முதியவர்களுக்கென ஒரு குட்டிக்கிராமம் – Norway

முகநூலில் நான் அவசரமாகக் கடந்து செல்லும் சில ஒளிப்பதிவுகள் இருக்கின்றன. அவைகளில் முதன்மையாக இருப்பது முதுமையில் சில மனிதர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திய பதிவுகள்தாம். 

அசையக்கூட முடியாத மூதாட்டிகளை அடிப்பதும், உதைப்பதும், பலங்கொண்ட மட்டும் இழுத்துவீசுவதும் பார்த்திருக்கிறேன். அது ஏற்படுத்தும் வலியாலும், செயலற்ற எனது நிலையாலும், அவசரமாகத் தாண்டிச் செல்ல முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடிந்ததில்லை.
கொடுமைகளை அனுபவிக்கும் முதியவர்களுக்கு முதுமையில் வரும் மறதி என்பது ஒரு வரமாகவும் இருக்கக் கூடும்.

மறதி என்பது எந்த வயதிலும் வரும் என்றாலும், மனிதருக்கு முதுமையில் மறதி என்பது ஒரு நோய். சிந்தனைச் சீர்குலைவு, நினைவு தப்புதல், மனக் குழப்பம், நிரந்தர ஞாபக மறதி போன்றவற்றின் பாதிப்பு. 

 

மறதிநோய் உள்ளவர்களுக்கான பராமரிப்புக்காக நோர்வேயில் ஒரு குட்டி ஊரையே கட்டியுள்ளார்கள். இதை கிராமம் என்றே அழைக்கின்றனர் (Demens landsby). மனிதர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மீறிய அதிகமான வசதிகளுடன் இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. 

முதியவர்களுக்கான தனிநபர் அறையில் இருந்து அவர்களுக்கான சமையல் அறைவரை அதன் வடிவமைப்பே மிக அலாதியானது. அவர்களுடைய வீட்டின் வாசம் இருக்க வேண்டி அந்தக் காலத்து தளபாடங்கள் தொடக்கம் சுவர்களில் நிறங்களின் தேர்வுகள் வரை கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

கலைநிகழ்வுகளுக்கான வசதி, கடை, பழத்தோட்டம், பயிர்செய்யும் கண்ணாடி வீடு, கோழிவளர்ப்பு, ஏழாயிரத்துக்கும் மேலான மரச்செடிகள், குளம், சலூன், மரவேலை செய்யுமிடம், தைக்குமிடம், அழகுநிலையம், படம் வரைதலுக்கான அறை, உடற்பயிற்சிக்கான வசதி என்று பல இருந்தாலும் இத்தனை இடங்களும் இவர்களுக்கானது மட்டுமல்ல, வெளியே உள்ள மனிதர்களும் இவைகளை அவர்களோடு சேர்ந்து பாவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. 

முதியவர்களின் குடும்பங்கள் இவர்களோடு சேர்ந்து சமைக்கவோ, கதை பேசவோ, படம் பார்க்கவோ, உடற்பயிற்சி செய்யவோ முடியும். தாம் வாழ்ந்த ஊர்களின் பாதைகளையோ தாம் விரும்பிய ஊர்களின் காட்சிகளையோ அவர்கள் திரையில் பார்த்தவண்ணம் உடற்பயிற்சி செய்யலாம். 

இளைஞர்களுக்காக சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள் சுவர் ஏறுதல் போன்ற விடயங்களை முதியவர்கள் பார்த்து ரசிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. 

வெளி உலகிற்கும் முதியவர்களுக்குமான தொடர்பு குழந்தைகள் வரை இருக்க வேண்டி பாலர்வகுப்புகளில் இருந்து வரும் குழந்தைகளையும் கவரக்கூடிய விடயங்கள் பல சேர்க்கப்பட்டதுமல்லாமல், தமது தனியறைகளில் இருந்து கண்ணாடி விழியாகப் பார்த்து மகிழும்படி பாலர்வகுப்பு ஒன்றினையும் சுற்றாடலில் ஏற்படுத்தி இருக்கின்றனர். 

இறங்கி நடக்கும் தோட்டப் பாதைகளில் பலவிதமான கற்களும் மரத்துண்டுகளும் பதிக்கப்பட்ட பகுதி ஒன்றும் இருக்கின்றது. அதில் நடக்கும் போது அவை காலில் வேறுபட்ட உணர்வுகளைக் கொடுக்ககூடியது. முதியவர்களது புலன்களைத் தூண்டும் அறை ஒன்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கூறிய விடயங்களைவிட இன்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன.

இத்தனையும் மனமறதி உள்ள (அதாவது எமது மொழியிற் சொல்வதானால் அறலைபிறழ்ந்த) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் கிராமம் இதுதான். இக் கிராமம் நான் வாழும் ஊரில் கட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியே. வயதானால் என்ன மறதி வந்தால் என்ன, இதுவும் நன்றாகத்தானே இருக்கிறது என்று தோன்றினாலும்… பேரக் குழந்தைகளோடு ஒரே வீட்டில் இருப்பது வேறுதான். இந்த அவசர உலகில் யாருக்கும் பாரமாகாமல் இருப்பதும் நல்லதுதான். தெரியவில்லை. 

இதன் திறப்புவிழா செப்டெம்பர் 21ஆம் திகதி, நாட்டின் பிரதமராலும், கலாச்சார அமைச்சராலும் திறந்துவைக்கப்பட இருக்கிறது. 

எமது நாட்டில், என்ன தேர்தல் வைத்து யாருக்கு ஓட்டுப்போட்டென்ன? என்ன நடந்துவிடப்போகிறது? எனது தேசத்தில் நான் கண்ட முதியவர்கள் நினைவில் வரும் போதெல்லாம் ஒரு ஓரத்தில் வலி இருக்கத்தான் செய்கிறது. மனிதத்தையும், ஒழுங்கையும், சமூகத்திற்கான செயற்பாடுகளையும் நாங்கள் இழந்து பலகாலமாயிற்று.


10.08.2020
NORWAY

 

 

One thought on “முதியவர்களுக்கென ஒரு குட்டிக்கிராமம் – Norway

பின்னூட்டமொன்றை இடுக