Gejje Pooje (சலங்கை பூஜை) காட்டும் தேவதாசிச் சமூகம்

தேவரடியார் மரபினை பேசும் படங்கள் தமிழில் மிகக் குறைவு. இது கன்னடப்படம். கோயில் தேவதாசி மரபுத் தடைச்சட்டம் இந்தியவில் அமுலுக்கு வந்த பின் எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த வகை தேவரடியார்கள் தம் கலை வாழ்வை காலத்தால் மறந்துவிட்டவர்கள்.

பிரபுக்களும், ஜமின்தார்களும் போலவே பிராமணர்களும் தேவரடியார்களை தமது பெண்களாக பரிசம் போட்டு வைத்துக்கொள்வது அன்றைய கால வழக்கு. இந்தப்படம் காட்டும் தேவரடியார் குடும்பம் சற்று வளமானது. ஒருகாலத்திற்கு ஒருவர் பெண்ணை தாசியாக வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டவர்கள். 

பாட்டி, தாய், சந்திரா என தாய்வழிக் குடும்பமாக அக்ரகாரத் தெருவில்தான் குடியிருக்கின்றனர். தந்தை பெயர் தெரியாமலே வளர்கிறாள் சந்திரா. தேவதாசி மரபில் இருந்து மகள் விடுபட வேண்டி தாய் அவளுக்கு கல்வி தருகிறாள். சந்திராவிற்கு தானும் திருமணம் புரிந்து வாழவே பிரயத்தனப் படுகிறாள். ஆனால் பாட்டிக்கோ அவளைத் தேவரடியார் மரபிற் போன்று பணக்கார பிரபுக்கு தாசியாக்கும் விருப்பு. 

அக்கிரகாரத்தில் அவர்களை தாழ்வாகப் பார்த்தாலும் முற்றிலுமாக ஒதுக்கிவிடவில்லை. எதிர்வீட்டு மனிதர் அவர்களை கருனையுடன் பார்த்து ஆதரிக்கிறார். அதே வீட்டு மகன் சுமனுடன் காதல் மலர்கிறது.

எதிர் வீட்டிற்கு திருமணம் பேசி வந்த மனிதர் ஒருவர் அடுத்தநாள் இரவு யாருமற்ற தெருவழியாக சந்திரா வீட்டிற்கு வருகிறார். அவர்தான சந்திராவின் தந்தை என்பதை சந்திரா தெரிந்து சந்தோசம் அடைகிறாள்.

தகப்பன் தன்னை ஊருக்கு அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. தன் கௌரவம் கருதி தான் யார் என்று யாருக்கும் சொல்லக்கூடாதென்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

தகப்பனுடன் சந்திராவைப் பார்த்துவிடும் காதலன் அவளும் தாசித் தொழிலைத் தொடங்கிவிட்டாள் என்று அவளை சந்தேகித்து மறுத்துவிடுகிறான்.

அவள் காதலனுக்கும் சந்திராவின் தகப்பனுடைய இன்னொரு மகளுக்கும் திருமணம் முடிகிறது. அதன் பின் தான் தேவதாசியாகவே பொட்டுக்கட்டிக் கொள்வதாக தன் பாட்டியிடம் சொல்லிவிடுகிறாள்.

பொட்டுக்கட்டும் நிகழ்வும் யெல்லம்மா முன் நடைபெறும் சம்பிரதாய முறைகளும் படமாக்கப்பட்டு இருக்கின்றன. பொட்டுக்கட்டும் நிகழ்வில் சலங்கை கட்டுவதும் நடனமாடுவதும் சம்பிரதாயத்தின் பேரிலேயே நடைபெறுகிறது.

அவள் பொட்டுக்கட்டும் சடங்கை ஆதரித்து முழு அக்ரகாரமே மகிழ்வடைகிறது. சுமங்கலியாகிவிட்டதாக வாழ்த்துகிறது.

பொட்டுக்கட்டும் நிகழ்வு முடிந்ததும் எதிர்வீட்டு மனிதரிடம் ஆசிர்வாதம் பெறச் செல்லும் அவள் அங்கிருந்த தன் தகப்பனிடமும் ஆசி பெற்று முடிந்ததும் அந்த இடத்திலேயே விசமுண்டதன் காரணமாக இறந்துவிடுகிறாள்.

அப்போதுதான் அவளுடைய தகப்பனார் மகளே என்று அழைக்கிறார். தேவரடியார்களின் வாழ்வையும் துயரத்தையும் காட்டும் படம்.

தேவரடியார் மரபு பல வேறுபட்ட வாழ்வியல் முறையையும் சமூக அந்தஸ்த்துக்களையும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுபாடு கொண்டவை. Gejje Pooje காட்டுவது ஒரு தேவதாசிச் சமூகத்தின் பதிவு மட்டுமே


…..

Movie: Gejje Pooja (சலங்கை பூஜை)
Directed by Puttanna Kanagal
Written by M. K. Indira
Starring Kalpana, Gangadhar, Leelavathi
Music by Vijaya Bhaskar
Tamil remake: தாலியா சலங்கையா

பின்னூட்டமொன்றை இடுக