
ஒரு தேடல்
கவிதா லட்சுமி
பாரதியின் கவிதைகளில் அதீத காதலுள்ளவள் நான். சில பாடல்களை வருடக்கணக்கில் இரைமீட்டுக் கொண்டிருப்பேன். அப்படியாக என்னை அலைக்கழித்த பாடலில் ஒன்று ‘ஆசைமுகம் மறந்து போச்சே’. பல வருடங்களாக இதன் பொருளைத் தேடி அலைந்திருக்கிறேன். பாரதியின் கவிதைகள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை அடுக்கும் முறையிலும் அதன் எளிமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
எளிய இனிய சொற்களைக் கொண்ட கவிதைகளாயினும் அக்கவிதைகளின் பொருளுணர்ந்து கொள்வது பெரும்பாலும் அத்தனை இலகுவானதல்ல. பாரதியின் கவிதைகளை ஒரு ஒழுங்குடன் படித்தறிந்தவர்களால் மட்டுமே கவிதையின் பொருளுணர்ந்து அதன் உட்கருத்தை உய்த்துணர முடியும். ‘ஆசைமுகம் மறந்து போச்சே’ என்ற பாரதியின் கவிதையை இந்த வகைமைக்குள் சேர்க்கலாம்.
காதலனின் முகம் எப்படி காதலிக்கு மறந்து போகும் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததில் இருந்து பல வருடங்களாக இதற்கான பொருளை அறிய முற்பட்டு வந்திருக்கின்றேன். அந்தத் தேடலில் இருந்து பிறந்ததே இந்தப் பதிவு.
பாரதியின் கண்ணன் பாட்டில் வரும் கண்ணன் என் காதலன் என்ற தலைப்பிலமைந்த “ஆசைமுகம் மறந்து போச்சே” என்று தொடங்கும் கவிதை மிகவும் எளிமையான பாடுவதற்கு இனிமையான ஒரு பிரிவாற்றாமைக் கவிதை.
இந்தக் கவிதையின் வெளிப்படையான கருத்தும் மிக எளிமையானது. காதலனை நீண்ட நாள்களாகக் காணவில்லை. அவன் முகம் பார்த்தும் பல நாள்கள் ஆகிவிட்டன. பிரிவாற்றாமையால் காதலிக்குத் தன் காதலனின் முகமே மறந்து போய்விட்டது. தான் பார்ப்பதற்குக் கூட அவன் படம் இல்லையே என்று தன் தோழிக்குத் தலைவி கூறுவதாக இக்கவிதை அமைக்கப்பட்டிருக்கின்றது.
உண்மையில் இந்த நேர்க் கருத்தில்தான் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறதா அல்லது வேறு உட்கருத்து ஏதேனும் இருக்கின்றதா என்பதே கேள்வி?
ஒரு கவிதையை மனதிலிருந்து உணர்வுப்பூர்வமாகப் பாட்டிலோ, ஆட்டத்திலோ கொண்டு வர அதன் உட்கருத்தை ஆழ்ந்து விளங்கிக் கொள்ளுதல் என்பது மிகவும் இன்றியமையாதது.
கண்ணனை காதலனாக, தோழனாக, தாயாக, தந்தையாக, காதலியாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, ஆண்டானாக, காந்தனாக, விளையாட்டுப் பிள்ளையாக சத்குருவாகாக் கொண்டு எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட ‘கண்ணன் பாட்டு’ என்ற தொகுதியில் ஒரு கவிதையாக இந்தக் கவிதை இருப்பதால் அதன் ஒரு பகுதியாகவே இக்கவிதையை நோக்க வேண்டி இருக்கிறது.
கண்ணன் பாட்டு தொகுப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது? எவ்வகையான சிந்தனையைக் கொண்டிருக்கிறது என்பவற்றின் அடிப்படையில் தான் இக்கவிதை பற்றிய உட்கருத்தினை நாம் அறிந்து கொள்ள முடியும். பாரதியின் கண்ணன் பாட்டில் உள்ள கவிதைகள் பலவும் வேதாந்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்காகவே எழுதப்பட்டவை. வேதாந்தத் தத்துவங்களை வைத்தே பல கவிதைகளை எழுதியிருப்பதாகப் பாரதியே பற்பல கவிதைகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கின்றார். சான்றாக அவரது குயில்பாட்டில் இறுதியாக “வேதாந்தமாகக் கருத்துரைக்கவல்லீர்” என்று குறிப்புணர்த்துகின்றார்.
பாரதி சொல்லும் வேதாந்தத் தத்துவம் என்பது என்ன?
பாரதியினுடைய வேதாந்தத் தத்துவத்தில் ஜீவாத்மா பரமாத்மா என இரண்டு விடயங்கள் பேசப்படுகின்றன.
ஜீவாத்மா: மனிதர்கள்.
பரமாத்மா: முழுமையான அகண்ட பிரபஞ்சம்.
இந்த ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் ஒரு பேதமும் இல்லை என்பது தான் வேதாந்தத்தினுடைய கருத்து. ஜீவாத்மா தான் பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு பாகம் மட்டுமே. அகண்ட முழுப் பிரபஞ்சத்தின் ஒரு பாகமே மட்டுமே மனித உயிர்கள். மனித உயிர்கள், தாம் வேறு என்று உணர்வதற்கான காரணம் மாயை. மாயையின் காரணமாகத் தான் தம்மை வேறு ஒரு பொருள் என்றும் பிரபஞ்சத்தின் பாகம் இல்லை என்றும் எண்ணிக் கொள்கிறோம்.
மனித மனதின் இயக்கமானது சிந்தனை என்கிற இருமை, எதிர்வுக்கோட்பாட்டை (binary) வைத்தே பொருளை விளங்கிக்கொள்ளும் தன்மையுடையது. மனம், எப்போதும் ஒரு விடயத்தை அதற்கு எதிர்மறையான மற்றொரு விடயத்துடன் ஒப்பிட்டே புரிந்து கொள்ளும் தன்மையுடையது. மனித மனதின் இயங்கியலின் அடிப்படையானது முரண்பாடுகளை இணைத்துவைத்துப் பொருள் கொள்வதேயாகும்.
இருளைப் புரிந்து கொள்ள ஒளியும், இன்பத்தைப் புரிந்து கொள்ளத் துன்பமும், உண்மையைப் புரிந்து கொள்ளப் பொய்யும் தேவைப்படுகிறது. அதைப்போலவே இந்தப் பேரண்டம் வேறு தான் வேறு என்ற மனநிலையிலேயே மனிதமனம் இயங்குகிறது. இந்த மாயை அழிந்து போகுமானால் மனித உயிர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் தானும் ஒரு பாகம் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ளும்.
இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டே “ஆசைமுகம் மறந்து போச்சே” என்ற கவிதையின் உட்கருத்தை அறிய விழைகிறேன். கால காலமாக மனித உயிர்களும் பிரபஞ்சமும் பேதமற்ற ஒன்று தான் என்று மாயையற்று இருந்த தனது முகம் தனக்கு மறந்து போய்விட்டது.இங்கே பாரதி தேடுவது மாயையற்ற தனது முகத்தினைத் தான். மறந்து போனது பிரபஞ்சத்தோடு பேதமற்று இருந்த தனது முகம் தான்.
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
உயிர்க்கும் பிரபஞ்சத்திற்குமான தொடர்பு ஆழ்மனதிற்குத் தெரிந்து தான் இருக்கிறது. முற்றிலும் மறக்கப்படவில்லை. ஆனாலும் நினைவு (மனது) அந்த முகத்தை மறக்கலாமோ?
கவிதையை உச்சரிக்கும் போது “நினைவுமுகம் மறக்கலாமோ” என்பதற்கும், “நினைவு முகம் மறக்கலாமோ” என்பதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு.
கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ண னழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.
பேதமற்ற உயிர்களும் பிரபஞ்சமும் பற்றிய ஒரு தோற்றம் மனக் கண்ணில் தெரிகிறது. ஆனாலும் அதன் முழுமை அங்கு இல்லை.
ஒய்வு மொழிதலுமில் லாமல் – அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -அந்த
மாயன் புகழினை யெப்போதும்.
மாயை மறைத்தாலும், உயிர்களின் ஆழ்மனம் எப்போதும் பிரஞ்சத்தோடு கலப்பதையே நினைத்திருக்கும்.
பிரபஞ்சத்தோடு கலந்து நிற்க வேண்டி பாடல்களையும் தோத்திரங்களையும் உயிர்கள் பாடிக்கொண்டு இருந்தாலும் அவைகள் அதன் உட்பொருளை விளங்கிக் கொள்ளாமலே பாடுகின்றன.
மேலும் ஆழ்மனதில் உள்ளதை, புறமனம் செய்த பாவம் தான் இந்த விடயங்கள் மறந்து போகக் காரணமாகின்றனவோ என விளங்கக் காணலாம்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினிடத்திலிது போலே – ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
பெண்க ளினிடத்திலிது போலே – ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ? எனும் வரிகள் பரமாத்மாவை ஆணாகவும் ஜீவாத்மா அனைத்தும் பெண்ணாகவும் பார்க்கும் வேதாந்தத் தத்துவ மரபை பாரதியும் இக் கவிதையில் கையாண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த
வைய முழுதுமில்லை தோழி.
மனதை மாயை மறைத்திருந்தாலும் பிரஞ்சமும் உயிர்களும் ஒன்றென்பது பிரிக்க முடியாத விடயங்கள் ஆகும். ஆயினும் மனித மனத்தின் யதார்த்தங்கள் இவற்றை விளங்கிக் கொள்வதில்லை.
பாடல் வரிகள் அனைத்திலும்..
பாரதி மறந்த ஆசைமுகமும் அவர்தான்!
அதைத் தேடுவதும் அவர்தான்!

–
–









