
சென்றவருடம் இலையுதிர்காலம், Preikestolen (Preacher’s Chair- Stavanger) என்னும் இடத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நடனம் இது.
நேரமின்மை காரணமாக கிடப்பில் இருந்து தற்போது தொகுக்கப்பட்டுள்ளது.
Preikestolen பாறைக்கு ஏறிச் செல்வதே ஒரு பேரனுபவம். குறைந்த பட்சம் இரண்டு மணிநேரங்கள் ஏறவேண்டும்.
ஒரு வருடத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் மனிதர்கள் இங்கே சுற்றுலா வருகின்றனர். காலை ஒன்பது பத்து மணியளவில் இவ்விடத்தில் மனிதர் கூடிவிடுவர் என்பதால் விடிகாலை ஐந்தரை மணியளவில் கிளம்பி எட்டு மணியளவில் மேலே சென்றடைந்தோம். பாதித்தூரம் இருட்டினிலேயே நடந்தோம்.
ஒளிப்பதிவுக்கான பொருட்கள், உணவு, உடைகள் என முதுகினில் பெருஞ்சுமை.
போகும் வழியெங்கும் பாறைகளும், மரக் காடுகளும், இயற்கை நீர்த்தேக்கங்களும் ரம்மியமானவை. சில இடங்களில் மட்டும் பாறைப் படிக்கட்டுகள். வழியெங்கும் உள்ள சிற்றருவிகளிலும் சிற்றோடைகளிலும் நீர் அருந்தலாம்.
அந்த இயற்கையும் இடமும் சில மணிநேரங்கள் முழுமையாய் எமக்குக் கிடைத்தன. ஆனால் அப்போதும் எமக்கு முன் இன்னொரு மனிதன் அங்கே தனிமையில் நின்றிருந்தான்.
சூரிய எழுச்சியின் போது புகைவதைப் போன்று பாறையின் இடுக்குகளில் இருந்து மேகங்கள் மேலெழும். அந்த காட்சியை பதிவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் நாம் உச்சத்தை தொடுவதற்கும் அந்தக் காட்சி எழுந்து மடிவதற்கும் சரியாகப் போயிற்று.
ஒளிப்பதிவில் இல்லாவிடில் என்ன? அகத்தில் பதிந்தது பேரனுபவம்.
ஏறியதும் உடல் களைத்துவிட்டது. இளைப்பாற நேரமுமில்லை. கோடை முடியும்காலம் என்பதால் உடல் விறைக்கச் செய்யும் குளிரும், காற்றும் சற்று நேரத்தில் மழையும் சேர்ந்து கொண்டது.
கரடுமுரடான பாறையும் சேர்ந்து நினைத்தது போல உடல் செல்லும் வழி கைப்படவில்லை என்பதே உண்மை. ஊழிக்கூத்திற்கு இவை என்ன தடைசெய்யும்?
என்னால் முடிந்தவரை நடனம் செய்து, சற்று இளைப்பாறி கீழேயும் இறங்கி வந்தாயிற்று. கடைசிச் சரிவொன்றில் விழுந்து கால்களில் பெரும் உராய்வு.
‘இரத்தமின்றி ஊழிக்கூத்தா என்ன ?’ என்று அடிவாரத்தை வந்தடைந்தோம்.
ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை, அன்னை! அன்னை!
🍂🍂🍂
The best view comes after the hardest climb!
(ஊழிக்கூத்து பற்றிய எனது சிறு குறிப்பை இந்த இணைப்பிற் காணலாம்)
https://kavithalaxmi.com/…/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%…/









