Oscarsborg கோட்டை

நோர்வேயின் டிரோபாக் (Drøbak) நகரில் அருகருகே உள்ள இரு தீவுகளின் மேல் கட்டப்பட்ட பிரதான பாதுகாப்புக் கோட்டைதான் ஒஸ்கார்ஸ்பொர்க் (Oscarsborg) கோட்டை.இக் கோட்டை 1848 ல் கட்டப்பட்டாலும், 1905 ஆம் ஆண்டில் தான் வலுப்படுத்தப்பட்டு முழுமையடைந்ததாக கூறப்படுகிறது. 

ஒஸ்லோ நோர்வேயின் தலைநகராக்கப்பட்ட பின்னர், அதன் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட இந்தக் கோட்டை இன்று தொல்லியல் காப்பகமாகவும், சுற்றுலாத் தலமாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கோட்டையின் முக்கியத்துவத்தின் பின்னால் இரண்டு மகா உலக யுத்தங்கள் இருக்கின்றன. இதன் இருப்பிடம் நோர்வேயின் புவியியல் சார்ந்து மிக முக்கியமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 

எந்த நாட்டிலிருந்தும், கடல் வழியாக பெரிய கப்பல்கள் நோர்வேயின் தலைநகரை அடைய வேண்டுமானால் இந்த உட்கடல் வழியே மட்டும்தான் உள்நுழைய முடியும். இக்கடற் பாதையின் நடுவே இரண்டு தீவுகள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. அத்தீவின் கோட்டை மீது மும்மூன்று தளங்கள் (கிடை மட்டமாகவும், குறுக்கு வெட்டாகவும்) அமைக்கப்பட்டிருக்கின்றன. 

இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஹிட்லரின் கப்பல்கள் நோர்வேக்குள் நுழைய முற்பட்ட போது, இக்கோட்டையிலிருந்து நிகழ்த்திய தாக்குதல் காரணமாக ஒரு போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த பல நாசிக் கப்பல்கள் பின்வாங்கிச் சென்றன. 

போர்க்கப்பல்கள் மூலம் கோட்டையின் தாக்குதலை வெல்லமுடியாத நாசிப்படைகள் நாற்பதிற்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி கோட்டையை வலுவிழக்கச் செய்தன. பலத்த சேதமடைந்த கோட்டை சிலகாலம் நாசிப்படைகளின் வசமிருந்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் மீளமைக்கப்பட்ட கோட்டை மிகவும் விசாலமாக கம்பீரத்தோடும் அழகோடும் காணப்படுகிறது. சுரங்கப்பாதைகளும், அங்கு ஊடுருவி வரும் ஒளியும் எனக்கென்னவோ பழுவேட்டரையரின் கோட்டைச் சுரங்கத்தையும் சுவரையும் தான் நினைவுபடுத்தியது.ஆனால், பழுவேட்டரையரின் கோட்டை சுரங்கம் ஒடுக்கமாகவும் இருட்டாகவும் இருந்திருக்க வேண்டும். அவரவ மண்டைக்குள் அவரவர் கனவுகள் ஏக்கங்கள்.சுரங்கம் முழுதும் அன்று நடந்து தீர்த்தாலும், போதாமையை உணரத்தான் செய்கிறேன்.

இது வரை நான் பார்த்த பீரங்கி வகைகளிலே மிகப்பெரிய பீரங்கிகளை இங்கு தான் கண்டேன். சிறைச் சாலைகள், நீர் சேமிப்புக் கிடங்குகள், நீண்ட சுரங்கங்கள், கோட்டைச் சுவர்கள், அதைச் சுற்றி வீசும் குட்டி அலைகள், இரண்டு தீவுகளையும் இணைக்கும் பாலம், பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் உட்கடல், சுற்றியும் பைன்மர மலைகள் என அழகிய காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. 

ஒஸ்கார்ஸ்பொர்க்கிற்கு (Oscarsborg) கப்பலில் மட்டுமே போக முடியும். கடல் நீளமும் அத்தனை நீலம்.
கடற்பறவைகள் கடல் நீரோடு பறக்கும்…
சமயங்களில் உங்களோடும்…

பின்னூட்டமொன்றை இடுக