ஆடற்கலையும் ஆத்ம தேடலும்

66812425_679641472462263_4073302895687106560_n
பிரபஞ்சம் யாவுமே கூத்தென்றால்
உலகின் யாவையும் நடம் செய்வோம்! 

ஆடற்கலையும் ஆத்ம தேடலும்
—————————-

பெண்களுடன் மாயக்கண்ணன் செய்யும் சில்மிஷங்களையும், சிருங்கார லீலைகளையும் பெருமையோடு ஏற்றுக் கொள்ளும் சமூகம், சூர்ப்பனகைகளின் மூக்குகளை மட்டும் அறுத்து அனுப்பிக் கொண்டே இருப்பதைப்பற்றி நாம் சிந்தித்ததுண்டா?

நாட்டியக்கலை உடல் அசைவுகளாலான தொன்மை வாய்ந்ததொரு மொழி வடிவம்.

நாட்டிய மொழியினூடு முன்னெடுக்கப்படும் கலை வடிவமும் அதன் பேசுபொருளும் இரண்டு வேறுபட்ட விடயங்கள்.

கலை வடிவம் என்பது கட்டுமானம்.
பேசு பொருள் என்பது மனித மனத்தின் தேடல் வெளிப்பாடு.

ஒரு கலை வடித்தினூடாக நாம் கொண்டுவரும் பேசு பொருள் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. காலத்துக்குக் காலம் மனத்திற்கு மனம் வெவ்வேறு வகையில் அவை வெளிப்படலாம்.

ஆடற்கலை பற்றிய ஆத்ம தேடலின் அனைத்து உணர்வுகளையுமே கட்டுமானம் சிதறாமலும், மரபு குன்றாமலும், இசைக்கும் பொருளுக்கும் ஏற்ப ஆடலாம் என்ற சுதந்திரம் ஆடற்கலைக்கும் கலைஞர்களுக்கும் எப்போதும் இருக்கின்றது.
இருந்துகொண்டேயிருக்கும்.

பரதக்கலையின் பேசு பொருளை அகலப்படுத்தி, மனித மனத்தின் ஆத்மார்த்தமான எல்லாத் தேடல்களுமே உயர்ந்த தன்மை கொண்டவையெனும் பரிமாணத்திற்கு அதன் பேசுபொருளை எடுத்துச் செல்லவேண்டும்.

சுதந்திரமான மனத்திலிருந்து சிருஷ்டிக்கப்படும் கலையே எழுச்சியும் வளர்ச்சியும் உயர்வும் பெறமுடியும்.

ஆனால் படித்தவை மட்டும் தான் இங்கு கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றதா?

புரியாத வடிவில் அல்லது மொழியில் இருப்பதனால் அதனில் கை வைப்பதில் அச்சமா?

உண்மையிலேயே இது நடைமுறையில் அல்லாத ஒரு மொழியின் கலைதானா?

பரதம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வு, ஒவ்வொரு விருப்பு நிலை, ஒவ்வொருவிதமான தேடலும் நிறைவும்.
நடனம் என்பது பிற கலைகளையும் போல ஒரு கலையே.

ஒரு ஓவியத்தை விடவோ, ஒரு சிற்பத்தை விடவோ அல்லது ஒரு கைவினைக் கலையை விடவோ நாட்டியம் மிக உயர்வென்ற எண்ணம் எங்கிருந்து எழுகிறது?

புனிதம் போர்த்தி கடத்தப்படும் எதுவும் எழுச்சியற்று அதனதன் உறக்க நிலையிலேயே இருக்கின்றன. இந்தப் போக்கினை சமூக வாழ்வின் பல அடுக்குகளிலும் நாம் காண்கின்றோம்.

உயிரினங்கள் யாவும் இயற்கை என்பதைக் கடந்து பெண்ணிற்கு, அவள் உடலிற்கு, தாய்மைக்கு என மகுடஞ் சூட்டி புனிதத் தன்மை கொடுக்கப்படுகின்றது.

பார்வைக்கு இவை மிக அற்புதமான விடயம் போல தோன்றினாலும், உணர்ச்சிவயப்படாமல் சிந்தித்துப் பார்த்தோமானால் இவைகளுக்குப் பின்னால் இருக்கக் கூடிய போலித் தன்மைகளையும், அரசியலையும் எளிதாக இனங்காண முடியும்.

நாட்டியத்தினை, பக்தி மார்க்கத்தினூடாகப் பெறும் அழகியற் கலையாகவும், ஆடை, அலங்காரக் காட்சி வடிவமாகவும் எடுத்துச் செல்வதே புனிதம், போற்றுதலுக்குரியது என்பதும் மேற்கூறியது போலவே போலித்தன்மையுடையதும், ஆதிக்க சமூகங்களின் அரசியலும் எனலாம்.

கணவனுக்காக காத்திருப்பதும், அவன் வராமல் போவதினால் சோர்வடைவதும், பரத்தையிடம் சென்ற கணவனை நோக்கி கேள்வி எழுப்புவதும், சண்டையிடுவதும், பிற்பாடு ஏற்றுக் கொள்வதும் என எட்டு வித நாயகிகள்-தலைவிகள் குறித்த கோட்பாடுகள் ஒருபுறம் உருவாக்கப்படுகிறது.

மறுபுறத்தில் கடவுளர்களைப் போற்றலும், அருளும் மோட்சமும் வேண்டி இரத்தலும் கலையின் நோக்கமெனக் கட்டமைக்கப்படுகிறது.

பல தருணங்களில் பெண்களோடான கண்ணனின் சேட்டைகளோடு நாட்டியம் உச்சம் கண்டுவிடுகிறது.

மேலும் நடன நாடகங்களும், பெரும்பான்மையாக என்றும் புராண இதிகாசங்களுக்குளே மட்டுமாய்ப் பயணித்து கொண்டிருக்கின்றன.

ஏன்?

இதைப் பற்றிக் கேள்வி எழுப்பும் மனிதர்கள் கூட முரண்பாடுகளையும், வெறுப்புகளையுமே சம்பாதித்துக் கொள்கின்றனர்.

பிரம்மன் ஐந்தாவது வேதமாக நாட்டிய சாஸ்திரத்தை இயம்ப, பரதர் எழுத, சிவன் ஆட என இக்கலை படைக்கப்பட்டதாக நம்பவைக்கப்பட்ட நிலையுள்ளது.

தென்பகுதி மக்கள் மத்தியில் நாட்டியமானது இலக்கண மரபு சார்ந்த கலையாக வளர்ந்திருந்தமை பற்றிய குறிப்புகள் பரத முனிவரின் பெயரைத் தாங்கிய நாட்டிய சாஸ்திரத்தின் சூத்திரங்களில் உள்ளன. எனவே நாட்டிய சாஸ்திர இலக்கண வரையறைகளுக்கு முற்பட்ட காலத்திலேயே தென்பகுதி மக்கள் மத்தியில் நாட்டியக்கலை இலக்கண மரபுக் கட்டமைப்புகளைக் கொண்ட கலையாக இருந்திருக்கின்றது எனும் முடிவிற்கு வரமுடியும்.

பரத சாஸ்திரமும் தொல்காப்பியமும் ஏறத்தாழ ஒரே காலம் என்பது ஆய்வாளர் கூற்று.

தக்ஷிணாத்யாஸ் தாவத்
ப{ஹ நிருத்தகீத வாத்யா கைசிகீ பிராயா
சதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச
(நாட்டிய சாஸ்திரம்)

இதில் தக்ஷிணாத்யாஸ் என்று பரதர் குறிப்பிடுவது தென்னவர்களை. காதல் இன்பத்தைதை வெளிப்படுத்தக்கூடிய நான்கு வடிவங்களில் ஒன்று கைசீகி. தெற்குத்தேச மக்களின் கைசீகி நாட்டியமரபினைப் பற்றி பரதமுனிவர் எடுத்துரைக்கின்றார்.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடை காட்சி உறழத் தோன்றி
(தொல்காப்பியம்)

அப்படியானால் பரத சாஸ்திரத்திற்கு முன்பே தென்பகுதியில் நடனம் வளர்ச்சி பெற்ற கலையாக இருந்திருக்கின்றதல்லவா? இதனால், ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்டதே நாட்டியம் என்று நாம் ஐயமுறத் தேவையில்லை அல்லவா?

தொல்காப்பியக் காலத்திலோ, அதற்கு முன்போ பல தமிழ் நடனக்கலை நூல்கள் இருந்ததற்குரிய சான்றுகளும் பல உள்ளன.
அவை இப்போது நம்மிடம் இல்லை.

நூல்களைக் கடல் கொண்டுவிட்டது என்பது பொதுக் கருத்தாகும். இது உண்மையாகுமா?

ஒரு நூல் கூட கிடைக்காமற் போக, அனைத்து நூல்களும் கடலோரங்களில் மட்டுமாகவா இருந்தன என்ற கேள்வி எழவில்லையா?

ஒரு சமூகம் அழிவதற்கு அவர்களின் வாசிப்புத் தன்மையை நிறுத்தச் செய்தால் போதும் என்று ஒரு கூற்றுண்டு. ஏதோ ஒரு காலத்தில் நமது சமூகம் நம் தமிழ் நூல்களை தேடாமல் விட்டதன் விளைவு தான் நாம் இழந்துவிட்டவைக்கான காரணியாக இருக்க முடியும்.

தொடர்ந்தும் தேடலற்றுப் போவோமாயின்…?

…..
கவிதா லட்சுமி
29.04.20

# world dance day
பிரபஞ்சம் யாவுமே கூத்தென்றால்
உலகின் யாவையும் நடம் செய்வோம்!

 

பின்னூட்டமொன்றை இடுக