரதியின் உரைநடைகள், கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் ஞானத்தேட்டத்திற்கானவை. ஆனாலும் பாரதி கவிதைகளைப் போல அவை வாசிப்புப் பெருவெளியை இன்னும் சென்றடையவில்லை என்பது என் எண்ணம்.
’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை. குறுநாவல். தத்துவ விசாரணை.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே அவ்வப்போது கற்பனையிற் கண்ட புதிய உலகொன்றில் சஞ்சாரம் செய்வதுண்டு. அப்படியான ஒரு சஞ்சாரப் பொழுதில் பாரதி பற்பல உலகங்களில் பறந்து திரிந்து யாத்த கற்பனைச் சித்திரந்தான் ஞானரதம்.
வாழ்வின் உன்னத கணமொன்றைத் தேடியலையும் அவனது ஆன்மா, அவனையே கதையின் நாயகனாக்கி, அவனது மன ரதமேறி வெவ்வேறு உலகங்களில் சஞ்சாரம் செய்கிறது. கற்பனைகளுக்கும், நினைவுகளுக்கும் தூரம் என்பது ஒரு பொருட்டா என்ன? துன்பங்களை ஊடறுத்துச் சென்றுவர அவன் தேர்வு செய்த ஐந்து உலகங்கங்களும் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கானதும்தான்.
• உபசாந்தி உலகு – கவலையற்ற பூமி
• கந்தர்வ உலகு – இன்ப உலகு
• சத்திய உலகு – உண்மைத் தேட்டம்
• மண்ணுலகு – மனிதனின் துன்பக்களம்
• தர்ம உலகு – மானிட தரிசனம்
உபசாந்தி உலகு

முதலில் அவன் செல்ல விரும்பியது உபசாந்தி உலகிற்கே. நித்திய அமைதியையும், மனச் சாந்தியையும் தேடி மனம் எனும் ஞானரதத்தில் ஏறி புறப்படுகிறான்.
என்ன விந்தை, உபசாந்தி உலகத்தின் வாசலில் காவலன் நிற்கிறான். வழிமறிக்கிறான். இருவருக்குமான உரையாடல் தொடங்குகின்றது.
உபசாந்தி உலகிற்குள் செல்ல வேண்டுமானால் மனதை வெளியே விட்டுவிடு! மனம் இருக்கும்வரை கவலை இருக்கும் அதனால் இங்கே மார்க்கம் இல்லை. மனதைக் கொல்பவன்தான் சாந்தியை அடைவான். அவனுக்கே உபசாந்திலோகத்தின் கதவுகள் திறக்கும். மீறிச் செல்வாயானால் மனம் பொசுங்கிவிடும், என்கிறான் வாசற்காவலன்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மனம் நடுங்கத் தொடங்கிவிகிறது. தான் உள்ளே வரமாட்டேன் என்று மனமும் அடம் பிடிக்கிறது.
பாரதியோ மனதின் பெரும் காதலன்! மனம் என்ற மோகினியிடத்தில் பெருங்காதல் கொண்டவனுக்கு, அவன் வேறு? அவன் மனம் வேறா என்ன? மனதை இழந்து ஒரு உலகு அவனது ஆகுமா? மனதைக் கொன்று உபசாந்திப் பேற்றினை அவன் விரும்பவில்லை.
மனமெனும் பெண்ணே… கேளாய்! என்று தொடங்கும் கவிதை
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்
இத்தனை நாள் போல் இனியும்
நின் இன்பமே விரும்புவன்
நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்
முத்தியுந் தேடுவேன்
மனதைக் கொன்று இன்பமில்லை என்பதையும்
மனம் வேறு மனிதன் வேறு அல்ல என்பதையும்
மனதை வென்றதாகக் கூறும் ஞானிகள் பொய் என்பதையும்
முன்னுரையாகக் கொண்டே பிற உலகங்களுக்கான பயணத்தைத் தொடங்குகிறான்.
உபசாந்தி என்று கத்தும் ஞானிகள் மூடர்கள் என்று ஞானிகளிடம் சமூகம்; கொண்டிருக்கும் மாயையையும் இல்லாமற்செய்து விடுகிறான்.
மனம் எனும் மோகினிக்கு ஒரு முத்தம் தருகிறான். அவனது ஞானரதம் இரண்டாவதாகச் செல்லுமிடம் கந்தர்வலோகமெனும் காதல் உலகம்.
கந்தர்வ உலகம்.

இந்த உலகில் மற்றைய உலகங்களைவிடவும் அதிக நேரம் செலவிடுவது இங்குதான். கந்தர்வலோகத்தின் பேரழகி பர்வதகுமாரி அவன் சித்தத்தில் சிம்மாசனம் கொண்டு அமர்ந்துவிடுகிறாள்.
காதல் கொண்ட மனதினது ஆர்வங்களுக்கும் ஆசைகளுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் பாரதியின் மனம் ’எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ என்று இப்படியான ஒரு தருணத்தில் பாடியிருக்கக்கூடும்.
காதல் உலகத்தில் நிலவிலிருந்து இசை பிறக்கிறது. அவனுக்கும் சிறகுகள் முளைக்கின்றன. காதல் உலகத்தில் பறப்பதற்கான இன்பம் கொஞ்சமன்று. எத்தனை காட்சிகள். எத்தனை இன்பங்கள்.
காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்
கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர்: உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்
காதலினால் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம். அதனாலே மரணம் பொய்யாம்.
என்ற பாடல் அவனதுதான். ஆனால் அது கவிதை வடிவில். தன் கவிதைகளை உரைநடை எழுதியதே கந்தர்வ உலகு எனலாம்.
அவனது புலன்கள் திகைத்து போயிருக்கின்றன! அவனுக்குப் பொறுக்க முடியவில்லை! அறிவு மங்கிற்று! இன்பப்புயலில் அவனுயிர் சிறுதுரும்பாயிற்று!
பூப்பந்தாட்டம், கடற்கரை, விரிந்த வெளி, சிறகு, மது, மன்மதன் விழா என்ற மனதின் ஆசைகளெல்லாம் தீர்க்கப்படும் உலகாக விளங்கிய கந்தர்வலோகமும் காலவோட்டத்திற் அவனுக்குச் சலித்துப்போகிறது.
எத்தனை நாட்கள் ஒரு கணம் போல. இருந்தும் அவன் மனதில் திருப்தியில்லை! ஆரம்பத்தில் இருந்த பரவச நிலையில்லை, பர்வதா என்ற பேரழகியிடம் கூட, தொடக்கத்தில் இருந்த பற்றில்லை. செய்ததைத் திரும்பத் திரும்பச் செய்து அதிருப்தி ஏற்படுகிறது.
நினைத்ததெல்லாம் கிடைக்கும் ஊரில் மனிதப் பிறவிக்கான ”ஆத்ம தேட்டம் – தேடல்” அற்றுப்போகிறது. அனுபவத்திற்கு மானிட ஜென்மம் வேண்டும் என்ற பர்வதகுமாரியின் விளக்கத்தின் உண்மையறிந்து பர்வதகுமாரியையும் பிரிந்து செல்கிறான்.
காதலினூடும் பெற்றுக் கொண்ட ஞானத்தோடும் அடுத்ததாக அவன் சென்றது சத்திய உலகிற்கு.
சத்திய உலகு
கல்விக்குத் துணை வேண்டும் ஆனால் உண்மைத் தேட்டத்திற்கு தனித்தனியாகத்தான் போகவேண்டும். துணை கொண்டு போனால் விவாதங்கள் வரும், மாறுபடு தர்க்கம் வரும், இரண்டுக்கும் இடையில் புதிதாய ஒரு சமரசம் செய்ய நேரிடும் என்ற உண்மை அறிந்து தனியாகச் செல்கிறான். என்ன விந்தை! உண்மை பல வர்ணங்களுடையது என்று தெரிந்து கொள்கிறான்.
ஒளிப்பிளம்பாகத் தெரியும் உண்மையின் அசரீரி அவனுக்குச் சொல்கிறது..
‘மானிடா, வீணாய் முயற்சி செய்யாதே. உன்னால் மனதைக்
கொல்ல முடியாது. மனங்கடந்த நிலையிலே நீ தாகத்துடன் பாயும்
போது அது தானாகவே மடிந்து சூனியமாகி விடும். அதற்கு
உனக்குப் பக்குவம் வரவில்லை.
வேடிக்கை பார்க்க வந்தால் சத்தியம் புலப்படாது!
துரத்தப்பட முன பாக இங்கிருந்து போய்விடு!’
எனத் துரத்தப்படுகிறான்.
மண்ணுலகம்

குழந்தைகள் ஓடியாடி விளையாடும் குதூகலச் சத்தம். சில குழந்தைகள் சிணுங்கி அழுதல். வீதியின் சனநடமாட்டம். குதிரை வண்டியின் ஓசை. பசுமாடு கத்தும் ஓசை.
பால்காரிக்குப் பணம் வாடகைப் பணம் குழந்தைக்கு காப்பு வாங்க பணம் என்று இங்கே அவனுக்குத் தலைநோவு பொறுக்கவில்லை.
என்ன உலகமடா இந்த மண்ணுலகம்.
ஓயாத ஏமாற்று.. ஒழியாத வஞ்சனை!
தீராத கவலை.. சத்துமில்லை சாரமுமில்லை!
உள்ளூரப் பூச்சியரித்த குழல்
இந்த வாழ்க்கை மானிடா
இது சிறுமைக் களஞ்சியம்
துன்பப் பெரும்களம்
மற்றவன் மீது பழிகள் மனிதன் கூறுகின்றான்
மாறிமாறி ஒருவரை ஒருவர் ஏமாற்றுகின்றான்
தீராத கொடிய வியாதி பிடித்துக் கிடக்குது
இந்த மனித ஜாதி
மாறாத சாபம்.. நீங்காத விசம்..
அதன் பெயர் பணம்
அதை வணங்கும் படி தூண்டிவிடுவது
அறிவற்ற விருப்பம்!
ருசி நீங்கிய விருப்பம்!
பணம் ஒரு பெரும் பிரச்சனையாக மண்ணுலகத்தில் இருந்தாலும், செல்வமும் செழிப்பும் அற்று அவன் வாழ்விருந்தாலும் பணத்தை அவன் அறிவற்ற, ருசி நீங்கிய விருப்பம் என்கிறான். இதைத் தவிர அவனுக்கு மண்ணுலகத்தைப் பற்றி விதந்துரைக்க மனமற்றுவிடுகிறது.
தர்ம உலகு.

கந்தர்வ உலகிற்கு அடுத்து அதிக காலம் தங்கும் உலகம் தர்ம உலகம். ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொருதர்மங்கள் உள்ளன என்று தொடங்குகிறது தர்ம உலகின் தத்துவச் சிந்தனை.
மனிதகுலப் பிரிவுகளையும் போர் தர்மங்களையும் அறிய விளைவதே தர்மலோகத்தின் சாரம்.
வர்ணபேதங்கள் பற்றிய சிந்தனைகளை இங்கே அறிந்து கொள்கிறான். பிறப்பிலே வர்ணபேதம் உண்டெனச் சொல்வோர்; பொய், வெறும் ஏமாற்று! அவையெல்லாம் பொய்மையின் கூற்றென்கிறான்.
‘அதர்ம நாசத்தை அழிக்கப் போர் செய்வது தர்மத்தைச் சேர்ந்தது. அதர்மம் தர்மத்திற்கு உணவு. ஆதலால் தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும்!! அதர்மம் இறந்தால் பின்பு தர்மமும் மடிந்து விடும்!’
சாந்தியா?
உண்மையா?
தர்மமா?
அல்லது
காதலும் இன்பமுமா?
மனித மனங்கள் எதைத் தேடியலைகின்றன? மண்ணுலக யதார்த்தத்தில் இவையெல்லாம் கிடைத்துவிட்டால் மனதின் தேடல் தீர்ந்திடுமா என்ன?
இந்தக் கேள்விகளைச் சுமந்துகொண்டு ஐந்து உலகங்களை உருவாக்குகியதே ஞானரதம்.
ஞானரதம் வெளிவந்த காலத்தில் அது தமிழ்இலக்கியத்தில் புது முயற்சி.
அவனது ஒவ்வொரு கற்பனையுலகும் பல உயர்ந்த தத்துவங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன. ஞானத்தின் தேடலில் ”நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்” என்று பாரதியே ஒரு கனவுக் கவிதையில் கூறுகின்றான்.
அவனுடைய படைப்புகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரு சமயம் கதை எழுதிவிட்டு அதை பாடலாக
ஆக்கியிப்பான். மற்றொரு சமயம் எழுதிய பாடலை உரைநடை வடிவிலும் கதை வடிவிலும் புனைந்திருப்பான்.
பாரதியின் கவிதைகளைப் படிக்கும் போது ஞானரதத்தை அவன் அவனுடைய கவிதைகளுக்குள்ளும் ஓட்டித் திரிந்துள்ளதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒட்டுமொத்தத்தில் ஒவ்வொரு கற்பனை உலகக் காட்சிகளுக்கூடாகவும் மானிட வாழ்தலின் பக்கங்களைத்தான் ‘ஞானரதம்’ படைப்பில் பாரதி தரிசிக்கின்றான் – தர்க்கிக்கின்றான் – விசாரணை செய்கின்றான் – சிந்திக்கின்றான் – சிலாகிக்கின்றான் – சலிக்கின்றான் – சினம்கொள்கின்றான் –காதல்கொள்கின்றான் – திளைக்கிறான்.
தன் ஆழ்மனத் தேடலுக்கூடாக முழு மானிட சமுதாயத்திற்கும் பொதுவான கனவுகளைத் தரிசிக்கின்றான். பேதங்களற்ற, மானிட சமத்துவத்தை பூசிக்கின்றான்
மனிதப் பிறவியில் ஆத்மாவைத் தேடும் உணர்வினைச் சொல்லல் எளிதாமோ என்ன?
கற்பனையின் உச்சம் ஞானரதம்.
மனமே அண்ட பிரபஞ்சம், அண்ட பிரபஞ்சமே மனம்!
பாரதியின் படைப்புகளின் அடிநாதம் இதுவே!
மானிடா பற!







































